விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு
வைதீகம், பட்டினி(விரதம்) இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.
பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார்.
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.
பாபாவின் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.
பொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள்.
எனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக