பண்டிகை காலத்தில் பூஜை செய்யும் முறை
அதிக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள் அதாவது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கக் கூடியவர்கள் கீற்கண்ட பூசை முறையை கடைப்பிடிக்கலாம். இந்த முறை பதினாறு உபசார படிகளை கொண்டது. அவையாவன
1. ஆவாஹனம். 2. ஆசனம். 3. பாத்யம். 4. அர்க்யம். 5. ஆசமனீயம். 6. ஸ்நானம். 7. வஸ்த்ரம். 8. உபவீதம். 9. கந்தம். 10. புஷ்ப அர்சனை; .11. தூபம். 12. தீபம்.13. நிவேதனம். 14. தாம்பூலம். 15. நீராஜனம்.16. பிரதக்ஷிண நமஸ்காரம்.
1. ஆவாஹனம்:
எந்த தெய்வத்திற்காக பூஜை செய்கிறோமோ அந்த தெய்வத்தினை முதலில் தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தியான சுலோகம் உள்ளது. அந்த சுலோகத்தினை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அந்த சுலோகத்தினைச் சொல்லி அந்த தெய்வத்தை தியானிக்க வேண்டும். செய்யப்போகும் பூஜைக்கு வரும்படி அழைக்க வேண்டும். இதுவே ஆவாஹணம் ஆகும். மந்திர சுலோகம் தெரியாதவர்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மனதார வேண்டி அழைக்க வேண்டும்.
2. ஆசனம்.
தியானித்து அழைத்து வந்த தெய்வத்திற்கு இருக்கை கொடுத்து அமர வைக்க வேண்டும். அந்த தெய்வத்திடம் அந்த தெய்வத்தின் உருவச் சிலையில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் வந்து அமரும்படி மனதார வேண்டி அமர்த்த வேண்டும்.
3. பாத்யம்.
தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி பாதங்களில் நீர் சமர்பித்தல்.
|
4. அர்க்யம்.
தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி கைகளில் நீர் சமர்பித்தல்.
5. ஆசமனீயம்.
தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி வாயிற்கு நேராக நீரை உட்கொள்ள செய்ய கொடுக்கும் பாவனையில் மூன்று முறை நீர் சமர்பித்தல்.
6. ஸ்நானம்.
குளித்தல் ஆகும். படங்களாயின் தெய்வத்தின் பெயரைச் சொல்லி படத்தின் முன்னால் தூய பாத்திரத்தில் நீரை சேர்க்க வேண்டும். சேர்க்கும் போது தூய நீரினால் தங்களை அபிஷேகம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டு நீரைச் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலையானால் நீரினால் அபிஷேகம் செய்வது சிறப்பாகும். முடியாவிட்டால் படத்திற்கு செய்வது போல தூய பாத்திரத்தில் நீரை சேர்க்கலாம். (இந்த இடத்தில் எண்ணை, திருமஞ்சன பொடி, மாப்பொடி. பால், தயிர், எலுமிச்சை சாறு, கனிவர்க்கங்கள், அவற்றின் சாறு, பஞ்சாமிர்தம், தேன், நெய் போன்ற அபிஷேகங்களும் செய்யலாம்.)
7. வஸ்த்ரம்.
குளித்த பின் ஆடை அணிவித்தல் ஆகும். உருவச் சிலையானால் ஆடை அணிவிக்கலாம். படமானால் 2, 3 பூக்களை நீரில் நனைத்து ஆடை அணிவிக்கிறேன் என மனதார வேண்டிக் கொண்டு பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம்.
8. உபவீதம்.
முப்புரி நூலை அணிவிக்க வேண்டும். உருவச் சிலையானால் முப்புரி நூல் அணிவிக்கலாம். படமானால் பருத்தி திரியில் மஞ்சள், குங்குமம் தடவி பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம். அல்லது 2, 3 பூக்களை நீரில் நனைத்து முப்புரி நூல் அணிவிக்கிறேன் என மனதார வேண்டிக் கொண்டு பாதங்களில் பூக்களை சமர்பிக்கலாம். இதனுடன் ஆபரணங்கள் அணிவிப்பதும் உண்டு.
9. கந்தம்.
சந்தனப் பொட்டு வைத்தல்.
10. புஷ்ப அர்ச்சனை.
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம். பூக்களினால் அர்சிப்பது சிறப்பான பலனைத் தருவதால் முடிந்தவர்கள் 108 திருநாமங்களினால் அர்சித்து பூ சமர்பிக்கவும். இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
11. தூபம்.
தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.
12. தீபம்.
நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
15. நைவேத்தியம்
உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பாயாசம் போன்ற உண்ணும் பொருட்களே சிறப்பான நைவேத்தியமாக இருக்கும். குறிப்பாக பச்சரிசியினால் செய்யப்படும் இனிப்பு உணவே சிறப்பானதாக இருக்கும். இதனைத் தொடர்ந்து வாழைப்பழம் மற்றும் கனிவகைகளை நைவேத்தியமாக கொடுக்கலாம்.
14. தாம்பூலம்:
ஓரிரு பூக்களை எடுத்து நீரில் பூக்களை நனைத்து வெற்றிலை, பாக்கினை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி தாம்பூலத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.
15. நீராஜனம்.
நீராஜனம் என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது. கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்புர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூசைசெய்தேன். எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூசையை ஏற்றக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெயவத்தின் உருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்து பூசையை நிறைவு செய்ய வேண்டும்.
கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.
16. பிரதக்ஷிண நமஸ்காரம்:
பூசை அறை அமைப்பை பொருத்து தெய்வத்தை வலமாக சுற்றி வந்து கீழே விழுந்து வணங்க வேண்டும். சுற்றி வர வசதிஇல்லாதவர்கள் மட்டும் தெய்வத்தை வலம் வருவாக நினைத்து கொண்டு தன்னைத் தானே குறைந்தது 3 முறை சுற்றி பின் கீழே விழுந்து வணங்கலாம்.
நாமும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய விசேஷமான விழாக்காலங்களில் இந்த பூஜை முறையை கடைப்பிடித்து வாழ்வில் சகல நலன்களையும் பெறுவோமாக.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக