செவ்வாய், 5 டிசம்பர், 2017

அகலிகையின் வரலாறு!

அகலிகையின் வரலாறு!


அகல்யா என்றால் அழகில்லாத பகுதி துளிக்கூட இல்லாதவள் என்று பொருள். அஹல்யா என்ற சொல்லே அகல்யா என வந்தது. ஹல்யா - அழகின்மை. அ - அன்மைப் பொருளில் வந்தது. பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தபோது பாற்கடலிலிருந்து அமிர்தத்துடன் பிறந்தவள் அகல்யா! பார்த்தவர் பிரமிக்கும் பேரழகி அவள். ஒயிலாய் பாற்கடலை விட்டு வெளியே வந்த அவளை இந்திரன் முதலான தேவர்கள் அப்படியே அவளை விழுங்கி விடுவது போலப் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.

அதேநேரம் அவர்கள் அனைவருக்கும் அவளை அடைய ஆசை துள்ளவே ""அவள் எனக்குத்தான், இல்லை, இல்லை எனக்குத்தான்'' என்று ஆளாளுக்குக் கூவியபடி அகல்யாவை நோக்கி ஓடினார்கள்! இதிலே ரொம்பவும் மயங்கிக் கிறங்கியவன் இந்திரன்தான்! பிரம்மதேவரிடம் சென்று அவளைத் தனக்குத் தருமாறு அவரைக் கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.

பிரம்மதேவர் தேவர்களிடையே இப்படி ஒரு போட்டியை எதிர்பார்க்கவில்லை! நிலைமையைச் சமாளிக்க இப்படி "ஒரு நிபந்தனை' போட்டு விட்டார்! அது என்ன?

"இரு முகங்களையுடைய பசுவை எவன் முதலில் வலம் வருகிறானோ அவனுக்கே அகலிகையைத் தருவேன்!'' என்று கூறி விட்டார் பிரம்மதேவர்!

இந்த நிபந்தனையைக் கேட்ட தேவர்களுக்குச் "சப்'பென்று போய்விட்டது! அவர்களுக்கு பிரம்மதேவர் மீதே சந்தேகம் வந்துவிட்டது! அவருக்கு அகலிகையை எவருக்கும் தரும் எண்ணம் கிடையாது. தானே வைத்துக் கொள்வார் போலிருக்கிறது! அதனால்தான் இப்படி ஒரு நிறைவேற்ற முடியாத நிபந்தனையைப் போட்டிருக்கிறார்! ரெண்டு தலைப் பசுவாம்! ரெண்டு தலையுள்ள பசுவுக்கு எங்கு போவது? ஆங்!

தேவர்கள் கூட்டமாய்ச் சென்று பிரம்மதேவரிடம் மன்றாடினர். "ரெண்டு தலைப் பசு' நிபந்தனையைத் தவிர வேறு ஏதேனும் போட்டி வைக்குமாறு வேண்டினார். பிரம்மதேவரும் சிரித்தபடி, ""சரி. அது முடியாதென்றால் உலகை முதலில் எவர் வலம் வருகிறாறோ அவருக்கு அகலிகையைத் தருகிறேன்! என்றார். இதைக் கேட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். ""இவ்வளவுதானா.. இதோ பாருங்கள்!'' என்ற ஆரவாரம் செய்தபடி அவரவருக்கு கிடைத்த வாகனங்களில் ஏறிப் பறந்தார்கள்!

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறிப் பறந்தான். அக்கினிதேவன் ஆட்டுக்கிடா வாகனத்தில் ஏறி அதைத் துரத்தினான். எமன் எருமை வாகனத்திலும், வாயுதேவன் மான் வாகனத்திலும் ஏறித் துரிதமாய் சுற்றி வர ஆரம்பித்தார்கள். மற்ற தேவர்களுக்கு எது கிடைத்ததோ அதன் மீது ஏறிப் பறந்தார்கள். வாகனம் ஏதும் கிடைக்காத தேவர்கள் கூட மனம் தளராது ஓடியே உலகைச் சுற்றி வந்து விடலாம் என்று தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்! எல்லாம் காதல் படுத்தும் பாடு!

தேவர்களின் இந்தக் கூத்தை எட்டி நின்று பார்த்து ரசித்த நாரத முனிவர் ஒரு காரியம் செய்தார். அவருக்கு அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகல்யாவே என்று அவருக்கு ஓர் எண்ணம். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு காராம் பசுவை ஓட்டிக்கொண்டுபோய் கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசுவும் அப்போது கன்றை ஈந்தது. அப்போது பசுவின் பின்புறம் கன்றின் முகம் தோன்றியது! உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை வலம் வரச் செய்தார்! கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது தரிசனம் செய்துவிட்டார்! பசு கன்று ஈனும்போது அதனை வலம் வந்தவர் உலகை வலம் வந்த புண்ணியத்தைப் பெறுவர் என்பது சாஸ்திரம். நாரதர் கௌதமரை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமருக்கு அகலிகையைத் தருமாறு கேட்டார்!

பிரம்மதேவரும் வாக்குத் தவறாமல் மலர்ந்து முகத்தோடு அகலிகையைக் கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவளுக்குச் சதானந்தர் பிறந்தார். (இந்த சதானந்தர்தான் ஜனக மகாராஜாவின் புரோகிதர்!)

இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால், அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல, இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். அவன் உள்ளத்தில் எழுந்த காமத்தீ அகலிகைக்குக் குழந்தை பிறந்திருந்தாலும் அவளை அடையத் துடித்தது!

பின்னிரவில் சேவல்போல் கூவ, கௌதமர் வைகறைப்பொழுது என்று எண்ணி நீராடச் செல்ல, கௌதமர் உருவில் இந்திரன் குடிலுக்குள் சென்று அகலிகையை அணைய அவளும் கணவர்தான் திரும்பி வந்திருக்கிறார் என்று எண்ணி உடன்பட... இது எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான கதை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து கௌதமர் குடிலுக்குத் திரும்ப இந்திரன் பூனை வடிவம்கொண்டு நழுவ கௌதமர் விஷயத்தைப் புரிந்துகொண்டு அவனைச் சபிக்க, அகலிகையும் உண்மை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதற, ""கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ!'' என்று சபித்துப் பின்பு ""தசரத ராமன் அடிப்பொடி பட்டால் உன் சாபம், பாவம் இரண்டுமே தீரும்'' என்று அருளுகிறார். பின்பு ராமாவதாரத்தின்போது காட்டிற்கு ராமர் சென்றபோது அங்கு கல்லாய்க் கிடந்த அகலிகை மீது அவர் பாதத் துளிபட அகல்யா உயிர் பெற்று ராமர் பாதங்களில் பணிகிறாள். அவள் சாபம், பாவம் இரண்டுமே தீருகிறது.

பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரத்தில் அருணகிரிநாதர் பாடிய ""கொள்ளை யாசைக் காரிகள் பாதக வல்ல மாயக்காரிகள்'' என்று துவங்கும் திருப்புகழில் ""கல்லிலே பொற்றாள் படவே'' என்ற அடிகளில் இந்த அகலிகை சாப விமோசன வரலாற்றைக் குறிப்பிடுகிறார்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக