வியாழன், 27 ஏப்ரல், 2017

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்?

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்?



கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள்

அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.



அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.

“பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டாள் பாட்டி . “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி.

“ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி.

“எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.



நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள்.

முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்.


இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக