செவ்வாய், 31 மே, 2016

18 படியின் தத்துவங்கள்

18 படியின்  தத்துவங்கள் 






தர்ம சாஸ்தாவின் "18"படிகளும் தத்துவத்தை விளக்குகின்றன.ஒவ்வொரு படியிலும் அடியெடுத்து வைக்கும் போது ஒவ்வொரு தீய பழக்கமும் நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம்.


முதலாம்  படி -----காமம் 

2ம் படி            -----குரோதம் 

3ம் படி           -----லோபம் 

4ம் படி           -----மோகம் 

5ம் படி          -----மூர்க்கம் 

6ம் படி         ------மாச்சர்யம் 

7ம் படி         ------வீண் பெருமை 

8ம் படி         -----அலங்காரம் 

9ம் படி         -----பிறரை இழிவுபடுத்துதல் 

10ம் படி       -----பொறாமை 

11ம் படி       -----இல்லறப்பற்று

12ம் படி       -----புத்திர பாசம் 

13ம் படி       -----பணத்தாசை 

14ம் படி       -----பிறவி வினை 

15ம் படி       -----செயல்வினை 

16ம் படி       -----பழக்க வினை 

17ம் படி       -----மனம் 

18ம் படி       -----புத்தி 


18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .


நன்றி வணக்கம் 





















ஞாயிறு, 29 மே, 2016

பயம் நீக்கும் சரபேஸ்வரர் 100வது பதிவு

ஹாய் ப்ரண்ட்ஸ் , எல்லோருக்கும்  
என்  வணக்கம் .

 என்னுடைய பதிவு 100 யை எட்டி விட்டதை ண்ணி என்  உள்ளம் பூரிப்பு அடைகிறது .இதற்கு முதலில் என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனதார வணங்குகிறேன் .


இந்த பதிவை எழுதுவதற்கு  என் குடும்பமும்,நண்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை இங்கு கூறவேண்டியது என்னுடைய கடமை . என்  பதிவைப்  படிக்கும் தெரிந்த ,தெரியாத நண்பர்கள்  அனைவருக்கும் என்  நன்றிகள் பல.


என்  பதிவைப் படித்து , பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே  நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக எண்ணுகிறேன் . இதுவொரு கடவுள் மேல் நான் கொண்ட பக்தி என்றே சொல்லலாம்.



பயம் நீக்கும் சரபேஸ்வரர் 




சரபேஸ்வரர் என்பவர் சிவபெருமானின் அவதாரம் இந்த சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது.

மனித  உடலும்,சிங்க முகமும், எட்டு கால்களும் ,நான்கு கரங்களும் ,கருடன் போன்ற மூக்கும்,யரளியின் வாய் ,இரண்டு பெரிய இறக்கைகள், அவரது காலடியில் வணங்கும் நரசிம்மம் இதுவே சரபேஸ்வரின்  உருவமாகும் .


நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்த போது  அவரது உக்கிரகத்தை தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிவந்த சிவ அவதாரமே சரபேஸ்வரர் .

நான் என்ற அகங்காரத்தை அளித்து ,சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பவர் சரபேஸ்வரர் .

சரபேஸ்வரர் தோன்றிய  காரணம் 

'இரணியன் ' என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்தான் .கடும் தவத்தின் பயனாக பரமனிடம் ," தேவர்,மனிதர் ,விலங்கு முதலிய யாராலும் பகலிலோ அல்லது இரவிலோ ,வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிபுறத்திலோ எவ்வித ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது "என்ற வரத்தை பெற்றான்.


தன்னை எதிர்ப்பவர் யாரும் இல்லை ,தானே கடவுள் என்று கூறி ,தேவர்கள் உட்பட அனைவரையும் தன்னையே தெய்வமாக வணங்க வேண்டும் என ஆணையிட்டு ,கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான்.

இரணியனின் மகன் பிரகலாதன்.அவன் அன்னை வயிற்றில் இருக்கும் போதே ,நாரதர் முனிவரின் மூலம்,திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு ஸ்ரீ ஹரியின் பக்தனாய் பிறந்தான்.எந்நேரமும் நாராயணன் நாமத்தை சொல்லி வந்தான் .இதனைக் கண்ட இரணியனுக்கு கடும் கோபம் வந்தது .எவ்வளவு சொல்லியும் தன் நாமத்தை சொல்லாத பிரகலாதனை தன மகன் என்று கூட பார்க்காமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.ஸ்ரீ ஹரியின் அருளால் அனைத்திலும் தப்பிய பிரகலாதனை நோக்கி ,"எங்கே உன் நாராயணன்? எனக் கேட்க,பிரகலாதனோ "என் நாராயணன் தூணிலும் இருப்பான்.துரும்பிலும் இருப்பான் "என்று கூறினான்.

கோபம் கொண்ட இரணியன் ,அருகில் இருந்த தூணை தன்  கதை கொண்டு தாக்க,அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளி வந்தார் பரந்தாமன்.இரணியனின் வரத்தின்படி,மனிதனாகவோ ,தேவராகவோ ,விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து ,இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களுமின்றி தன்  நகத்தினை கொண்டு,வீட்டின் உள்ளும் ,வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.


அசுரனின் குருதியை குடித்து மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபத்தை தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாட ,சிவனே சரபேசப் பறவை உருவம் எடுத்து ,நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்கள் நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் "நடுக்க தீர்க்க பெருமான் "என்றானார்.


நாராயணின் கோபத்தை தணிக்க ,அபூர்வ பிறவி சரபேஸ்வரர்  தோன்றி,அவர் போட்ட சப்தத்தினால் நரசிம்மர் அடங்கினார்.

சந்தி ,சூரி ,அக்கி 3 கண்களாக,கூர்மையான நகங்களோடும்,காளி ,துர்க்கா  ஆகியோர் தன்  இறக்கையாகவும் கொண்டு வேகமாய்  பறந்து ,பகைவர்களை அளிக்கும் சரபேஸ்வரர் "பட்சிகளின் அரசன்"என்றும்,"சாலுவேஸ்வரன் " என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்யங்கிரா மற்றும் சூலினி .

காஞ்சி புராணத்தில் ,நரசிம்மரின் உக்கிரத்தை அடக்க பரமசிவன் வீரபத்திரனை அனுப்பினார் .நரசிம்மம் வீரபத்திரரை கட்டி போட்டு விட்டு வேடிக்கை பார்த்ததாகவும் ,அந்த சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரனின் உடலில் புகுந்து,சரபேஸ்வரர் ஆகி நரசிம்மத்தை அடக்கியதாக கூறுகிறது.


திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

எத்தகைய விதியையும் மாற்றும் சக்தி சரபேஸ்வருக்கு மட்டுமே உண்டு.நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளை அழித்து,நம்முடைய துன்பங்களை  நீக்கி ,தன்னிடம் சரணடையும் பக்தர்களுக்கு  சுகமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரர் .இவரை ஞாயிற்றுக் கிழமை மாலை 4 1/2 --6 மணி வரை ராகு காலத்தில்  வழிபட பயம் விலகும்.

தூக்கம் நீங்க ,தீய சக்தியிலிருந்து பாதுகாக்க ஸ்லோகம்

ஹராய பீமாயா ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சர்பேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம் .

இதை எல்லாம் சொல்ல முடியாது மிகச் சிரமம் என்று நினைப்பவர்களுக்கு தமிழில் மந்திரம்
இது .

அச்சத்தை நீக்கும்  திவ்ய கவசம்

நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என்  கோலே !
ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுகேசா என்றே
சிரம் இரண்டும் ,கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே !
பரம் பொருளே! சரபேசா !வாழி  வாழியே !


பில்லி சூனிய ஒழிப்பு,மரண பயம் அகலுதல்,நீண்ட ஆயுள் ,எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை ,எதிரிகள் குலநாசம் என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.

சரபேஸ்வரரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற மகிழ்ச்சியில் மேலும் என் பணி  தொடர  பராசக்தியை  பிராத்திக்கிறேன் .

உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொண்டால் அது எனக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.

இந்த சந்தோசத்துடன் ,அடுத்த பதிவில் மற்றுமொரு ஆன்மீகத் தேடலில் சந்திப்போம் .

என்றும் உங்கள் தோழி
ஈஸ்வரி
































சனி, 28 மே, 2016

மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு 6 அம்சங்கள்



ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய உளம்கனிந்த  வணக்கங்கள் .

என்னுடைய பதிவில் மகா சிவராத்திரியைப் பற்றி எழுதி இருக்கிறேன்.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுதுகிறேன் .



மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு 6 அம்சங்கள் 



சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல்------இது ஆன்மாவை தூய்மைப்படுத்தும்

லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் -------நல்லியல்பையும் ,நல்ல பலனையும் வழங்கும்.


உணவு நிவேதித்தல் -------நீண்ட ஆயுள்,விருப்பங்கள் நிறைவேறும் .

தீபமிடுதல் -----செல்வத்தை வழங்கும்.

எண்ணெய் விளக்கேற்றுதல் ------ஞானத்தை தரும்.

வெற்றிலை அளித்தல் ----உலக இன்பங்களையும்,திருப்தியையும் கொடுக்கும் .

இந்த 6 அம்சங்களையும் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலாவது அனுஷ்டிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வீட்டில் பூஜை செய்யும் முறை 


வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் ,மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து, நெற்றியில்  திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலை கொண்டு சிவ பூஜை செய்ய  வேண்டும்.


ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம",ஓம் நமச்சிவாய"என உச்சரித்து பூஜை செய்தல் வேண்டும்.சிவபெருமானின் வெவ்வேறு  பெயர்களான பவாய ,சர்வாய ஈசனாய  ,பசுபதாய ,உக்ராய  ,ருத்ராய  ,பீமாய  மற்றும் மகா தேவா நமஹ  என்று கூறி ,பூஜிக்க வேண்டும். வீட்டில் உங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி இறைவனை சந்தோஷப்படுத்தி ,பரம்பொருளான சிவபெருமானின் அருளை  பெறலாம்.

சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி ,சிவபெருமானுக்கு  உகந்த வில்வ இலையை போட்டு பூஜிக்க வேண்டும்.108  போற்றியையும் ,மூல மந்திரத்தையும்  பாராயணம் செய்வது நல்ல பலனை தரும்.

பின்னர் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும் .

பூஜை செய்ய முடியாதவர்கள் 4ஜாமத்திலும் சிவபுராணங்களை கேட்டும்,சிவதுதி சொல்லி,சிவன் கோவிலுக்கு சென்று அந்த இரவை கோவிலில் கழித்து சிவனை வழிபட வேண்டும்.சிவனுக்கு 3 அல்லது 9 நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நான் கோவில்களில் சில பேர் "ஓம் நமச்சிவாய" என எழுதுவதைப்  பாத்திருக்கிறேன் ,அவ்வாறு நாம் எழுதி நம் கோரிக்கைகளை சிவபெருமானிடம் முன் வைக்கலாம்.அன்று முழுவதும் சிவனை மனதில் இருத்தி ,வழிபட வேண்டும்.


சிவனுக்கு செய்யும் அபிஷேக  பொருட்களை வாங்கிக் கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீக நண்பர்கள் இதைப் படித்து ,பலன் பெற நான் சிவபெருமானை வேண்டுகிறேன் .


நன்றி !வணக்கம் !









பூஜை அறை

என்  அன்பு தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.நான் எழுதிய பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் இருந்தாலும் இப்போது நான் எழுதும் தலைப்பு ஒவ்வொரு இல்லத்தரசிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பாகும்.

இந்துக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் கோவிலாக விளங்குவது பூஜை அறைதான்.அதைப்பற்றி அறிந்து கொள்வது  நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத செயல் ஆகும்.

நான் அறிந்த,தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பூஜைஅறை

மன நிம்மதியையும்,சந்தோஷத்தையும் தரக்கூடியது கோவில்கள்.நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்வது இயலாத காரியம்.அந்த குறையைத்  தீர்க்கவே நாம் வீட்டில்  பூஜையறையை அமைத்து வழிபட வேண்டும்.

இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் தினமும் கோவிலுக்கு சென்று வருவது இயலாத காரியம்.ஆதலால் இல்லத்தரசிகள் தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து ,2நிமிடம் மனதை கடவுளிடம் இருத்தி பிராத்தனை செய்ய வேண்டும் .

பூஜைஅறை தகவல்கள்   

முதலில் பூஜை அறையை கிழக்கு பார்த்து இருக்குமாறு அமைக்க வேண்டும்.அது முடியாத போது மேற்கு ,வட  கிழக்கு நோக்கியும்  பூஜையறையை அமைக்கலாம்.


பூஜை அறையில் குல தெய்வத்தை முதலில் வைக்க வேண்டும்.பிறகு நம் இஷ்ட தெய்வங்களையும் ,குருவாக நாம் நினைக்கும் மகான்களின் படங்களை [சாய்  பாபா ,மகா பெரியவா ,ராகவேந்திரா] வைக்கலாம்.நிறைய தெய்வங்களை வைத்து வழிபடுவதில் தவறு இல்லை .ஆனால் அதை சுத்தம் செய்வது கடினம்.

தெய்வ படங்களை சுவரில் மாட்டும்போது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும்.

இறந்தவர்கள் நம் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்று எண்ணி அவர்கள் படங்களை பூஜையறை யில் வைக்கக் கூடாது.இறந்தவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர ,அவர்கள் தெய்வம் அல்ல.அதனால் இறந்தவர் படங்களை தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.


சாந்தமான தெய்வங்களை வீட்டில் பூஜையறையில் வைத்து வணங்கலாம்.உக்கிரமான தெய்வங்கள் வீட்டில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.அவைகள் கடவுளின் ஆவதாரமே ஆனாலும் அதற்கென வீட்டில் வழிபாடுகளும் ,சுத்தங்களும் தேவை .எனவே,அந்த தெய்வங்களை கோவில்களில் வழிபடுவதே நல்லது.

தெய்வ சிலைகளை சில பேர் வீடுகளில் வைத்து பூஜை செய்வது உண்டு.மண் சிலையாக இ ருந்தாலும்,விக்ரங்களாக இருந்தாலும் முறையாக பூஜை செய்ய வேண்டும்.


பூஜை அறை கதவு இரு கதவாக இருக்க வேண்டும். அவை வெளிப்புறம் திறக்கும்படி அமைத்தல் வேண்டும்.பூஜை அறை பக்கத்தில் கழிவறை இருத்தல் கூடாது.மாடிப்படிக்கு கீழும் பூஜை அறை இருத்தல் கூடாது.பெரிய வீட்டில் மேல் மாடியிலும் ,கீழும் வசித்தால்  கீழ் தளத்தில்  பூஜை அறையை அமைத்து கொள்ள வேண்டும்.

தலை வாசலை அருகில் பூஜை அறையை அமைத்தல் கூடாது.

பூஜை அறையை பூஜை முடிந்ததும் சாத்தி வைக்க வேண்டும்.பெண்கள்  சுத்தமாக இருக்கும் நேரத்தில் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

ஒரு படம் வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும்.தூசி ,ஓட்டடை படிந்து இருத்தல் கூடாது.பழைய படங்கள் ,உடைந்த சிலை ,கறை  படிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைத்திருத்தல் கூடாது .

வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது.இரண்டு குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

 நம் குல தெய்வமாக காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து கற்பூரம் ஏற்றுவதோ ,ஊதுவர்த்தி ஏற்றுவதோ கூடாது.அதற்கென ஒரு அகல் விளக்கு ஏற்றி அதில் கற்பூரம் ஏற்றவும்,ஊதுவர்த்தி ஏற்றவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் வடகிழக்கு மூலையில் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது.தண்ணீரை  தினமும் மாற்ற வேண்டும்.முக்கியமாக தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.இரு புறமும் குத்து விளக்கை ஏற்றுவது தவறு ஒன்றும் இல்லை.

பூஜையின் போது ஒரு குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி பூஜை செய்யலாம் .விளக்கு பூஜை செய்பவர்கள் 5முகங்களை ஏற்றி செய்வதே சிறந்தது.இதனால் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .பூஜைக்கு நெய் தீபமே சிறந்தது.


கற்பூரம் ஏற்றினால் மாசு ஏற்படுவதால் கோவில்களில் விளக்கு ஆர்த்தி செய்கிறார்கள்.நாமும் நம் பூஜை அறை  தெய்வங்களுக்கு தீப ஆரத்தி எடுத்து பூஜிப்போம்.

நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்து பூஜை செய்வது  போல் நம்மிடம் உள்ள தீய பண்புகளை விடுத்து நம் மனதை சுத்தமாக்கி இறைவனின் திருவடிகளை தொழுவோம் .

நாமும் சந்தோசத்துடன் வாழ்வோம்.நம்மை சுற்றி உள்ளவர்களும் எல்லா  வளங்களும் பெற்று சந்தோஷமாக  வாழ இறைவனை பிராத்திப்போம்.

எல்லா வளமும் நம்மை தேடி வரவும்,என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனமுருக வணங்கி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

இன்னும் சில தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 




































செவ்வாய், 24 மே, 2016

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம் 



ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும்.அப்போது சிவன் எல்லா  உயிர்களையும் தன்னுள் அடக்கி கொள்வார்.ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.


அடேங்கப்பா! இந்த உயிர் எத்தனை பெரிய பாவ மூட்டை கரைக்க வேண்டியிருக்கும்!அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் என்று வருத்தப்படுவார்.அப்போது அவர் உள்ளத்தில் கருணை பொங்கும்.மீண்டும் உயிர்களை படைக்க முடிவெடுப்பார்.அந்த மகிழ்ச்சியில் அப்போது நடனம் ஆடுவார் .அதையே "ஆனந்த தாண்டவம்"என்பர்.



சிவன் நடனமாடும் போது 'நட [ன ]ராஜா' என்ற பட்ட பெயர் பெறுவார்.  



மற்றொரு நிகழ்ச்சி 




சிவனின் ஆனந்த நடனத்தை காண வியாக்ரபாதர்,பதஞ்சலி  முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர்.அவர்களுடைய  தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார்.




புலி தோல் உடுத்தி ,உடுக்கை ,அனல்,மான் மழு ,நாகாபரணம் அணிந்து,வலக்கையால் டமருகத்தை அடித்தும்,இடக்கையில் அக்னி ஏந்தியும்,ஒரு கையால் அபயம் அளித்து,மறுகையால் பாதத்தை காட்டியும் நடனமாடினார்.



அசுரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற நடனம் "ஆனந்த தாண்டவம் "என வழங்கப்படுகிறது.படைத்தல்,காத்தல்,அழித்தல் ,மறைத்தல் ,அருளல் என ஐந்தொழிலையும் இயற்றும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என அறியப்படுகிறது.இது 'பிரபஞ்ச இயக்க நடனம்' என்று போற்றப்படுகிறது .



இதை திருநாவுக்கரசர் "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்  வாயிற் குமிண் சிரிப்பும் "என்று பாடுகிறார்.



நடனமாடும் சிவனை "கூத்தன்" என்றும்,தில்லையில் நடனமாடியதால் "தில்லைக்  கூத்தன் "என்று அழைக்கப்படுகிறார்.

நன்றி  வணக்கம் 

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel

eswari saravanan











திங்கள், 23 மே, 2016

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் 

வைகாசி விசாகம் என்பது  முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் வரும் சிறந்த நாள் இதுவாகும்.முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் "விசாகன்" என அழைக்கப்படுகிறார்.

விசாகன் என்றால் "பட்சி" [மயில் ]என்றும்,சாகன் என்றால் "சஞ்சரிப்பவன்" என்று பொருள்.மயில் மீது வலம்  வரும் இறைவன் என்பதால்" விசாகன்" என்றும் அழைப்பர்.



முருகன் வாகனமாக  சூரபத்மனே திகழ்கிறான்.


உயிருக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு ,சிவன் ஆறுமுகமாய்  தோன்றி தம் திருவிளையாடலால்  குழந்தையானது இந்நாளில் தான்.வைகாசி மாத பெளர்ணமி நாளை "வைகாசி விசாகம்"என்று குறிப்பிடுகிறோம்.

பகைவருக்கு அருள்கின்ற தன்மை முருகப் பெருமானிடம் காணலாம்.பழநி,திருப்பரங்குன்றம் போன்ற கோவில்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்கிறார்கள்.இந்நாளில் முருகனைப்  பணிந்து ,வேண்டிய வரத்தை பெறலாம்.

காளிதாசன் எழுதிய "குமார சம்பவம்"எனும் நூலில் ,முருக பெருமான் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

சம்பவம் என்றால் தோன்றுதல்.குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகாசி விசாகம் விரதம் 

விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30-6)மணிக்குள் எழுந்து நீராட வேண்டும்.


நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள்,ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம்.மற்றவர்கள் பால் ,பழம்  சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் ,ஓம் சரவண பவாய நம ,ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

திருப்புகழ் ,கந்த சஷ்டி கவசம்,ஸ்கந்த குரு கவசம்,சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும் ,மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம்  வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும்.இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும்.குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.இந்த விரதத்தை ஆண்கள் மேற்கொள்ளலாம்.  


பக்தர்கள் பால்குடம் எடுத்தல்,காவடி எடுத்தல், அலகு  குத்துதல் ,பாத யாத்திரை செல்லுதல் போன்ற வேண்டுதல்களை இந்த நாளில் நிறைவேற்றுகிறார்கள்.

சில ஆலயங்களில் தேர் திருவிழாவும் நடைபெறும்.  











சனி, 21 மே, 2016

ஆலயங்களில் செய்ய கூடாதவை

அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள். 


இதுவரை என்னுடைய பதிவைப் பார்த்த,பார்த்து கொண்டிருக்கும்  அனைவருக்கும் என்  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும் மேலும் பல ஆன்மீகத்தகவல்களை உங்களுக்கு கொடுக்க கடவுளின்  அருளை வேண்டுகிறேன்.


 ஆலயங்களில் எதை செய்யக் கூடாது ? என்பதைப் பற்றி பார்ப்போம்.


ஆலயத்திற்கு செல்லும் போது  தலையை விரித்து போட்டு செல்லக்கூடாது.


நம்முடைய பாரம்பரிய உடையான ஆண்கள் வேஷ்டியும்,பெண்கள் புடவையும் அணிந்து செல்ல வேண்டுமே தவிர,மேலை நாட்டு ஆடைகளை[பனியன்,முழு கால் டவுசர் ] அணிதல் கூடாது.


ஆலயத்தின் உள்ளே சென்றவுடன்,பிறரிடம் அரட்டை அடித்து கொண்டு செல்ல கூடாது.


ஒரு பிரதட்சணம் ,ஒரு நமஸ்காரம் செய்ய கூடாது.

தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தின் முன்னும் நமஸ்காரம் செய்தல் கூடாது.

விக்கிரங்களை தொட்டு வணங்கக் கூடாது.

கொடி மரம்,நந்தி ,பலிபீடம் இவைகளுக்கு குறுக்கே சென்று பிரதட்சணம் செய்ய கூடாது.

தெற்கு திசை பார்த்து நமஸ்காரம் செய்ய கூடாது.

தலைக்கு எண்ணெய் தேய்த்து கொண்டோ ,ஈர ஆடையுடன் தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.

அமங்களச்  சொற்களைக்  கூறுதல் கூடாது.

நெற்றிக்கு விபூதி இடாமல் செல்லக் கூடாது.


வீட்டில் செய்து வரும் தினசரி பூஜையை நிறுத்தி விட்டு ஆலயம் செல்வது கூடாது.

ஒருவரை கெடுப்பதற்காக சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுதல் கூடாது.


வேகமாக ஆலயத்தை வலம் வரக்கூடாது.


கோவில் மூடி  இருக்கும் போதும்  ,சுவாமி வீதியில் உலா வரும் போதும்  கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யக் கூடாது.


ஆலயம் இறைவனின் இல்லம் ஆதலால் அங்கு அவருக்கே மரியாதை செய்ய வேண்டும். ஆலயத்தினுள் இருக்கும் மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

ஆலயம் உள்ளும்,புறமும் சிறுநீர் கழிப்பது மகாபாவம்.

ஆலயத்தினுள் படுத்து உறங்குதல் ,அழுதல் ,தாம்பூலம் தரித்தல் கூடாது.

கோபத்துடன் ஆலயம் செல்லுதல் ,பூஜை செய்தல் கூடாது.

பெண்கள் வீட்டு விலக்கு ,சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக் கூடாது.


கண்ட இடங்களில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் ,தீபம் ஏற்றியதும்  எண்ணெய் கையை சுவற்றில் தடவுதல் கூடாது.

கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக் கூடாது

ஆலயத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்து நம் கோரிக்கைகளை இறைவனிடம் வைக்க வேண்டும் சுவாமியிடம் மனம் உருகி வேண்டி அவர் அருளை பெற வேண்டும்.நம் தேவைகளை நிறைவேற்றும்  காக்கும் சக்தி கடவுளுக்கே உண்டு.


என்றும் உங்கள் குடும்பம் எல்லாவளமும் பெற்று இன்புற்றிருக்க  என் அம்மை அப்பனான சிவபெருமான்  பார்வதியை வணங்குகிறேன் .

நன்றி வணக்கம்