செவ்வாய், 14 ஜூன், 2016

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

 சக்தி பீடங்கள்


சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது.அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன.

51 சக்தி பீடங்கள்,பாரத நாட்டில் 43 பீடங்களும் ,பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும்,நேபாளத்தில் 3 பீடங்களும்,தீபெத்தில் 2 பீடங்களும்,பாகிஸ்தானில் 1 பீடமும் அமைந்துள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற் கொள்வது ,அம்பிகையின் பரிபூரண திருவருளைப் பெற வழி வகுக்கும்.



சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு 

பிரம்ம புத்திரனான தட்சன்  ஆயிரம் ஆண்டுகள் கடும்தவம் புரிந்து,சர்வேஸ்வரான சிவபெருமானிடம் ,"பிரஜாபதி பட்டத்துடன்,ஈரேழு உலகங்களையும் ஆளும் வல்லமையை வரமாக பெற்றான்.அத்துடன் ஜெகன் மாதாவான அம்பிகையை புதல்வியாக அடையும் வரத்தை வேண்டி பெற்றான்.

எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து  உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையில் அகங்காரம் மேலிட ,தானே ஈஸ்வரன் என எண்ண  துவங்கினான்.தர்ம நெறியில் இருந்து முற்றிலும் விலகி செயல் பட்டான்.வரமளித்த இறைவனிடத்தில் பகைமை  கொண்டு ,பரம்பொருளான சிவபெருமானையே அவமதிக்கும்படி யாகமும் தொடங்கினான்.

ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்ற தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது.அன்னை பார்வதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி ,யாகசாலையில் தோன்றினார் .தட்சனோ தேவியை அவமதித்து பேசியதுடன் ஈசனையும் நிந்தித்து பேசினான்.சிவனை நிந்திப்பதை பொறுக்காத தேவி ஹோமகுண்டத்தில் விழுந்து உடலை மாய்த்து கொண்டார்.ஆனால் தீயால் மாளாத தேவி உயிர் இன்றி விழுந்து கிடந்தார்.

இந்நிகழ்ச்சியால் சிவபெருமான் கோபம் கொண்டு தட்சணையும்,யாக சாலையையும்,அதற்கு உடன் இருந்தவர்களையும் அளித்ததாக சிவபுராணங்கள் கூறுகின்றன.

இறைவனின் அருளால் ஆட்டின் தலையுடன் மீண்டும் தட்சன் உயிர்த்து எழுந்தான்.

சிவபெருமான் சதிதேவியின் திருவுடலை சுமந்தபடி உக்கிரதாண்டவம் ஆடத்துவங்க,மகாபிரளயம்  உருவாகும் அபாயம் தோன்றியது.ஸ்ரீ மகாவிஷ்ணு சர்வேஸ்வரரை அமைதியுற செய்யும் பொருட்டு,தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்பூமியில் சிதறும்படி செய்தார்.அவை 51 சக்தி பீடங்களாக உருவாகின.

51 சக்தி பீடங்கள் 

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு விழுந்ததாகக் கூறுவர்.
2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.
3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.
4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.
5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.
 6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.
 7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.
 8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.
 9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.
 10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.
 11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.
 12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.
 13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
 14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.
 15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.
 16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.
 17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.
 18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.
 19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.
 20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.
 21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.
 22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.
 23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.
 24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.
 25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.
 26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.
 27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.
 28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.
 29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.
 30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.
 31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.
 32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.
 33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.
 34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.
 35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.
 36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.
 37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.
 38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.
 39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.
 40 - வராக சைலம் - ஜயா பீடம்.
 41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.
 42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.
 43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.
 44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.
 45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.
 46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.
 47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.
 48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.
 49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.
 50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.
 51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.

இறைவனின் இருப்பை உணரவும்,தர்மத்தை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே.

ஆன்மாக்கள்,முதலில் இறைவனை மறுப்பது,அறியாமையால் எதிர்ப்பதும்,பின்னர் ஞானம் பெறுவது அறிந்ததே.தட்சனின் ஆட்டுதலை அஞ்ஞானம் குறிப்பது.ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது  இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.











  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக