புதன், 21 டிசம்பர், 2016

சபரிமலை ஐயப்பன் வரலாறு


சபரிமலை ஐயப்பன் வரலாறு 



திருப்பாற்கடலை கடைந்த போது  அசுரர்களை மயக்குவதற்காக திருமால் மோகினி வடிவம் எடுத்தார். அந்த வடிவைக்கண்டு பரவசம் அடைந்த சிவபெருமான் அவளை தழுவி நின்றார். அவ்வேளையில் சிவவிஷ்ணுவின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றிய தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது பிறப்பிற்கு காரணம் இருந்தது. 

கரம்பன் என்ற அசுரனின் மகளான மகிஷி எருமைத்தலையுடன் பிறந்தாள். இவளது சகோதரன் மகிஷாசுரனை சண்டிகாதேவி கொன்றாள் என்பதற்காக அச்செயலுக்கு பரிகாரம் காண்பதற்கு விந்தியமலைக்கு சென்று தவமிருந்தாள். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை கேட்டாள். பிரம்மா மறுக்கவே, ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். அந்த மகிஷியை அழிக்கவே, தர்மசாஸ்தாவின் அவதாரம் அமைந்தது.
பின்பு பூவுலகிற்கு மகிஷி வந்தாள். அவளை அழிக்கும் எண்ணம் கொண்ட சிவன் சுந்தரன் என்ற ஆண் மகிஷத்தை உருவாக்கினார். மகிஷி அவன்மீது காதல் கொண்டாள். அவர்கள் இணைந்து வாழ்ந்துவந்தனர். தர்மசாஸ்தா ஆரம்பத்தில் சிவனுடன் கயிலாயத்திலேயே வாழ்ந்தார். பின்னர் மகிஷியை அழிப்பதற்காக 12 ஆண்டுகள் மானிடனாக வாழ்வதற்கு பூவுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வாறு பூவுலகில் அவர் பிறந்தநாளே மார்கழி மாதம், சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.
  

காட்டில் விழுந்துகிடந்த அந்த குழந்தையை பந்தள மன்னர் ராஜசேகரன் கண்டார். குழந்தை இல்லாத அவர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தையின் கழுத்தில் கனகமணி மாலை ஒன்றை சூட்டி, மணிகண்டன் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்.


 குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றதும், மகாராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். மணிகண்டன் சென்ற நல்வேளையில் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கென்று குழந்தை பிறந்தாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை வஞ்சனை நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி, ராஜராஜனுக்கு முடிசூட்டும்படி கூறினார்.

மகாராணியும் ஐயப்பனை கொல்வதற்காக தலைவலி வந்ததுபோல நடித்தார். மருத்துவர்கள் மூலமாக புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி சரியாகும் என கூறச்செய்தாள். மணிகண்டனும் காட்டிற்கு சென்றான். காட்டிலிருந்த பூதகணங்கள் அவரை வரவேற்றன. முனிவர்கள் அவரை பொன்னம்பலத்திற்கு அழைத்துச்சென்று, ரத்தின சிம்மாசனம் அமைத்து, பூஜித்து வழிபட்டனர். இந்த இடமே தற்போது மணிகண்டன் ஜோதியாக காட்சிதரும் பொன்னம்பலமேடு ஆகும்.


 அங்கிருந்தபடியே அவர் மகிஷியுடன் போரிட்டார். அவள் அழுதை நதிக்கரையோரம் விழுந்தாள்.
தன்னை மிதித்துத்தள்ளியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவனே என்பதை உணர்ந்த மகிஷி உயிர்பிரியும் நேரத்தில் அவரை வணங்கி நின்றாள். ஐயப்பன் அவளது உடலை தன் கரத்தால் தடவவும், அவள் அழகிய உரு பெற்றாள்.


 தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வேண்டினாள். இப்பிறப்பில் பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்திருப்பதைக்கூறிய ஐயப்பன் தனது இடப்பாகத்தில் சிறிது தூரத்தில் நிலைகொள்ளும்படி அருள்புரிந்தார். அவளே மஞ்சமாதா என அழைக்கப்படுகிறாள்.

 பின்பு புலிகளுடன் ஐயப்பன் நாடு வந்தார். அவரது திறமையை அறிந்த மக்களும் மன்னரும் தலை தாழ்த்தி வணங்கினர். எதிரிகளும் மன்னிப்பு கேட்டனர்.


 






பின்பு தனது 12 வயது முடிந்துவிட்டதை மன்னரிடம் உணர்த்திய மணிகண்டன், தான் ஒரு தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொண்டார்.
அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார். அதன்படியே பந்தளராஜா கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.
பரசுராமரின் உதவியுடன் மகர சங்கரம நாளில் சனிக்கிழமையன்று கோயில் உருவாக்கப்பட்டது. மாளிகைப்புறத்தம்மை, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இதனால்தான் சனிக்கிழமைகளில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவருவது இரட்டிப்பு பலன் தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக