விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவி, பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மீக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய இரு மகன்கள் இருப்பதாகவும் அவை எடுத்துரைக்கின்றன. பிரம்மாவின் மகள்கள் சித்தி,புத்தி .நாரதரின் சகோதரிகள்.சித்தி தேவிக்கு சுபன் என்ற மகனும்,புத்தி தேவிக்கு லாபன் என்ற மகனும் இருந்த்தாக சொல்லப்படுகிறது.
ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் மற்றும் மகன்களுடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன் என்னும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை வேண்டுபவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியவர் என்பதால் இந்த அன்னைக்கு 'சந்தோஷி மாதா" என்று பெயர் வந்தது. அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை. அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன. இதை கண்ட விநாயகர், 'மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் 'சந்தோஷி" என்று அழைக்கப்படட்டும்.!" என்றார்.
இதை கேட்ட நாரதர், 'இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதற்கு எல்லாம் நடக்கும் நாரதா" என்று ஆசி வழங்கினார் கணபதி.
ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர், சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மணந்தார். சுனீதியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். அவளது பக்திக்காக சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது.
சந்தோஷி மாதாவிற்கு விரதம் இருக்கும் முறை :
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.
நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.
சந்தோஷி மாதாவை வழிபட்டு குடும்பத்தில் எல்லா அருளையும் பெறுங்கள்......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக