நவராத்திரி பூஜை என்பது அன்னை பராசக்திக்காக ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும். பொதுவாக நவராத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.
ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வாராஹி நவாராத்திரி என அழைக்கப்படும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி என அழைக்கப்படும். தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி என அழைக்கப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவாராத்திரி என அழைக்கப்படும்.
நான்கு வகையான நவராத்திரிகளில் பெரும்பாலும் இந்தியாவில் சாரதா நவராத்திரி எல்லா மாநிலங்களிலும் வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிரது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒருவயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறார்.
கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்.
நவராத்திரி விரதம், பூஜையால் கிடைக்கும் நன்மைகள்:
நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக கூறப்படுகிறது.
ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுகிறது.
சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகலசெல்வங்களையும் பெறலாம்.
விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.
நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும் என்பது சிலரின் கருத்தாகும்.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும் என்று கூறப்படுகிறது
நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
தனித்து தானம் செய்வதை விட, பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
தான தர்மங்கள்தான் பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பது மிகமிக முக்கியம்.
கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக