வியாழன், 12 நவம்பர், 2015

கந்த சஷ்டி விழா

ஹாய் பிரண்ட்ஸ்


தீபாவளி முடிந்து ,அன்றாட வாழ்க்கைக்கு  வந்து இருப்பீர்கள்? .உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்னிக்கு கந்த சஷ்டி விழாவைப் பற்றி உங்களுடன் பகிர இருக்கிறேன் .

எந்த வினை ஆனாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி  ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு .


முருகனுக்கு உரிய விரதங்களில் இது முக்கியமானது .தேவர்களுக்கு தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் -சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார் .


கந்த பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார் .அவரது பேரருளால் ஒன்று சேவலானது .மற்றொன்று மயிலானது.முருகன் மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் கொண்டார்.


சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகின்றன .ஆறு நாட்களும் பூரண  உபவாசம் இருத்தல் வேண்டும் .இதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்கள் பால்,பழம்  உட்கொள்ளலாம். ஆறாவது நாள் சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.


குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த விரதத்தை கடைபிடித்தால்  ,முருகனே குழந்தையாக  அவதரிப்பார்  என்பது ஒரு நம்பிக்கை .

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் (அகப்பை)கருப்பையில் வரும் என்பது  பழமொழி .


முசுகுந்தச் சக்ரவர்த்தி ,வசிஷ்ட முனிவர் இந்த விரதம் பற்றி கேட்டறிந்து ,கடைப்பிடித்து பெரும் பயன் அடைந்துள்ளனர் .


சஷ்டி அன்று ,அதிகாலையில் எழுந்து ,நீராடி நெற்றிக்கு விபூதி,சந்தனம் ,குங்குமம் இட்டு பூஜை அறையில் கோலம் போட்டு வாசனை மலர்களால் முருகனின் படம் அல்லது விக்ரகத்தை  அலங்கரித்து திருவிளக்கை ஏற்றி நறுமண பொருட்களான பத்தி ,சாம்பிராணி ஏற்றி வைத்து  முதலில் குலதெய்வம் ,பிள்ளையார் ,முருகன் என சுலோகம் சொல்லி வணங்க வேண்டும்.


கந்த சஷ்டி கவசம் ,கந்த குரு கவசம் ,கந்தர் அனுபூதி ,சுப்ரமணிய புஜங்கள் துதியை சொல்ல வேண்டும் .இதுவும் சொல்ல தெரியாதவர்கள் கந்த சரணம்,முருகா சரணம் என்று கூறி வணங்கலாம் .


தீப ஆராதனை செய்து பழம்,பால் நிவேதியம் வைக்க வேண்டும்.



அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று,தரிசனம் செய்து ,விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.எளியோனான முருகன் நாம் நிவேதியமாக எது வைத்தாலும் ஏற்று கொண்டு நினைத்ததெல்லாம் கொடுப்பார்.


முருகன் அருளால், மணப்பேறு ,மகப்பேறு ,நல்வாழ்வு ,ஆரோக்கியம் ,ஆயுள் ,புகழ்,செல்வம் நிச்சயம் கிடைக்கும் .


என்றென்றும் நம் வாழ்வில் நிம்மதி ,சந்தோசம் ,உற்சாகம் கிட்ட முருகனை வேண்டுவோம்.

நன்றி ,அடுத்த பதிவில்
ஈஸ்வரி



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக