செய்வது ஹலோ ஆன்மீக நண்பர்களே எப்பிடி இருக்கீங்க?அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன். நான் வீட்டில் வாரவாரம் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை செய்வது வழக்கம்.அது எப்படி செய்வது? என்பதை எளிய முறையில் கொடுத்துள்ளேன்.
இதைப்படித்து நீங்களும் பூஜை செய்து பலன் பெறுங்கள்.
உங்களுக்கு ஏதாவது இதைப்பற்றி தெரிந்தால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.எனக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு
இதைப்படித்து நீங்களும் பூஜை செய்து பலன் பெறுங்கள்.
உங்களுக்கு ஏதாவது இதைப்பற்றி தெரிந்தால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.எனக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு
திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.
ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.
தேவையான பொருட்கள்
திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப்பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன.பூஜை ஆரம்பிக்கும் முன்:
· பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.
· சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.
· திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.
· வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாள தட்டின் மீது அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள் வீட்டுக்கு உபயோகிக்கலாம்.
· மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.
· பூஜிப்பவர், பாய் அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.
· பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.
· பூஜை செய்யும் போது (இடையில்) நடுவில் எழுந்திருக்கக்கூடாது.
· பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.
· எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.விளக்கிற்கு நெய் ஊற்றி விளக்கேற்றுவது சிறந்தது.நெய் இருக்கும் இடத்தில் அம்பாள் இருப்பாள் என்பது உண்மை.
· பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.
· குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.
· பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.
பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.
மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.
பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.
முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.
மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.
பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும்.
பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.
பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளியை பஜனையாக பாடவும்
ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும்.
தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.
ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.
பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.
குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
தீப வழிபாடு செய்து, அம்பிகையின் அருளால் அனைத்து வளங்களையும் பெறுவோமாக
நன்றி வணக்கம்
உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்
நன்றி வணக்கம்
உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக