ஞாயிறு, 17 ஜூலை, 2016

லக்ஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

லக்ஷ்மி  கடாக்ஷத்தை  தரும் மருதாணி 

என் இனிய ஆன்மீக தோழிகளுக்கு என் காலை வணக்கங்கள்.மருதாணி அழகுக்காக போடுகிறார்கள் என்று அநேகம் பேர் நினைப்பதுண்டு.அதையும்தாண்டி ஆன்மீகத்திலும் மருதாணிக்கு பங்குண்டு.அது என்ன? என்பதையே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

படித்து பயன்பெறுவதே என் அன்னை லக்ஷ்மிதேவிக்கு நான் செய்யும் பக்தி என்றே சொல்லலாம்.




மருதாணி என்று சொன்னாலே நமக்கு எல்லாம் தீபாவளி,திருமணம்,விழாக்கள் என்றுதான் ஞாபகம் வரும்.தீபாவளி முதல்  நாள்,திருமணத்தின் முதல் நாள் ,விழாக்கள் போன்ற நேரங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்தி கொள்வதற்கு மருதாணியை பயன்படுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது.

மருதாணி இலையை  பயன்படுத்துவது நல்லது.இப்போது  செயற்கை மருதாணி பொடியை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.அது நம் கைகளுக்கு நல்லதல்ல.செயற்கை மருதாணி பொடியால் நம் தோலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.எப்போதும் இயற்கையோடு ஒன்றிணைக்கும் பொருட்களையே  பயன்படுத்துவது நன்று.











மருதாணி இலையை அரைத்து போடுவதால் நம் உடல் வெப்பம் தணியும்.மருதாணி இலை கிருமி
நாசினி.கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கவல்லது.


லக்ஷ்மி தேவியின் அருளை சுலபமாக பெற மருதாணியை கைகளில் இட்டு கொண்டு பூஜை செய்தால் நாம் கேட்கும்  வரத்தை பெறலாம்.அத்தகைய சிறப்புமிக்கது மருதாணி இலை.

லட்சுமிக்கும், மருதாணிக்கும் என்ன சம்பந்தம்? என்று அறிய உங்களை அன்புடன் அழைக்கின்றேன். 

லக்ஷ்மி தேவி, பூலோகத்தில்  சீதையாக பிறந்தார்.திருமால் அவதாரமான ஸ்ரீ ராமரை மணந்தார்.லக்ஷ்மி என்றாலே அழகுக்கு பிறப்பிடம் என்பது நமக்கு தெரியும்.உலகத்தின் அழ குகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக கொண்ட சீதாதேவியின் அழகில் மயங்கிய ராவணன் என்ற அரக்கன், தேவியை தன் மனைவியாக்கி கொள்ள விரும்பினான்.ஆதலால் நயவஞ்சனையாக சீதாதேவியை கடத்தி சென்று அசோகவனத்தில் அடைத்தான்.


ஸ்ரீராமரை  பிரிந்த வருத்தத்தில்,சீதாதேவி தன் கவலைகளை அங்கிருந்த செடி,கொடிகளிடம் சொன்னாள்.அப்போது மருதாணி செடி சீதாப்பிராட்டியார் சொல்வதை கேட்பதுபோல் தலை அசைக்கும்.இதை பார்த்த சீதாதேவி தன் கஷ்டங்களை கேட்க,மருதாணி செடியாவது இருக்கிறதே !என எண்ணி ஆறுதல் அடைந்தார். 

தினமும் மருதாணி செடியிடம் தன்  தோழிகளிடம் கூறுவதை போல்,தன் கவலைகளை கூறி வந்தார்.பிறகு ஒரு நாள்,ராமன்   ராவணிடம்  போர் செய்து  சீதையை மீட்டார்.அப்போது தன்  கவலைகளை இதுநாள் வரை கேட்ட மருதாணி செடிக்கு,நன்மை செய்ய வேண்டும் என நினைத்து ,மருதாணி செடியிடம் போய்," என்ன வரம் வேண்டும்?" என்று சீதாப்பிராட்டியார் கேட்டார். 

மருதாணி செடி ,"எங்களுக்கு எதுவும் வேண்டாம் .நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்."என்று கூறியது.

உன்னதமான உங்கள் குணத்திற்கு "நான் வரம் தருகிறேன் என்று  கூறி ,உன்னை கைகளில்  இட்டு கொண்டு எவர்  பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு  சகல வரங்களையும் தருவேன்"என நம் அன்னை லக்ஷ்மிதேவியார் வரம் தந்தார்.

அதன்காரணமாகவே, இன்றும் திருமணங்களில் பெண்கள் மருதாணி இடுகின்றனர்.இதனால் லக்ஷ்மிதேவியின் அருளாசி மணப்பெண்ணுக்கும்,திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவருக்கும்  மகிழ்ச்சியும்,சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

மருதாணி இலையை அரைத்து போடுவது சிறந்தது.

என்னுடைய ஆன்மீக தோழிகள் அனைவரும் லக்ஷ்மிதேவியின் அருளை பெற பூஜை நேரங்களில் மருதாணியை போடுவீர்கள்! என்று எண்ணி,இந்த பதிவை முடிக்கிறேன்.

என் பதிவை படிக்கும் அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.
உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நீங்களும் சந்தோசமாக இருங்கள்  .உங்களை சுற்றி இருப்பவர்களையும் சந்தோசபடுத்துங்கள் .
என் அன்னை லக்ஷ்மிதேவி அருளும்,ஆசியும் உங்களுக்கும் கிடைக்க நான் பிராத்திக்கிறேன்.

 

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 
















































வியாழன், 14 ஜூலை, 2016

இறை வழிபாடு

இறை வழிபாடு

அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் நமஸ்கரங்கள். எப்பிடி இருக்கிறீர்கள் ?என்றென்றும் என் ஆன்மீக நண்பர்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.


என் மனதில் எழுந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்துக்கள் அனைவரும் அவரவர் விரும்பும் தெய்வங்களை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம்.பல்வேறு சுவாமிகளை வணங்கினாலும், எல்லாம் ஒருவரில் அடக்கம்.அவரே சிவன்.

நம் எண்ணங்கள் மாசு இன்றி சுத்தமாக இருக்க இறைவழிபாடு மிகவும் அவசியம்.நாம் செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை.தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறப்பானது.அதுமுடியாத பட்சத்தில்,காக்கை,நாய்,மீன் போன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுப்பது கோடி புண்ணியத்தை தேடி தரும்.அதுவே நம் அனுபவிக்கும் துன்பங்களை களைய வழி.

நம்முடைய வள்ளலார்" வாடிய பயிரை கண்ட  பொழுதெல்லாம் வாடினேன் "என்று செடியை ஒரு உயிர் என்று எண்ணி, அது நன்கு வளர்வதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். செடிக்கே இவ்வாறு என்றால் மனிதர்களுக்கு உணவு அளிப்பதை சொல்லவா வேண்டும்?


நாமும் பிறருக்கு அன்னம் அளித்து நற்பலனை அடைவோம்.


மனித முயற்சிகள் தோற்று போய்,ஏதாவது வழி கிடைக்காதா  என்று ஏங்கும் போது,இறைவனின் திருவடி தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை .இதை ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில்  நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.

"அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது" என்பதே உண்மை.

நாம் செய்த கர்மவினைகளுக்கேற்ப துன்பங்களும்,துயரங்களும் நம் வாழ்வில் தொடரும்.ஆனால் தீவிர இறைவழிபாடு,அந்த கர்மாக்களின் தாக்கத்தை பெருமளவில் மறைத்து,துன்பங்களை தாங்கும் ஆற்றலை நமக்கு கொடுக்கும்.




நம்மை படைத்து இனிய வாழ்வை தந்த இறைவனுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யும் கடமை இறைவனுக்குரிய வாசனையுள்ள பூ ஒன்றையாவது சமர்ப்பித்து,வழிபட வேண்டும்.


நாம் செய்யும் வழிபாட்டில் அக தூய்மையும்,புற தூய்மையும் முக்கியம்.காலையில் எழுந்தவுடனும்,இரவில் உறங்க செல்வதற்கு முன் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.

தினமும் காலை எழுந்தவுடன்,குளித்து திருநீற்றை அணிந்து பூஜைக்கு ஏற்ற பூவை வைத்து வழிபட வேண்டும்.

தேவாரம் பாடி,வழிபடுவது ,மேலும் சிறந்தது.

"நம்பினோர் கெடுவதிலில்லை"என்பது நான்கு மறைகளின் முடிவு.நாள் தவறாது குறித்த நேரத்தில் வழிபடும்போது,தியானிக்கும் போது,தெய்வத்தின் ஆசி நம்மீது விழும்.மனோபலம் உறுதி பெறுகிறது.நாம் விரும்பியதை சாதிக்கும் வலிமை கிடைக்கிறது.

கோவிலுக்கு சென்று வழிபடுதல்,கூட்டு வழிபாடு மிகவும் நன்று.

தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல் அவசியம்.இயலாதவர்கள் வாரம் 1 முறையேனும் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.அதற்கும் முடியாத போது திருவிழா,நோன்பு போன்ற சிறப்பு பூஜை காலங்களில் ஆலயம் சென்று வழிபடவேண்டும்.


தாய் தன் பிள்ளைகளுக்கு தேவைகளை குறிப்பறிந்து செய்பவள்.அதுபோல நம் தாய்க்கு தாயான இறைவனிடம் நாம் கண்ணீர் மல்கி கேட்கும் போது நம் குரலுக்கு செவி சாய்த்து நமக்கு எல்லா வளங்களையும் தருவார்.


நாம் இவ்வுலகில் பிறந்ததே பரம்பொருளான சிவபெருமானின் அருளே.அவரே நம்மை வழிநடத்தி செல்கிறார். நடப்பது,நடக்க போவது அனைத்து அறிந்தவர் சிவனே.சிவனின் அருளாலும்,அம்பாளின் கருணையாலும் நம் வாழ்வு என்றும் சிறப்பாக அமையும்.நம் துயரங்கள் நீங்கி,எல்லாவற்றிலும் வெற்றிகள் அடைய தினம்தோறும் அகிலத்திற்கே முதன்மையான அம்மை அப்பனை வணங்குவோம்.

நன்றி வணக்கம்.

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி















  

செவ்வாய், 12 ஜூலை, 2016

27 நட்சத்திற்குரிய உருத்ராட்சம்


27 நட்சத்திற்குரிய  உருத்ராட்சம் 


இந்துக்களில் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் சிவபெருமானை அண்ட சராசரத்தை ஆட்கொள்ளும் தலைவனாக கொண்டு,ருத்ராட்சத்தை அணிந்து தினம்தோறும் சிவனை தியானித்து பூஜைகள் செய்வர்.

சிவபெருமான் கருணையின் ஊற்று.அவரிடம்போய் கண்ணீர் மல்க நம் கஷடங்களை,துயரங்களை சொன்னால் நம் வாழ்வில் இன்பமழையை பொழிவார்.

பல முகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருந்தாலும் ,உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரங்களின்படி,ருத்ராட்சத்தை அணிந்தால் சிவபெருமானின் அருளை விரைவில் பெறலாம்.


நட்சத்திரங்கள் 27 உள்ளன.27நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியவேண்டிய ருத்ராட்சம் மாறுபடும்.

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்?

  1. அஷ்வினி --------9முகம் 
  2. பரணி-------------6முகம்,பதிமூன்று முகம் 
  3. கார்த்திகை -----பன்னிரண்டு 
  4. ரோகிணி --------2முகம் 
  5. மிருகசீரிஷம் ----3முகம் 
  6. திருவாதிரை ----8முகம் 
  7. புனர்பூசம் --------5முகம் 
  8. பூசம் --------------7முகம் 
  9. ஆயில்யம்---------4முகம் 
  10. மகரம் -------------9முகம் 
  11. பூரம் ---------------6முகம்,பதிமூன்று முகம் 
  12. உத்திரம்-----------பன்னிரண்டு 
  13. ஹஸ்தம் ----------2முகம் 
  14. சித்திரை----------3முகம் 
  15. ஸ்வாதி -----------8முகம் 
  16. விசாகம்----------5முகம் 
  17. அனுஷம்----------7முகம் 
  18. கேட்டை---------4முகம் 
  19. மூலம்-------------9முகம் 
  20. பூராடம்-----------6முகம்,பதிமூன்று முகம் 
  21. உத்திராடம்------பன்னிரண்டு 
  22. திருவோணம்----2முகம் 
  23. அவிட்டம்--------3முகம் 
  24. சதயம் -----------8முகம் 
  25. பூரட்டாதி-------5முகம் 
  26. உத்திரட்டாதி ---7முகம் 
  27. ரேவதி -----------4முகம் 
எந்த செயல்களை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.நாம் எடுக்கும் நல்ல காரியங்களுக்கு இறைவன் துணை இருப்பார்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 


திங்கள், 11 ஜூலை, 2016

உருத்திராட்சம்

உருத்திராட்சம்

சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியது உருத்திராட்சம் ஆகும்.இதை நாம் அணிந்து கொண்டு  சிவபெருமானை முழுமனதோடு வழிபட்டால் நம்மை கண்போல் காப்பார்.


எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களை செய்யாதவனும் கூட உருத்திராட்ச மணியை வெறுமனே தொடுவதன்மூலம் தான் பாவங்கள் அனைத்திலிருந்து விடுபட்டு மறுபிறவியில் உருத்ரனாகவேஅவதரிப்பர்.
 கையில்வைத்திருந்தாலே  சாஸ்திரங்களையும்,18புராணங்களையும்,பன்னிரு திருமுறைகளையும் கற்றறிந்தவனைவிட,சிறப்பு பெறுவான்.


உருத்ராட்ச மாலை அணிந்த ஒருவனுக்கு உணவு அளித்தால்,உணவு அளிப்பவனுடைய 21 தலைமுறையினர் பாவங்களிலிருந்து விடுபட்டு உருத்ரலோகத்தை அடைவார்கள். 


குடிப்பவனும்,மாமிசம் உண்பவனுடைய பாவிகளின் தலையில் உருத்திராட்சம் படுமானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும். 

  

அனைத்து கல்வி கேள்விகளிலும் அவன் வசமாகி பல புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய பலனைவிட அதிக பலனை பெறுகிறான். 

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் உருத்திராட்சத்தை தரித்து கொண்டிருப்பானாயில்,அவன் இறந்தபின் உருத்ர லோகத்தை அடைகிறான்.



உருத்திராட்சத்தை எங்கு அணிந்தால் என்ன பயன்?

உருத்ராட்சத்தை தலையில் தரித்தால் கோடி புண்ணியம் பெறுவான்.

காதுகளில் அணிபவன் பத்துகோடி புண்ணியத்தை பெறுகிறான்.

கழுத்தில் அணிபவன் நூறுகோடி புண்ணியத்தை அடைகிறான்.

கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியம் பெறுகிறான்.

பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடி புண்ணியம் பெறுகிறான்.

இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

உருத்திராட்சத்தை அணிந்தவாறு வேத நியமனங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில், அவன் பெரும் பலன்களை அளவிட முடியாது.அணியாவிட்டாலும் அதை பூஜிப்பவர்களும் சிவலோகம்  சென்றடைவர்.உருத்ராட்சம் அணிந்தவன் சிவனை போல முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்குகிறான்.


மனிதன் மட்டுமல்ல.பல்வேறு யுகங்கள் நாயும்,கழுதையும் ,கோழியும்  உருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறுஜென்மத்தில் சிறந்த பக்தனாக பிறந்தன.

நாமும் உருத்திராட்சம் அணிந்து,திருநீறு தரித்து,ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் சிவாய நம" என சொல்லி தியானம் செய்து,சிவபெருமான் திருவடி பற்றுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

                         திருச்சிற்றம்பலம்   
 


 
























ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வாரின் மகிமை

ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வாரின்  மகிமை 


திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்கரமே ஸ்ரீ சுதர்ஸன சக்கரம் எனப்படும்.ஸ்ரீ சுதர்ஸனரை சக்கரத்தாழ்வார் என்றும் அழைப்பார்கள்.இது பக்தர்களைக் காக்கவும்,துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.

ஸ்ரீ அனந்தன் என்ற நாகம்,கருடன்,ஸ்ரீ சுதர்ஸனம் போன்றவைகள்  பகவானை விட்டு,  ஒரு நொடி கூட பிரியாது ,அவரைத் தொழும் நித்ய சூரிகள்.

அனந்தன் யார்?

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கையாகவும்,பாற் கடலில் பாம்பு படுக்கையாகவும்,ஆதிசேஷனாகவும் ,நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

கருடன் யார்?
பகவான் மனதால் நினைத்தவுடன்,நினைத்த இடத்திற்கு செல்லும் வாகனமாகவும்,அவரது தாஸனாகவும் இருப்பவர் கருடன்.

ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,ஸ்ரீ கருடாழ்வார்,ஸ்ரீ அனந்தாழ்வார் என 'ஆழ்வார் 'என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.  

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும் ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்.இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்)புலப்படுகிறது.இந்த்ராதி தேவர்களாலும்,பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.

பெருமாளின் அம்சமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.
'புனரபி ஜனனம்--புனரபி மரணம் '[மீண்டும்,மீண்டும் பிறந்து மரித்தல்]என்ற உலக நியதியான இயற்கை ,ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாக கொண்டே நிகழ்கிறது.

இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீ ராமருக்கு சேவை செய்ததால்தான் "பரதாழ்வான்"எனப்பட்டார்.

ஜீவாலா கேசமும்,திரிநேத்ரமும்,16 கரங்களும் பதினாறு  வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியும்,இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள்,மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள்,தீவினைகள்,தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.

மதுரை அழகர் கோவில்,திருமோகூர்,ஸ்ரீரங்கம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில்  ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.


 முன்புறத்தில்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும் , அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால் நான்கு வேதங்களையும்,பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லக்ஷ்மிகளையும் ,எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

ஸ்ரீ சுதர்ஸன காயத்ரி மந்திரம் 

"ஓம் சுதர்சனாய வித்மஹே 
மஹா ஜ்வாலாய தீமஹி 
தந்நச்  சக்ர ப்ரசோதயாத் "

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம்.முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் கேட்ட வரம் பெறலாம்.நிச்சயம் நினைத்தது நிறைவேறும்.
தன்னை நாடிவந்து  வணங்குவோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுகிறார்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,"ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம "என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும் என்பது திண்ணம்.

திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

16 வகையான செல்வங்களும் பெற்று,கிரகதோஷம் நீங்கி வாழலாம்.

வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்கள்,துன்பங்கள் வந்தால் அவற்றை தனக்கு  வந்த இடையூறாகக் கருதி ,தன்  பக்தர்களை காப்பாற்ற முதலில் வருபவர்  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.

ஸ்ரீ சுதர்சனம் என்ற சக்கரத்தாழ்வாரை நாமும் வணங்கி பயன் பெறுவோம்.

உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் மேலும் பல ஆன்மீகத்தைப் பற்றி எழுத உற்சாகமாக இருக்கும்.


உங்கள் அன்பு சகோதரி
ஈஸ்வரி 



 



  






வியாழன், 7 ஜூலை, 2016

இரட்டை பிள்ளையார்

இரட்டை பிள்ளையார்

 பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள்.மஞ்சள் ,சந்தனம் போன்றவற்றை கூம்பு வடிவில் பிடித்து பிள்ளையாரை வழிபடலாம்.எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை.

 சிவ பெருமான் கூட,பிள்ளையாரை  வணங்கி விட்டுதான் காரியத்தை செய்ய தொடங்குவார் என்று புராணங்கள் கூறுகின்றன.விநாயகரே முழுமுதல் கடவுளாக கருதப்படுகிறார்.

ஒரு பிள்ளையாரை வணங்கினாலே நமக்கு பலன் கிடைக்கிறது என்றால் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் இருமடங்கு பலன்கள் கிடைக்கும்.

விநாயகர் மட்டுமே இரட்டையாக இருப்பார்.ஒருவர் விக்னராஜர்.மற்றொருவர் விநாயகர்.விநாயக ஷோடச நாமங்களில் விக்னராஜோ விநாயக என்று இப்பெயர் உள்ளன.

விக்னராஜா தடைகளை உண்டாக்குவதில் கெட்டிக்காரர்.விநாயகர் தடைகளை போக்குவதில் வல்லவர்.இந்த இருவரின் நோக்கமும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக தான் என்கிறார் காஞ்சி பெரியவர். அதாவது,தடையும் நானே,அதை போக்குவதும் நானே என்கிறார்கள் இரட்டை பிள்ளையார்கள்.

இரட்டை பிள்ளையார் திருவண்ணாமலையில் மிக பழமையான கோவில்களில் உள்ளது.மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் இரட்டை பிள்ளையாரை காணலாம்.


பரிகாரங்கள் 


திருகோண நட்சத்திரத்தில் இரட்டை பிளளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழை   தம்பதிகளுக்கு அளித்தால் கணவன் மனைவி உறவு மேம்படும்.

திருவாதிரையன்று ,வில்வ மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும்.

பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும்.

ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டை பிள்ளையார் செய்து வணங்கினால் கடன் தொல்லை நீங்கும்.




சங்கட ஹர சதுர்த்தியன்று ,விரதமிருந்து இரட்டை பிள்ளையாரை வழிபடுவதால் லக்ஷ்மியின் அருளும் கிடைக்கும்.

திருமணத்தடையை போக்குவதில் இரட்டை பிள்ளையார் சிறப்பு வாய்ந்தவர்.திருமணத் தடை நீங்க திங்கள்தோறும் 16 வாரங்கள் எண்ணெய் விளக்குயேற்றி இரட்டை பிள்ளையாரை வழிபட  வேண்டும்.குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வரும்.

செவ்வாய் கிழமை நாக தோஷம் உள்ளவர்கள் வணங்க தோஷம் விலகும்.

சனிக்கிழமை பழம் வைத்து இரட்டை பிள்ளையாரை வழிபட்டு வந்தால் சனி தாக்கம் குறையும்.

பிள்ளையாரே தன்னை வணங்குதல் 

ஒரு சமயம், சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது.அப்போது விநாயகர் தன்னை போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி,அந்த திருவுருவத்தையே --அதாவது,தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு,பிரிந்த தன்  பெற்றோர்கள்  விரைவில் ஒன்று  சேரப் பிராத்தித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன .

இரட்டை பிள்ளையார் உருவான கதை 

விக்கினன் என்ற அசுரன் இருந்தான்.பொதுவாக,அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள்.அவர்கள்தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும்  என்ற எண்ணம் உடையவர்கள்.ஆதலால் அவர்கள் தேவர்களையும்,முனிவர்களையும் தொல்லை கொடுத்து வருவதே வேலையாக இருப்பர்.

அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா ?அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும்,தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர்.

விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார்.முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே !அவரால் என்ன செய்து விடமுடியும்?என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன  வலிமையிலும் ,உடல் வலிமையிலும் தோற்று  போய்,கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு  சரணடைந்தான் .

விநாயகர் அவனை மன்னித்தார்.அவன் விநாயகரிடம்,'நீங்கள் என் பெயரை முதலில் சூட்டி கொள்ள வேண்டும்.அதுதான் என் ஆசை' என்று வேண்டுகோள் விடுத்தான்.விக்கினன்  கேட்டுக் கொண்டபடி ,அன்று முதல் விநாயகர் 'விக்னேஸ்வரன்' என்று அழைக்கப்பட்டார். 

விக்கினன்  தடைகளை செய்பவன்.ஆனால் விநாயகர் வரவிருக்கும் தடைகளை நீக்குபவர்.அதன்படி விநாயகரை வணங்காமல் எந்த செயலை யார் செய்தாலும் ,என்ன யாகம் ,பூஜை நடத்தினாலும் விக்கினன் தடையாக இருப்பான்.

விநாயகரே விக்கினனிடம் ,என்னை முதலில் வணங்குபவருக்கு  நீ எந்த தடையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.


முருகன் சூரபத்மனை அழித்து,அவன்  வேண்டுகோளின்  பொருட்டு ,உடலின் ஒரு பகுதியை சேவலாகவும்,மற்றொரு பகுதியை மயிலாகவும் தன்னிடம் வைத்து கொண்டார். 

விநாயகரும் விக்கினனை தன்  கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்.பக்தர்கள் விநாயகரை வழிபடும்போது எல்லாம் விக்கினனையும் வழிபட வேண்டும் என்று விநாயகர் கூறுகிறார்.விநாயகரும்,விக்கினனுமே இரட்டை பிள்ளையாராக உருவானார்கள்.


என்றும் ஆன்மீக தோழிகள்  நலமுடன் வாழ பிள்ளையாரை பிரார்த்திக்கும்

உங்கள்அன்பு தோழி ஈஸ்வரி 

























திங்கள், 4 ஜூலை, 2016

சுமங்கலிகள் நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக ?

அன்பார்ந்த என் இணையத்தள ஆன்மீக தோழிகளுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.



இன்னிக்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் பதிவு திருமணமான பெண்களுக்கு குங்குமம் அணிவதன் முக்கியத்துவம் என்பதுதான்.

குங்குமம் வைப்பதை ஒரு சில பெண்கள் தவிர்கிறார்கள்.ஆனால் அதன்  பயனை அறிந்தால்,அவ்வாறு செய்யமாட்டார்கள்.பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது மிகவும் அழகு.

அதுவும் சுமங்கலி பெண்கள் மங்களகரமாக மஞ்சள் பூசி,குங்குமத்தை இட்டுக்கொள்வது பார்க்கவே மகாலட்சுமி போல் இருக்கும்.அழகு என்றால் நாம் அன்னை மகாலக்ஷ்மியை தான் சொல்வோம்.ஒரு குடும்பத்தில் பெண் பிறந்தாலோ,பெண் பார்த்துவிட்டு வந்தாலோ அந்த பிறந்த குழந்தையை,பருவ பெண்ணை  மகா லக்ஷ்மி  போல் இருக்கிறாள் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அனைத்து அழகையின் வடிவமே லக்ஷ்மி 

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த பகுதி குளிர்ச்சியடைவதுடன்,உடலிலுள்ள சக்தி விரயமாவதை தடுக்கிறது.தீய சக்திகள் நம்மை அண்டாமல் காக்கிறது.

சுமங்கலிகள் நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக ?

சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் இருப்பிடம் ஆகும்.சுமங்கலியின் சக்தி குங்குமத்தில் தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் அல்லது நீர் மோர் ,பானகம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.பிறகு நாம்  முதலில் குங்குமம் வைத்து கொண்டு வந்திருக்கும் சுமங்கலி பெண்ணுக்கு  குங்குமம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொடுப்பதால் குங்குமம் கொடுப்பவருக்கும் ,அதை பெறுபவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தை பெருக்கும்.s

குங்குமத்தை சுமங்கலி பெண்கள் நெற்றியில்,தலை வகிட்டில்,மாங்கல்யத்தில் என மூன்று இடங்களில் இடவேண்டும்.மகாலக்ஷ்மி இந்த இடங்களில் குடி இருப்பதாக ஐதீகம்.

குங்குமத்தை கோவிலிலும்,வீட்டிலும் வலதுகை மோதிர விரலால் இடவேண்டும்.அர்ச்சகர் வலது கையில் குங்குமத்தை நமக்கு அளித்தால்  அதை இடது கைக்கு  மாற்றாமல் ,வலது கை மோதிரவிரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இடவேண்டும். 
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேர குறிப்பதாகும்.திருமண புடவை அரக்கு  நிறத்தில் இருப்பது நல்லது.


தெய்வீகத்தன்மை,சுப தன்மை,மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம்,உடல்,மற்றும் மனம் ஆகியவைகளுக்கு  அதிக நன்மை உண்டாகும்.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைந்தாற்போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.இரட்டை விரலால் குங்குமம் இட்டு கொள்வது மிகுந்த துணிவை தரும்.

ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவது முன்னணி தன்மை,நிர்வாகம்,ஆளுமை போன்றவைகளை ஊக்குவிக்கும்.

நடு விரலால் குங்குமம் இடுவது தீர்க்க ஆயுளை கொடுக்கும்.
குங்குமம் நெற்றியில் இடுவது தெய்வீக தன்மை,உடல் குளிர்ச்சி,சுய கட்டுப்பாட்டிற்கு  நல்லது.

எல்லா நன்மைகளும் தரக்கூடிய  குங்குமத்தை சுமங்கலி பெண்கள் அணிவது மிகவும் சிறப்பானது.மங்களகரமானது.ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அருளை விரைவில் பெறலாம்.நம் வீடு லக்ஷ்மி கடாட்சமாக திகழ நாமும் ,நம் குடும்பத்தில் உள்ளவர்களும் குங்குமத்தை நெற்றியில் இட்டு பயன்பெறுவோம்.


நான் என் எண்ணத்தில் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.
மேலும் மேலும் பல பயனுள்ள தகவல்களை உங்களுக்கு அளிக்க என் பிரியமான ,கருணையுள்ள அன்புத்தாய் லக்ஷ்மியை வேண்டுகிறேன்.

நீங்களும் சந்தோசமாக இருங்க.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

ங்கள் கருத்துகளை   சொன்னால் எனக்கு மேலும்  எழுத ஊக்குவிக்கும் விதமாக இருக்கும்.



உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி