செவ்வாய், 14 ஜூன், 2016

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

 சக்தி பீடங்கள்


சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது.அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன.

51 சக்தி பீடங்கள்,பாரத நாட்டில் 43 பீடங்களும் ,பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும்,நேபாளத்தில் 3 பீடங்களும்,தீபெத்தில் 2 பீடங்களும்,பாகிஸ்தானில் 1 பீடமும் அமைந்துள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற் கொள்வது ,அம்பிகையின் பரிபூரண திருவருளைப் பெற வழி வகுக்கும்.



சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு 

பிரம்ம புத்திரனான தட்சன்  ஆயிரம் ஆண்டுகள் கடும்தவம் புரிந்து,சர்வேஸ்வரான சிவபெருமானிடம் ,"பிரஜாபதி பட்டத்துடன்,ஈரேழு உலகங்களையும் ஆளும் வல்லமையை வரமாக பெற்றான்.அத்துடன் ஜெகன் மாதாவான அம்பிகையை புதல்வியாக அடையும் வரத்தை வேண்டி பெற்றான்.

எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து  உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையில் அகங்காரம் மேலிட ,தானே ஈஸ்வரன் என எண்ண  துவங்கினான்.தர்ம நெறியில் இருந்து முற்றிலும் விலகி செயல் பட்டான்.வரமளித்த இறைவனிடத்தில் பகைமை  கொண்டு ,பரம்பொருளான சிவபெருமானையே அவமதிக்கும்படி யாகமும் தொடங்கினான்.

ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்ற தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது.அன்னை பார்வதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி ,யாகசாலையில் தோன்றினார் .தட்சனோ தேவியை அவமதித்து பேசியதுடன் ஈசனையும் நிந்தித்து பேசினான்.சிவனை நிந்திப்பதை பொறுக்காத தேவி ஹோமகுண்டத்தில் விழுந்து உடலை மாய்த்து கொண்டார்.ஆனால் தீயால் மாளாத தேவி உயிர் இன்றி விழுந்து கிடந்தார்.

இந்நிகழ்ச்சியால் சிவபெருமான் கோபம் கொண்டு தட்சணையும்,யாக சாலையையும்,அதற்கு உடன் இருந்தவர்களையும் அளித்ததாக சிவபுராணங்கள் கூறுகின்றன.

இறைவனின் அருளால் ஆட்டின் தலையுடன் மீண்டும் தட்சன் உயிர்த்து எழுந்தான்.

சிவபெருமான் சதிதேவியின் திருவுடலை சுமந்தபடி உக்கிரதாண்டவம் ஆடத்துவங்க,மகாபிரளயம்  உருவாகும் அபாயம் தோன்றியது.ஸ்ரீ மகாவிஷ்ணு சர்வேஸ்வரரை அமைதியுற செய்யும் பொருட்டு,தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்பூமியில் சிதறும்படி செய்தார்.அவை 51 சக்தி பீடங்களாக உருவாகின.

51 சக்தி பீடங்கள் 

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு விழுந்ததாகக் கூறுவர்.
2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.
3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.
4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.
5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.
 6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.
 7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.
 8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.
 9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.
 10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.
 11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.
 12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.
 13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
 14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.
 15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.
 16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.
 17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.
 18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.
 19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.
 20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.
 21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.
 22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.
 23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.
 24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.
 25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.
 26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.
 27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.
 28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.
 29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.
 30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.
 31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.
 32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.
 33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.
 34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.
 35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.
 36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.
 37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.
 38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.
 39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.
 40 - வராக சைலம் - ஜயா பீடம்.
 41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.
 42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.
 43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.
 44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.
 45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.
 46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.
 47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.
 48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.
 49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.
 50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.
 51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.

இறைவனின் இருப்பை உணரவும்,தர்மத்தை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே.

ஆன்மாக்கள்,முதலில் இறைவனை மறுப்பது,அறியாமையால் எதிர்ப்பதும்,பின்னர் ஞானம் பெறுவது அறிந்ததே.தட்சனின் ஆட்டுதலை அஞ்ஞானம் குறிப்பது.ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது  இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.











  

ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆன்மீகத் தகவல்கள்

அன்புள்ள என்  இணையத்தள ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

நாம் அன்றாடம் பணிகளை, காலையில் ,இறைவனின் அருளுடன் ஆரம்பித்து,இரவில் நன்றிகள் சொல்லி முடிக்கிறோம்.எந்த காரியத்தை தொடங்கும்போதும் கடவுளின் துணையுடன் ,அருளுடன் ஆரம்பிக்க ,அது நமக்கு வெற்றியை தேடி தரும்.நமக்கு கிடைத்த நேரங்கள் பல.அதில் ஒரு சில நிமிடங்களாவது கடவுளை நினைக்க வேண்டும்.நம் வீட்டு குழந்தைகளுக்கும் கடவுளை தினசரி வணங்க சொல்லி கொடுக்க வேண்டும்.


ஆன்மீகத் தகவல்கள் 




சந்தியா வதனம் என்றால் என்ன ?


சந்தி என்றால் சந்திப்பு எனப் பொருள்.

இரவும்,காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது
காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சி பொழுது 
மாலையும்,இரவும் சந்திக்கும் சாயங்காலை பொழுது 
 ஆகிய மூன்று வேளைகளும் "சந்தி" அல்லது "சந்தியா" என்று பெயர்.

இந்த மூன்று வேளைகளிலும் கடவுளை வணங்குதல் "சந்தியா வதனம்" என்று பெயர்.

சந்தியா வதனம் சூரிய வழிபாடு முறைகளில் ஒன்றாகும்.

இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்தி கூர்மை உண்டாகும்.கண்கள் சுகமடையும்.ரத்த ஓட்டம் சீராகும்.மனத்தூய்மை அடையும்.


கையில் காப்பு கயிறு காட்டுவதால் பயன் 


கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு  காப்பு கயிறு கட்டுகிறார்கள்.மஞ்சள்,சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிய வேண்டும்.பட்டு,தர்ப்பை,அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும்.நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.


காசி கயிற்றில் முருகன்,பிள்ளையார்,சிவன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

ஆண்கள் வலது கைகளிலும்,பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.

மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.
இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ் ,அதிகாரம் சேரும்.



என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .















வியாழன், 9 ஜூன், 2016

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் 


படைத்தல்,காத்தல் ,அழித்தல் போன்ற மூத்தொழிலை செய்யும் மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்ரேயர் அவதாரமாகும்.கலியகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும் ஒன்று சேர்ந்த ஆச்சரிய வடிவமாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய வடிவமாகும்.

தத்தாத்ரேயர் ஜெயந்தி ஒவ்வொரு வருடமும்  மே மாதத்தில் வரும்.எல்லா அவதாரத்திற்கும் ஆரம்பம்,முடிவு உண்டு.அனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது.ஏனெனில் ,அனுமனை பொல ,மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரன்ஜீவியாக போற்றப்படுகிறார்.

தத்தாத்ரேயர் பிறப்பு 

அனுசூயா என்பவர் கற்பின் சிகரம்.அவர் அத்ரி மகரிஷியின் மனைவியாவார்.அத்ரி மகரிஷி ஒரு பெரும் முனிவர்.அனுசூயா வருடக் கணக்கில் பல விரதங்களை அனுஸ்டித்தவர். பிரம்மா,விஷ்ணு,சிவனுக்கு இணையாக ஒரு ஆண்மகனை பெற்றெடுத்துக் கொள்ள விரும்பினார்.


ஒரு முறை லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி மூவரும் தங்கள் கணவன்மார்களை அனுப்பி அனுசூயாவின் பதிவிரதைத்தனம் எப்படி ?என்று சோதிக்கச் சொன்னார்கள்.

மும்மூர்த்திகளும் சன்னியாசிகளைப் போன்று உருமாற்றிக் கொண்டு,அனுசூயாவுக்கு முன் தோன்றி நிர்வாண கோலத்தில் தங்களுக்கு அன்னம் இடச் சொன்னார்கள். 


அனுசூயா கலங்கவில்லை.அவளுக்கு தன கற்பின் மீதும்,பதிவிரதை தன்மையின்மீதும் அதீத நம்பிக்கை.கையில் நீரை எடுத்து 'என் கணவருக்கு நான் செய்யும் பணிவிடை உண்மையானால் இந்த சன்னியாசிகள் மூன்று குழந்தைகள் ஆகட்டும்'என கூறி தெளித்தார். நீரைத் தெளித்தவுடனேயே மூவரும் குழந்தைகள் ஆகின.இதுவே அனுசூயாவின் கற்புக்கு அடையாளம்.



அந்த குழந்தை எல்லாம் தன்னுடையவை என்று நினைத்து அவைகளுக்கு தானே நிர்வாண  நிலையிலேயே பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்தாள்.அத்ரி மகரிஷி வீடு திரும்பி குளித்த பிறகு,அனுசூயா நடந்ததை எல்லாம் விவரித்தார்.அந்த மூன்று குழந்தைகளையும் அவர் காலடியில் சமர்ப்பித்தார்.அத்ரி மகரிஷி அந்த மூன்று குழந்தைகளையும் எடுத்துக் கொஞ்சினார்.அவைகள் ஒன்றாக ஆகின.இரு கால்கள்,ஒரு உடல்,மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகள் கொண்ட உருவமாக ஆகின.


சரஸ்வதி,லக்ஷ்மி,பார்வதி மூவரிடமும் நாரதர் அவர்களுடைய கணவன்மார்களுக்கு  ஏற்பட்ட கதியை எடுத்துச் சொன்னார்.அவர்கள் சாதாரண பெண்களின் உருவில்,அத்ரி முனிவர் முன் தோன்றினர்.தங்களுடைய கணவன்மார்களை மீட்டுத் தருமாறு வேண்டினர்.

வந்திருப்பது முப்பெரும் தேவியர் என்பதை அறிந்து உரிய மரியாதை செலுத்தினார்.அத்ரி மகரிஷி மூம்மூர்த்திகளையும்  தங்கள் உண்மையான உருவத்தை அடைய செய்தார்.மூவரும் "உங்களுக்கு அரிய குழந்தை பிறக்கும் அது பிற்காலத்தில் பெரிய பேர்பெற்ற மகரிஷியாக ஆகி விடும்.எங்களுக்கு இணையாக அந்தக் குழந்தை வளரும்.அதுவே அனுசூயாவின் விருப்பமும் ஆகும்.அந்த குழந்தைக்கு தத்தாத்ரேயர் என்ற பெரிய சூடப்படும்" என மகரிஷிக்கும்,அனுசூயாவிற்கும் வரத்தை கொடுத்தனர்.

அதன்படியே,மும்மூர்த்திகளின் ஒன்று சேர்ந்த வடிவமாக தத்தாத்ரேயர் பிறந்தார்.


தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.








திங்கள், 6 ஜூன், 2016

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் 

பித்ருக்களை சிரத்தையோடு வழிபாடு செய்தால் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு,வேலை,திருமணம்,மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது.பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பலன் உண்டாகாது.பித்ரு  தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.அதனை முதலில் போக்கிட வேண்டும்.பின்னரே,வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

பித்ருக்களுக்கு செய்யும் பூஜை இறைவனைச்  சேருகிறது.

.
ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம்  செய்யாமல் எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்று கொள்வதில்லை என விஷ்ணு பகவான் கூறியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .

ஆடி அமாவாசை ,தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

கோவில்களில் தர்ப்பணம் முடிந்தவுடன்,அன்னதானம் செய்தல் சிறந்தது.


திலா ஹோமம்  


மிகக் கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று திலா ஹோமம் செய்வது அவசியமானது.இதை வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும்.


திலா ஹோமம் எனப்படுவது நெல்லும்,எள்ளும் கலந்து செய்யும் ஹோமம் ஆகும்.


திலம் என்றால் எள்.திலா ஹோமம் செய்யும் அன்று இரவு ,இராமேஸ்வரத்தில்  தங்க வேண்டும்.சிரத்தையுடன் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது  கருட பகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகா விஷ்ணு ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலா ஹோமம் செய்ய வேண்டும்.


வைணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் இராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக் கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

அமாவாசை தினத்தில் செய்யக் கூடாதவை 

அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள்  வீட்டு  வாசலில் கோலம் போடக்கூடாது.

மாமிசம் சாப்பிடக் கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.


செய்யக் கூடியவை 


தர்ப்பணத்தை கிழக்கு முகமாக பார்த்தப்படி கொடுக்க வேண்டும்.

பித்ருக்களின் பூஜையை முதலில் முடித்தபிறகு ,சிறிது நேரம் கழித்து நாம் செய்யும் நித்திய பூஜையை செய்யலாம்.

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வம் மகா விஷ்ணு.



பித்ருக்கள் வழிபாடு 


அமாவாசை அன்று ,பித்ருக்கள் வழிபாட்டின் போது ,வீட்டில் முன்னே இறந்தவர்களின் படத்திற்கு துளசி மாலையோ,துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும்.இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்க்கள்.அதன்மூலம்,நமது துயர் நீங்கி,வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

நன்றி வணக்கம் 

ஈஸ்வரி 






















அமாவாசையில் தர்ப்பணம்

 அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள் என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.

நம்முடன்  வாழ்ந்து ,நம் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்ட,  இறந்து போன முன்னோர்களை நாம் நினைப்பது மிகவும் முக்கியம். நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடும்,தர்ப்பணமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து ,நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவர்.

பித்ருக்கள் பற்றி நான் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமாவாசையில் தர்ப்பணம்  

அமாவாசையை தமிழக தெற்கு பகுதியில் நல்ல நாளாக கருதுவது இல்லை .காரணம் அமாவாசை நாளன்று ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக கருதப்படுவதால் .ஆனால் வடக்கு பகுதியில் அன்றுதான் ஒரு புதிய பொருள் வாங்குதல்,நிலம் வாங்குதல் போன்றவற்றை செய்கிறார்கள்.

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது .அதாவது ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது.இந்நாளில் பித்ருக்களுக்கு பசியும்,தாகமும் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்கள்

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களை குறிக்கும்.தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்.

நம்முடைய இந்த உடல்,உயிர்,பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.இதை அனுபவிக்கும்  போது நமது பித்ருக்கள் செய்த பாவம்,பபுண்ணிய பலனை  சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

பித்ருக்கள் நமக்கு எப்போதும் நன்மையே செய்பவர்கள்.

பிதுர் கடன்

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது  அவர்களை பேணி காத்து பசியினை போக்க வேண்டும்.அதேபோல் மறைந்த பின்பும் அவர்களின் பசியை போக்க வேண்டும்.இதுவே பிதுர் கடன்  எனப்படும்.

பித்ரு லோகம் 

சூரியனுக்கு அப்பால்,பல லட்சம் மைல்  தொலைவில் பித்ரு லோகம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.அங்கிருந்து இறந்து போன நம் முன்னோர்கள் தங்கள் குடும்பங்கள் நலமாகவும்,வளமாகவும்  வாழ அருளாசி வழங்க அமாவாசை அன்று  பூமிக்கு வருகிறார்கள். தங்கள் தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.அவர்களது வாரிசுகளான நாம்,துவங்கும் காரியங்களை கரிசனத்துடன் பார்க்கிறார்கள்.ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.


நமது பித்ருதான் கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள்.நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே,பித்ருக்களை  சிரத்தையோடு வழிபாடு செய்து அவர்களின் பசியினை போக்க வேண்டும்.அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியால் வாடுவர்.வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வர்.

வருத்தத்துடன் போகும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபம் அளிப்பர் .இந்த சாபம் தெய்வ அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.மேலும் அவர்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிபடுத்த வேண்டும்.

நமது வீடு தேடி வரும் பித்ருக்களுக்கு எள்ளு கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். பித்ருக்கள் காக்கை வடிவத்தில் வந்து நாம் கொடுக்கும் உணவை சாப்பிடுவதாகச்  சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 


உங்கள் அன்பு தோழி
 ஈஸ்வரி 
























சனி, 4 ஜூன், 2016

நன்மை தரும் இராகு கால பூஜை

நன்மை தரும் இராகு கால பூஜை


சர்ப்ப கிரகங்களான ராகு ,கேது துர்க்கா தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.


ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 1.30மணி நேரம் ராகுவும்,1.30மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை .


ராகுவை வழிபட ஏற்ற காலம் ராகு காலம் எனவும் ,கேதுவை வழிபடுவதற்கு ஏற்ற நேரம் எம கண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலே ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது தவிர்க்க வேண்டும்.அதே சமயத்தில் ராகு காலத்தில்  அம்மனை ஆராதித்தல்  குறிப்பிடத்தக்கது.சண்டிகையாக துர்க்கா தேவியை வணங்குவது சிறந்த பலன் தரும் என்று தேவி பாகவதம் உள்ளது.

இராகு  கால அட்டவணை

ஞாயிறு ----மாலை 4.30 ---6 மணி 


திங்கள் ----காலை 7.30----9மணி 

செவ்வாய் ---மதியம் 3---4.30மணி 

புதன்   ----நண்பகல் 12--1.30மணி 

வியாழன் ---மதியம் 1.30 --3மணி 

வெள்ளி----காலை 10.30---12மணி  

சனி ----காலை 9---10.30மணி 

 எல்லா நாட்களும் இராகு  காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது என்றாலும் செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு போன்ற கிழமைகளில் இராகு  கால நேரத்தில் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

ராகு கால நேரத்தில் முதல் அரை மணிநேரம் மிகவும் மோசமானது.அடுத்துள்ள அரை மணிநேரம் பரவாயில்லை. கடைசி வரும் அரை மணிநேரமானது பூஜை செய்ய முக்கியமான நேரமாகும்.


செவ்வாய் கிழமை இராகு கால பூஜை செய்வது விசேஷமானது.இந்த பூஜையால் திருமணத் தடை ,முன்னேற்றத் தடை,கடன் பிரச்சனைகள்,சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை ,வீடு,மனை தொடர்பான பிரச்சனைகள்,விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3மணி  முதல் 4.30 வரை.மங்கள வார பூஜை செய்வாய் கிழமையில் செய்தல் வேண்டும்.அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி  வழிபட வேண்டும்.


வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜை குடும்ப பலன் சீராகும்.தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும்.பொன் ,பொருள் சேரும்.மக்கட் பேறு கிட்டும்.வெள்ளி கிழமை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12மணி வரை.

வெள்ளிகிழமை சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு.இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு பூ,மஞ்சள்,குங்குமம் ,வெற்றிலை பாக்கு ,மாங்கல்ய கயிறு இவைகளை வைத்து பூஜித்து சுமங்கலிக்கு வழங்க வேண்டும்.மாதம் 1முறையாவது இதை செய்வது நலம்.


ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.எதிரிகள் பயம் நீங்கும்.பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.வெளி நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.ஞாயிற்று கிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6மணி வரை.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை 

இராகு கால துர்க்கை பூஜையை தொடர்ந்து 9 வாரங்கள் செய்வது அவசியம்.இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி , அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.விளக்கினை ஜோடியாகதான் வைக்க வேண்டும்.விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள் ,வலம் வந்து  நமஸ்கரிக்க வேண்டும்.

எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது "ஐம்"என்ற சரஸ்வதி மந்திரத்தையும் ,திறக்கும் போது  
"க்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தையும்,எண்ணெய் ஊற்றும் போது "க்லீம் " என்ற காளி மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும் .முப்பெரும் தேவியரை வணங்குவதை குறிக்கும்.

கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிச்சை இடுதல் கூடாது.ஆலயத்திற்குள் நுழையும் போதே பிச்சையிடுதல் நல்லது.


















புதன், 1 ஜூன், 2016

18 படிகளுக்குரிய தெய்வங்கள்

என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள் .

கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு ,விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் வருஷம் தோறும் செல்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த விசயமே!

போனபதிவில் 18 படிகளில் ஏறும் போது  எதைவிட வேண்டும் என்பதைப் பார்த்தோம் .இந்த பதிவில் அந்த 18 படிகளுக்குரிய தெய்வங்கள் என்ன? என்பதை அறிய இருக்கிறோம் .


ஒவ்வொரு படியிலும் வாசம் செய்யும் தேவதாக்கள் 

முதல் படி ---சூரிய பகவான் 

2ம் படி       ---சிவன் 

3ம் படி      ----சந்திர பகவான் 

4ம் படி       ----பராசக்தி 

5ம் படி      ----அங்காரக பகவான் 

6ம் படி      -----முருகன் 

7ம் படி      ----புத பகவான் 

8ம் படி      ----விஷ்ணு 

9ம் படி      ----குரு பகவான் 

10ம் படி    ----பிரம்மா 

11ம் படி    ----சுக்கிர பகவான் 

12ம் படி    ----லக்ஷ்மி 

13ம் படி    ----சனி பகவான் 

14ம் படி    ----எம தர்ம ராஜன் 

15ம் படி    ---இராகு பகவான் 

16ம் படி    ---சரஸ்வதி 

17ம் படி    ---கேது பகவான் 

18ம் படி     ---விநாயக பெருமான் 



ஒற்றை படை வரிசையில் நவகிரக தெய்வங்களும்,இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் வாசம் செய்வதாக ஐதீகம் .

18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து ,வைக்கும் பொழுது ,பிறப்பு ,இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து ,முக்தி அடையாமல் தடுத்து ,வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது.

பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்களும் 18 படிகளைக் குறிக்கும்.


பூஜை செய்யும் தினத்தில் ஐயப்ப  பக்தர்கள் 18 படிகளையும் பூவாலும்,விளக்காலும் அலங்காரம் செய்து அந்தந்த தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள் .ஐயப்ப  பக்தர்கள் சபரிமலை படி பூஜையில் அய்யன் திருப்புகழை பாடியும்  ,கரவோசை எழுப்பியும் வணங்குகிறார்கள் . 



மீண்டும் சந்திப்போம்                                    அன்பு தோழி 
                                                                          ஈஸ்வரி