வியாழன், 14 ஜூலை, 2016

இறை வழிபாடு

இறை வழிபாடு

அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் நமஸ்கரங்கள். எப்பிடி இருக்கிறீர்கள் ?என்றென்றும் என் ஆன்மீக நண்பர்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.


என் மனதில் எழுந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்துக்கள் அனைவரும் அவரவர் விரும்பும் தெய்வங்களை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம்.பல்வேறு சுவாமிகளை வணங்கினாலும், எல்லாம் ஒருவரில் அடக்கம்.அவரே சிவன்.

நம் எண்ணங்கள் மாசு இன்றி சுத்தமாக இருக்க இறைவழிபாடு மிகவும் அவசியம்.நாம் செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை.தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறப்பானது.அதுமுடியாத பட்சத்தில்,காக்கை,நாய்,மீன் போன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுப்பது கோடி புண்ணியத்தை தேடி தரும்.அதுவே நம் அனுபவிக்கும் துன்பங்களை களைய வழி.

நம்முடைய வள்ளலார்" வாடிய பயிரை கண்ட  பொழுதெல்லாம் வாடினேன் "என்று செடியை ஒரு உயிர் என்று எண்ணி, அது நன்கு வளர்வதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். செடிக்கே இவ்வாறு என்றால் மனிதர்களுக்கு உணவு அளிப்பதை சொல்லவா வேண்டும்?


நாமும் பிறருக்கு அன்னம் அளித்து நற்பலனை அடைவோம்.


மனித முயற்சிகள் தோற்று போய்,ஏதாவது வழி கிடைக்காதா  என்று ஏங்கும் போது,இறைவனின் திருவடி தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை .இதை ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில்  நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.

"அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது" என்பதே உண்மை.

நாம் செய்த கர்மவினைகளுக்கேற்ப துன்பங்களும்,துயரங்களும் நம் வாழ்வில் தொடரும்.ஆனால் தீவிர இறைவழிபாடு,அந்த கர்மாக்களின் தாக்கத்தை பெருமளவில் மறைத்து,துன்பங்களை தாங்கும் ஆற்றலை நமக்கு கொடுக்கும்.




நம்மை படைத்து இனிய வாழ்வை தந்த இறைவனுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யும் கடமை இறைவனுக்குரிய வாசனையுள்ள பூ ஒன்றையாவது சமர்ப்பித்து,வழிபட வேண்டும்.


நாம் செய்யும் வழிபாட்டில் அக தூய்மையும்,புற தூய்மையும் முக்கியம்.காலையில் எழுந்தவுடனும்,இரவில் உறங்க செல்வதற்கு முன் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.

தினமும் காலை எழுந்தவுடன்,குளித்து திருநீற்றை அணிந்து பூஜைக்கு ஏற்ற பூவை வைத்து வழிபட வேண்டும்.

தேவாரம் பாடி,வழிபடுவது ,மேலும் சிறந்தது.

"நம்பினோர் கெடுவதிலில்லை"என்பது நான்கு மறைகளின் முடிவு.நாள் தவறாது குறித்த நேரத்தில் வழிபடும்போது,தியானிக்கும் போது,தெய்வத்தின் ஆசி நம்மீது விழும்.மனோபலம் உறுதி பெறுகிறது.நாம் விரும்பியதை சாதிக்கும் வலிமை கிடைக்கிறது.

கோவிலுக்கு சென்று வழிபடுதல்,கூட்டு வழிபாடு மிகவும் நன்று.

தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல் அவசியம்.இயலாதவர்கள் வாரம் 1 முறையேனும் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.அதற்கும் முடியாத போது திருவிழா,நோன்பு போன்ற சிறப்பு பூஜை காலங்களில் ஆலயம் சென்று வழிபடவேண்டும்.


தாய் தன் பிள்ளைகளுக்கு தேவைகளை குறிப்பறிந்து செய்பவள்.அதுபோல நம் தாய்க்கு தாயான இறைவனிடம் நாம் கண்ணீர் மல்கி கேட்கும் போது நம் குரலுக்கு செவி சாய்த்து நமக்கு எல்லா வளங்களையும் தருவார்.


நாம் இவ்வுலகில் பிறந்ததே பரம்பொருளான சிவபெருமானின் அருளே.அவரே நம்மை வழிநடத்தி செல்கிறார். நடப்பது,நடக்க போவது அனைத்து அறிந்தவர் சிவனே.சிவனின் அருளாலும்,அம்பாளின் கருணையாலும் நம் வாழ்வு என்றும் சிறப்பாக அமையும்.நம் துயரங்கள் நீங்கி,எல்லாவற்றிலும் வெற்றிகள் அடைய தினம்தோறும் அகிலத்திற்கே முதன்மையான அம்மை அப்பனை வணங்குவோம்.

நன்றி வணக்கம்.

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி















  

1 கருத்து: