தீபாவளி பண்டிகையின் கதையும்,கொண்டாடும் விதமும்
என் இனிய ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இந்துக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மிகச்சிறப்பாக வருடம் தோறும்
கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.ஏழை ,பணக்காரர்,சிறியவர்,முதியவர் அனைவரும் கொண்டாடி மகிழக்கூடிய நாள்தான் தீபாவளி .
தீபங்களின் வரிசை தீபாவளி ஆகும்.
ஐப்பசி மாதம் (அக்டோபர்-நவம்பரில்)தீபாவளி பண்டிகை வருகிறது.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி
விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளி ஆகும்.
பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன், பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன்.தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதையில் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.
நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நரகாசுகரன் வீழ்கிறான்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.
அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.
இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து மற்றொரு புராணக் கதை கூறப்படுகிறது.
தீப ஒளி திருநாள்
ராவணசம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரைத் தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர். ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி விளக்கேற்ற வந்த திருமகளே.. சீதா ! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. நீ தீபஒளி ஏற்று. அந்தகாரம் விலகி அருள் பரவட்டும் என்றாள். உடனே, தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள் !
தீபாவளி பண்டிகை கொண்டாடும் விதம்
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீரை கொதிக்க வைத்து விடுகிறோம். தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. அன்றைய தினத்தில் நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என்பதை நாம் சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். அதுபோல நம் வீட்டிலிருக்கும் சுத்தமான நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால்தான் தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்றே சொல்கிறார்கள்.
தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் நீங்குகின்றன.
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உப்பு
தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் - சரஸ்வதி; சந்தனம் - பூமாதேவி; குங்குமம் - கௌரி; தண்ணீர் - கங்கை; இனிப்புப் பலகாரம் - அமிர்தம்; நெருப்புப் பொறி - ஜீவாத்மா; புத்தாடை - மகாவிஷ்ணு; லேகியம் - தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.
தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று நாள் முன்னதாக, ஒரு காரம், ஒரு இனிப்பு செய்து வைத்துக் கொள்ளலாம்.செய்த பலகாரங்களில் 3/5/7/9/12 என்ற எண்ணிக்கையில் பாத்திரங்களில் எடுத்து, விளக்கு முன்னால் பூஜையறையில் வைக்கவும்.
வீட்டில் அனைவருக்கும் எடுத்திருக்கும் புதுத் துணிகளில் மஞ்சள்/குங்குமம் தடவி, விளக்கு முன்னால் ஒரு பேப்பரை விரித்து, அதன் மேல் அடுக்கி வைக்கவும்.
வீட்டுத் தலைவிக்கு எடுத்திருக்கும் புதுப் புடவை/புத்தாடையை எல்லா உடைகளுக்கும் மேலாக வைக்கவும்.
பூஜையறையை சுத்தப்படுத்தி, படங்களுக்கும் விளக்குக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, முதலிலேயே தயார் படுத்திக் கொள்ளவும்.
ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.
பிள்ளையார், குலதெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை நினைத்து வணங்கி, சூடம் ஏற்றி , தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்யவும்.
அவரவருக்கு உண்டான புது உடைகளை வீட்டுத் தலைவரிடம் ஆசி பெற்று, வாங்கி, உடுத்திக் கொள்ளவும்.
புதுத் துணி உடுத்திக் கொண்ட பின், வீட்டுப் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று, பணம் /பரிசு பெற்றுக் கொள்ளவும்.
அக்கம்பக்கம்/உறவினர்/நண்பர்கள் வீடுகளுக்கு பலகாரம் கொடுக்கவும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பட்சணம்/பலகாரம் சாப்பிட்டதும், கோவிலுக்கு அனைவரும் சென்று வரலாம்.
வரவிருக்கும் தீபத்திருநாளை அனைவரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுவதுடன் ஏழை ,எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து,தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
\
வரவிருக்கும் தீபத்திருநாளை அனைவரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுவதுடன் ஏழை ,எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து,தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
\