வெற்றியை தரும் விஜயதசமி
நவராத்திரி விழா 9நாட்கள் நடந்து முடிந்தவுடன்,இந்துக்கள் விஜயதசமியைக் கொண்டாடுகின்றனர்.பார்வதி தேவி அடைந்த வெற்றியை குறிக்கும் நாள் விஜயதசமி ஆகும்.எருமையின் தலையை உடைய மஹிஷாசுரனை வதம் செய்த நாளை குறிக்கிறது.
விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும் நற்காரியங்கள் எல்லா வழிகளிலும் ஜெயம் அடைகிறது.அலுவலகத்திலும்,பள்ளிகளிலும்,ஆலயங்களிலும் இப்பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடுவர்.
வட மாநிலங்களில் இந்நாள் ராமபிரான் ராவணனை வென்ற நாளாக விஜயதசமி கொண்டாடுகின்றனர்.ராவணன்,கும்பகர்ணன்,இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .மைசூரிலே தசரா விழா கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
பண்டைக் காலமன்னர்கள் விஜயதசமியன்று சிம்மாசனம்,வெண்கொற்றக் குடை,செங்கோல்,சாமரம் மற்றும் படைக்கலன்களையும்,யானை,குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்து வந்ததாக கல்வெட்டுகள் மூலம் கண்டறியலாம்.
விஜயதசமியன்று ,வன்னி மரத்தை வழிபடுவது ஒரு சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.விஜயதசமி நாளில் வன்னிமரத்தை தலமரமாக கொண்ட கோயில்களில் 21தடவை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.மதுரை மீனாட்க்ஷியம்மன் கோவிலில் வன்னிமரத்திற்கு அடியில் விநாயகரை தரிசிக்கலாம்.பால்,பன்னீர்,இளநீரால் அபிஷேகம் செய்து,வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன்,மனைவி கருத்து வேறுபாடு மறையும்.சிவபெருமானின் அம்சம் வன்னிமரம்.வன்னிமரத்தை காலையில் தரிசிப்பது நன்று.
விஷ்ணு கோயில்களில் ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரத்தை வலம் வரும் வைபவம் இன்றும் நடைபெறுகிறது.
ஒருசமயம் பரமேஸ்வரி வன்னி மரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள்.அதுசமயம், சீதாதேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமன் வன்னி மரத்தினை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான் என்று புராணத்தில் கூறப்படுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.
விஜயதசமி அன்று, வன்னிமரத்துடன் வாழை மரத்தையும் வெட்டுதல் கோவில்களிலும் வழக்கமாக உள்ளது.1முறை பண்டாசுரனுடன்,பார்வதி தேவி போர் புரிந்தார்.பலமுறை போரிட்டும்,பார்வதிதேவியால்,பண்டாசுரன் அழிக்க முடியவில்லை.இதையடுத்து,பார்வதி தேவி சிவபெருமானை வேண்டினார்.அப்போது சிவபெருமான் விஜயதசமியில் போரிடும்படி கூறினார்.அதன்படி பார்வதியும்,விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரன் போரிட்டார்.அப்போது பண்டாசுரன்,வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்து கொண்டான்.இதனை பார்த்ததும் பார்வதி தேவி,வன்னி மரத்தை வெட்டி,அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார்.இதுவே நாளடைவில் வன்னி வாழை வெட்டு என்று மருவி வழங்கப்பட்டது.பண்டாசுரனை அழித்த மாலை வேளையில் இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வைணவத்தலங்களில் அதனால்தான் விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் சாதித்து வன்னிமரத்தால் அம்பு எய்யும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று, ஆரம்பிக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு வழங்கும் வழக்கம்.
பூஜிக்கப்பட்ட கருவிகள்,எழுதுகோல்கள்,புத்தகம் அனைத்தும் வைத்து வழிபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக