வியாழன், 9 பிப்ரவரி, 2017

செல்வம் எனும் லட்சுமி கடாட்சம்

செல்வம் எனும் லட்சுமி கடாட்சம்




அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு 

இவ்வுலகமில்லை என்பது வள்ளுவன் வாக்கு. இலக்ஷ்மி கடாட்சமே

அனைத்திற்கும் மூலம். எவ்வளவு நல்லவனாக இருந்தும் அறிஞனாக, 

நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும் சாஸ்திரங்களில் தேர்ச்சி 



பெற்றவனாக இருந்தும் செல்வம் எனும் லட்சுமி கடாட்சம் 

இல்லையென்றால் உலகம் அவனை மதிப்பதில்லை. இக்கருத்தை 

ஔவையார் கூட ‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் 

எல்லோரும் சென்றால் எதிர்கொள்வர் இல்லானை இல்லாளும் வேண்டாள் 

மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லா(து) அவன் வாயிற் சொல்’ எனும் 

பாடலின் மூலம் குறிப்பிட்டுள்ளாள்.  லட்சுமி என்ற சொல் லக்ஷ் என்ற 

வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 


இந்தச் சொல்லுக்கு நோக்கம், அடைதல், வழி எனப் பல பொருளுண்டு. அதே 

போல மகாலட்சுமியை வழிபடுவோரும் நல்ல நோக்கம், நன்னடத்தை, 

சோம்பலின்மை ஆகியவை உடையவர்களாக இருக்க வேண்டும். 

தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 



அத்தகையவர்களுக்கே இவளின் அருள் கிட்டும்.மகாலட்சுமி பொதுவாக 

அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள்.நிம்மதியான சந்தோஷமான 

வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட 

சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள்.
அஷ்ட லட்சுமிகள் 1. 

ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான 

லட்சுமி, 6. விஜயலட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி. ஒவ்வொரு 

யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். 

எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் 

புராணங்கள் கூறுகின்றன.



வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் 

சொர்க்கலட்சுமியாகவும் ,அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், 

குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் ,அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய 

லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் 

க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் 

வர்த்தகலட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் 

பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள்.



1. லட்சுமிக்கு பல பெயர்கள்நிலவுகின்றன. தாமரையாள், அலைமகள், 

திருமகள், செந்திரு எனத் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்றால் 

வடமொழியில் ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, 

விஜயலக்ஷ்மி,சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி 

லக்ஷ்மி, புஷ்டிலக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, 

ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக 

லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி,மோட்ச லக்ஷ்மி என இவளுக்கு பெயர்கள் அநேகம்.

ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), 

சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட 

லக்ஷ்மிகள் என்று அழைக் கப்படுகிறார்கள்.



செல்வத்தின் தெய்வம். ஸ்ரீவிஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லக்ஷ்மி 

திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். 

பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். 

இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து 

வறுமையை அகற்றி அருள் புரிபவள். 



பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் 

எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு 

மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லக்ஷ்மிகளும் 

திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவர் லட்சுமிபதி என 

கொண்டாடப்படுக்கிறார்.. எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் 

அவள். லக்ஷ்மிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் 

நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 

பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள 

முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். 

கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான 

கருணைஉள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் 

அவளே.யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என 

வேதமந்திரமான 

ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

2

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும்

போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி

முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு 

நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள்.



விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் 

என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் 

தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் 

அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலக்ஷ்மி ஆகும்.



லக்ஷ்மி என்றால் அழகு என்று பொருள். லக்ஷ்மி என்றால் அன்பு என்று 

பொருள். லக்ஷ்மி என்றால் கருணை என்று பொருள். லக்ஷ்மி என்றால் 

இரக்கம் என்று பொருள். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று பொருள். வெறும் 

அச்சடித்த காகிதங்களையும், சில்லறை நாணயங்களையும் தருபவள் 

இல்லை மகாலக்ஷ்மி. அன்பை தருபவள், அழகை தருபவள், கருணையை 

தருபவள், இரக்க குணத்தை தருபவள். ஒரு வீட்டில் மகாலக்ஷ்மி குடி 

இருக்கிறாள் என்றால், அந்த வீட்டில் நிம்மதி இருக்கிறது என்று பொருள். 

அந்த வீட்டில் சந்தோசம் இருக்கிறது என்று பொருள். நோய்நோடிகளோ, 

பெரிய அளவில் வைத்திய செலவுகளோ இல்லை என்று பொருள். உறவில் 

பிரிவுகளோ, அதில் முறிவுகளோ இல்லை என்று பொருள். பிள்ளை 

செல்வங்களால் எந்த தொல்லையும் இல்லை என்று பொருள். கற்ற 

கல்விக்கோர் வேலை, பெற்ற ஞானத்திற்கு ஏற்ற மதிப்பு இருக்கிறது என்று 

பொருள்.அந்த வீட்டில் விபத்துகளும், துர் மரணம் எதுவும் நடக்கவில்லை 

என்று பொருள்.

ஆதி காலம் தொட்டே மகாலட்சுமி இருந்திருக்கிறாள். பின்னர் 

எப்படி பாற்கடலில் இருந்து வெளி வந்தாள்? என்றால் அது ஒரு கதை. லட்சுமி 

பிருகு முனிவரின் மகளாக பார்கவி என்ற பெயரில் சொர்க்கத்தில் இருந்தாள். 

ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலால் மகிமை பெற்ற பாரிஜாத 

மலரோடு தேவேந்திரனைக் காண வந்தார். அந்த மலரை அவனுக்கு 

அளிக்கவும் செய்தார். அதன் பெருமை உணராத இந்திரன், அம்மலரை தன் 

யானையிடம் கொடுக்க, அது காலால் நசுக்கி அழித்துவிட்டது. இதனால் 

கோபம் கொண்ட துர்வாசர், “இந்திரனிடமிருந்து லட்சுமி கடாட்சம் 

விலகட்டும்’என்று சபித்துவிட்டார்.


 லட்சுமியின் அருட்பார்வை நீங்கியதால் இந்திரன் எல்லாவற்றையும் இழந்து 

விட்டான். அந்நேரம் மகாலட்சுமி சொர்க்கத்தில் இருக்கப் பிடிக்காமல் 

பாற்கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள். பின்னர் பாற்கடலைக் 

கடையும்போது சந்தினர், ஐராவதம், உச்சைஸ்வரவஸ் என்ற குதிரை, 

காமதேனு இவைகளுடன் பாற்கடலிலிருந்து தோன்றினாள். கையில் 

மாலையுடன் அவதரித்த லட்சுமி, எல்லாவற்றிலும் நிகரில்லாதவராக 

விளங்கிய மகாவிஷ்ணுவைத் தன் பதியாக வரித்தாள். அப்போது அவளுடன் 

அலட்சுமி எனப்படும் மூத்த தேவியும் தோன்றினாள். மூத்த தேவி எல்லா 

வகையிலும் லட்சுமிக்கு நேர்மாறான குணம் கொண்டவள்.மகாவிஷ்ணு 

மகாலட்சுமி திருமணம் ஏற்பாடானது.



ஆனால், அக்கா இருக்க தங்கையான எனக்குத் திருமணமா? என்று லட்சுமி 

கேட்டாள். அலட்சுமியை ஏற்க யாருமே முன்வரவில்லை. அந்த நேரத்தில் 

உலக நன்மையை உத்தேசித்து உத்தாலக முனிவர் மூத்த தேவியைத் 

திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். அவ்வாறே திருமணமும் நடந்தது. 

அதன் பின்னர் மகாவிஷ்ணு, மகாலட்சுமி தெய்வீகத் தம்பதிகளின் திருமணம் 

நடந்தது. அன்று முதல் மகாவிஷ்ணுவின் வல மார்பை தன் இருப்பிடமாகக் 

கொண்டாள் லட்சுமிதேவி.



பூஜைகளின்போது நிவேதிக்கப்படும். தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் 

செய்வதாக ஐதீகம். மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், 

பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை 

போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால்இவை அஷ்டமங்கலப் 

பொருட்கள் என போற்றப்படுகின்றன. பால், தேன், தாமரை,தானியக் கதிர்கள், 

நாணயங்கள்ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை 

பஞ்சலட்சுமிகள் என்பர்.



வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை 

திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. 

பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே 

கருதப்படுகிறது.

மகா லக்ஷ்மியை பற்றி  தெரிந்து கொண்டாகி விட்டது.இனி அவள் பாதம் பணிந்து நமக்கு வேண்டியவற்றை அருளுமாறு  

வேண்டவேண்டியது தான் பாக்கி.நாமும் அன்னையின் அருளை பெற வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக