வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ் புத்தாண்டு பூஜையறை அலங்காரங்கள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முதலில் நமது இணைய தள அன்பர்களுக்கு இனிய  ஸ்ரீஹேவிளம்பி  ஆண்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 
தமிழ் புத்தாண்டில் முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு . 
இது காலையில் கண் விழிக்கும் போது பார்க்கும் வளமான விஷயம் மனதில் புகுந்து  , நமக்கு நல்ல வாழ்வும் வளமும் நல்கும். 




 தமிழ் புத்தாண்டு பூஜையறை அலங்காரங்கள் 




தமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல் பூஜை அறையில் உள்ள படங்களை துடைத்து மலர்போட்டு அலங்கரிக்கும் மக்கள் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து அதனை பார்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

பூஜையறையை எப்படி அலங்காரம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

மலர் அலங்காரம்

 பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கலாம். மஞ்சள் நிறம் மங்களகரமானது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். இந்தப்பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.

 ரூபாய், நாணயங்கள் 

செல்வத்தின் அம்சமாக  உள்ள லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய ஒரு தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச்சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம். தற்போது 5 ரூபாய் தங்க நாணயங்களை வடிவில் வந்துள்ளது. அதனை நடுவில் வட்டமாக அடுக்கி அதனுள் பிளாட்டினம் போல் உள்ள ஒரு ரூபாய் சின்ன நாணயங்களை அடுக்கலாம். பார்க்கவே லட்சுமி கடாட்சமாக இருக்கும். 

கனிகளால் அலங்காரம் 

கோடை காலத்தில் அதிகம் கிடைப்பது மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும். அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் பரப்பில் வைத்து வரிசையாக அடுக்கலாம். நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம். இதுபோல் பூஜை அறையை அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு  பச்சரிசி மாவினால் அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும். 

தினமும்  பச்சரிசி மாவினால் கோலமிட்டு வருவது  நன்மை உண்டாகும். அதாவது நாம் கோலம் போடும் பச்சரிசி மாவைச் சாப்பிடும் எறும்புகள் நம்மை வாழ்த்தும் .   அதனால் கோலம் போடும் போதெல்லாம் சுண்ணாம்பால் கோலம் போடாதீர்கள், பச்சரிசி மாவால் கோலமிடுங்கள் . 

மா , பலா , வாழை , முதலிய பழங்களை முக்கனிகள் என்பர் .அதாவது  முக்கனிகள் என்பது மூன்று இனிப்புக்களையும் குறிப்பன. அதாவது இனிப்பு என்பது மூன்று  நெருப்புக்களால் ஆனது . அதாவது இனிப்பு  என்பது கார்போ ஹைட்ரேட்டுக்களால் ஆனது , ஆக்சிஜனோடு கூடி எரியும்போது  நெருப்பையும் , தண்ணீரையும் உண்டாக்குகிறது . அதனால் இவை முத்தீயை குறிப்பன . இதுவே முத்தி தரிசனத்தை குறிப்பது.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அறுசுவை உணவு

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

நாமும் வரவிருக்கும் தமிழ் புத்தாண்டை நம் குடும்பத்துடன் கடவுளை வணங்கி, என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ அருள் பெறுவோம்.

எத்தனை கவலைகள் இருந்தாலும் அதை இறைவன் காலடியில் வைத்து விட்டு ,சந்தோஷத்துடன் வாழ கற்றுக் கொள்வோம்.இப்போது கிடைக்கும்  நேரத்தையும்,காலத்தையும் நல்ல விதமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.

எல்லா செயலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம். 

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக