ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெரியாச்சி அம்மன்

பெரியாச்சி அம்மன்
 அன்பு தோழிகளுக்கு என் வணக்கங்கள்.என்  பதிவை உலக மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அறியும் போது  மிகவும் சந்தோசமாக இருக்கிறது .நான் அறிந்த ,தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .



நாம் எல்லோரும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றீருப்போம்.அங்கு பேச்சியம்மன் அல்லது பெரியாச்சி அம்மன் வீற்றிருப்பாள் .மாரியம்மனுக்கு துணையாக இருப்பவள் பேச்சியம்மன் .பெரியாச்சியும் ,பேச்சியம்மனும் ஒருவரே .பார்ப்பதற்கு பயங்கரமானவளாக காட்சி தந்தாலும் உண்மையில் கருணையே கொண்டவள் .தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு உதவி செய்வாள் .


மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேறிய பலருக்கு பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக விளங்குகிறாள்.நம் குலத்தை  காக்கும் தெய்வம் குலதெய்வம் .



முன்னொரு காலத்தில் வல்லப ராஜா என்ற கொடுங்கோல் அரசன் வாழ்ந்து வந்தான்.அவன் மக்களை எல்லாம் கொடுமைப்படுத்தி வந்தான்.அவன் மனைவி கர்ப்பவதி ஆனாள்.அரசனை போல் அவன் குழந்தையும் நம்மை கொடுமைப்படுத்தும் என மக்கள் பயந்தனர்.


ராணிக்கு பிரசவவலி எடுக்க ,தக்க மருத்துவம் செய்ய வேண்டி ,அரசன் மருத்துவச்சியை அழைத்து வர வேண்டினான்.ஆனால் எல்லோரும் பயத்தின் காரணமாக வர மறுத்தனர்.கோபம் கொண்ட அரசன் தானே மருத்துவச்சியை அழைத்து வர சென்றான் .

ஒரு முறை முனிவர் மூலம் அரசன் ஒரு சாபம் பெற்றான்.அவனுக்கு பிறக்க இருக்கும் குழந்தை உடனே பூமியை தொட்டு விட்டால் அரசன் அழிந்து விடுவான் என்பதே.அரசன் தானும் அழியக்கூடாது ,தன் குழந்தையும் நல்ல படியாக இந்த உலகத்திற்கு வரவேண்டும் என்று விரும்பினான்.


அவன் மருத்துவச்சியை தேடி போகையில் எதிரே கடுமையான முகத்தோற்றத்துடன்  ஒரு வயதான பெண்மணி வந்தாள் .தன்  பெயர் பெரியாச்சி என்றும் ,தானே அரசன் தேடும் மருத்துவச்சி என்றும் கூறினாள் .ராணிக்கு பிரசவம் பார்க்க  ஆகும் செலவை தருவதாக அரசன் கூறினான் .



ராணிக்கு பிரசவலியே  தெரியாத அளவுக்கு குழந்தை பெற  செய்தாள்.அந்த குழந்தை முதலில் பூமியில் விழக்கூடாது என்ற அரசனின் உத்தரவின்படி ,குழந்தை இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் கரங்களில்  ஏந்தி தடுத்து விடுக்கிறாள் .


பிரசவம் பார்த்த கூலியாக மன்னனிடம் பரிசு தருமாறு வேண்டினாள் .ஆனால் அரசனோ பெரியாச்சியை இகழ்ந்து ,தரக்குறைவாக பேசினான் .கோபம் கொண்ட மூதாட்டி தன்  சுய உருவம் எடுத்து ,எண்ணற்ற கரங்களுடன் ,நீண்ட நாக்கு ,பயங்கர தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள் .


மன்னனை கீழே தள்ளி ,அவனை தன்  கால்களில் மிதித்து கொண்டு ,அவன் அட்டகாசத்திற்கு துணைபோன ராணியை தன்  மடியில் போட்டு கொண்டு அவள் குடலை வெளியே தன்  கரங்களால் எடுக்கிறாள் .குடலை எடுத்து மாலையாக போட்டு கொள்கிறாள்.மன்னனையும் கொன்று விடுகிறாள்.


மகாகாளியின்  அவதாரமே பெரியாச்சி .குழந்தை வேண்டுபவர்கள் ,குழந்தை பேறு  அடைந்தவர்கள் குழந்தையை காக்கவும் ,சுகப்பிரசவம் நடக்கவும் இவளை மக்கள் பிராத்தித்து வருகிறார்கள் .


குழந்தை பிறந்தவுடன் முதல் முதலில் பெரியாச்சி அம்மன் முன் உள்ள தொட்டிலில் போட்டப்பிறகு தான் தங்கள் வீட்டிலுள்ள தொட்டிலில் போடுவர் .மற்ற சடங்குகள் எல்லாம் பிறகு செய்வர்.பெண் குழந்தைகளுக்கு காது  குத்துதல்.மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளை அவளை வேண்டிக் கொண்டு செய்கிறார்கள் .


என்றென்றும் நல்ல மனத்துடன் நாம் அன்னையை வேண்டினால் ,நம் குடும்பத்தை காப்பாள் பெரியாச்சி அம்மன் .


பெரியாச்சி அம்மனைப் பற்றி சொல்லிய திருப்தியுடன் என்  பதிவை முடிக்கிறேன்.


நன்றி வணக்கம் .

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக