வியாழன், 5 மே, 2016

செல்வவளம் தரும் அட்சய திருதியை

அன்புள்ள தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும் என்  இனிய  வணக்கங்கள் .



வரவிருக்கும் அட்சய திருதியை கொண்டாடும் பொருட்டு அதைப் பற்றி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என எழுதுகிறேன்
 சித்திரை மாதத்தில்  அமாவாசைக்கு பிறகு வரும் 3வது  திதி நாளே அட்சயதிருதியை எனப்படுகிறது .இந்நாள் திருமகளான லக்ஷ்மிக்கு உரிய நாளாகும் .


அட்சயம் என்றால் தேயாது ,குறையாது,வளர்தல் என்று பொருள் .இந்நாளில் வாங்கும்  எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிலைத்து இருக்கும் என்பது  நம்பிக்கை .எனவே, மக்கள் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகிறார்கள் .வசதி இல்லாதவர்கள் அரிசி ,உப்பு,சர்க்கரை  வாங்கலாம் .



ஏழை,எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது,பிறருக்கு  செய்யும் எந்த  உதவியும் தர்ம தேவதையின் அருளை பெற்று, புண்ணியத்தை தரும்.


நாம் கொடுக்கும் தானம் அளவற்ற புண்ணியத்தை தரும்.ஏழைகளுக்கு உணவு ,உடை ,போர்வை கொடுத்து உதவுவது நல்லது .

எந்த தானம் செய்தால் என்ன பயன் ?

ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவுவதால் நம் வீட்டு குழந்தைகளின் கல்வி மேம்படும்.
ஆடைகள் தானம் செய்தால் நோய் நீங்கும்.
பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
மோர்,பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்.
தானியங்கள் தானம் செய்தால் அகால மரணம் ஏற்படாது.
தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனங்கள் ஏற்படும்.

முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் வறுமை நீங்கும்.


ஸ்ரீ மகாலக்ஷ்மி விஷ்ணு  மார்பில் இடம் பிடித்ததும் இந்நாளில்தான்.ஸ்ரீ லக்ஷ்மியானவள் வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும்,பாற்கடலில் ஸ்ரீ லக்ஷ்மியாகவும்,இந்திரனிடம் சுவர்க்க லக்ஷ்மியாகவும்,அரசர்களிடம் ராஜ லக்ஷ்மியாகவும்,வீரர்களிடம் தைரியலக்ஷ்மியாகவும் ,குடும்பத்தில் கிரகலக்ஷ்மியாகவும் ,பசுக்களில் கோமாதாவாகவும்,யாகங்களில் தட்சிணையாகயும் ,தாமரையில் கமலையாகவும் ,அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள் .இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறவள் லக்ஷ்மிதான்.

அன்னபூரணி காசியில் அட்சயபாத்திரம் பெற்று ,சிவபெருமானுக்கு உணவு அளித்ததும் அட்சய திருதியை அன்று தான்.எனவே இந்நாளில் சிவபெருமானின் மந்திரமான ''ஓம் நமச்சிவாய "என சொல்லி சிவனின் அருளை பெற வேண்டும்.



குசேலனின் வறுமை நீங்கி கண்ணப்பிரானின் அருளைப் பெற்றதும் ,ஆதி சங்கரர் ஏழை குடும்ப பெண்மணிக்கு ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அந்த  குடும்பத்தின் தரித்திரத்தை நீக்கி ,வாழ்க்கை தரத்தை உயர்த்தியதும் அட்சயதிருதியை நாளில்தான்.

குபேரன் இந்நாளில் மகாலக்ஷ்மியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம் .ஆகையால் ,குபேர லக்ஷ்மி பூஜை செய்து செல்வத்தை அடையலாம் . 





மகாபாரத்தில் பாண்டவர்கள் தங்கள் உடைமைகளையும் ,செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்த போது ,உணவு வேண்டும் என தங்களை நாடி வரும் முனிவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என சூரிய பகவானை வணங்கி ,திரோபதி அட்சய பாத்திரத்தை பெற்றாள் .அந்த நாளும் அட்சயதிருதியைதான் .

அவள் செய்த புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும்,கெளரவர்களுக்கும் நடந்த பாரத போரில் துரோபதி செய்த தர்மம் பாண்டவர்களின் தலையை காத்தது.இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.

மேற்கு வங்காளத்தில் ,அட்சய திருதியை நாள் அன்று விநாயகர் ,லக்ஷ்மியை வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள் .

வீட்டில் பூஜை அறையில் மாக்கோலமிட்டு ,அதன் மேல் மனைபலகை ஒன்றை வைக்க வேண்டும்.அதன்மீது வாழைஇலை இட்டு ,இலையின் நடுவில் கொஞ்சம் பச்சரிசியைப் பரப்பி வைக்க வேண்டும்.அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி அதனுள் காசு,ஏலக்காய் ,துளசி போட்டு மாவிலை ,மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து  கலசமாக்க வேண்டும்.அதையே அம்பாளாக நினைத்து பூஜை செய்ய வேண்டும் .


சில வீடுகளில் கலசம் வைக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கும்.அவர்கள்  குத்துவிளக்கில் லக்ஷ்மியை ஆவாஹனம்  செய்து , பூ போட்டு  பூஜிக்கலாம்.

லக்ஷ்மி நாராயணன் படத்திற்கு பூ,பொட்டு வைத்து குத்து விளக்கை ஏற்றி ,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழைஇலையில் வைக்க வேண்டும்.

விஷ்ணு லக்ஷ்மி,சிவன் பார்வதி,குபேரன் துதியை சொல்லலாம்.குசேலன் கதையை படிப்பதும்,கேட்பதும் சிறந்தது.கனகதார ஸ்தோத்திரம் பாடுவது நல்லது.வறுமை வராமல் என்றென்றும் நம் இல்லத்தில் செல்வம் நிலைத்து நிற்கும்.

பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை  கலந்த பாலை நிவேதியமாக வைக்க வேண்டும்.

கலசத்திற்கு தூப தீபம் காட்டி வழிபடவேண்டும்.பூஜையின் நிறைவாக கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி பூஜையை முடிக்க வேண்டும்.

கலச தேங்காய் ,பூஜையில் வைத்த அரிசி,மற்ற பொருட்களையும் வீட்டிற்கு  உபயோகித்து கொள்ளலாம்.

எனக்கு தேர்ந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லி என்  பதிவை முடிக்கிறேன்.


 மகாலட்சுமி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ,ஹ்ரீம் ,க்லீம் ,மகாலட்சுமி ,மகாலட்சுமி யேகி ,யேகி ,சர்வ செளபாகியமே தேகி ஸ்வாஹா 

இந்த மந்திரத்தை 108 முறை படித்தால் வறுமை நீங்கி ,செல்வம்  பெருகும்.தினமும் இதை சொல்லி வழிபட்டால் நம் இல்லம் தேடி லக்ஷ்மி வருவாள் .


அனைவருக்கும்  மகாலட்சுமி அருள் கிடைக்க  நான் அஷ்டலக்ஷ்மிகளையும் பிராத்திக்கிறேன் .

நன்றி வணக்கம் 

















செவ்வாய், 3 மே, 2016

கடவுளும்,தீபங்களும்

என்  அன்பு தோழிகள் அனைவருக்கும் என்  அன்பார்ந்த வணக்கங்கள் .



போன பதிவில் தீபத்தைப் பற்றி எழுதி இருந்தேன் .இந்த பதிவில் அதன் தொடர்ச்சியை எழுதுகிறேன்.என் பதிவைப் பார்த்து ,பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைக்கிறேன்.





அகல் விளக்கு 

அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு.நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.அதற்கு காரணமும் உண்டு.அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் [மண்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது.அவன் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில் காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான்.அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

இன்னுமொரு காரணம்,அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய்  சேரும்.



எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்? 
  • கணபதி ----தேங்காய் எண்ணெய் 
  • முருகன்-----நெய் தீபம் 
  • நாராயணன் ----நல்லெண்ணெய் 
  • மகா லக்ஷ்மி ----நெய் 
  • அம்மன் ----5 கூட்டு எண்ணெய் 
  • குல தெய்வம் ---இலுப்பை எண்ணெய் 
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.




அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?என்பதைப் பற்றி பார்ப்போம்.

கணபதி---1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்---6தீபம் [மயில் முன்]
பெருமாள் ---5    [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி ---8 அகல் விளக்கு 
அம்மன் ---2 [வாசலில் ]
சிவன்--3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி ---5வகை எண்ணெய்  
நாக அம்மன் ---4


ஆலயத்தில் ஏற்றும் அகல் விளக்கு புதியதாக இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க வைக்கிறது .



நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் .

எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .

சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம் 
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் ,உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோளாக அமையும்.

வாழ்க வளமுடன் 
நன்றி வணக்கம் 

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி 























வளமான வாழ்வை தரும் தீபம்

வளமான வாழ்வை தரும் தீபம் 

அன்பார்ந்த தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.என் பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .


நம் இந்து சமயத்தில் ,எல்லோர் வீட்டு பூஜையறைகளிலும் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது .தீபம் எப்படி இருளை விரட்டி ஒளியை நமக்கு தருகிறதோ அதுபோலத்தான் நம் மனதிலுள்ள தீய எண்ணங்களை விரட்டி நல்ல எண்ணங்களை தருகிறது .



நாம் ஒளியின்  மூலமாக இறைவனை காண்கிறோம் .அந்த ஒளிச்சுடர் தீபம் ஏற்றுவதால் கிடைக்கிறது.ஊருக்கு முன் விளக்கு ஏற்றின் உயர்ந்த குடியாகும் என்பது  பழமொழி .அதாவது விடியற்காலை சூரியன் உதயமாகும் முன் பெண்கள் எழுந்து குளித்து ,வாசல் தெளித்து கோலம் போட்டு ,பிரம்ம  முர்த்த வேளையான 4.30 முதல் 6 மணி வரை நம் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்.அந்த அதிகாலையில் தீபம் ஏற்றுவதால்  நாம் செய்யும் அனைத்து காரியங்களும்   நன்றாக அமையும் .ஆதலால் தான் குழந்தைகளை அந்த நேரத்தில் எழுந்து, படிக்க  சொல்கிறோம் .

இந்த அவசர உலகத்தில் அதுக்கு எல்லாம் நேரம் எங்கே  இருக்கிறது? என இதைப் படிக்கும் தோழிகளுக்கு எண்ணங்கள்  ஓடிக் கொண்டிருக்கும் .அதற்கும் ஒரு வழி  இருக்கிறது .மாலையில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,கை ,கால்களை கழுவி விட்டு ,பூஜையறைக்கு சென்று  உங்கள் கையால் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டால் நமக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் .நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியை தேடி தரும்.



மாலை சூரியன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6 வரை அல்லது கருங்கல் நேரமான 6.30 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது .4.30 --6.00 மணி பிரதோஷ காலமாகும்.சிவனுக்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளிக்க செய்யும் யாகத்திற்கு இணையான பலனை தரக்கூடியது. பூஜையறையில்  இரு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.



தீபம் ஏற்றும் எண்ணெய் 

தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம் .

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன்?

நெய் தீபம்  ஏற்றினால் சுகமும் ,சந்தோஷம் வரும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் , எல்லா பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணெய்  தீபம் ஏற்றினால் ,புகழ் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் ,நெய்,இலுப்பை எண்ணெய் இவை முன்றும் கலந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் .

நெய் ,விளக்கெண்ணெய் ,வேப்பெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,தேங்காயெண்ணெய் போன்ற 5 வகை எண்ணெயில் தீபம் ஏற்றி,அம்மனை வழிபட்டால் தேவியின்  அருள் கிடைக்கும்.


கடலை எண்ணெய் ,பாமாயில் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தக் கூடாது .



எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்?

கிழக்கு திசை   ----- துன்பம்  அகலும்,கிரகங்களின்  சோதனைகள் விலகும் .

மேற்கு திசை  -------கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும்.

வடக்கு திசை-----செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு திசை -----ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும்.



தீபங்களை ஏற்ற எந்த திரியை பண்படுத்த வேண்டும்?

தாமரை தண்டு திரி -----முன் வினை கர்ம பாவங்கள் நீங்கும்.

பஞ்சு திரி -----தெய்வ குற்றம் ,பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,வம்சாவளிப் பிரச்சினை போகும் .

நல்ல பலனை பஞ்சுத்திரி கொடுக்கும் .

சிவப்பு வர்ண துணி  திரி ----திருமண தடை நீங்கும்.குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் வர்ண துணி திரி ------வெற்றி கிடைக்கும் .தேவியின் பூரண அருள் கிடைக்கும் .தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும் ,செய்வினை நீங்கவும் இந்த திரியால் விளக்கு ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி ----குடும்ப அமைதி ,குழந்தை பேறு உண்டாகும் .முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும் .

வெள்ளெருக்கு திரி ----துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும்.

தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால்,நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .அதுவும் முக்கியமாக அதிகாலையில் அம்பாளை வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் குறைவில்லாத செல்வத்தையும்,அருளையும் கொடுப்பாள் .

நம் குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக திகழ்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

நாளை இன்னும் சில ஆன்மீகத்தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் .
நன்றி வணக்கம் 












வியாழன், 28 ஏப்ரல், 2016

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 


என்  ஆன்மீக தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.

அம்பிகையானவள்  பார்வதி,காமாட்ஷி ,மூகாம்பிகை ,காளிகாம்பாள் போன்ற பல உருவங்களில் இருந்து நமக்கு அருள்பாவிக்கிறாள்.அவள் எடுத்த வடிவங்களில் ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா  அவதாரமும் ஒன்று.அந்த வடிவத்திற்குரிய சுலோகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.1000 மந்திரங்கள் கொண்ட தொகுப்பே லலிதா சஹஸ்ரநாமம் .இந்த 1000 மந்திரங்களும் லலிதாம்பிகைக்கு பிரியமானவை.



அம்பிகையின் புகழை சொல்லிக்கிட்டே போகலாம்.அம்பாளின் துதிகள் நிறைய உள்ளது.அந்த துதிகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் .உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.


நிறைய பேர்களுக்கு ஹயக்ரீவர் யார்? என்பது தெரியாமல் இருக்கும்.இவரைப் பற்றி நான் முன்பே  என் பதிவில் எழுதியிருக்கேன்.இருந்தாலும் அவரைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்


ஹயக்ரீவர் 

ஒரு சமயம் பிரம்ம தேவரிடம் ,அசுரன் ஒருவன் வேதங்களை கவர்ந்து  கொண்டு போன போது ,மகா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகம் கொண்டவராக வந்து, அசுரனை கொன்று ,வேதங்களை பிரம்ம தேவர்க்கு மீட்டு கொடுத்தார்.






ஞானத்தின் வடிவான ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசிக்க ,உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையை சொல்லி அளவிட முடியாது .



அகஸ்தியர் 

சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது  இந்திரன்,பிரம்மன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது .

அப்போது சிவன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்ப ,பூமி சமநிலை அடைந்தது.அந்த பக்கம் இருந்த அத்தனை பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் எனபது தானே அர்த்தம்!



பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்கு அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள்.அவளுடைய வெற்றிவிழாயின்  போது தன்னுடைய கணவர் காமேஸ்வருடன் வீற்றிருக்கிறாள்.அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது 'வசினி "என்னும் தேவதையின் தலைமையில் வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாக பாடுகின்றனர்.அவ்வாறு பாடப்பட்டது லலிதா சஹஸ்ரநாமம்.


அம்பிகையின் பேரருளுக்கு  பாத்திரமாக யாரெல்லாம்  விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை படிப்பது மூலம் மிக எளிதாக பெறலாம்.சக்தியின் ஆலயங்களில் இதை சொல்வது சிறந்த பலன் தரும்.


எந்த அம்பிகை கோவில்களிலும் இதை சொல்லலாம்.ஸ்ரீ சக்ரம் அல்லது அம்பிகை உருவப் படம்,ஸ்ரீ சக்ர மஹா மேரு ஆகியவற்றின் முன்னிலையில்  லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம்.


செவ்வாய்,வெள்ளி ,நவமி ,சதுர்த்தசி,பெளர்ணமி போன்ற நாட்களில் கூறுவது சிறப்பானது.

இந்த சஹஸ்ரநாமத்தை  ஸ்ரீ விநாயகரை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.





சங்கல்பம் என்பது நமது வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு அம்மனை வேண்டுதல் .

அர்ச்சனை செய்வதாக இருந்தால் ,அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் சிறு கிண்ணம் வைத்து


அதில் கட்டை விரல்,மோதிர விரலால் குங்குமம் எடுத்து நம:என்று முடியும் போது  அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இறுதியாக,பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன்,நாம் செய்த பூஜையில் பிழை  இருந்தால் மன்னித்தருளும்படி ,வேண்டி முடிக்க வேண்டும்.

அம்மனுக்கு இனிப்பு என்றால் பிரியம்.ஆதலால் சர்க்கரை பொங்கல்,பாயாசம்,சர்க்கரை கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  இதை பாராயணம்  செய்து வந்தால்  நம்முடைய  முன்னேற்றம் நமக்கே தெரியும். 


அம்பிகையை பக்தியுடன் மனதார வழிபட்டால், நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் நிலைத்து நிற்கும். 


  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்ட  பேரளம்  அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறை  சென்று தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.

அங்கே எல்லாம் உங்களால் செல்ல இயலாது என நீங்கள் எண்ணினால் ,இந்த  லலிதாம்பிகை அம்பாள் படத்தை பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.நம் அன்பு குரலுக்கு ஓடோடி வருபவள் நம் அன்னை.

என்னை எழுத வைக்கும் என் அன்பு தாயான ஸ்ரீ லலிதாம்பிகையை வேண்டிக் கொண்டு ,இந்த பதிவை முடிக்கிறேன் .

அடுத்த பதிவில் சந்திப்போம்.


உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி





செவ்வாய், 26 ஏப்ரல், 2016

துளசி பூஜை

ஹாய் பிரண்ட்ஸ் ,எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் .

போன பதிவில் துளசியின் மகிமை என்ற தலைப்பில் நான் உங்களுடன் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன் .இன்னிக்கு துளசியை எப்படி பூஜை செய்வது ?என்பதைப்  பற்றி சொன்னால், துளசி செடி வைத்து இருப்பவர்களுக்கு பூஜை  செய்ய வசதியாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை எழுதுகிறேன்.என்  அன்பு தோழி  உமா விருப்பத்திற்கு இணங்க ,இங்கு சில மந்திரங்களை உங்கள் முன் வைக்கிறேன் .நானும் இந்த பூஜையை செய்வதால்தான் , அதன் பலனறிந்து சொல்கிறேன் .

துளசி தன்னிகர் இல்லாத பெண்.ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன் ,பாம்பை மெத்தையாக  கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள்.

எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு.ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது .ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான் .லக்ஷ்மியை சொல்லவே வேண்டாம் .கருணையின் பிறப்பிடமே நம் தாய்.

மற்றொன்று நம் வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மனம் பரப்பும் துளசி மீது .

துளசி,சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும்  பாக்கியம் கிடைக்கும்.

முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும் ,பூஜை தடங்கல் இன்றி நடக்க ,முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும் .வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து "ஓம் விக்னேஸ்வரா நமஹ  "என்று 3முறை சொல்லி ,மலர் போட்டு வணங்கவும்.அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து ,அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து ,சுற்றிலும் 12 என்ற  எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு  வைக்க வேண்டும்.


துளசி செடியில் துளசி தேவியையும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்குச்சியையும் வைத்து அதில் ,மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து  பூஜை செய்வது விசேஷம் .நெல்லிக்குச்சி இல்லை என்றால் கிருஷ்ணன் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து பூஜை செய்யலாம்.
 பொட்டு  ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து 

1]கேசவா 

2]நாராயணா 

3]மாதவா 

4]கோவிந்தா 

5]விஷ்ணு 

6]மதுசூதனா 

7]த்ரிவிக்ரமா 

8]வாமனா 

9]ஸ்ரீதரா 

10]ஸ்ருஷிகேசா 

11]பத்மநாபா 

12]தாமோதரா  என்று சொல்லி மனதார வணங்கி ,அத்துடன் ஸ்வாகதம் என்று 3 முறை கூறவும்.

நமக்கு என்ன வரம்  வேண்டும் என்பதை  சங்கல்பமாக கடவுளிடம்  முறையிட வேண்டும்.கணவன் ,மனைவி இருவரும் சேர்ந்து துளசி பீடத்தின் முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 16 நாமாவளிகளை கூறி ,குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.


1]ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம 
2]ஓம் விஸ்வ  பூஜிதாயை நம 

3]ஓம் விஷ்ணுப்ரியாயை நம 
4]ஓம் தேவ மூலிகாயை நம 
5]ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம 
6]ஓம் செளபாக்ய நிலாயை நம 
7]ஓம் புஷ்பசாராயை நம 
8]ஓம் நந்தவன நாயகாயை நம 
9]ஓம் விஸ்வ பாவணாயை 
10]ஓம் யாக பூஜிதாயை நம 
11]ஓம் விஷ்ணு கேசின்யை நம 
12]ஓம் தான ப்ரதாயின்யை  நம 
13]ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம 
14]ஓம் சகல மாட கலாலங்கார்யை நம 
15]ஓம் ஸ்ரீராம ப்ரியாயை நம
16]ஓம் ஸ்ரீ துளசீ  தேவ்யை நம  


துளசி பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி ,ஒற்றுமை,குடும்ப அமைதி ,லக்ஷ்மி கடாட்ஷம் ,வம்சம் தலைக்கும்.உடல் வலிமை ,மனோ தைரியம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும். துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளோ ,துர்மரணங்கள் கிட்ட நெருங்காது.


துளசிக்கு வைக்கும் நெய்வேதியத்தை தாம்பூலத்துடம் கொடுக்கும் போது  துளசியுடன் கொடுத்தால் பூஜையின் பலன் அதிகமாகும் .

பிருந்தையான துளசி மகா விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி .


கார்த்திகை மாதம் துளசி பூஜையுடன் பகவானை துளசியால் அர்ச்சனை  செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும்.அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது .விஷ்ணுவே துளசி பூஜை செய்வதாக ஹரி வம்சம் சொல்கிறது .

துளசி பூஜை செய்து அனைவரும் பயன் பெறுங்கள்.எல்லா நலமும் பெற்று, என்றென்றும் அனைவரும் சந்தோசமாக வாழ நானும் துளசி தேவியையும்,பகவானையும் வேண்டுகிறேன் .


  .இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

அடுத்த அன்மீக தேடலில்  உங்களை சந்திக்கிறேன் 

நன்றி வணக்கம்.







ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

துளசியின் மகிமை

துளசியின் மகிமை 

துளசி செடியை பெரும்பாலான வீடுகளில் வளர்த்து ,தினம்தோறும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள் .வெள்ளிக்  கிழமைகளில் துளசிக்கு பூஜையும் செய்வார்கள்.துளசி செடியை வைத்து ,பூஜை செய்தால் நல்ல பலனை  தரும்.துளசியின் பெருமை தெரிந்தவர்கள் அதை வணங்காமல்  இருக்க மாட்டார்கள்.



எந்த வீட்டில் துளசி இருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன் அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள். துளசி இருக்கும் வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.துளசி மாடம் வைத்து துளசியை  பூசிப்பவர்கள் வீட்டில் திருமாலும்,லக்ஷ்மியும் நிரந்தரமாக வாசம் செய்வார்கள்.அங்கு செல்வ செழிக்கும்,மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.மனம்,வாக்கு,உடல்  ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.



கோவிலில் பெருமாளை மன நலத்திற்காக வேண்டுவர்.உடல் நலத்திற்காக  துளசி தீர்த்தமும், துளசியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.



சூரியனை கண்டதும் இருள் மறைவது போல் துளசி காற்றுப்பட்டாலே பாவங்களும்  விலகி விடும்.துளசி இலையை   தெய்வ பிரசாதமாக உட்கொண்டால் சகல பாவங்களும் தொலையும்.



சிவபெருமான் அபிஷேகப்பிரியர்.பெருமாள் அலங்காரப்பிரியர்.திருமாலுக்கு உகந்தது துளசி.திருமாலின் மார்பில் மாலையாக மகிழ்ந்து காட்சி தருபவள் துளசி தேவி."துளசி தீர்த்ததால் எனக்கு அபிஷேகம் செய்தால்,பல ஆயிரம் அமிர்த குடங்களால் அபிஷேகம் செய்ததாக  ஆனந்தமடைவேன்"என்று மகா விஷ்ணுவே கூறியுள்ளார்.



துளசி செடி  நுனியில் பிரம்மா ,அடியில் சிவபெருமான் ,மத்தியில் திருமால் வாசம் செய்வதாக ஐதீகம்.துளசி இலை பட்ட தண்ணீர் கங்கை நீருக்கு சமம் ஆகும்.திருமணமாகாத பெண்கள்  வழிப்பட்டால் திருமணம்  நடைபெறும்.



துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ ,அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து ,முடிவில் மோட்சத்தை அடைக்கிறார்கள்.



துளசி பூஜை செய்து அருந்ததி தேவி வசிஷ்டரை மணந்தார் .ருக்மணி கிருஷ்ணனை மணவாளானாக அடையும் பேறு பெற்றாள்.கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும்,அவர் செய்த துளசி பூஜை மகிமை தான். சாவித்திரி  துளசி  பூஜை செய்து தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.


விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஸ்வரன் என்ற பட்டம் பெற்றதும் துளசி பூஜை செய்ததால்  தான்.


தாவர இனங்களில் துளசி மருத்துவ குணம் நிறைந்தது.தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும்.ஆனால் துளசி செடி மற்ற தாவரத்தை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.அதனால் தான் துளசியை ஒவ்வொரு வீடுகளிலும் வளர்த்து ,அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு துளசியை  வணங்க வேண்டும்.பிரம்ம மூர்த்தமான காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.இந்த நேரத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம்.அதை சுவாசிப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக வாழலாம்.


துளசி செடியுடன் , திருமாலையும்  சேர்த்து பூஜை செய்வது 
சிறந்த பலனை கொடுக்கும்.





நன்றி வணக்கம் 


















செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சித்ரா பெளர்ணமி

சித்ரா பெளர்ணமி  

அன்பார்ந்த தோழிகளுக்கு ,என் இனிய  வணக்கங்கள் .நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தும் ,தெரியாமலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம்.நம்மில் நிறைய பேர் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.நம் வாழ்வின் முடிவில் ,பாவ புண்ணியங்கள் கணக்கிடப்படும்.சித்ரா  பெளர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்கி ,நம் பாவத்தை போக்கி நல்ல ஆத்மாவாக வாழ்வோம் .

ஒவ்வொரு மாதங்களில் வரும்  பெளர்ணமி விசேஷமானது .அதுவும் சொல்லவா வேண்டும்?சித்திரை மாதத்தில்  வரும் பெளர்ணமியைப்  பற்றி .மிகவும் சிறப்புமிக்க நாள் இந்த நாள்.



சித்திரை மாதம் ,சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் "சித்ரா பெளர்ணமி "கொண்டாடப்படுகிறது .இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள் .அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் ,பார்வதியிடம் "நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் "என்று கூறிக் கொண்டே தன்  கைகளால் எடுத்து,தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார்.இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி,மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயர் வைத்தாள் .





சித்ர குப்தனை திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ர குப்தரை வழிபடுகின்றனர்.




சித்திர குப்தனுக்கு பதவி

ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை  அதிகமாகிக் கொண்டே போனது .தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார்.இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும்,தண்டனைகளையும் தர வேண்டும் என்று நீங்களும்,விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?.ஆனால் யார் எவ்வளவு பாவ ,புண்ணியங்கள் செய்தார்கள்  என்று தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா .


உன் கேள்விகளை, "அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய்  கேள் ,இதற்கு தீர்வு சொல்வார் "என்று சிவபெருமான் கூறினார் .பிரம்மாவிடம் சென்று தன்  கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா .


பிரம்மா யமதர்மரிடம்,சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர  குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்து ,யார் எந்த அளவுக்கு பாவ -புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான் .அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.


பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும் ,மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.



அன்றியிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார்.ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும்.சித்திர குப்தன் நம்மை இந்த ஆத்மா" புண்ணிய ஆத்மா " என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.



சித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருக்கிறது .பிருஹஸ்பதி முனிவர் இந்திரனின் குருவாவார்.இந்திரனோ தேவர்களுக்கெல்லாம் தலைவர் .ஒருமுறை இந்திரன் பிருஹஸ்பதியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை .ஆகவே அவனுக்கு சில படிப்பினையை சொல்லித்தருவதை பிறுஹஸ்பதி நிறுத்தினார்.குரு இல்லாத போது இந்திரன் பல தீய செயல்களில் ஈடுபட்டான்.குரு மீண்டும் தன கடமையை செய்ய ஆரம்பித்தவுடன்,தான் என்ன செய்ய வேண்டும் என்றும் ,தன் தவறுகளைக் கண்டு வருந்துவதாகவும் கூறினான்.முனிவர் அவனை ஒரு புண்ணிய பிரயாணம் மேற்கொள்ள சொன்னார்.மதுரைக்கு அருகில் வந்ததும் தன் தோளில் அதுவரை சுமந்து வந்த பாவ மூட்டைகள் கீழே இறங்குவதைக்  கண்டான்.இறங்கிய நிலையில் அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான்.இந்த ஆச்சரியத்தைப் பார்த்து அதே இடத்தில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு கோவில் எழுப்பத் தீர்மானித்தான் .



அந்த கோவில் உடனடியாக எழுப்பப்பட்டது .அந்த சிவலிங்கத்தை பூஜிக்க நினைத்தபொழுது சிவபெருமான் அருகில் இருந்த குளத்தில் தாமரை மலர்களைப் பூக்க செய்து இந்திரனுக்கு அருள் புரிந்தார்.இப்படி அவர் பூஜித்த நாள் தான் சித்ரா பெளர்ணமி  ஆகும்.எனவே இந்நாளில் சிவலிங்கத்திற்கு வில்வ இலை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும் .


சித்ரா பெளர்ணமி  அன்று காலை பூஜை அறையில்  விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியுமான நோட்டு ,பேனாவை வைத்து ஒரு தாளில் "சித்திர குப்தன் படியளப்பு "என்று எழுதி ,சித்திர் குப்தனை நினைத்து வணங்க வேண்டும் .சர்க்கரை பொங்கல்,ஏலம் ,கிராம்பு,பச்சை கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் ,பானகம் போன்றவற்றை  நைவேத்தியம் செய்யலாம் .பசுவின் பால் ,
மோர் சாப்பிடக்கூடாது.அன்ன தானம் ,விசிறி ,குடை,செருப்பு போன்ற தான தருமங்களை செய்தால் நம் கணக்கில் புண்ணியங்களை அதிகப்படுத்தும் .




இந்நாளில் கிரிவலம வருதல் பன்மடங்கு பலனைத் தரும்.கடலில் நீராடுதல் மிகவும் சிறந்தது .அம்பிகையின்  வழிபாடு சிறந்தது .



சித்திர குப்தனை நினைத்து இந்த சிறு வரிகளை சொல்வது நன்று.


சுவாமி! "அடியேன் செய்த பிழைகள் மலையளவாக இருந்தாலும் கடுகளவாக  மாற்றிவிடு.நான் செய்த புண்ணியம் கடுகளவாக இருந்தாலும்  மலையளவாக மாற்றி விடு .உன் மனைவியுடன் பிறந்தவள் நான் .ஆதலால் பாவங்களை நீக்கி, புண்ணியத்தை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்  "என்று மனதார வேண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த பூஜைகளை செய்து , சிறு ஸ்லோகத்தை சொல்லி ,சித்திர குப்தரை வழிபடுவோம்.


நன்றி வணக்கம் .