ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கண்ணாடி வளையல்கள்

கண்ணாடி வளையல்கள் 


இப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்த கால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே வளையல்கள் நினைவுபடுத் தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டும் இன்றளவும் பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு, சீமந்தம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் பிரதான மான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும்  வளையல் அடுக்குவதுதான். ஆரம்ப காலங்களில் வெறும் கண்ணாடி வளையல் மட்டுமே அணிவித்து வந்த இந்த சம்பிரதாயம் நாளடைவில் பிளாஸ்டிக் வளையல்களை அணிவிப்பதாக கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. 

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும். பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தந்தத்திலும் வங்காள மாநிலத்தில் சங்கிலும் வளையல் செய்யப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையளும் அணிவது மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில்  அவற்றையே பச்சை வண்ணத்தில் அணிகிறார்கள். கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை, சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலை களை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது; அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும் (திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது. 

வளையல்களும்,அதன் பலன்களும்

பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம்.உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும்.
சிப்பி,கிளிஞ்சல் வளையல்கள் அணிந்தால்,வாயுத் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையலால் எந்த பயனும் இல்லை.தங்கம் வளையல்களை கர்ப்பிணிகள் அணிவதால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல மூளை செயல்பாட்டுடன்  வளரும்.தங்கம் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக்காக செயல்படும்.

பின் வளைகாப்பு அடுக்கும் நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்து கொள்ளலாம்.கர்ப்பிணி பெண்  மெல்ல நடந்துவரும் உடல்வாகைக் கொண்டிருப்பாள். அதனால் அவள் வரும்போது முன்னே, பின்னே, அக்கம்பக்கத் தில் செல்பவர்கள் அவள் வருவதைப் புரிந்துகொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும். இது தவிர பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இ ருந்து வந்திருக்கிறது.

வண்ணக் கண்ணாடி வளையல்களை அணிவதால் என்னென்ன பலன்கள்? 

பச்சை நிறம், தேவியின் தத்துவம்; பச்சை நிறக் கண்ணாடியில் அதிகம் உள்ளது. வளையலில் உள்ள சாத்வீகத் தன்மையும் தேவி தத்துவமும்  சைதன்யமும் சேர்ந்து மணிக்கட்டிலும் விரல்களிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, தீய சக்திகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுகின்றன. வளையலின் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத் திறத்தைக் குறிக்கிறது.


சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக் கூடிய சக்தியும் கொண்டது. சிவப்பு கண்ணாடி வளையலும் அவ்வாறே தீயனவற்றை அழித்து, நல்ல சக்திகளை கிரகிக்கக் கூடியது. சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்பு நிற வளையல்களில் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளது.

ஊதா நிற வளையல்கள் வளையல்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.பர்பிள் நிற வளையல்கள் சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும்.மஞ்சள் நிற வளையல்கள் பாசிட்டிவ் எண்ணத்தை கொடுக்கும்.கறுப்பு வளையல்கள் மனதைரியத்தை அதிகரிக்கும். 

கண்ணாடி மகாலக்ஷ்மியின் அம்சம் ஆகும்.ஆதலால் பெண்கள் கண்ணாடி வளையல் அவசியம் அணிய வேண்டும்.மங்கள பொருளாகும்.ஆடிப்பூரத்தில் கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவிக்கிறார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள் அணிவதால் எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்டாது.

 கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது.  ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்பு உள்ளது. 


வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ் புத்தாண்டு பூஜையறை அலங்காரங்கள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முதலில் நமது இணைய தள அன்பர்களுக்கு இனிய  ஸ்ரீஹேவிளம்பி  ஆண்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 
தமிழ் புத்தாண்டில் முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு . 
இது காலையில் கண் விழிக்கும் போது பார்க்கும் வளமான விஷயம் மனதில் புகுந்து  , நமக்கு நல்ல வாழ்வும் வளமும் நல்கும். 




 தமிழ் புத்தாண்டு பூஜையறை அலங்காரங்கள் 




தமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல் பூஜை அறையில் உள்ள படங்களை துடைத்து மலர்போட்டு அலங்கரிக்கும் மக்கள் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து அதனை பார்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

பூஜையறையை எப்படி அலங்காரம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

மலர் அலங்காரம்

 பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கலாம். மஞ்சள் நிறம் மங்களகரமானது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். இந்தப்பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.

 ரூபாய், நாணயங்கள் 

செல்வத்தின் அம்சமாக  உள்ள லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய ஒரு தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச்சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம். தற்போது 5 ரூபாய் தங்க நாணயங்களை வடிவில் வந்துள்ளது. அதனை நடுவில் வட்டமாக அடுக்கி அதனுள் பிளாட்டினம் போல் உள்ள ஒரு ரூபாய் சின்ன நாணயங்களை அடுக்கலாம். பார்க்கவே லட்சுமி கடாட்சமாக இருக்கும். 

கனிகளால் அலங்காரம் 

கோடை காலத்தில் அதிகம் கிடைப்பது மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும். அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் பரப்பில் வைத்து வரிசையாக அடுக்கலாம். நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம். இதுபோல் பூஜை அறையை அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு  பச்சரிசி மாவினால் அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும். 

தினமும்  பச்சரிசி மாவினால் கோலமிட்டு வருவது  நன்மை உண்டாகும். அதாவது நாம் கோலம் போடும் பச்சரிசி மாவைச் சாப்பிடும் எறும்புகள் நம்மை வாழ்த்தும் .   அதனால் கோலம் போடும் போதெல்லாம் சுண்ணாம்பால் கோலம் போடாதீர்கள், பச்சரிசி மாவால் கோலமிடுங்கள் . 

மா , பலா , வாழை , முதலிய பழங்களை முக்கனிகள் என்பர் .அதாவது  முக்கனிகள் என்பது மூன்று இனிப்புக்களையும் குறிப்பன. அதாவது இனிப்பு என்பது மூன்று  நெருப்புக்களால் ஆனது . அதாவது இனிப்பு  என்பது கார்போ ஹைட்ரேட்டுக்களால் ஆனது , ஆக்சிஜனோடு கூடி எரியும்போது  நெருப்பையும் , தண்ணீரையும் உண்டாக்குகிறது . அதனால் இவை முத்தீயை குறிப்பன . இதுவே முத்தி தரிசனத்தை குறிப்பது.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அறுசுவை உணவு

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

நாமும் வரவிருக்கும் தமிழ் புத்தாண்டை நம் குடும்பத்துடன் கடவுளை வணங்கி, என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ அருள் பெறுவோம்.

எத்தனை கவலைகள் இருந்தாலும் அதை இறைவன் காலடியில் வைத்து விட்டு ,சந்தோஷத்துடன் வாழ கற்றுக் கொள்வோம்.இப்போது கிடைக்கும்  நேரத்தையும்,காலத்தையும் நல்ல விதமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.

எல்லா செயலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம். 

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 




ராம நவமியும்,சாய்பாபா அவதார நாளும்

ராம நவமியும்,சாய்பாபா அவதார நாளும்  


சீரடி சாய்பாபாவின் அவதார திருநாளான ராமநவமி அன்று  விரதமிருந்து சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.

சாய்பாபா அவதார திருநாள் 

ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்


ராம அவதாரம் மிகவும் மகிமை வாய்ந்தது. ஏனெனில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மட்டுமே முழுமையானதாகக் கருதப்படுகிறது. 

பங்குனி மாதம் நவமி திதியன்று ராமபிரான் பிறந்தார். இதனால் அவரது பிறந்த நாள் ‘‘ராம நவமி’’ என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த போது 5 கிரகங்கள் உச்சத்தில் இருந்தன. எனவே ராமர் ஜாதகத்தை எழுதி பூஜையில் வைத்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. 


அது போல ராம நாமமும் மகத்துவம் வாய்ந்தது. ராம நவமி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடக்கும் பட்டாபிஷேகத்தை கண்டு களிப்பது மிகவும் நல்லது. 

ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை தினமும் 108 தடவை உச்சரித்தால் ஆணவம் உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் விலகும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் குடி கொள்ளும். 

ராமநவமி தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு சாதம், நீர் மோர், பானகம், வடை போன்றவற்றை தானம் செய்வதுடன் விசிறிகளையும் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. 


பொதுவாக அஷ்டமி, நவமி தினங்களில் நாம் எந்த நல்ல செயலையும் தொடங்குவதில்லை. என்றாலும் நவமி திதியில் ராமர் பிறந்ததால் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. இதனால் ராமநவமி தினம் ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார்.  அந்த அவதாரம் நிறைவு பெற்ற பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்பாபா அவதாரம் சமீபத்தில் நிகழ்ந்தது. சீரடியில் இருந்தபடி இந்த உலகையே ஆட்சி செய்த சாய்பாபாவின் அவதாரத் தினமாக ராமநவமி தினம் (5.4.17)கணிக்கப்பட்டுள்ளது.



மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரின் இறுதி இலக்கு என்ன? ஆனந்தமாக வாழ வேண்டும். இறுதியில் மறு பிறப்பு இல்லா முக்தியை பெற வேண்டும் என்பது தான். இந்த இரண்டையும் தரும் கண்கண்ட கடவுளாக, குருவாக, நம் கையை பிடித்து செல்லும் தோழனாக, வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.

நம்மை பிறவிப் பிணியில் இருந்து மீட்டு துயர் துடைக்க வந்த அவதாரமாக அவர் இந்த பூமியில் தோன்றினார். அவர் எங்கு தோன்றினார்? எப்படி தோன்றினார்? எந்த ஆண்டு அவதாரம் எடுத்தார்? அவர் பெற்றோர் யார்? எங்கிருந்து அவர் சீரடிக்கு வந்தார்? எப்படி அவரால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாக மாற முடிந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.

கடவுள் அவதாரத்தை எப்படி சாமானிய மனிதர்களால் கணக்கிட்டு விட முடியும்? என்றாலும் ராம நவமி தினத்தை சீரடி சாய்பாபாவின் பிறந்த தினமாக-ஜெயந்தி தினமாகக் கொண்டாடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

“அனைத்து ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்” என்பதை பாபா அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதனால்தான் அவரால் அனைத்து மதங்களுக்கும் தேவையான மரியாதையைத் தர முடிந்தது. இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுடன் குர்ஆனில் கூறப்பட்டு இருப்பது பற்றி பேசுவார். விவாதிப்பார்.
அது போல இந்துக்கள் வந்தால் அவர்களுக்கு ராம மந்திரத்தைப் போதிப்பார்.


ஒரு தடவை இயேசுநாதர் பற்றி தரக்குறைவாகப் பேசிய பக்தரை கடும் கோபத்துடன் கண்டித்தார். அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இப்படி எந்த மதத்துக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாததால்தான் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சாய்பாபாவை மனதார கடவுளாக ஏற்றுப் பூஜித்துப் போற்றினார்கள்.


பாபா எப்போதுமே, தான் கடைபிடிக்கும் வாழ்வியல் நடைமுறைகளை தனது பக்தர்களும் உளமாற கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரால் சீரடி தலத்தில் முஸ்லிம்களின் விருப்பப் பண்டிகையான சந்தனக்கூடு விழாவையும், இந்துக்களின் பண்டிகையான ராமநவமியையும் ஒரே நாளில் சீரும் சிறப்புமாக நடத்த முடிந்தது.



மத நல்லிணக்க விழாவாக ராமநவமி-உர்ஸ் விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக ஸ்ரீசாய் சத்சரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரடி அருகில் உள்ள கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். இவர் பாபாவின் அதி தீவிர பக்தர்.

மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கோபால்ராவ் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். 1897ம் ஆண்டு ஒரு தடவை பாபா வழங்கிய அருளாசியால் அவருக்கு குழந்தை பிறந்தது.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கோபால்ராவ், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பாபா பெயரில் உருஸ் எனும் திருவிழா நடத்த விரும்பினார். தாத்யா பாட்டீல், சாமா ஆகியோர் மூலம் பாபாவிடம் பேசி அவர் உருஸ் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றார். அடுத்து எந்த தினத்தில் உருஸ் விழாவை நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அதையும் சாய்பாபாவிடமே கேட்டனர்.

உடனே பாபா கொஞ்சமும் தயக்கமின்றி ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். உருஸ் விழாவுக்கு வந்திருந்த “சாய் சகுணோபாசனா” எனும் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணராவ் ஜாகேச்வர் பீஷ்மா, உருஸ் தினத்தன்று ராமநவமி பண்டிகையையும் கொண்டாடினால் என்ன என்று மற்றவர்களுடன் விவாதித்தார். பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான காகா மாஜினியும் ராமநவமி தினத்தை கொண்டாடலாம் என்றார்.

அந்த ஆண்டு உருஸ் திருவிழா, ராமநவமி விழாவாகவும், சந்தனக்கூடு விழாவாகவும் களை கட்டியது. பாபாவுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.

1913-ம் ஆண்டு முதல் ராமநவமி திருவிழா 7 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் திருவிழாவாக மாறியது. 7 நாட்களும் கீர்த்தனைகள் பாடப்பட்டன.



பாபாவின் அருளால் சீரடியில் நடந்த இந்த விழாக்களில் முதலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.

உருஸ்-ராமநவமி- சந்தனக்கூடு விழாவுக்காக பாபா பயன்படுத்த அழகான குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பாபாவுக்கு பணக்கார பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

ஆனால் எந்த ஆடம்பர, அலங்கார பொருளும் சாய்பாபா நடவடிக்கைகளை மாற்றி விடவில்லை. அவர் ஏதும் இல்லாத சன்னியாசி போலவே சீரடி மசூதியில் வாழ்ந்தார். ராமநவமி நாட்களில் சாய்பாபாவுக்கு அழகு நிறைந்த பட்டுச்சட்டைகள், சால்வைகள் அணிவிக்கும் ஒரு புதிய பழக்கம் தோன்றியது. சாய்பாபாவை சீரடி சமஸ்தானத்தின் மகாராஜாவாக கருதி பக்தர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.

ஆனால் பட்டு சட்டைகள், சால்வைகளை பாபா ஒரு போதும் நிரந்தரமாக அணிந்து கொண்டதே இல்லை. எந்த பக்தர் அந்த பட்டுச்சட்டையை வாங்கி வந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறு மலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.

அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார்.

பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

நாட்டில் அதர்மம் அதிகரிக்கும் போது, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவனே பூமிக்கு இறங்கி வந்து அவதார புருஷர்களாக பிறப்பது வழக்கம். அந்த வகையில் பாபா கலியுகத்தின் அவதார புருஷர். 


பொதுவாக சாய்நாதரின் அருள் பெற தினசரி வழிபாடு, விரதம், 4 கால ஆரத்தி செய்வதுண்டு. இதில் 4 கால ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சீரடி சாய்பாபா உயிரோடு இருக்கும்போதும் 4 வேளை ஆரத்தி அவருக்கு காட்டப்பட்டது. அதே போன்று சீரடி சாய்மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.
சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த 4 வேளை ஆரத்தியை, செய்வதும், ஆரத்தியில் கலந்து கொள்வதும் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி. 



ஆரத்தி மூலமாக சத்குருவான சாய்பாபாவை வணங்கினால் வாழ்க்கையில் ஒழுக்கமும், பாதுகாப்பும் தேடி வரும். சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும்.

நிறைய பக்தர்கள் வாழ்வில் இந்த ஆரத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காகட ஆரத்தி நாம் நலமாக இருக்க உதவுகிறது. மதிய வேளை ஆரத்தி நமது வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பம் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. மாலை நேர தூப ஆரத்தி, நமது மனம் போன போக்கில் போகாமல் சாய்நாதரை சரண் அடைய உதவுகிறது.

இரவு நேர சேஜ் ஆரத்தி நாம் தினமும் பெறும் நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளது. ஆரத்தி செய்யப்படும் இடங்களிலும், ஆரத்தி செய்பவர்களிடமும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று சாய்நாதர் பல தடவை உறுதிபட கூறியுள்ளார்.

எனவே அவரது அவதார திருநாளில்  சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி. 

சாய்நாதர்    திருவடியேசங்கடம் தீர்க்கும்    திருவடியே நேயம் மிகுந்த    திருவடியே நினைத்தளிக்கும்    திருவடியே தெய்வபாபா    திருவடியே தீவினை தீர்க்கும்    திருவடியே உயர்வை அளிக்கும்    திருவடியே போற்றி

 



புதன், 5 ஏப்ரல், 2017

மஹா வராகி வழிபாடு

மஹா வராகி வழிபாடு 



தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. 

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..

“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”– திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.

அபிராமி அந்தாதி :

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

அன்னை வராகி வழிபாடு :

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;
அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்:

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

பிள்ளையார் பிடித்து வைக்கும் பொருட்களும், பலன்களும்

பிள்ளையார் பிடித்து வைக்கும் பொருட்களும், பலன்களும்




1.  மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
காரிய சித்தி தருவார்

2.  குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3.  புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்

4.  வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும். வளம் தருவார்

5.  உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.
எதிரிகளை விரட்டுவார்

6.  வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்

7.  விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8.  சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9.  சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10.  வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11.  வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12.  சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13.  பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

14.  கல் விநாயகர்- வெற்றி தருவார்.

15.  புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்.

16.  மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.


வியாழன், 30 மார்ச், 2017

விஷ்ணுதுர்க்கையும் ,சிவதுர்க்கையும்

விஷ்ணு துர்க்கையும்  ,சிவதுர்க்கையும் 

அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு  என் இனிய  காலை வணக்கங்கள்.

நாம் எல்லோரும் சிவன்,விஷ்ணு கோவில்களில் துர்க்கையை சிவதுர்க்கையாகவும்,விஷ்ணு துர்க்கையாகவும் வழிபட்டு வந்திருப்போம்.எனக்குள் இந்த வித்தியாசம் என்ன? என்பதை அறிய என் உள்ளம் ஏங்கியது.அதன் பொருட்டு, எனக்கு தெரிந்த அறிந்தவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விஷ்ணு துர்க்கை





நான்கு  கரங்களுடன் குறிப்பாக தனது இரண்டு கைகளிலும் சங்கமும் சக்ரமும் ஏந்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகக் காட்சி தருபவள் விஷ்ணுதுர்க்கை எனப்படுகிறாள்.

சிவதுர்க்கை 

 பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்ர ஸ்வரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.  சும்பன் நிசும்பன் சக்தபீஜன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்று பூமியில் சிம்ம வாகனத்துடன் தோன்றி காட்சியளிப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி மதுரா நகரத்தில் தேவகியின் வயிற்றில் தோன்றிய ஏழாவது கர்ப்பத்தை ஆகர்ஷித்து இழுத்துக்கொண்டு போய் நந்தகோகுலத்தில் ரோஹிணி என்பவளின் கர்ப்பத்தில் சேர்த்துவிட்டு தானும் யசோதைக்குப்  பெண் குழந்தையாகப் பிறந்து கம்சனுக்கு அறிவுரை சொல்லி ஆகாசத்தில் காட்சி தந்தவள் விஷ்ணு துர்கை எனப்படுகிறாள் என்கிறது ஸ்ரீ பாகவதம். ஆகவே கைகளில் சங்கும் சக்ரமும் இருந்தால் அந்த தெய்வம் விஷ்ணு துர்கை என்றும் சங்கு  சக்கரம் இல்லாமல் மற்ற ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருந்தால் அது சிவ துர்கை என்றும் பொதுவாக புரிந்து கொள்ளலாம்.

நாம் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளை அறிந்து வணங்கினால் அது நமக்கு மேலும் கடவுளை வணங்குவது ஆத்மார்த்தமாக  இருக்கும். 

என்னுடைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உங்கள் கருத்தையும் பகிர்ந்தால் மேலும் நிறைய பதிவுகள் எழுத ஒரு தூண்டுகோலாக அமையும்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?




தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார் 

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.


உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். உலகின் அனைத்து ஜீவராசி களுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.

‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முந்தி வரம் தரும் நந்தி தரிசனம் என்பார்கள். ‘நந்தியின் நாமம் நமசிவாயவே’ எனப் பாடிப்பரவி யுள்ளார் திருஞானசம்பந்த பெருமான். நந்தி என்பதற்கு வளர்வது என்று பொருள். ஞானத்திலும், குணத்திலும் உயர்ந்தவர்களை நந்திகள் என்றழைப்பது உண்டு. நம் வாழ்வு செழிக்க, ஞானம் வளர இறைவனின் திருவருள் தேவை. நந்தி தரிசனம் அதற்கு உதவும். பிரதோஷம், சனி பிரதோஷமாக வருவது மிகவும் விஷேசம்.பிரதோஷம் அன்று   உரிய நேரத்தில் சிவாலயம் சென்று வணங்குவதுடன், நம் வாழ்வு செழிக்க நந்தியையும் வணங்கி, அவர் மூலம் சிவனாரிடத்து வரம்பெற்று மகிழ்வோம். 

நந்தியின் நல்லருளை பூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாக, நந்தியெம் பெருமான் குறித்த சிறப்பு தகவல்களும் ,தலங்களும் 


* திருவையாறு புராணம் திருமழப்பாடியில் சிலாதல முனிவருக்கு மகனாகத் தோன்றிய சைலாதி என்பவரே, தனது ஒப்பற்ற தவத்தால் நந்தியாகும் பேறு பெற்றார் என்கிறது.

* திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாண விழா சிறப்பு மிக்கதாகும். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் ஆகும் என்பது சொல்வழக்கு. இதற்கேற்ப நந்தி கல்யாணத்தைத் தரிசிக்க இந்தத் தலத்தில் பெரும் கூட்டம் கூடும்.

* நந்தி திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக் குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதய ராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.

* தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் நந்திதேவரின் வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை சோழர்காலத்து கலைப்பணியாகும்.

* மயிலாடுதுறையில் அருள்மிகு மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் குடைவரையில் திருமணக் கோலத்துடன் அருளும் அதிகார நந்தி தேவரைக் காணலாம்.

* திருக்கழுக்குன்றம், மயிலை ஆகிய தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில், சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் வேதகிரீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வருகிறார்.

* திருவையாறு புராணத்தில் நந்திதேவர் சிவனாரை வேண்டி குரங்கு முகம் பெற்றதாக தகவல் உண்டு. காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் குரங்கு முகத்துடன் கூடியவராக அதிகார நந்தியை அமைத்து வழிபடுகின்றனர். 

* நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் தில்லை. திருவலம் தலமும் நந்தி விலகி அமர்ந்த தலமாகும். திருவைகாவூரில் நந்தியெம்பெருமான் திரு முகத்தை சற்றே திருப்பிவைத்திருப்பார். 

* கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். ‘பஸவ’ என்ற கன்னட சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான்.

இன்றைக்கும் இந்த நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, வருடம் தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. 

இங்குள்ள நந்தி பகவான், ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரரை தரிசிக்கும் நிலையில், இமயமலை இருக்கும் வடதிசை நோக்கி காட்சி தருவது சிறப்பம்சம். நந்தியின் வலக்காலின் அடியில் தபேலா போன்ற ஓர் இசைக் கருவி இருக்கிறது. அதன் அடியில் ஒரு தாமரைப்பூ. அதன் அடியில் தான் ‘ரிஷபா நதி’ என்றொரு நதி உற்பத்தியாகி காசி- கங்கையில் சங்கமமாவதாக ஐதீகம்.

நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக் கோயிலில் குதிரை முகத்துடன் திகழும் நந்தியைத் தரிசிக்கலாம்.

* பிரமாண்டத்தில் நம்மை மலைக்கவைப்பவர் தஞ்சை நந்தியெம் பெருமான். ராஜராஜன் வைத்த நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட..., பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினர்.