திங்கள், 25 ஜூலை, 2016

மகா பெரியவாளின் சமையல் விளக்கம்

மகா பெரியவாளின் சமையல் விளக்கம் 




குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள். 
 என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.

தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....

இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.

விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும்  இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு  எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.

இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.

இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும்  பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.

பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.  

ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா 
நடமாடும் தெய்வம் பாதம் சரணம் 













சனி, 23 ஜூலை, 2016

கருட பஞ்சமி

கருட பஞ்சமி 

ஆவணி மாதம் வார்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும்,மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த இரு பண்டிகைகளும் சகோதரர்களின் செளபாக்கியத்திற்காக வேண்டி சகோதரிகள் கொண்டாடும் பண்டிகையாகும். 

பிரம்மதேவன் மகன் கஷ்யபன்.கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு.அவர்களுள் கத்ரு,வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர்.

கத்ரு நாகர்களுக்கு தாயாகவும்,வினதை அருணைக்கும்,கருடனுக்கும் தாயாக விளங்கினார்கள்.

ஒருமுறை,இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது.அந்த போட்டியில், இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவள் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள்.நிபந்தனைப்படி அவள்,கத்ருவிற்கு அடிமையானாள்.கத்ரு அடிமையானதால் அவள் பெற்ற அருணனும்,கருடனும் அடிமையாயினர்.

கருடன்,கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான்.இதனால் கருடன் மனம் வருந்தினான்.எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அதுசமயம் கத்ரு,கருடனிடம்,தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்துகொடுத்தால்,அடிமைத் தளத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள்.

கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான்.அடிமைத்தளத்திலிலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான்.அன்னையை நமஸ்கரித்து,தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில்,தேவர்களுக்கும்,கருடனுக்கும் கடும்போர் மூண்டது.
இறுதியில் கருடன் வெற்றி பெற்றான்.கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து,தோத்திரம் செய்து,தேவேந்திரனிடமிருந்து,அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான்.

கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான்.அன்னைக்கும்,தனக்கும்,அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன்.

அந்த கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான்.அதனால் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.


கருடன் மகா விஷ்ணுவிற்கு வாகனமானது எவ்வாறு? 



யாருக்கும் அஞ்சாதவன் கருடன்.கருடன் தேவேந்திரனிடமிருந்து அமிர்தத்தை எடுத்துவரும் போது தேவர்களால் தடுக்க முடியவில்லை.இவரின் வீரத்தை கண்டு மகிழ்ந்த திருமால்",உனக்கு என்ன வரம் வேண்டும் ?"

என்று கருடனிடம் கேட்டார்.அவரோ பரந்தாமனைப் பார்த்து,நானே உனக்கு வரம் தருகிறேன்;என்ன வரம் வேண்டும்?என்று திருப்பி கேட்டார்.

புன்னகைத்த திருமால்,'நான் எப்போதும் உன் தோளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்டார் .அவ்வாறே ஆகட்டும்' என்கிறார் கருடன். பிறகு திருமால் கருடனிடம்,நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?என்று வினவ,நான் உமது தலைக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்க,திருமாலும் அருளினார்.அதனால்தான், திருமால்  கருடனின் தோளில்  அமர்ந்து,தான் செல்லும் இடங்களுக்கு தம்மை அழைத்து  செல்லும் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

கருடனை  தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியாக கருடனை இருக்க செய்தார்.இதனால்தான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடி  மரத்தின் தத்துவம் ஆகும்

கருடன் வானத்தில் வட்டமிடுவதும்,கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவில்களில் கும்பாபிஷேகம்,யாகம்,சிறப்பு வழிபாடு நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை காணலாம்.

கருட தரிசனம் சுப தரிசனம்.

தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட நாள் நாகபஞ்சமி என்பதால் கருடனை பூஜிப்பது விஷேசம்.கருட பஞ்சமி அன்று வீட்டிற்கு சகோதரரை அழைத்து சாப்பாடு போட்டு பணமோ,துணியோ வைத்து தாம்பூலம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.




























  


வியாழன், 21 ஜூலை, 2016

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

 ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் பெண்கள் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும்.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாகவும்,மகா கணபதியின் திருவயிற்றை சுற்றியும்,மஹா விஷ்ணுவிற்கு படுக்கையாகவும் பாம்பே இருக்கிறது.

கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவுக்கு நின்றால்  குடையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும்,படுத்தால்  படுக்கையாகவும் இருப்பது நாகம்தான். 
மாரியம்மனிடம் பாம்பு வந்து அருள்புரிவதாகவும்,புற்றை உறைவிடமாக கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது.சக்தியின் வடிவமாக நாகங்கள் போற்றப்படுகின்றன.

தெரிந்தோ,தெரியாமலோ இப்பிறவியிலோ அல்லது முப்பிறவியிலோ நாகத்திற்கு தீங்கு விளைவித்திருந்தால் அது நாகதோஷமாக நம் பரம்பரையையே ஆட்டி வைக்கும்.  நாக தோஷம் உள்ளவர்களுக்கு  குழந்தை இல்லாமை,குடும்ப ஒற்றுமையின்மை,ஊனமான குழந்தை,அடிக்கடி நோயின் தாக்கம்,குடும்பத்தில் பிரிவு போன்ற பலவும் ஏற்படுகிறது.

நாக பாம்பு கடித்து இறந்துபோன சகோதரர்களுக்காக சகோதரியானவள்,நாகராஜனுக்குப் பூஜை செய்து சகோதரர்களை உயிர்பெற்று எழச் செய்தாள்  என்று புராணங்களில் கூறப்படுகிறது.



நாகதோஷம்  நீங்க செய்ய வேண்டியவை 


செய்வாய்,வெள்ளி ,ஞாயிற்றுக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு  பால் ஊற்றுவது,நாக பூஜை செய்வது,நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் நாகசிலைகளுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நாக தோஷத்தை குறைக்கும்.

அரசமரம் அல்லது வேப்பமரம் மரத்திற்கு அடியில் வைத்து வணங்கப்படும் நாகங்களுக்கு எண்ணெய்  தடவி பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி,குங்குமம் ,சந்தனம் இட்டு வெற்றிலை,பாக்கு ,சர்க்கரை பொங்கல் போன்றவை நைவேதியமாக வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுதல் வேண்டும்.

ராகு,கேது நாகதோஷம் 

நாகத்தின் வடிவமான ராகு,கேது  கிரகங்களுக்கு செவ்வாய்,சனி கிழமைகளில் பச்சரிசி மாவால் கோலம் போட்டு விளக்கேற்றி ,ராகு கேது உரிய நாமாவளிகளை சொல்லி மலரால் அர்ச்சித்து வழிபட நாகதோஷம் விலகும்.விருப்பம் ஈடேறும். 


திருமணமாகாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி ,11வாரங்கள் தொடர்ந்து வழிபாடு செய்தால் 12வது  வாரம் குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடக்கும். 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் நாகப்புற்றில் பால் ஊற்றுவது நலம் பயக்கும்.


ராகு,கேது தலங்களான காளஹஸ்தி ,திருநாகேஸ்வரம் போன்றவைகளுக்கு சென்று வழிபடுவது 
தோஷங்கள் விலகி பெருவாழ்வு வாழ வழிவகுக்கும்.


ஆதிசேஷன் காயத்திரி மந்திரம்

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹேவிஷ்ணு தல்பாய தீமஹிதன்னோ சேஷ ப்ரசோதயாத்


ஓம் சர்பராஜாய வித்மஹேபத்ம ஹஸ்தாய தீமஹிதன்னோ வாசுகி: ப்ரசோதயாத்


  




















புதன், 20 ஜூலை, 2016

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள்

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள் 

மங்கலம் என்றால் நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள் எனலாம்.

அஷ்ட மங்கலங்கள் என்பன எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையை போற்றி அளிக்கப்பட்ட பொருட்களாகும்.

இந்துக்கள் பூரணகும்பம்,ஸ்வஸ்திகம்,வட்டக்கண்ணாடி,தீபம்,குங்குமச்சிமிழ்,சந்தனக்கிண்ணம்,சங்கு மற்றும் தாம்பூலம் போன்றவற்றை மங்கல பொருட்களாக கருதுகின்றன.திருமண விழா,பூப்புனித நீராட்டு விழா,புதுமனை புகுவிழா போன்ற   இடங்களில் மங்கல பொருட்களை வைத்து சிறப்பாக விழாக்களை நடத்துவது இந்துக்களின் வழக்கம்.

பூரண கும்பம்

 மகா லக்ஷ்மி தேவியின் வடிவம் பூரண கும்பம்.கும்பத்தில் நீரை நிரப்பி தேவியை அதில் ஆவாகரணம்  செய்து வழிபடுவதே சிறந்தது.மழைக்கு  அதிபதியாக விளங்கும் வர்ண பகவான் நீர் வடிவத்தில் கும்பத்துக்குள்ளிருந்து இல்லத்தின் தூய்மையை காக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஸ்வஸ்திக் 


உலகில் அனைவருக்கும்  இன்ப,துன்பங்கள்  சுழற்சியாக வரும் என்று கூறும் வடிவம் இது.துன்பங்களை விலக்கி  விடும் சக்தி வடிவம். 

வட்டக்கண்ணாடி 


நம் முகத்தை நாமே காண்பதால் ஒரு உத்வேகம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கண்ணாடி மங்கலப்  பொருட்களாக கருதப்படுகிறது.

தீபம் 


பூஜை அறையில் அதிகாலை 4.30  மணி முதல் 6மணி வரை பிரம்ம மூர்த்தம் எனப்படும் இவ்வேளையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வீட்டில் திருமகள் நிலைத்திருக்க தீப வழிபாடு ஏற்றது.

முன்னொரு காலத்தில் இறைவனை ஒளியாக எண்ணி,தீபம் ஏற்றி வழிபட்டனர்.நம் முன்னோர்கள் வகுத்த வழியில் நாமும் செல்வதே இறைவனை அடையும் வழியாகும்.

குங்குமச் சிமிழ் 







பெண்கள் திலகமாக வைக்கும் தெய்வீகக் குங்குமத்தைத் தாங்குகிற பேழை இது.இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளை வரவேற்க குங்குமச்சிமிழ் பயன்படுகிறது.அனைவரையும் தம்பால் ஈர்க்கும்  தன்மையுள்ளது.

சந்தனக்கிண்ணம்


பழங்காலத்தில் "சந்தனப் பேலா "என்ற பெயரில் சந்தனத்தை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சந்தனக்கிண்ணம் .

திருமணத்திற்கு  வருபவர்களை வரவேற்க்கும் விதமாக சந்தனக் கிண்ணத்தில் சந்தனத்தை வைத்து இருப்பர்.நாராயணின் தர்மபத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதும் சந்தனத்தில்தான்.வீட்டு பூஜைகளிலும்,விழா மேடைகளிலும் சந்தனம் மங்கல பொருளாக விளங்குகிறது.

சங்கு 


வலம்புரி,இடம்புரி என இருவகையான சங்குகள் உள்ளன.வலம்புரி சங்கு வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவர்.


புதிய வீடுகள் கட்டும்போது நிலைவாசலில் சங்கு ஸ்தானம் என்ற விதிப்படி பூஜை செய்து பதிப்பார்கள்.இதனால் குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தாம்பூலம் 

வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து வைப்பது தாம்பூலம் என்பர்.மகாலட்சுமிக்கு விருப்பமான பொருள்.வெற்றிலை நுனியில் லட்சுமியும்,நடுவில் சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் உள்ளனர்.

அம்பாளுக்கு தாம்பூல நெய்வேத்தியம் செய்வது நல்லது.எந்த பூஜையானாலும் தாம்பூலப் பொருட்கள் வைத்து பூஜை செய்தால்தான் அந்த பூஜை நிவர்த்தி அடையும்.

அஷ்ட மங்கல பொருட்களை வீட்டில் வைத்து,செளபாக்கிய லக்ஷ்மி பூஜை செய்து வந்தால் இல்லத்தில் துர்சக்திகள் விலகி நல்லதே நடக்கும் என்று சமய நூல்கள் கூறுகின்றன. 







   

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம் 


ஆனி மாதம் பெளர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்பொழுது,ஆனித் திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.


 அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆடல் நாயகனை அலங்காரத்துடன் அவருடைய நடனத்தை காணும் திருநாள்.

சிவலிங்கத்திற்கு அன்றாடம் அபிஷேகம் உண்டு.ஆனால் இந்த திருமஞ்சனம் விசேஷமானது. 

சிவபெருமானின் நடனம் காண தேவர்களும்,முனிவர்களும் தவம் இருந்தார்கள்.விஷ்ணு பகவானும்,சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.
"சிவ-சக்தி ஒன்றே" என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார்.அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர்,பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன்  சக்தியை இழந்தார்.


சிவலிங்கத்தை தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.ஆனால் நடராஜரை தரிசித்தால் அம்பிகையையும் தரிசித்தது போன்றது என்கிறது சாஸ்திரம்.காரணம்,நடராஜரின் இடதுபாகம் சக்திதேவியின் பாகம்.அதனால் நடராஜரை தரிசிக்கும் போது,அவரது இடதுகாலையும் தரிசித்து வணங்கினால் சிவ-சக்தியின் அருளாசி முழுமையாக கிடைக்கும்.


மார்க்கண்டேயரை காப்பாற்ற எமனை அந்த இடது கால்தான்   உதைத்தது என்கிறது புராணம்.

நடராஜரின் வலதுபாகம் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும்.இடதுபாகம் சக்திதேவியின் பாகமானதால்  பக்தர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும்.

சிவபெருமானின் நடனத்தை காண கண் கோடி  வேண்டும்.அத்தனை சிறப்புமிக்க நடனம் அது.ஆனி திருமஞ்சனத்தில் சிவபெருமானின் அபிஷேகத்தையும்,நடனத்தையும் தரிசித்து வழிபடுவது சிறந்தது.ஆனி திருமஞ்சனத்தில் நடராஜரைக் கண்டு தரிசித்தல் பல நன்மைகளைக் கொடுக்கும்.

சிவ-சக்தியின் பேரருள் கிடைத்து,கஷடங்கள் அனைத்தும் நீங்கி,ஏற்றங்களையும்,நல்ல மாற்றங்களையும் பெற்று வளமோடும்,நலமோடும் வாழ்வாங்கு வாழ உமா மகேஸ்வரன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

                           
 "ஓம் நம சிவாய "
தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

                               திருச்சிற்றம்பலம் 
நன்றி வணக்கம் 
ஈஸ்வரி  


                                


































ஞாயிறு, 17 ஜூலை, 2016

லக்ஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

லக்ஷ்மி  கடாக்ஷத்தை  தரும் மருதாணி 

என் இனிய ஆன்மீக தோழிகளுக்கு என் காலை வணக்கங்கள்.மருதாணி அழகுக்காக போடுகிறார்கள் என்று அநேகம் பேர் நினைப்பதுண்டு.அதையும்தாண்டி ஆன்மீகத்திலும் மருதாணிக்கு பங்குண்டு.அது என்ன? என்பதையே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

படித்து பயன்பெறுவதே என் அன்னை லக்ஷ்மிதேவிக்கு நான் செய்யும் பக்தி என்றே சொல்லலாம்.




மருதாணி என்று சொன்னாலே நமக்கு எல்லாம் தீபாவளி,திருமணம்,விழாக்கள் என்றுதான் ஞாபகம் வரும்.தீபாவளி முதல்  நாள்,திருமணத்தின் முதல் நாள் ,விழாக்கள் போன்ற நேரங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்தி கொள்வதற்கு மருதாணியை பயன்படுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது.

மருதாணி இலையை  பயன்படுத்துவது நல்லது.இப்போது  செயற்கை மருதாணி பொடியை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.அது நம் கைகளுக்கு நல்லதல்ல.செயற்கை மருதாணி பொடியால் நம் தோலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.எப்போதும் இயற்கையோடு ஒன்றிணைக்கும் பொருட்களையே  பயன்படுத்துவது நன்று.











மருதாணி இலையை அரைத்து போடுவதால் நம் உடல் வெப்பம் தணியும்.மருதாணி இலை கிருமி
நாசினி.கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கவல்லது.


லக்ஷ்மி தேவியின் அருளை சுலபமாக பெற மருதாணியை கைகளில் இட்டு கொண்டு பூஜை செய்தால் நாம் கேட்கும்  வரத்தை பெறலாம்.அத்தகைய சிறப்புமிக்கது மருதாணி இலை.

லட்சுமிக்கும், மருதாணிக்கும் என்ன சம்பந்தம்? என்று அறிய உங்களை அன்புடன் அழைக்கின்றேன். 

லக்ஷ்மி தேவி, பூலோகத்தில்  சீதையாக பிறந்தார்.திருமால் அவதாரமான ஸ்ரீ ராமரை மணந்தார்.லக்ஷ்மி என்றாலே அழகுக்கு பிறப்பிடம் என்பது நமக்கு தெரியும்.உலகத்தின் அழ குகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக கொண்ட சீதாதேவியின் அழகில் மயங்கிய ராவணன் என்ற அரக்கன், தேவியை தன் மனைவியாக்கி கொள்ள விரும்பினான்.ஆதலால் நயவஞ்சனையாக சீதாதேவியை கடத்தி சென்று அசோகவனத்தில் அடைத்தான்.


ஸ்ரீராமரை  பிரிந்த வருத்தத்தில்,சீதாதேவி தன் கவலைகளை அங்கிருந்த செடி,கொடிகளிடம் சொன்னாள்.அப்போது மருதாணி செடி சீதாப்பிராட்டியார் சொல்வதை கேட்பதுபோல் தலை அசைக்கும்.இதை பார்த்த சீதாதேவி தன் கஷ்டங்களை கேட்க,மருதாணி செடியாவது இருக்கிறதே !என எண்ணி ஆறுதல் அடைந்தார். 

தினமும் மருதாணி செடியிடம் தன்  தோழிகளிடம் கூறுவதை போல்,தன் கவலைகளை கூறி வந்தார்.பிறகு ஒரு நாள்,ராமன்   ராவணிடம்  போர் செய்து  சீதையை மீட்டார்.அப்போது தன்  கவலைகளை இதுநாள் வரை கேட்ட மருதாணி செடிக்கு,நன்மை செய்ய வேண்டும் என நினைத்து ,மருதாணி செடியிடம் போய்," என்ன வரம் வேண்டும்?" என்று சீதாப்பிராட்டியார் கேட்டார். 

மருதாணி செடி ,"எங்களுக்கு எதுவும் வேண்டாம் .நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்."என்று கூறியது.

உன்னதமான உங்கள் குணத்திற்கு "நான் வரம் தருகிறேன் என்று  கூறி ,உன்னை கைகளில்  இட்டு கொண்டு எவர்  பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு  சகல வரங்களையும் தருவேன்"என நம் அன்னை லக்ஷ்மிதேவியார் வரம் தந்தார்.

அதன்காரணமாகவே, இன்றும் திருமணங்களில் பெண்கள் மருதாணி இடுகின்றனர்.இதனால் லக்ஷ்மிதேவியின் அருளாசி மணப்பெண்ணுக்கும்,திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவருக்கும்  மகிழ்ச்சியும்,சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

மருதாணி இலையை அரைத்து போடுவது சிறந்தது.

என்னுடைய ஆன்மீக தோழிகள் அனைவரும் லக்ஷ்மிதேவியின் அருளை பெற பூஜை நேரங்களில் மருதாணியை போடுவீர்கள்! என்று எண்ணி,இந்த பதிவை முடிக்கிறேன்.

என் பதிவை படிக்கும் அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.
உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நீங்களும் சந்தோசமாக இருங்கள்  .உங்களை சுற்றி இருப்பவர்களையும் சந்தோசபடுத்துங்கள் .
என் அன்னை லக்ஷ்மிதேவி அருளும்,ஆசியும் உங்களுக்கும் கிடைக்க நான் பிராத்திக்கிறேன்.

 

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி 
















































வியாழன், 14 ஜூலை, 2016

இறை வழிபாடு

இறை வழிபாடு

அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் நமஸ்கரங்கள். எப்பிடி இருக்கிறீர்கள் ?என்றென்றும் என் ஆன்மீக நண்பர்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.


என் மனதில் எழுந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்துக்கள் அனைவரும் அவரவர் விரும்பும் தெய்வங்களை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம்.பல்வேறு சுவாமிகளை வணங்கினாலும், எல்லாம் ஒருவரில் அடக்கம்.அவரே சிவன்.

நம் எண்ணங்கள் மாசு இன்றி சுத்தமாக இருக்க இறைவழிபாடு மிகவும் அவசியம்.நாம் செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை.தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறப்பானது.அதுமுடியாத பட்சத்தில்,காக்கை,நாய்,மீன் போன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுப்பது கோடி புண்ணியத்தை தேடி தரும்.அதுவே நம் அனுபவிக்கும் துன்பங்களை களைய வழி.

நம்முடைய வள்ளலார்" வாடிய பயிரை கண்ட  பொழுதெல்லாம் வாடினேன் "என்று செடியை ஒரு உயிர் என்று எண்ணி, அது நன்கு வளர்வதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். செடிக்கே இவ்வாறு என்றால் மனிதர்களுக்கு உணவு அளிப்பதை சொல்லவா வேண்டும்?


நாமும் பிறருக்கு அன்னம் அளித்து நற்பலனை அடைவோம்.


மனித முயற்சிகள் தோற்று போய்,ஏதாவது வழி கிடைக்காதா  என்று ஏங்கும் போது,இறைவனின் திருவடி தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை .இதை ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில்  நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.

"அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது" என்பதே உண்மை.

நாம் செய்த கர்மவினைகளுக்கேற்ப துன்பங்களும்,துயரங்களும் நம் வாழ்வில் தொடரும்.ஆனால் தீவிர இறைவழிபாடு,அந்த கர்மாக்களின் தாக்கத்தை பெருமளவில் மறைத்து,துன்பங்களை தாங்கும் ஆற்றலை நமக்கு கொடுக்கும்.




நம்மை படைத்து இனிய வாழ்வை தந்த இறைவனுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யும் கடமை இறைவனுக்குரிய வாசனையுள்ள பூ ஒன்றையாவது சமர்ப்பித்து,வழிபட வேண்டும்.


நாம் செய்யும் வழிபாட்டில் அக தூய்மையும்,புற தூய்மையும் முக்கியம்.காலையில் எழுந்தவுடனும்,இரவில் உறங்க செல்வதற்கு முன் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.

தினமும் காலை எழுந்தவுடன்,குளித்து திருநீற்றை அணிந்து பூஜைக்கு ஏற்ற பூவை வைத்து வழிபட வேண்டும்.

தேவாரம் பாடி,வழிபடுவது ,மேலும் சிறந்தது.

"நம்பினோர் கெடுவதிலில்லை"என்பது நான்கு மறைகளின் முடிவு.நாள் தவறாது குறித்த நேரத்தில் வழிபடும்போது,தியானிக்கும் போது,தெய்வத்தின் ஆசி நம்மீது விழும்.மனோபலம் உறுதி பெறுகிறது.நாம் விரும்பியதை சாதிக்கும் வலிமை கிடைக்கிறது.

கோவிலுக்கு சென்று வழிபடுதல்,கூட்டு வழிபாடு மிகவும் நன்று.

தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல் அவசியம்.இயலாதவர்கள் வாரம் 1 முறையேனும் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.அதற்கும் முடியாத போது திருவிழா,நோன்பு போன்ற சிறப்பு பூஜை காலங்களில் ஆலயம் சென்று வழிபடவேண்டும்.


தாய் தன் பிள்ளைகளுக்கு தேவைகளை குறிப்பறிந்து செய்பவள்.அதுபோல நம் தாய்க்கு தாயான இறைவனிடம் நாம் கண்ணீர் மல்கி கேட்கும் போது நம் குரலுக்கு செவி சாய்த்து நமக்கு எல்லா வளங்களையும் தருவார்.


நாம் இவ்வுலகில் பிறந்ததே பரம்பொருளான சிவபெருமானின் அருளே.அவரே நம்மை வழிநடத்தி செல்கிறார். நடப்பது,நடக்க போவது அனைத்து அறிந்தவர் சிவனே.சிவனின் அருளாலும்,அம்பாளின் கருணையாலும் நம் வாழ்வு என்றும் சிறப்பாக அமையும்.நம் துயரங்கள் நீங்கி,எல்லாவற்றிலும் வெற்றிகள் அடைய தினம்தோறும் அகிலத்திற்கே முதன்மையான அம்மை அப்பனை வணங்குவோம்.

நன்றி வணக்கம்.

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி