ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வாழவைக்கும் வாழைமரம்

 வாழவைக்கும் வாழைமரம் 

இறைவழிபாட்டுக்கு வாழை மரம் முக்கிய இடம் வகிக்கிறது.வாழை மரத்திலிருந்து இலை ,பூ,காய்,கனி,தண்டு போன்றவைகள் அன்றாட வாழ்க்கைக்கு உணவாகவும்,மருந்தாகவும் பயன்படுகிறது.

வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.

வாழைமரம் எந்த திசையில் குலை தள்ளினால்,என்ன பலன்? 

வடக்கு நோக்கி குலை தள்ளினால் வீடு சிறக்கும்.
தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும்.கிழக்கு நோக்கி குலை தள்ளினாள்  பதவி கிடைக்கும். மேற்கு நோக்கி குலை தள்ளினால் அரச பயம் உண்டாகும்


திருமண நிகழ்ச்சிகளில் வாழைமரம்,மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?


சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கும்பல் அதிகமாக இருக்கும்.அதனால்,அசுத்தமான காற்றினால் சுகாதார கேடு உண்டாகும்.


வாழைமரம் ஒரு கிருமி நாசினி.கரியமில வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராண வாயுவை மட்டும் வெளியிடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு தீங்கு ஏற்படாது.அதனால் வாழைமரத்தை கட்டுகிறார்கள். 

குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்றுவிட்ட வாழைமரத்தின் நிலை.திருமண வீடுகளில் வாழையடி வாழையாக மணமக்கள் வாழவேண்டும் என்ற மரபிலே  வாழைமரம் கட்டுகிறார்கள்.


மாவிலை தோரணம் கட்டுதல் தீய சக்திகளை நம்மிடம் அண்ட விடாமல் தடுக்கிறது.மாவிலை அழுகாது .ஆனால் அது காய்ந்து உலரும்.அதுபோல,என்றென்றும் நம் வாழ்க்கை கெட்டுப்போகாமல்,எல்லா வளமும் பெற்று,மங்களம் பெருக வேண்டும் என்ற காரணத்தால் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.

இந்துக்கள் இறைவனைப் பற்றியும்,இறைவழிபாட்டுக்கு செய்யப்படும் பொருட்களுக்கும் விளக்கங்கள் உண்டு.அந்தவகையில் வாழைமரத்திற்கும்,இறை வழிபாட்டுக்கும்சம்பந்தம் உண்டு.

  வாழை மரம் தோன்றிய கதை

ஒருசமயம்,சிவபெருமான்  அசுரனை அழிக்க போருக்கு  சென்றிருந்தார்.பார்வதி தேவியார், முகத்தில் பூசுவதற்கு  சிலாக் கல்லில் மஞ்சள் உரசிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் தன்  கணவன் போருக்கு சென்றதை நினைத்து , சிந்தனையுடன் மஞ்சளை உரசுகிறார்.சிலாக் கல்லின் குணம் கொஞ்சம் மஞ்சளை உரசினாலும்  அதிகமாக வரும் தன்மை கொண்டது. 

மஞ்சள் மங்கலமானது.மஞ்சள் பெண்களின் தோஷத்தை போக்கக்கூடியது.அதனால்தான்,பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது உண்டு.

பார்வதி தேவி, தனக்கு  தேவையான மஞ்சளை எடுத்து கொண்டு ,  மீதியுள்ள  அரைத்த மஞ்சளை கொண்டு ,குழந்தைமேல் உள்ள ஆசையாலும் ,தன்  கணவன்மீது கொண்ட அன்பால் ,ஒரு அழகான 9வயது ஆண் பதுமையை செய்தார்.அது பார்ப்பதற்கு  அழகாக இருந்தமையால் அதற்கு ஆடை,ஆபரணங்கள் போட்டு அழகுப்படுத்தி தாய்மை உணர்வுடன்,எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அன்னை பார்வதி.

அந்த மஞ்சளால் செய்யப்பட்ட  பொம்மையானது  தேவியின் தாய்மை கொண்ட அரவணைப்பால், கனபொழுதில் உயிர் பெற்று, அழகான சிறுவனாக உருவெடுத்தது.கணபொழுதில் விநாயகர்   தோன்றியதால்' கணபதி' என பெயர் பெற்றார்.

தேவியின் விக்கினத்தை [குறையை]நீங்கியதால் "விக்னேஸ்வரர்" என பெயரும் ஏற்பட்டது.பார்வதி தேவியார் விநாயகரை காவல் வைத்துவிட்டு,குளிக்கச் சென்றார்.


போருக்கு சென்றுவிட்டு ,பிரம்மா,விஷ்ணு,சிவன் மற்றும் தேவர்கள் கைலாய வாசலுக்கு வந்தார்கள்.சிவபெருமான் பார்வதியை பார்க்க கைலாயத்திற்கு செல்ல நுழைகையில் விநாயகப்பெருமான் தன்னை மீறி செல்ல முடியாது எனக் கூறி வழிமறித்தார்.


சிவபெருமான் தன்னை உள்ளே போக விடுமாறு சொல்லிப்பார்த்தார்.விநாயகர் அன்னையின் கட்டளையை மீறி,தான் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என கூறினார்.ஒரு பொடி சிறுவன் என்னை வழிமறிப்பதா?என சிவபெருமான் கோபம் கொண்டு  தன்சூலாயுதத்தால் விநாயகரது தலையை கொய்ய முற்பட்டார்.
சூலாயுதம் கடலையே எரித்து விடும் ஆற்றல் கொண்டது.ஆனால் முதல் தடவை ,இரண்டாம் தடவை விட்ட சூலாயுதமானது விநாயகரது தலையை கொய்து,மீண்டும் ஒட்டியது.மூன்றாவது முறையாக சிவபெருமான் அளவுக்கடந்த கோபத்தால்,நெற்றிக்கண்ணை திறந்து அக்னியின் மூலமாக விநாயகரை எரித்து விட்டார்.


'அம்மா' என்ற சத்தத்தைக் கேட்டு,பார்வதி தேவியார் ஓடிவந்து விநாயகர் உடலை மடியில் வைத்து அழுகிறார்.தான் கொன்றது தன்  மகனைத் தான் என்று அறிந்து சிவபெருமானும் கவலையுற்றார்.தேவியார் வடித்த கண்ணீர் எரிந்த சாம்பலில்பட்டு ஈரமானது.


தன் மகன் மீண்டும் வேண்டும் என தேவியார் மன்றாட,சிவபெருமானோ ஒருமுறை எரிந்து விட்டால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்று கூறினார்.பார்வதிதேவியின் பிடிவாதத்தால் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் மூவர் ஆலோசித்து,வடக்கு பார்த்து ஒரு வெள்ளை யானை நோயால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது அதன் தலையை கொய்து விநாயகருக்கு வைக்க முடிவு எடுத்தனர்.காவலாளிகளை அனுப்பி வெள்ளை யானை தலையை கொண்டுவரச் செய்தனர்.


விஸ்வகர்மாவை அழைக்கிறார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் வடிவமைப்பது விஸ்வகர்மாவின் வேலையாகும்.வேத மந்திரங்கள் முழங்க தலையை சிறியதாக்கி விஷ்வகர்மா தலையை விநாயகர் உடலுடன் பொருந்துகிறார்.



அனைவருடைய ஆசியுடன்  விநாயகர் உயிர் பெற்றதால்,முதலில் விநாயகரை வழிபட்ட பிறகே,தம்மை வழிபடவேண்டும் என்று மும்மூர்த்திகளும் அருள் வழங்கினர்.விநாயக பெருமான் அவதார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

சாம்பல் என்ன ஆனது? 

விநாயக பெருமான் எரிக்கப்பட்ட ஈரசாம்பலானது,நாரத முனிவரது காலில்  பட்டு ,பேச ஆரம்பித்தது.அன்னையின் கண்ணீரால் பேசும் சக்தி பெற்றேன்.இந்த ஈரம் காய்வதற்குள் நான் உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றது.ஈரம் காய்ந்தால் உலர்ந்து காற்றோடு பறந்து போய் விடும்.அதற்குள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பது  அதன் எண்ணம்.


நாரதர் அதன் நல்ல எண்ணத்தை பாராட்டி கைலாயத்திலிருந்து பூலோகம் போகும் கங்கை நீரில் சாம்பலான உன்னை நான் கரைத்து விடுகிறேன்.விஸ்வகர்மாவை நினைத்து தவம் செய்.அவர் உனக்கு நல்ல வழியை காட்டுவார் எனக் கூறி,கங்கையில் சாம்பல் பட்ட காலை கழுவினார்.நாரதரின் சொல்படி சாம்பலும் விஸ்வகர்மாவை நோக்கி தவம் செய்ய தொடங்கியது.


விஸ்வகர்மா தோன்றி,சாம்பலிடம் ,"மறுஜென்மம் கேட்காதே,நீ கங்கையில் கரைக்கப்பட்டதால் முக்தியடைவாய்.அதனால்தான்,நாம் இறந்தவர்களுடைய சாம்பலை கங்கையில் கரைக்கிறோம்.முதல் முதலில் விநாயகருடைய சாம்பல்தான் கங்கையில் கரைக்கப்பட்டது.

விஸ்வகர்மா,கங்கை தந்த வரம் 

'நான் மீண்டும் பிறந்தால் என்னை தீயினால் அழிக்க முடியாத  பொருளாக படைக்க வேண்டும்' என்று எரிக்கப்பட்ட சாம்பல் விஸ்வகர்மாவிடம் கேட்டது.அதன் வேண்டுக்கோளுக்கு இணங்க யாராலும் தீயால் அழிக்கமுடியாத வாழை மரமாக உன்னை படைக்கிறேன் என்று விஸ்வகர்மா வரத்தை தந்தார்.கங்கையிலிருந்து தவம் புரிந்ததால்,கங்கையும்' மக்கள் பாவங்களை போக்க என்னிடம் வருகிறார்கள்' அதுபோல் உன்னில் இருந்து வரும் வாழைப்பழமானது பூஜைக்கு உரிய பழமாகவும்,சுப நிகழ்ச்சிகளில் வைத்து வணங்குவார்கள் என்று வரத்தை தந்தது.


அதனால்தான் நாம் பூஜையில் வாழைப்பழத்தை வைத்து வணங்குகிறோம்.வாழைமரமானது வெட்ட வெட்ட துளிர்க்கக் கூடியது.அதுபோல் மணமக்கள் வாழ்க்கையானது என்றும் வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்பதால் வாழைமரம் சுபநிகழ்ச்சிகளில் காட்டப்படுகிறது.இவ்வாறு தான் வாழைமரம் தோன்றியது.

நன்றி வணக்கம் 








































   



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக