செவ்வாய், 27 டிசம்பர், 2016

அனுமனின் அவதாரக் கதை

அனுமனின் அவதாரக் கதை


புகழ்பெற்ற இதிகாசங்களுள் ஒன்று, ராமாயணம். அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ராம பக்தியில் மூழ்கித் திளைத்த அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். காற்றின் மைந்தன் என்றும் அஞ்சனையின் புத்திரன் என்றும் போற்றப்படும் இவரின் பிறப்பு, பால லீலைகள் என எல்லாமே நாம் அறிந்ததுதான். அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் என்பர். அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.


அவதாரக் கதை : ஒரு நாள் கயிலையில் பரமேஸ்வரர் ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தார். அதைக் கேட்ட பார்வதி, தங்களுடைய நாமத்தை விட சிறப்பு வாய்ந்ததா இந்த நாமம்? என்று கேட்டார். அதற்கு சிவன், உமா! இனி வரப்போகும் காலத்தில் உலகம் தர்ம வழிப்படி நடக்கவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் காட்டவும் உன் அண்ணனாகிய மகாவிஷ்ணு ராமன் என்ற பெயரில் பூமியில் தசரதச் சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்து, செயற்கரிய செயல்கள் செய்யப் போகிறார். அந்த அவதாரத்தில் ராம என்ற பெயர் மிகவும் புகழ் பெறும். அது மட்டுமல்லாமல் நானே என்னுடைய பதினோராவது ருத்ர ரூபத்தை ராமரின் உதவிக்காக பூமியில் பிறக்கச் செய்யப்போகிறேன் என்றார். 


அதைக் கேட்ட சக்திக்கு அந்த அவதாரத்தின் போது தானும் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈசனிடம் அதைச் சொல்ல, அவரும் சம்மதித்தார். அந்த அவதாரம் எப்படி இருக்க வேண்டும் என விவாதித்தனர் அம்மையும் அப்பனும். மனித வடிவு எடுப்பது இயலாது. ஏனெனில் ராமனுக்கு தாசனாக, பணியாளனாக இருக்க வேண்டும். எப்போதுமே எஜமானனை விட பணியாளன் ஒரு படி குறைந்தவனாகவே இருப்பது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு. அது மட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும், அழகானதாகவும் விளங்குகிறது. 

அனுமன் பிறப்பு 

தசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்ததும், அதன் பிரசாதமான பாயசத்தை ஈசன் அருளால் ஒரு கருடன் கொத்திக் கொண்டு போய் காற்று அதை மிகச் சரியாக அஞ்சனையில் கையில் சேர்க்க கேசரி, அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய். ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி. அவரைத் தடுத்த இந்திரன் தன் ஆயுதத்தால் மிக மெதுவாக அவரது தாடையில் அடிக்க, அது நீண்டு உருமாறியது. அன்று முதல் சுந்தரனுக்கு அனுமன் என்ற பெயர் ஏற்பட்டது. (அனுமன் என்றால் வளைந்த தாடையை உடையவன் என்று பொருள்)


மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன். முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது. அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது. 

மாருதியின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார். 
கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார் அவர். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் அனுமன். ராமபிரானை முதல் முதலில் கண்டு, தான் இன்னார் என்று வெளிப்படுத்திக் கொண்டு ராமனுக்கு அளப்பரிய பணிகள் அனுமன் செய்தது நாம் அறிந்தது. ஜாம்பவான் மாருதியின் பலத்தை நினைவுபடுத்த அதன் பிறகு அவர் கடலைத் தாண்டியதும், சீதையை கண்டதும், இலங்கையை தீக்கிரையாக்கியதும் நாடறிந்த ஒன்று. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக