திங்கள், 5 செப்டம்பர், 2016

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்



அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கும்,தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கங்கள் .விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் அகவலைப் பாடுவது மிகவும் நன்மை பயக்கும்.விநாயகர் அகவல், அவ்வையார் விநாயகரை போற்றி பாடிய பாடலாகும்.

விநாயகர் அகவல் தோன்றிய கதை 

சமயக்குரவர்களில் ஒருவரரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகத்திற்கு வந்த நோக்கம் முடிந்து கைலாயத்திலிலிருந்து வந்த வெள்ளை யானையில்  ஏறி கைலாயத்திற்கு செல்லலானார்.
இதனையறிந்த  சுந்தரின் உற்ற தோழரான சேரமான் பெருமாள்நாயனார்,தானும் சுந்தருடன் கைலாயத்திற்கு செல்ல விரும்பி, தன்  குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி ,சுந்தரருடன் கைலாயத்திற்கு செல்லலானார்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கைலாயத்திற்கு செல்ல விரும்பினார்.அதற்காக தான் செய்து கொண்டிருந்த விநாயகர் பூஜையை அவசர அவசரமாக செய்யலானார்.அப்போது விநாயக பெருமான் நேரில் தோன்றி ,"அவ்வையே!நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூஜையை செய்.அவர்களுக்கு முன்னே உன்னை நான் கைலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறேன்"என்று  கூறினார்.


அவ்வையாரும்  நிதானமாக பூஜையைச் செய்து விநாயகர் அகவலை பாடினார்.விநாயகரும் தான் கூறியபடியே ,அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரருக்கும்,சேரமானிற்கும்  முன்பாக  கைலாயத்தில் சேர்த்தார் .இதுவே விநாயகர் அகவல்  தோன்றிய நிகழ்ச்சியாகும்.

அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் என்பது பொருள்.விநாயகர் அகவல் எளிமையு ம்,இசைப்பண்பும்,மந்திர ஆற்றலும் மிக்க பாடலாகும்.


விநாயகர் அகவலும் ,அதன் பொருளும் 



  
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பும் பலஇசை பாடப் 
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
 வன்ன  மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
 பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
  வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
  அஞ்சு கரமும் அங்குச பாசமும்
   நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு  புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
     இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
     திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்     
     
           குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்
    
       சொற்பதங் கடந்த துரியமெய் ஞான      
       அற்புதம் நின்ற கற்பகக் களிறே
      முப்பழம் நுகரும் மூஷிக வாகன
      இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
      தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
      மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
      திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
      பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
      குருவடிவாகிக் குவலயந்தன்னில்
      திருவடி வைத்துத்  திறமிது பொருளென
      வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
      கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே
           
சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி
      

     உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
      தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
      ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
      இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
      கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
      இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
      தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
      மலமொரு மூன்றின்  மயக்கம் அறுத்தே
      ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
      ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
      ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
      பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே            

           வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,

       இடை பிங் கலையின் எழுத்தறிவித்து
      கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
      மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
      நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
      குண்டலணி அதனிற் கூடிய சபையில் 
      விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
      மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
      காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
      அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
      குமுத சகாயன் குணத்தையும் கூறி
      இடைச்சக் கரத்தின் ஈரெட்டு  நிலையும்
      உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி 
      
           இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,
      சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
      எண் முகமாக இனிதெனக்கு அருளி
      புரியட்ட காயம் புலப்பட எனக்கு
      தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
      கருத்தினில் கபால வாயில் காட்டி
      இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
      என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
      முன்னை வினையின் முதலைக் களைந்து
      வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
      தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
      இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
      அருள் தரும் ஆனந்தத்தை  அழுத்தியென் செவியில் 
     
                       உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி

      எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
      அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
      சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
      சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
      அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
      கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
      வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
      கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
      அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
      நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
      தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
      வித்தக வினாயக விரைகழல் சரணே! 
       சரணே!சரணே!    
                       அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.

நாம் சொல்லவிருக்கும் மந்திரத்தை பொருள் விளங்கி கூறும்போது, பக்தி இன்னும் அதிகமாகிறது. விநாயகரை வெள்ளிக்கிழமை,சதுர்த்தி திதிகளில் வழிபடலாம்.பக்தியுடன் இந்த விநாயகர் அகவலை 3வேளை கூறினால் நினைத்த காரியம் கைகூடும்.கேட்டவரம் தரும் தனிச்சிறப்பு வாய்ந்த இத்துதியை மனமொன்றி பாராயணம் செய்தால் விருப்பங்கள் நிறைவேறும்.8நாட்கள் தொடர்ந்து கூறினால் மனமகிழ்ச்சி அடையலாம்.தினமும் 21முறை சொல்லினால் சந்ததியினர் கல்வி,செல்வத்தில் சிறந்து விளங்குவர்.


விநாயகர் அகவலை படித்து பயன் பெறுங்கள்.

என் பதிவு பயனுள்ளதாக இருந்தால் எனக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.


அடுத்த பதிவில் மற்றுமொரு தலைப்பில் ஈஸ்வரி  












  

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஸ்வஸ்திக்

என் அன்பு   தோழிகளுக்கு நமஸ்காரங்கள் 

ஸ்வஸ்திக் 

 
வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர்.வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.

"ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள்.இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.8திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பரியம்.

ஸ்வஸ்திக் கோலம் போடக்காரணம் 

ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது. 

ஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன?

நான்கு வேதம் -----ரிக் ,யசுர் ,சாம ,அதர்வண 
நான்கு திசை ----கிழக்கு,மேற்கு ,வடக்கு,தெற்கு 
நான்கு யுகங்கள் ---சத்ய ,த்ரேதா ,துலாபார ,கலியுக 
நான்கு ஜாதிகள் ---பிராமண,ஷத்ரிய ,வைஷ்ய ,சூத்திர 
நான்கு யோகங்கள்---ஞான ,பக்தி,கர்ம ,ராஜ 
நான்கு மூலங்கள் ---ஆகாயம்,வாயு,நீர்,நிலம் 
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் ---குழந்தை,பிரம்மச்சரியம்,கிரஹஸ்தர்,சந்நியாசி 

ஸ்வஸ்திக்,ஓம்,திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ,வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை  நுழையவிடாமல்  காக்கும்.இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும்.

நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போட்டு பலன் பெறவேண்டும்.

உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து ,பிறரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வில் எல்லா வளங்களையும் பெற நான் இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் கருத்தை தெரிவித்தால் எனக்கு இன்னும் எழுத தூண்டுகோலாக அமையும்.






வியாழன், 1 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி பூக்கள் க்கான பட முடிவு


 நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்றாலும் முதலில்  முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டபிறகுதான் வணங்கவேண்டும்.எந்த காரியத்தை தொடங்குவதற்குமுன்,விநாயகப் பூஜையைத்தான் முதலில் செய்யவேண்டும்.அப்போதுதான் செய்யவிருக்கும் காரியம் தங்குதடையின்றி நிறைவேறும்.  


 விநாயகரை  யார்  கூப்பிட்டாலும் ,கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள்வார்.மஞ்சளாலும், களி  மண்ணாலும்,சாணியாலும்கூட பிள்ளையாரை பிடித்து வைத்து பூஜை செய்யலாம்.அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர்.எங்கே,எப்படி,எதில்  கூப்பிட்டாலும் உடனே வந்து அருள்பாவிக்கிறவர்.அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை
.


விநாயகர் பிறந்தநாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடிக்கிறோம்.ஆவணித்திங்கள் சுக்ல பட்ஷத்தில் நான்காம் நாளன்று விநாயக சதுர்த்தி வருகிறது.வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி 10நாட்கள் கொண்டாடப்படுகிறது.


விநாயக சதுர்த்தி அன்று  களிமண்ணால் செய்த பிள்ளையாரை வணங்குவது விஷேசம்.பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்ப போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.களிமண் பிள்ளையார் என்றில்லாமல் உலோகம்,கற்சிலை விக்ரங்களையும் வைத்து வணங்கலாம்.


 விக்னங்களை  தீர்த்துவைப்பதால் விக்னேஷ்வரர் என்றும்,யானை முகம் அமையப் பெற்றதால் கஜேந்திரன் என்றும்,கணப்பொழுதில் அவர் பிள்ளையாக காட்சி கொடுத்ததால் கணபதி என்றும் பெயர் பெற்றார்.


பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை மிகவும் விருப்பமாகும்.முதல் முதலில் பிள்ளையாருக்கு மோதகம்
 நிவேதியமாக செய்து வழிபட்டவர் வசிஷ்ட முனிவரின் பத்தினியான அருந்ததி தேவியார் என்று புராணம் கூறுகிறது.vinayagar chaturthi 2017 mothagam க்கான பட முடிவு

 தேங்காய் பூரணம் வைத்த கொழுக்கட்டை  தத்துவம்  

மேலே இருக்கும் மாவு அண்டத்தை குறிக்கும்.உள்ளே இருக்கும் வெல்லபூரணம் பிரம்மம்.அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது.இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவை உடைத்தால்,உள்ளே இனிய குணமான வெள்ளப்பூரணம் நமக்கு கிடைக்கும்.


அவல்,பொரி ,வெல்லம்,கடலை, பழம்,தேங்காய்,எள்ளுருண்டை,கரும்பு முதலியன அவருக்கு விருப்பமான பிரசாதமாகும். 


விநாயக சதுர்த்தி கொண்டாடும் விதம் 

வீட்டை சுத்தம் செய்து,கோலம் போட்டு ,வாழைமரம்,மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.பூஜையறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும்.அதன்மீது தலைவாழை இலையைப் போடவேண்டும்.நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும்.அந்த இலை மீது பச்சரிசியைப் பரப்ப வேண்டும்.அந்த அரிசியின் மீது களிமண்ணினால் செய்த விநாயகர் விக்கிரகத்தை எழுந்தருள செய்ய  வேண்டும்.அருகம்புல்,சாமந்தி,எருக்கம்பூ,மல்லி மற்றும் வாசனை உள்ள மலர்களை சாற்றவேண்டும்.


Ganesh chaturthi celebration at home

 


பிறகு ஸ்ரீ கணேசருக்கு உரிய பாடல்கள்,மந்திரங்கள் சொல்லி ,பூஜை செய்து மா,பலா,வாழை பழங்கள் ,கொழுக்கட்டை,அப்பம்,அவல் ,பொரி,கரும்பு,சுண்டல்,வடை நிவேதித்து [அவரவர்களுக்கு என்னவெல்லாம் நைவேத்தியம்  வைத்து பூஜிக்கமுடியுமோ பூஜிக்கலாம்] மங்கள ஹாரத்தி எடுக்க வேண்டும்.


முதல்நாள் காலையில் பூஜையை முடித்து மாலையில் விநாயகர் புராணம் படித்து,கற்பூர தீபம் காண்பித்து,ஆரத்தி எடுக்க வேண்டும்.
மறுநாள் புனர்பூஜையைக் கொண்டாட வேண்டும்.தயிர் நைவேத்தியம் செய்ய வேண்டும்.அதன்பிறகு குளத்திலோ,கிணற்றிலோ பிள்ளையாரை கரைத்துவிடலாம்.


விநாயகசதுர்த்தி  விரதம் இருப்பவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைப்பதுடன்,அனைத்து நலங்களும்,சுகங்களும் கிடைக்கும்.வாழ்க்கையில் துன்பங்கள்,இன்னல்கள் இன்றி வாழலாம்.


விநாயக சதுர்த்தியன்று நிறைய பிள்ளையாரைத் தரிசிப்பது நமக்கு நல்ல பலனைத் தரும். 


விநாயகர் துதி  

"மூஷிக வாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பிதஸீத்ர!வாமனரூப மஹேஸ்வரபுத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!"

பொருள் 

விநாயக பெருமானே!எலியை வாகனமாக கொண்டவரே!கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே !சிவபெருமானின் மைந்தனே!எல்லா விக்னங்களையும் நீக்குபவரே! உனது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன்.

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை அனைவரும் சந்தோசமாக கொண்டாடுங்கள் 

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
















செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மாவிளக்கு வழிபாடு

மாவிளக்கு வழிபாடுமாவிளக்கு அலங்காரம் க்கான பட முடிவு

 மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு  சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.

நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம்  ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.


மாவிளக்கு தத்துவம்

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. 

அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு  ஆதாரமாக விளங்குவது அன்னமே.


வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.


அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.


அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில்  ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே  மாவிளக்கு ஏற்றுகிறோம். 



நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.



வீட்டில் மாவிளக்கு போடுதல்   


பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை  வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.


கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.



















வலம்புரி சங்கு பூஜை

வலம்புரி சங்கு பூஜை 



என் அன்பு தோழிகளுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.மேலும் மேலும் நான் இறைவனைப்பற்றி எழுத ஊக்குவித்த, அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலம்புரிசங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மியுடன்  தோன்றியதால்  புனிதமான பொருளாக கருதப்படுகிறது.மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரிசங்கு.இதை வீட்டில் வைத்து வழிபட்டால் நம்மை தேடி மகாலக்ஷ்மி வருவாள் என்பது வேதவாக்கியம் சொல்கிறது.
வலம்புரிசங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷம் அகன்று விடுகிறது.வாஸ்து குறை இருக்கும் வீட்டில் மஞ்சள் நீரும்,துளசியும் சங்கில் இட்டு காலையில் தெளித்து வந்தால் குறைகள் நீங்குவதாக ஐதீகம்.


முக்காலத்தில் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்து வந்ததற்கு காரணம் வீடு கட்டும்போது 5வெள்ளிக்கிழமை லக்ஷ்மி வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை வீட்டு நிலைவாசலில் வைத்து , நடுஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள்.  அதனால்தான் எந்த  குறையும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யும் முறை 

48நாட்கள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலையில் குளித்து வலம்புரிச்சங்கை சுத்தமான  நீரில் அலம்பி ,சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி கலந்த நீரை  ஊற்றி  முதலில் விநாயக பெருமானையும்,குருவையும் வணங்க வேண்டும்.

ஓம் கம் கணேசாய நம  

ஸ்ரீ குருதேவாய நம  என்றும் 


ஓம் பாஞ்சஜன்யாய  வித்மஹே பாவ மானாய த்மஹி தந்நோ சங்க ப்ரசோதயாத் 

சங்கு காயத்ரி மந்திரத்தை 3முறை சொன்ன பிறகு ஸ்வாகதம் ஸ்வாகதம் என்று சொல்ல வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேராய நம  என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்.

பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம 

சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரை போட வேண்டும்.
வலம்புரி சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும்.பிறகு நெய்தீபம் ஏற்றி துளசி,அரளி,சிவப்பு மலர்,மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து சங்கைச் சுற்றி மலர்தூவ வேண்டும்.

ஓம் பத்ம நிதியே நம ஓம் சங்க நிதியே நம ஓம் மகர நிதியே நம ஓம் சுகச்சப நிதியே நம ஓம் முகுந்த நிதியே நம ஓம் குந்தாக்ய நிதியே நம ஓம் நீல நிதியே நம ஓம் மக நிதியே நம ஓம் வர நிதியே நம என்று நிதிகளை பூஜிக்க வேண்டும்.


மூம்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும் .

ஓம் யக்ஷசாய வித்மஹே
ஓம் வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத் 

பிறகு 16நாமாவளி அர்ச்சனை (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது )

ஓம் க்லீம் குபேராய நம ஓம் க்லீம் ஸ்ரீமதே நமஓம் க்லீம் பூர்ணாய நமஓம் க்லீம் அஸ்வாரூடாய நமஓம் க்லீம் நரவாகனாய நமஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நமஓம் க்லீம் யக்ஷõய நமஓம் க்லீம் நித்யேஸ்வராய நமஓம் க்லீம் நித்யானந்தாய நமஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நமஓம் க்லீம் அகாஸ்ரயாய நமஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நமஓம் க்லீம் சர்வக்ஞாய நமஓம் க்லீம் சிவபூஜகாய நமஓம் க்லீம் ராஜயோக வராய நம


அர்ச்சனை முடிந்தபிறகு குபேர காயத்ரி சொல்லி தூபதீபம் காட்டி 

ஓம் லக்ஷ்மி சகித குபேரய நம:மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு 


என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும்.

நிவேதியமாக கற்கண்டு,பால்,அவல்  பாயாசம் வைத்து,நெய் தீபத்தை ஏற்றி ஆரத்தி காட்ட வேண்டும்.  

ஓம் வடதிசை வல்லவா போற்றி ஓம் நவநிதி தேவா போற்றி ஓம் செல்வத்தின் உருவமே போற்றி ஓம் செல்வவளம் சேர்ப்பாய் போற்றி ஓம் திருமகளின் நட்பே போற்றி ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி ஓம் குபேர நாயகா போற்றி 


என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தர வேண்டும். 

எளிமையான இந்த குபேர பூஜையை 48நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் கொழிக்கும்.6வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்தால் கடன் தீர வழி வகுக்கும்.

வியாழன் மாலை 5முதல் 7.30மணி வரை குபேர காலத்தில் 9வியாழக்கிழமைகள் செய்து முடிக்க பொருள் சேர வழி உண்டாகும்.8பவுர்ணமிக்கு குபேர அர்ச்சனையுடன் சங்கு பூஜை செய்து வர செல்வம் சேரும்.

இத்தகைய பலன்களை தரக்கூடிய இந்த பூஜையை செய்து பலன் பெறுங்கள் .



உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இந்த பதிவை முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு  மேலும் எழுத வழிவகுக்கும்.

  அன்பு தோழி ஈஸ்வரி