எல்லா செல்வமும் தரும் தீப வழிபாடு
தீபாவளி தினத்தன்று வீட்டில் அவசியம் விளக்குகள் ஏற்ற வேண்டும். விளக்குகள் அகிலாண்ட நாயகியின் திருவடிகள் ஆகும். விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா நிலைப் பெற்றுள்ளார். கீழ் தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு நிலை பெற்றுள்ளார். நெய், எண்ணெய் நிறைந்திருக்கும் இடம் சிவபெருமானின் திருமேனி திகழும் இடமாகும்.
விளக்கின் ஐந்து முகங்கள் விநாயகர், முருகர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், இந்திரன் ஆகியோர் அலங்கரிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஆண்டவன் எங்கே இருந்தாலும், எந்த வடிவத்திலே இருந்தாலும், ஜோதி வடிவத்திலே நம்முடைய மனதிலே உள்ளத்திலே உறைகிறான். ஆகவே தீப வழிபாட்டின் மூலம் மனதில் உள்ள ஜோதியை வழிபடும் பலனை நாம் பெறலாம்.
மனதில் உள்ள துன்பங்கள், கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டையே ஆரம்பித்தார்கள். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. எனவே தீபாவளி தினத்தன்று தீபம் ஏற்றி வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, அரைமணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூப்போட்டு, தேவியை மனதில் தியானித்துப் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும்,செளபாக்கியங்களும் ஏற்படும்.
தீபம் எரிந்து முடிந்த பிறகு, பூஜைகள் எல்லாம் பூர்த்தியான பிறகு யாரும் விளக்கைப் பட்டென்று அணைப்பதோ, வாயால் ஊதி அணைப்பதோ கூடாது. மெல்ல அந்தத் திரியைப் பின்னுக்கு இழுத்து, அது எண்ணெய்க்குள் அமிழ்ந்து விடுமாறு அப்படியே விட வேண்டும்.
மற்ற வகைகளில் தீபத்தை அணைத்தால் பாவம் வந்து சேரும். தினமும் காலையிலும், மாலையிலும் - வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். அவர்களுக்கு நிச்சயம் லட்சுமியின் அருள் கிடைக்கும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.
இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கின் 5 முகங்களின் காரணம் பெண்களின் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகிய 5 குணங்களிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும்.
இதற்காகவே பெண்களை திருமணம் ஆகி புகுந்த வீடு வந்த உடன் விளக்கேற்றச் சொல்கின்றனர். வெள்ளி அல்லது பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் லட்சுமியின் கருணை கிட்டும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற பலவீனங்கள் அகலம். பாவம் விலகும். சனீஸ்வர பாதிப்புகளிலிருந்து விடுபட கோவில்களில் இரும்பு விளக்கு ஏற்றலாம்.
ஆவணி, கார்த்திகை மாதங்களில் விசேஷ தீப அலங்காரம் செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும். திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானின் பெயர்களை உச்சரித்து மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்தால் வறுமை நீங்கும். புதிய பருத்தி ஆடையில் மஞ்சள் தோய்த்துக் காயவைத்து அதில் திரி செய்து அம்பாளுக்குப் பஞ்சமி திதியில் விளக்கேற்றினால் பிறரால் சந்தேகிக்கப்படும் நிலை வராது.
புதிய பருத்தி ஆடையில் குங்குமத்தை தோய்த்துக் காய வைத்து அதில் திரி செய்து திரயோதசி திதியில் சிவனுக்கு தீபம் போட்டால் சுக்ரதோஷம், செவ்வாய் தோஷம் போன்ற கடுமையான தோஷங்கள் விலகும். புதிய பருத்தி ஆடையில் சந்தனத்தில் பன்னீர் கலந்து தடவி காய வைத்து திரி செய்து விளக்கேற்ற வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரம்பித்து ஒரு வருடம் தொடர்ந்து இவ்வாறு விளக்கேற்றி வர நரம்புத் தளர்ச்சி, வெண்குஷ்டம் போன்ற நோய்களின் வேகம் தணியும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் தெய்வ குற்றம், பிதுர் சாபம் நீங்கும்.
பருத்தி பஞ்சுத்திரி எல்லா நன்மைகளையும் கொடுக்கும். தாமரைத் தண்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் முன்வினை பாவம் போகும். நம்மிடம் இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டை திரியைப் போட்டு விளக்கேற்றினால் அதிக செல்வம் கிடைக்கும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லை தீரும்.
சிகப்பு வண்ண ஆடையில் செய்த திரியைப் போட்டு விளக்கேற்றினால் செய்வினை தோஷங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும். மலட்டுத்தன்மை போகும். புதிய மஞ்சள் வண்ண ஆடையால் செய்த திரி போட்டு விளக்கேற்ற வியாதிகள் குணமாகும்.
அம்பாளின் அருள் கிடைக்கும். தீபத்திற்கு நெய்விட்டு ஏற்றுவது மிகமிகச் சிறப்பு. சகலவித செல்வச் சுகத்தையும், வீட்டிற்கு அமைதியையும் அது தருகிறது. விளக்கு எண்ணெய் விட்டு விளக்கேற்ற புகழ், சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை விருத்தி செய்கிறது.
நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற எல்லா பீடைகளும் விலகும். மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு, பஞ்சலோகம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் விளக்குகள் பூஜைக்கு மிகவும் சிறந்தவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக