திங்கள், 25 ஜூலை, 2016

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை 


வணக்கம் நண்பர்களே 
போனபதிவில்,64லீலைகள் என்ன? என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.சிவபெருமானின் லீலைகளை தெரிந்திருப்பது இந்துக்களின் கடமையாகும். 


திருவிளையாடல் 64 நிகழ்ச்சிகளும் சிவனின் லீலைகள் ஆகும்.அதில் ஒன்று மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த படலம் ஆகும்.

மதுரையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஆவணிமூல  திருவிழாவாக 10நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

நாரையின் கதை 


முன்னொரு  காலத்தில் ,பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தாடகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது.ஒருசமயம், மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றி போனது.நாரைக்கு உணவு கிடைக்கவில்லை.எனவே,அது வனத்திற்கு  சென்று,அங்கிருந்த நீர் நிலைகளில் சிக்கிய மீன்களை தின்று வாழ்ந்தது.


அங்கு "அச்சோ " என்ற குளம் இருந்தது..இதன்கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன .இருந்தாலும்,அந்த முனிவர்கள் இருக்கும் இடத்தில் மீன் பிடித்து சாப்பிடுவது ' மகா பாவம் 'என 
நாரை நினைத்தது.

அங்குள்ள சத்தியன் என்ற முனிவர் ,மதுரை தலம் பற்றியும்,அங்கு குடி கொண்டிருந்த சுந்தரேஸ்வரர் பற்றியும் தன்சக முனிவருடன் பேசி கொண்டிருந்தார்.இதை கேட்ட நாரை,மதுரை மாநகரை நோக்கி பறந்தது.



மதுரை மீனாட்சியம்மன்  கோவிலில் உள்ள பொற்றாமரைக்  குளத்திலுள்ள  நீர் தன்மீது படும்படியாக தலையை மூழ்கிவிட்டு பறந்தது.அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வர்  சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தில் சுற்றி சுற்றி பறந்தது.

15நாட்கள் இவ்வாறே செய்து,16ம் நாள் பொற்றாமரை குளக்கரைக்கு வந்தது.குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின.அவற்றை பிடித்து உண்ண  எண்ணிய வேளையில்,ஞானம் பிறந்தது. நாரைக்கு மீனைப்  பிடித்து தின்பது பாவம் எனத் தோன்றியது.அது பசியை பொறுத்து கொண்டது.

தனது இயற்கையான சுபாவத்தை கூட கருணையின் காரணமாக,தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றி கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி,"என்ன வரம் வேண்டும் நாரையே?"என்றார்.

"ஐயனே!எங்கள்  இனத்தவர் மீன்களை பிடித்து உண்ணும் சுபாவமுடையவர்.  ஆனால் இந்த புண்ணிய குளத்தில் அதை செய்யாமல்  இருக்க தாங்களே அருள வேண்டும்.எனவே,இக்குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும்.மேலும்,எனக்கு சிவலோகத்தால் தங்கும் பாக்கியம் வேணும்" என்றது.சிவபெருமானும் நாரை கேட்ட வரத்தை தந்து அருளினார்.

நாரை நான்கு புயங்களும்,மூன்று கண்களும் பொருந்திய சிவவடிவம் பெற்று,வானுலகத்தோர் தூவிய  மலர்கள் மூழ்கியவாறு விமானத்தில் ஏறி,சிவலோகத்தை அடைந்தது.

பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய் தங்கியிருந்தது.

நாரையின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி வணக்கம்.உங்கள் தோழி  ஈஸ்வரி 



















சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் 

support and subscribe my  you tube channel tamilnattu  samayal 

பரஞ்சோதி முனிவர் ஒருசமயம்,மதுரை வந்த போது அவர் கனவில் அன்னை மீனாட்சி அம்மன் தோன்றி,சிவம்பெருமான் மதுரையில் நிகழ்த்திய லீலைகளை அழகிய தமிழில் தெள்ளத்தெளிவாக பாடுமாறு உத்தரவுயிட்டார்.


அன்னையின் உத்தரவின்படி,பாடப்பட்டதே திருவிளையாடல் புராணம்.திருவிளையாடல்கள் 64 உள்ளன.முதல் 18படலங்கள் மதுரை காண்டத்திலும்,19 முதல் 48 படலங்கள் கூடற் காண்டத்திலும்,49 முதல் 64படலங்கள் திருவாலவாய் காண்டத்திலும் இடம் பெற்றுள்ளன.  

  1. இந்திரன் பழிதீர்த்தப் படலம்!
  2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
  3. திருநகரங்கண்ட படலம்!
  4. தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!
  5. தடாதகையாரின் திருமணப் படலம்!
  6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!
  8. அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
  9. ஏழுகடல் அழைத்த படலம்!
  10. மலையத்துவஜனை அழைத்த படலம்!
  11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
  12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!
  13. கடல் சுவற வேல் விடுத்த படலம்!
  14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
  15. மேருவை செண்டால் அடித்த படலம்!
  16. வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்!
  17. மாணிக்கம் விற்ற படலம்!
  18. கடலை வற்றச் செய்த படலம்!
  19. நான் மாடக்கூடலான படலம்!
  20. எல்லாம் வல்ல சித்தரான படலம்!
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!
  22. யானை எய்த படலம்!
  23. விருத்த குமார பாலரான படலம்!
  24. கால் மாறி ஆடிய படலம்!
  25. பழியஞ்சின படலம்!
  26. மா பாதகம் தீர்த்த படலம்!
  27. அங்கம் வெட்டின படலம்!
  28. நாகமெய்த படலம்!
  29. மாயப் பசுவை வதைத்த படலம்!
  30. மெய் காட்டிட்ட படலம்!
  31. உலவாக்கிழி அருளிய படலம்!
  32. வளையல் விற்ற படலம்!
  33. அட்டமா சித்தி உபதேசித்த படலம்!
  34. விடையிலச்சினையிட்ட படலம்!
  35. தண்ணீர் பந்தல் வைத்த படலம்!
  36. இரசவாதம் செய்த படலம்!
  37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்!
  38. உலவாக்கோட்டை அருளிய படலம்!
  39. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
  40. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்!
  41. விறகு விற்ற படலம்!
  42. திருமுகம் கொடுத்த படலம்!
  43. பலகையிட்ட படலம்!
  44. இசை வாது வென்ற படலம்
  45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்!
  46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்!
  48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்!
  49. திருவால வாயான படலம்!
  50. சுந்தர பேரம்பு எய்த படலம்!
  51. சங்கப் பலகை கொடுத்த படலம்!
  52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!
  53. கீரனைக் கரையேற்றிய படலம்!
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!
  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
  56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
  57. வலை வீசிய படலம்!
  58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்!
  59. நரியை பரியாக்கிய படலம்!
  60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!
  61. மண் சுமந்த படலம்!
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்!

 64.வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!

மகா பெரியவாளின் சமையல் விளக்கம்

மகா பெரியவாளின் சமையல் விளக்கம் 




குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள். 
 என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.

தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....

இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.

விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும்  இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு  எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.

இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.

இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும்  பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.

பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.  

ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா 
நடமாடும் தெய்வம் பாதம் சரணம் 













சனி, 23 ஜூலை, 2016

கருட பஞ்சமி

கருட பஞ்சமி 

ஆவணி மாதம் வார்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும்,மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த இரு பண்டிகைகளும் சகோதரர்களின் செளபாக்கியத்திற்காக வேண்டி சகோதரிகள் கொண்டாடும் பண்டிகையாகும். 

பிரம்மதேவன் மகன் கஷ்யபன்.கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு.அவர்களுள் கத்ரு,வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர்.

கத்ரு நாகர்களுக்கு தாயாகவும்,வினதை அருணைக்கும்,கருடனுக்கும் தாயாக விளங்கினார்கள்.

ஒருமுறை,இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது.அந்த போட்டியில், இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவள் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள்.நிபந்தனைப்படி அவள்,கத்ருவிற்கு அடிமையானாள்.கத்ரு அடிமையானதால் அவள் பெற்ற அருணனும்,கருடனும் அடிமையாயினர்.

கருடன்,கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான்.இதனால் கருடன் மனம் வருந்தினான்.எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அதுசமயம் கத்ரு,கருடனிடம்,தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்துகொடுத்தால்,அடிமைத் தளத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள்.

கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான்.அடிமைத்தளத்திலிலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான்.அன்னையை நமஸ்கரித்து,தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில்,தேவர்களுக்கும்,கருடனுக்கும் கடும்போர் மூண்டது.
இறுதியில் கருடன் வெற்றி பெற்றான்.கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து,தோத்திரம் செய்து,தேவேந்திரனிடமிருந்து,அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான்.

கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான்.அன்னைக்கும்,தனக்கும்,அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன்.

அந்த கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான்.அதனால் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.


கருடன் மகா விஷ்ணுவிற்கு வாகனமானது எவ்வாறு? 



யாருக்கும் அஞ்சாதவன் கருடன்.கருடன் தேவேந்திரனிடமிருந்து அமிர்தத்தை எடுத்துவரும் போது தேவர்களால் தடுக்க முடியவில்லை.இவரின் வீரத்தை கண்டு மகிழ்ந்த திருமால்",உனக்கு என்ன வரம் வேண்டும் ?"

என்று கருடனிடம் கேட்டார்.அவரோ பரந்தாமனைப் பார்த்து,நானே உனக்கு வரம் தருகிறேன்;என்ன வரம் வேண்டும்?என்று திருப்பி கேட்டார்.

புன்னகைத்த திருமால்,'நான் எப்போதும் உன் தோளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்டார் .அவ்வாறே ஆகட்டும்' என்கிறார் கருடன். பிறகு திருமால் கருடனிடம்,நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?என்று வினவ,நான் உமது தலைக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்க,திருமாலும் அருளினார்.அதனால்தான், திருமால்  கருடனின் தோளில்  அமர்ந்து,தான் செல்லும் இடங்களுக்கு தம்மை அழைத்து  செல்லும் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

கருடனை  தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியாக கருடனை இருக்க செய்தார்.இதனால்தான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடி  மரத்தின் தத்துவம் ஆகும்

கருடன் வானத்தில் வட்டமிடுவதும்,கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவில்களில் கும்பாபிஷேகம்,யாகம்,சிறப்பு வழிபாடு நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை காணலாம்.

கருட தரிசனம் சுப தரிசனம்.

தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட நாள் நாகபஞ்சமி என்பதால் கருடனை பூஜிப்பது விஷேசம்.கருட பஞ்சமி அன்று வீட்டிற்கு சகோதரரை அழைத்து சாப்பாடு போட்டு பணமோ,துணியோ வைத்து தாம்பூலம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.




























  


வியாழன், 21 ஜூலை, 2016

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

 ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் பெண்கள் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும்.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாகவும்,மகா கணபதியின் திருவயிற்றை சுற்றியும்,மஹா விஷ்ணுவிற்கு படுக்கையாகவும் பாம்பே இருக்கிறது.

கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவுக்கு நின்றால்  குடையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும்,படுத்தால்  படுக்கையாகவும் இருப்பது நாகம்தான். 
மாரியம்மனிடம் பாம்பு வந்து அருள்புரிவதாகவும்,புற்றை உறைவிடமாக கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது.சக்தியின் வடிவமாக நாகங்கள் போற்றப்படுகின்றன.

தெரிந்தோ,தெரியாமலோ இப்பிறவியிலோ அல்லது முப்பிறவியிலோ நாகத்திற்கு தீங்கு விளைவித்திருந்தால் அது நாகதோஷமாக நம் பரம்பரையையே ஆட்டி வைக்கும்.  நாக தோஷம் உள்ளவர்களுக்கு  குழந்தை இல்லாமை,குடும்ப ஒற்றுமையின்மை,ஊனமான குழந்தை,அடிக்கடி நோயின் தாக்கம்,குடும்பத்தில் பிரிவு போன்ற பலவும் ஏற்படுகிறது.

நாக பாம்பு கடித்து இறந்துபோன சகோதரர்களுக்காக சகோதரியானவள்,நாகராஜனுக்குப் பூஜை செய்து சகோதரர்களை உயிர்பெற்று எழச் செய்தாள்  என்று புராணங்களில் கூறப்படுகிறது.



நாகதோஷம்  நீங்க செய்ய வேண்டியவை 


செய்வாய்,வெள்ளி ,ஞாயிற்றுக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு  பால் ஊற்றுவது,நாக பூஜை செய்வது,நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் நாகசிலைகளுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நாக தோஷத்தை குறைக்கும்.

அரசமரம் அல்லது வேப்பமரம் மரத்திற்கு அடியில் வைத்து வணங்கப்படும் நாகங்களுக்கு எண்ணெய்  தடவி பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி,குங்குமம் ,சந்தனம் இட்டு வெற்றிலை,பாக்கு ,சர்க்கரை பொங்கல் போன்றவை நைவேதியமாக வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுதல் வேண்டும்.

ராகு,கேது நாகதோஷம் 

நாகத்தின் வடிவமான ராகு,கேது  கிரகங்களுக்கு செவ்வாய்,சனி கிழமைகளில் பச்சரிசி மாவால் கோலம் போட்டு விளக்கேற்றி ,ராகு கேது உரிய நாமாவளிகளை சொல்லி மலரால் அர்ச்சித்து வழிபட நாகதோஷம் விலகும்.விருப்பம் ஈடேறும். 


திருமணமாகாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி ,11வாரங்கள் தொடர்ந்து வழிபாடு செய்தால் 12வது  வாரம் குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடக்கும். 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் நாகப்புற்றில் பால் ஊற்றுவது நலம் பயக்கும்.


ராகு,கேது தலங்களான காளஹஸ்தி ,திருநாகேஸ்வரம் போன்றவைகளுக்கு சென்று வழிபடுவது 
தோஷங்கள் விலகி பெருவாழ்வு வாழ வழிவகுக்கும்.


ஆதிசேஷன் காயத்திரி மந்திரம்

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹேவிஷ்ணு தல்பாய தீமஹிதன்னோ சேஷ ப்ரசோதயாத்


ஓம் சர்பராஜாய வித்மஹேபத்ம ஹஸ்தாய தீமஹிதன்னோ வாசுகி: ப்ரசோதயாத்


  




















புதன், 20 ஜூலை, 2016

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள்

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள் 

மங்கலம் என்றால் நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள் எனலாம்.

அஷ்ட மங்கலங்கள் என்பன எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையை போற்றி அளிக்கப்பட்ட பொருட்களாகும்.

இந்துக்கள் பூரணகும்பம்,ஸ்வஸ்திகம்,வட்டக்கண்ணாடி,தீபம்,குங்குமச்சிமிழ்,சந்தனக்கிண்ணம்,சங்கு மற்றும் தாம்பூலம் போன்றவற்றை மங்கல பொருட்களாக கருதுகின்றன.திருமண விழா,பூப்புனித நீராட்டு விழா,புதுமனை புகுவிழா போன்ற   இடங்களில் மங்கல பொருட்களை வைத்து சிறப்பாக விழாக்களை நடத்துவது இந்துக்களின் வழக்கம்.

பூரண கும்பம்

 மகா லக்ஷ்மி தேவியின் வடிவம் பூரண கும்பம்.கும்பத்தில் நீரை நிரப்பி தேவியை அதில் ஆவாகரணம்  செய்து வழிபடுவதே சிறந்தது.மழைக்கு  அதிபதியாக விளங்கும் வர்ண பகவான் நீர் வடிவத்தில் கும்பத்துக்குள்ளிருந்து இல்லத்தின் தூய்மையை காக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஸ்வஸ்திக் 


உலகில் அனைவருக்கும்  இன்ப,துன்பங்கள்  சுழற்சியாக வரும் என்று கூறும் வடிவம் இது.துன்பங்களை விலக்கி  விடும் சக்தி வடிவம். 

வட்டக்கண்ணாடி 


நம் முகத்தை நாமே காண்பதால் ஒரு உத்வேகம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கண்ணாடி மங்கலப்  பொருட்களாக கருதப்படுகிறது.

தீபம் 


பூஜை அறையில் அதிகாலை 4.30  மணி முதல் 6மணி வரை பிரம்ம மூர்த்தம் எனப்படும் இவ்வேளையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வீட்டில் திருமகள் நிலைத்திருக்க தீப வழிபாடு ஏற்றது.

முன்னொரு காலத்தில் இறைவனை ஒளியாக எண்ணி,தீபம் ஏற்றி வழிபட்டனர்.நம் முன்னோர்கள் வகுத்த வழியில் நாமும் செல்வதே இறைவனை அடையும் வழியாகும்.

குங்குமச் சிமிழ் 







பெண்கள் திலகமாக வைக்கும் தெய்வீகக் குங்குமத்தைத் தாங்குகிற பேழை இது.இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளை வரவேற்க குங்குமச்சிமிழ் பயன்படுகிறது.அனைவரையும் தம்பால் ஈர்க்கும்  தன்மையுள்ளது.

சந்தனக்கிண்ணம்


பழங்காலத்தில் "சந்தனப் பேலா "என்ற பெயரில் சந்தனத்தை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சந்தனக்கிண்ணம் .

திருமணத்திற்கு  வருபவர்களை வரவேற்க்கும் விதமாக சந்தனக் கிண்ணத்தில் சந்தனத்தை வைத்து இருப்பர்.நாராயணின் தர்மபத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதும் சந்தனத்தில்தான்.வீட்டு பூஜைகளிலும்,விழா மேடைகளிலும் சந்தனம் மங்கல பொருளாக விளங்குகிறது.

சங்கு 


வலம்புரி,இடம்புரி என இருவகையான சங்குகள் உள்ளன.வலம்புரி சங்கு வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவர்.


புதிய வீடுகள் கட்டும்போது நிலைவாசலில் சங்கு ஸ்தானம் என்ற விதிப்படி பூஜை செய்து பதிப்பார்கள்.இதனால் குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தாம்பூலம் 

வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து வைப்பது தாம்பூலம் என்பர்.மகாலட்சுமிக்கு விருப்பமான பொருள்.வெற்றிலை நுனியில் லட்சுமியும்,நடுவில் சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் உள்ளனர்.

அம்பாளுக்கு தாம்பூல நெய்வேத்தியம் செய்வது நல்லது.எந்த பூஜையானாலும் தாம்பூலப் பொருட்கள் வைத்து பூஜை செய்தால்தான் அந்த பூஜை நிவர்த்தி அடையும்.

அஷ்ட மங்கல பொருட்களை வீட்டில் வைத்து,செளபாக்கிய லக்ஷ்மி பூஜை செய்து வந்தால் இல்லத்தில் துர்சக்திகள் விலகி நல்லதே நடக்கும் என்று சமய நூல்கள் கூறுகின்றன. 







   

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம் 


ஆனி மாதம் பெளர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்பொழுது,ஆனித் திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.


 அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆடல் நாயகனை அலங்காரத்துடன் அவருடைய நடனத்தை காணும் திருநாள்.

சிவலிங்கத்திற்கு அன்றாடம் அபிஷேகம் உண்டு.ஆனால் இந்த திருமஞ்சனம் விசேஷமானது. 

சிவபெருமானின் நடனம் காண தேவர்களும்,முனிவர்களும் தவம் இருந்தார்கள்.விஷ்ணு பகவானும்,சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.
"சிவ-சக்தி ஒன்றே" என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார்.அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர்,பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன்  சக்தியை இழந்தார்.


சிவலிங்கத்தை தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.ஆனால் நடராஜரை தரிசித்தால் அம்பிகையையும் தரிசித்தது போன்றது என்கிறது சாஸ்திரம்.காரணம்,நடராஜரின் இடதுபாகம் சக்திதேவியின் பாகம்.அதனால் நடராஜரை தரிசிக்கும் போது,அவரது இடதுகாலையும் தரிசித்து வணங்கினால் சிவ-சக்தியின் அருளாசி முழுமையாக கிடைக்கும்.


மார்க்கண்டேயரை காப்பாற்ற எமனை அந்த இடது கால்தான்   உதைத்தது என்கிறது புராணம்.

நடராஜரின் வலதுபாகம் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும்.இடதுபாகம் சக்திதேவியின் பாகமானதால்  பக்தர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும்.

சிவபெருமானின் நடனத்தை காண கண் கோடி  வேண்டும்.அத்தனை சிறப்புமிக்க நடனம் அது.ஆனி திருமஞ்சனத்தில் சிவபெருமானின் அபிஷேகத்தையும்,நடனத்தையும் தரிசித்து வழிபடுவது சிறந்தது.ஆனி திருமஞ்சனத்தில் நடராஜரைக் கண்டு தரிசித்தல் பல நன்மைகளைக் கொடுக்கும்.

சிவ-சக்தியின் பேரருள் கிடைத்து,கஷடங்கள் அனைத்தும் நீங்கி,ஏற்றங்களையும்,நல்ல மாற்றங்களையும் பெற்று வளமோடும்,நலமோடும் வாழ்வாங்கு வாழ உமா மகேஸ்வரன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

                           
 "ஓம் நம சிவாய "
தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

                               திருச்சிற்றம்பலம் 
நன்றி வணக்கம் 
ஈஸ்வரி