ஞாயிறு, 26 நவம்பர், 2017

சாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள்

சாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள்தொடர்புடைய படம்

ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவை வழிபடும் அடியவர்கள், மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.


ஹரிஹரபுத்திரனான சாஸ்தாவை வழிபடும் அடியவர்கள், மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும். அவை:
புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம். இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.


முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து, விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும். தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமமானது.

நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு, ஐயனின் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும். அதேபோல், இரவு முழுவதும் கண்ணயராது ஐயனைத் தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும். அன்றும் பகலில் உறங்காது, இரவிலே உறங்குதல் வேண்டும்.


உத்திர நட்சத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள், சித்திரை மாதத்தின் உத்திர நட்சத்திரத் திருநாளில் தொடங்கி, சாஸ்தாவின் ஜன்ம தினமான பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு உத்திரத்திலும் வழிபடுவது சிறப்பு. அங்ஙனம் இயலாதவர்கள், பங்குனி உத்திரத் திருநாளன்று மட்டுமாவது கட்டாயம் விரதம் கடைப்பிடித்து வழிபட வேண்டும்.


பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு நாள்கள் முன்னதாகவே, அதாவது பங்குனி மாதத்தின் மக நட்சத்திரத்தன்றே விரதத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து நித்ய கர்மாக்களை முடித்து சாஸ்தாவை விதி முறைப்படி பூஜிக்க வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது.


மேலும், இந்த விரதம் மேற்கொள்பவர்கள் ஆசார நியமத்துடன் தங்கள் இல்லத்திலிருந்து பால்குடம், நெய்குடம், தயிர்குடம், இளநீர் ஆகியவற்றை அருகில் உள்ள சாஸ்தாவின் ஆலயத்துக்கு வழிநடையாக எடுத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்வது விசேஷம். இதனால் அவர்களது துன்பங்கள் யாவும் தூசாகும். அவர்கள் சகல ஐஸ்வர்யங்களை இம்மையில் அடைந்து, மறுமையில் ஐயனின் பேரருளையும் பெறுவர்.


பங்குனி உத்திரத்தன்று இரவிலும் விழித்திருக்க வேண்டும். சாஸ்தாவின் சரித்திரங்களை கேட்டு, பாராய ணம், ஜபம் தியானம் ஆகியவற்றை செய்தல் வேண்டும். மறுநாள் சாஸ்தாவை வழிபட்டு, காலை உணவு அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக