ராம அவதாரம் மிகவும் மகிமை வாய்ந்தது. ஏனெனில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மட்டுமே முழுமையானதாகக் கருதப்படுகிறது.
பங்குனி மாதம் நவமி திதியன்று ராமபிரான் பிறந்தார். இதனால் அவரது பிறந்த நாள் ‘‘ராம நவமி’’ என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த போது 5 கிரகங்கள் உச்சத்தில் இருந்தன. எனவே ராமர் ஜாதகத்தை எழுதி பூஜையில் வைத்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அது போல ராம நாமமும் மகத்துவம் வாய்ந்தது. ராம நவமி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடக்கும் பட்டாபிஷேகத்தை கண்டு களிப்பது மிகவும் நல்லது.
ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை தினமும் 108 தடவை உச்சரித்தால் ஆணவம் உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் விலகும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் குடி கொள்ளும்.
ராமநவமி தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு சாதம், நீர் மோர், பானகம், வடை போன்றவற்றை தானம் செய்வதுடன் விசிறிகளையும் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.
பொதுவாக அஷ்டமி, நவமி தினங்களில் நாம் எந்த நல்ல செயலையும் தொடங்குவதில்லை. என்றாலும் நவமி திதியில் ராமர் பிறந்ததால் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. இதனால் ராமநவமி தினம் ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். அந்த அவதாரம் நிறைவு பெற்ற பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்பாபா அவதாரம் சமீபத்தில் நிகழ்ந்தது. சீரடியில் இருந்தபடி இந்த உலகையே ஆட்சி செய்த சாய்பாபாவின் அவதாரத் தினமாக ராமநவமி தினம் (5.4.17)கணிக்கப்பட்டுள்ளது.
மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரின் இறுதி இலக்கு என்ன? ஆனந்தமாக வாழ வேண்டும். இறுதியில் மறு பிறப்பு இல்லா முக்தியை பெற வேண்டும் என்பது தான். இந்த இரண்டையும் தரும் கண்கண்ட கடவுளாக, குருவாக, நம் கையை பிடித்து செல்லும் தோழனாக, வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.
நம்மை பிறவிப் பிணியில் இருந்து மீட்டு துயர் துடைக்க வந்த அவதாரமாக அவர் இந்த பூமியில் தோன்றினார். அவர் எங்கு தோன்றினார்? எப்படி தோன்றினார்? எந்த ஆண்டு அவதாரம் எடுத்தார்? அவர் பெற்றோர் யார்? எங்கிருந்து அவர் சீரடிக்கு வந்தார்? எப்படி அவரால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாக மாற முடிந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.
கடவுள் அவதாரத்தை எப்படி சாமானிய மனிதர்களால் கணக்கிட்டு விட முடியும்? என்றாலும் ராம நவமி தினத்தை சீரடி சாய்பாபாவின் பிறந்த தினமாக-ஜெயந்தி தினமாகக் கொண்டாடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
“அனைத்து ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்” என்பதை பாபா அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதனால்தான் அவரால் அனைத்து மதங்களுக்கும் தேவையான மரியாதையைத் தர முடிந்தது. இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுடன் குர்ஆனில் கூறப்பட்டு இருப்பது பற்றி பேசுவார். விவாதிப்பார்.
அது போல இந்துக்கள் வந்தால் அவர்களுக்கு ராம மந்திரத்தைப் போதிப்பார்.
ஒரு தடவை இயேசுநாதர் பற்றி தரக்குறைவாகப் பேசிய பக்தரை கடும் கோபத்துடன் கண்டித்தார். அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இப்படி எந்த மதத்துக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாததால்தான் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சாய்பாபாவை மனதார கடவுளாக ஏற்றுப் பூஜித்துப் போற்றினார்கள்.
பாபா எப்போதுமே, தான் கடைபிடிக்கும் வாழ்வியல் நடைமுறைகளை தனது பக்தர்களும் உளமாற கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரால் சீரடி தலத்தில் முஸ்லிம்களின் விருப்பப் பண்டிகையான சந்தனக்கூடு விழாவையும், இந்துக்களின் பண்டிகையான ராமநவமியையும் ஒரே நாளில் சீரும் சிறப்புமாக நடத்த முடிந்தது.
மத நல்லிணக்க விழாவாக ராமநவமி-உர்ஸ் விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக ஸ்ரீசாய் சத்சரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரடி அருகில் உள்ள கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். இவர் பாபாவின் அதி தீவிர பக்தர்.
மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கோபால்ராவ் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். 1897ம் ஆண்டு ஒரு தடவை பாபா வழங்கிய அருளாசியால் அவருக்கு குழந்தை பிறந்தது.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கோபால்ராவ், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பாபா பெயரில் உருஸ் எனும் திருவிழா நடத்த விரும்பினார். தாத்யா பாட்டீல், சாமா ஆகியோர் மூலம் பாபாவிடம் பேசி அவர் உருஸ் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றார். அடுத்து எந்த தினத்தில் உருஸ் விழாவை நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அதையும் சாய்பாபாவிடமே கேட்டனர்.
உடனே பாபா கொஞ்சமும் தயக்கமின்றி ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். உருஸ் விழாவுக்கு வந்திருந்த “சாய் சகுணோபாசனா” எனும் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணராவ் ஜாகேச்வர் பீஷ்மா, உருஸ் தினத்தன்று ராமநவமி பண்டிகையையும் கொண்டாடினால் என்ன என்று மற்றவர்களுடன் விவாதித்தார். பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான காகா மாஜினியும் ராமநவமி தினத்தை கொண்டாடலாம் என்றார்.
அந்த ஆண்டு உருஸ் திருவிழா, ராமநவமி விழாவாகவும், சந்தனக்கூடு விழாவாகவும் களை கட்டியது. பாபாவுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.
1913-ம் ஆண்டு முதல் ராமநவமி திருவிழா 7 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் திருவிழாவாக மாறியது. 7 நாட்களும் கீர்த்தனைகள் பாடப்பட்டன.
பாபாவின் அருளால் சீரடியில் நடந்த இந்த விழாக்களில் முதலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.
உருஸ்-ராமநவமி- சந்தனக்கூடு விழாவுக்காக பாபா பயன்படுத்த அழகான குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பாபாவுக்கு பணக்கார பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.
ஆனால் எந்த ஆடம்பர, அலங்கார பொருளும் சாய்பாபா நடவடிக்கைகளை மாற்றி விடவில்லை. அவர் ஏதும் இல்லாத சன்னியாசி போலவே சீரடி மசூதியில் வாழ்ந்தார். ராமநவமி நாட்களில் சாய்பாபாவுக்கு அழகு நிறைந்த பட்டுச்சட்டைகள், சால்வைகள் அணிவிக்கும் ஒரு புதிய பழக்கம் தோன்றியது. சாய்பாபாவை சீரடி சமஸ்தானத்தின் மகாராஜாவாக கருதி பக்தர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.
ஆனால் பட்டு சட்டைகள், சால்வைகளை பாபா ஒரு போதும் நிரந்தரமாக அணிந்து கொண்டதே இல்லை. எந்த பக்தர் அந்த பட்டுச்சட்டையை வாங்கி வந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறு மலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.
அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார்.
பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நாட்டில் அதர்மம் அதிகரிக்கும் போது, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவனே பூமிக்கு இறங்கி வந்து அவதார புருஷர்களாக பிறப்பது வழக்கம். அந்த வகையில் பாபா கலியுகத்தின் அவதார புருஷர்.
பொதுவாக சாய்நாதரின் அருள் பெற தினசரி வழிபாடு, விரதம், 4 கால ஆரத்தி செய்வதுண்டு. இதில் 4 கால ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சீரடி சாய்பாபா உயிரோடு இருக்கும்போதும் 4 வேளை ஆரத்தி அவருக்கு காட்டப்பட்டது. அதே போன்று சீரடி சாய்மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.
சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த 4 வேளை ஆரத்தியை, செய்வதும், ஆரத்தியில் கலந்து கொள்வதும் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி.
ஆரத்தி மூலமாக சத்குருவான சாய்பாபாவை வணங்கினால் வாழ்க்கையில் ஒழுக்கமும், பாதுகாப்பும் தேடி வரும். சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும்.
நிறைய பக்தர்கள் வாழ்வில் இந்த ஆரத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காகட ஆரத்தி நாம் நலமாக இருக்க உதவுகிறது. மதிய வேளை ஆரத்தி நமது வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பம் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. மாலை நேர தூப ஆரத்தி, நமது மனம் போன போக்கில் போகாமல் சாய்நாதரை சரண் அடைய உதவுகிறது.
இரவு நேர சேஜ் ஆரத்தி நாம் தினமும் பெறும் நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளது. ஆரத்தி செய்யப்படும் இடங்களிலும், ஆரத்தி செய்பவர்களிடமும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று சாய்நாதர் பல தடவை உறுதிபட கூறியுள்ளார்.
எனவே அவரது அவதார திருநாளில் சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக