வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா?

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா?


நாம் விரும்பியது கிடைத்தால் சந்தோஷம்; எதையாவது இழந்தால் துக்கம். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி; யாராவது இறந்து விட்டால் துக்கம். இதெல்லாம் எத்தனை நாளைக்கு? காலத்தால் மறக்கக் கூடியவை தான். “உறவினரின் மரணத்துக்காக அழாதே; கடவுளின் தரிசனத்துக்காக அழு…’ என்றனர். கடவுளின் தரிசனம் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதுடன், பிறவியே இல்லாத முக்தி நிலையை அளிக்கும்.

துளசிதாசர் ஒரு ராம பக்தர். கங்கா தீரத்தில் உலவிக் கொண்டிருந்தார். ஒரு மயானம் குறுக்கிட்டது. அங்கு ஒரு இளம்பெண், இறந்து போன தன் கணவனது அருகில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். தாசரைக் கண்டதும் ஓடி வந்து வணங்கி, “என் கணவர் போன இடத்துக்கு, நானும் செல்ல வழி காட்டுங்கள்…’ என்றாள்.
“அவளிடம், மோட்சத்தை உண்டாக்கிய அந்தக் கடவுள் இவ்வுலகிலும் இருக்கிறான்…’ என்றார் துளசிதாசர். அதற்கு அவள், “நான் மோட்சத்தை விரும்பவில்லை; என் கணவர் அருகில் இருக்க விரும்புகிறேன்…’ என்றாள். “நீங்கள் வீட்டுக்குப் போங்கள்… இன்னும் ஒரு மாதத்தில், உங்கள் கணவர் திரும்பி வந்து விடுவார்…’ என்றார் துளசிதாசர். அவளும் போய் விட்டாள். அன்று முதல் அந்த பெண்ணின் வீட்டுக்கு போய், “உலகம் மாயை, அநித்யமானது!’ என்று பக்தியின் பெருமைகளைப் பற்றி உபதேசித்தார் தாசர். அவளுடைய மனதில் துக்கம் மறைந்து, பக்தி குடி கொண்டது. சதா காலமும் ராமனையே தியானித்து, மற்றவைகளை மறந்தாள்; துக்கமும் போய் விட்டது.


மாதக் கடைசியில் அவளுடைய சிநேகிதி இவளிடம் வந்து, “உன் கணவர் திரும்பி வந்து விட்டாரா?’ என்று கேட்டாள். “ஆம்!’ என்றாள் அவள். “எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டாள் சிநேகிதி. தன் நெஞ்சில் கை வைத்து, “அவர் என் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்!’ என்றாள் அந்த பெண். பக்தி மேலீட்டால் கணவன் போன துக்கத்தை மறந்து, நெஞ்சில் கடவுளுக்கு இடமளித்து விட்டாள். கடவுளைப் பற்றிய ஞானத்தை அவளுக்கு தாசர் உபதேசித்து விட்டதால், அவளும் உலக விஷயங்களிலிருந்து விடுபட்டு, ஞானம் ஏற்பட்டு கடவுளிடம் மனதை வைத்து, காலங்கழித்து முக்தியடைந்தாள் என்று ஒரு கதை உண்டு.


பிறவி என்பது, கர்ம வினையை அனுபவிப்பதற்காக ஏற்பட்டது. அதை அனுபவித்ததும், அவரவர்கள் போக வேண்டியது தான். வந்த காரணமும் தெரியாது; போன காரணமும் தெரியாது. ஞானம் வந்து விட்டால், ஏதோ வந்தான், போனான் என்றிருப்பர்; அது இல்லையேல், அழுது புலம்பிக் கொண்டிருப்பர். அழுது புலம்பினால் போனவன், வருவானா? நாமும் ஒருநாள் இப்படிப் போக வேண்டியவன் தானே என்று, மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

பலராம ஜெயந்தி!


பலராம ஜெயந்தி!

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். 

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். 

சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள்! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.



வியாழன், 27 ஏப்ரல், 2017

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்?

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்?



கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள்

அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.



அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.

“பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டாள் பாட்டி . “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி.

“ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி.

“எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.



நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள்.

முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்.


இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.

மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது


மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது என்பதற்கான காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? இதோ சில வியப்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


திரௌபதி துயிலுரித்தல் மகாபாரதத்தில், சதுரங்க சூதாட்டத்தில் திரௌபதியை யுதிஷ்டர் இழந்தவுடன், திரௌபதியை சபைக்கு இழுத்து வர துச்சாதனன் சென்றான். அப்போது திரௌபதி மாதவிலக்கு (ராஜஸ்வலா) காலத்தில் இருந்தாள்.

அதனால் ஒரு தனிமையான அறையில் ஒரே ஒரு துணியை மட்டும் அணிந்து கொண்டிருந்தாள். அக்காலத்தில் மாதவிடாய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்துள்ளது என இதுவே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது மிக உயரிய பாவமாக கருதப்பட்டது.


இந்திரனின் பாவம்

இந்திரனின் வளர்ந்து வந்த அகந்தையால், கோபமடைந்த அவனின் குருவான ப்ரிஹஸ்பதி சொர்க்கத்தை விட்டு வெளியேறினார். அதன் விளைவாக, இந்திரனின் அரியணையைத் தாக்கி அதனை அசுரர்கள் கைப்பற்றினார்கள். தன் தவறை உணர்ந்த இந்திரன், உதவியை நாடி பிரம்மனிடம் சென்றான்.தன் குருவை குளிர்விக்க அவன் பிரம்ம கியானிக்கு பணிவிடை செய்ய வேண்டும் என இந்திரனிடம் பிரம்மா கூறினார். அதனால் பிரம்ம கியானிக்கு பணிவிடை புரிந்திட இந்திரன் சென்றான். பிரம்ம கியானி என்பவன் ஒரு அரக்கனின் புதல்வன் என்பதால், தன் தியாகத்தை கடவுளுக்கு பதில் அசுரர்களுக்கு புகலிடமாக செலுத்தினான். இதனால் கோபமடைந்த இந்திரன் பிரம்ம கியானியை கொன்றான்.

பூவிற்குள் ஒளிந்து கொண்ட இந்திரன்

பிரம்ம கியானியை கொன்றதால், ஒரு பிராமணனை கொன்ற பழிக்கு ஆளானான் இந்திரன். இந்த பாவம் அவன் எங்கு சென்றாலும் அவனை பின் தொடர்ந்ததால், அவன் ஒரு அரக்கனை போல் காட்சி அளித்தான். அதனால் ஒரு பூவிற்குள் ஒளிந்து கொண்ட இந்திரன், விஷ்ணு பகவானை வருடக்கணக்கில் வணங்க தொடங்கினான். அவன் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவனை அசுரனிடம் இருந்து விடுவித்தார். இருந்தாலும் அவன் தலையில் அந்த பாவம் நீடித்தது.

இந்திரனின் பாவம் பிளவுப்பட்டது

தன் பாவத்தை போக்கிட மரங்கள், நிலம், தண்ணீர் மற்றும் பெண்களிடம் சென்று தன் பாவத்தை பிரித்து அவர்களையும் அதை பங்கு போட்டுக் கொள்ள வேண்டுகோள் விடுத்தான். அதற்கு பிரதிபலனாக ஒவ்வொருவருக்கும் வரம் அளிப்பதாக அவன் சத்தியம் செய்தான்.அதனால், அவன் பாவத்தின் கால் பங்கை மரங்கள் ஏற்றுக் கொண்டது. அதனால் அவைகள் தங்கள் வேர்களில் இருந்து மீண்டும் வளரலாம் என்ற வரத்தை அளித்தான் இந்திரன்.
அடுத்து அவன் பாவத்தின் மற்றொரு பங்கை தண்ணீர் ஏற்றுக் கொண்டது. அதனால் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் சக்தியை தண்ணீருக்கு வரமாக அளித்தான்.மூன்றாவதாக அவன் பாவத்தின் ஒரு பங்கை பூமி ஏற்றுக் கொண்டது. அதனால் உலகத்திற்கு எந்த ஒரு தாக்குதல் ஏற்பட்டாலும், தானாகவே சுலபத்தில் அது ஆறி விடும் என பூமிக்கு வரத்தை அளித்தான்.

ஏன் பெண்கள் கோவில்களுக்குள் நுழைய முடிவதில்லை?

கடைசியாக இந்திரனின் பாவத்தில் பங்கு போட பெண்கள் முன் வந்தனர். இதுவே மாதவிடாயில் வந்து முடிந்தது. மாதவிலக்கு காலத்தின் போது பெண்கள் தூய்மையற்றவர்களாக இருப்பார்கள்.
அதற்கு பிரதி பலனாக, ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாலின இன்பம் கிடைக்கும் என்ற வரத்தை அவர்களுக்கு இந்திரன் அளித்தான். இந்திரனின் பாவத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதால், மாதம் ஒரு முறை பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்.

ஒரு பிராமணனை (பிராம ஹாத்யா) கொன்ற பழி அவர்களை வந்து சேர்ந்தது. அதனால் தான் மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களால் கோவில்களுக்குள் நுழைய முடிவதில்லை

தனிமைப்படுத்தப் படுவதற்கான காரணங்கள்


மாதவிலக்கு ஏற்படும் போது பெண்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கான முதல் காரணம் – பெண்கள் சுலபத்தில் தொற்றுக்களால் பாதிக்கப்படுவார்கள். அதனால் தொற்றுக்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் தனியாக வேறு அறையில் வைக்கப்பட்டார்கள்.

இரண்டாவதாக, மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் போது, வீட்டு வேலைகள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், இந்நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய அளவிலான ஓய்வு அவசியம். அதனால் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடாமல் அவர்கள் ஓய்வு அறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.மேலும் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் காலத்தில், பெண்களின் உடலில் இருந்து எதிர்மறையான ஆற்றல் திறன் உருவாகும். இது அவர்களை சுற்றியுள்ளவர்களின் மீது தாக்கத்தை உண்டாக்கும்.

திரிக்கப்பட்ட மரபுகள்? பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, சில மாதவிடாய் மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகளில் பல மரபுகள் மூட நம்பிக்கைகளாக விளங்கியுள்ளது.உதாரணத்திற்கு, மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் பெண் ஊறுகாய் ஜாடியை தொட்டால், அது கெட்டு போய்விடும். இக்காலத்தில் பெண்களை தனிமைப்படுத்துவதால் அவர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல.

மாதவிலக்கு என்பது ஆரோக்கியமான பெண்ணின் அறிகுறியாகும். இது ஒன்றும் அவமானப்படும் விஷயமே அல்ல. வெறுமனே மூட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு பெண்ணின் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வரக்கூடாது. அப்படி செய்வது அவர்களை அவமானப்படுத்தும் விதமாக அமையும்.

மாதவிலக்கு ஏற்படும் போது வழிபாட்டில் ஈடுபடலாமா?

இதற்கு ஒரு எளிய பதில் உள்ளது. நீங்கள் நல்லதையும் நினைக்கலாம், கெட்டதையும் நினைக்கலாம்; இனிமையாகவும் பேசலாம், கடுமையாகவும் பேசலாம்; சந்தோஷத்தையும் வெளிப்படுத்தலாம், வருத்தத்தையும் வெளிப்படுத்தலாம். அதே போல் தான், எந்த ஒரு நிலையிலும், உங்களுக்கு பிடித்த எந்த முறையிலும் நீங்கள் கடவுளை வணங்கலாம். கடவுள் விக்கிரகத்தை தொடுவதற்கு மரபுகள் தடை போட்டாலும் கூட, கடவுளின் பெயரை உங்களின் மனதில் ஜெபிக்கலாம். உடல் ரீதியான நிலைகள் ஆன்மீகத்தை மாசுப்படுத்தாது.

இஸ்லாமிய மதத்தில் மாதவிலக்கு
இஸ்லாமிய மதத்தில் கூட மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகின்றனர். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் குரானை தொடவோ, வழிபடவோ கூடாது. புனித மாதமான ரம்ஜானின் போது, பெண்களுக்கு மாத விலக்கு ஏற்பட்டால், அவர்களால் நோன்பும் இருக்க முடியாது. இக்காலத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. ஏழாம் நாள் குளித்த பிறகு தான், அவள் தூய்மையானவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

காலத்தின் மாற்றங்கள்
நாகரீக உலகை நோக்கி நாம் போய் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாதவிடாய் கட்டுப்பாடுகள் மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் காலத்தில் வேலை பார்க்கும் பெண்ணை வீட்டில் இருக்க சொல்லி, உலகத்தை விட்டு அவர்களை தனிமைப்படுத்த எதிர்ப்பார்ப்பது நடக்காதல்லவா?

மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் போது, இப்போது கூட, பெண்கள் கோவில்களுக்கு செல்லவோ, பூஜைகள் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் சமுதாய தனிமைப்படுத்துதல் மற்றும் அவமானங்கள் இப்போது நடப்பதில்லை.
நம் மகள்கள் இன்னும் சிறந்த உலகத்தில் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றும், மாதவிலக்கை எண்ணி அவமானப்பட வேண்டாம் என்றும் நாம் நம்பிக்கை கொள்ளலாம். காரணம் மேற்கூறிய அனைத்திற்கும் மேலாக மாதவிடாய் என்பது ஆரோக்கியமான பெண்ணிற்கான அறிகுறியாகும்.


புதன், 26 ஏப்ரல், 2017

தர்ப்பையின் மகிமை

தர்ப்பையின் மகிமை


தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.

* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.

* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.

* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.

* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.

* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.

உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர்? 
ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்பைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.


இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:


தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில்  தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள்.
பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமால் இருக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:

திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்:


‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்

அக்ஷய திருதியை நாளில் தானம் செய்யுங்கள்...

அக்ஷய திருதியை நாளில் தானம் செய்யுங்கள்... செல்வம் பெருகும்! 

 "அக்ஷய" என்றால் குறைவில்லாதது என்று பொருள். அக்ஷய என்ற சொல் வளர்தல் என்று பொருள்படும். சயம் என்றால் கேடு, அட்சயம் என்றால் கேடில்லாத அழிவில்லாத பொருள் என்பதாம். அன்றைய தினத்தில் நாம் செய்யும் எச்செயலும் குறைவின்றி வளர்ந்துகொண்டே இருக்கும். திருதியை தினத்தில் செய்யும் எச்செயலுக்கும் விருத்தி உண்டு என்பது பழமொழியாகும். மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை திரிதியை திதி வந்தாலும், சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அக்ஷய திருதியை நாள்.   இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். 

அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்துவணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்..! 

1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..! 
2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..! 
3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..! 
4. கிருஷ்ணர் குசேலருக்கு செல்வங்களை அள்ளிக் கொடுத்த நாள்..!
 5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...! 
6.பஞ்சபாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்.. 
7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..! 
8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..! 
9.அன்னபூரணி அம்பாள் அவதரித்த நாள். 
10. தான தர்மங்களை செய்வதற்கு சிறந்த நாள். 

லட்சுமி வாசம் செய்யும் இடம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லட்சுமி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் எந்த இல்லங்களில் இருக்கிறாள் எந்த பொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால் தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள் என்பது நம்பிக்கை ஆகும். சுத்தமான இடம் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வீட்டை சுத்தம் செய்து எப்பொழுதும் தூய்மையாகவும் கோலமிட்டும், தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனரோ அங்கே ஸ்ரீதேவியின் வாசம் நிரந்தரமாக இருக்கும். சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் திருமகள் நீங்காது இருப்பாள்

பூஜை செய்வது எப்படி? 


வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து , குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து வாசனை மலர்களால் தங்களுக்கு தெரிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்க வேண்டும்.

சுமங்கலிக்கு தட்ஷணை 

பூஜை செய்யும் போது வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து நம் இல்லம் வருவாள். அன்னதானம் செய்யலாம் இந்த நல்ல நாளில் நாம் பெரியோர்களையும் முன்னோர்களையும் வணங்க வேண்டியது முக்கிய கடமையாகும். 

அட்சய திருதியை அன்றைய தினம் பசித்தோருக்கு உணவு வழங்குதல், இல்லாதவர்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாதசெல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும். உதவி செய்யுங்கள் இறைவனை வழிபடுவதோடு அன்று செய்யும் தானங்கள் அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், அரிசி, தண்ணீர் பாத்திரம், உணவு பொருட்கள், வஸ்திரம், பசு இப்படி தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம். தினமாக " கொண்டாடலாம் .அவல் நிவேதனம் இன்றைய நாளில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து, பூஜை செய்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும். 

குபேரன் அதிபதியான தினம் 


ஸ்ரீ குபேர பகவான், ஒரு அட்சய திருதியை நன்னாள் அன்று இறைவனை வணங்கித் துதித்தார். அதன் பயனாக இறைவன் இவரை வடதிசைக்கு அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார். 


அக்ஷய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது மணிமேகலைக்கு இந்நாளில் தான் அக்ஷய பாத்திரம் கிடைத்தது.அதனால் அன்று முதல்மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள். சந்திரன் சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் அக்ஷய திருதியை தினத்தன்று சாப நிவர்த்தி பெற்று அக்ஷய திரிதியை தினத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கினார். இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் எல்லாம் வளர்பிறை போல வளரும். எனவே தங்கம் வாங்குவது பழக்கமானது. பொன், பொருள் சேர்க்கை தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம். 

அன்று விலையுயர்ந்த பொருட்கள்தாம் வாங்க வேண்டும் என்பதில்லை. அன்றைய தினம் ஹோமம், ஜபம் மற்றும் தானம் செய்வது சிறப்பைத் தரும். தானம் செய்வது சிறப்பு தங்கள் பொருளாதார நிலைக்கு தக்கவாறு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறப்பு. குடை, விசிறி, ஆடை, நீர்மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, உத்ராட்சம், புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது பாய் போன்ற பதினாறு வகை தானங்களைச் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை. 

குலேசன் கதை 


வெறும் கையுடன் தன் நண்பன் கண்ணனைக் காணச் செல்லக் கூடாது என்றெண்ணி, இருந்த ஒரு பிடி அரிசியை அவலாக்கி, அதனை சுத்தமான கிழிசல் துணியில் கட்டிக்கொண்டு சென்றார் குசேலர். ஆர்வமாய் கிருஷ்ணர் அதனைப் பெற்றுக்கொண்டு, அவலை வாயில் இடும்போது அக்ஷய என்றார். செல்வம் பெருகியது நண்பனிடம் விடைபெற்று, தன் இல்லம் திரும்பிய குசேலர், தன் இல்லத்தைக் காணாது தேடினார். அது மாளிகையாக மாறிவிட்டிருந்தது. செல்வச் செழிப்புடன் இருந்த மனைவியைக் கண்டு வியந்தார். இந்த வளங்கள் யாவும் கிருஷ்ணர் கூறிய அக்ஷய என்ற சொல்லால் கிடைத்தது. எனவே நாமும் நம்மால் முடிந்த அளவு அக்ஷய திருதியை தினத்தில் தானம் செய்து வளம் பெறுவோம்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அம்மி மிதித்து… அருந்ததி பார்த்து… ஏன் மூன்று முடிச்சு போடனும்?

அம்மி மிதித்து… அருந்ததி பார்த்து… ஏன் மூன்று முடிச்சு போடனும்? சம்பிரதாயம் 



இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. நம்முடைய இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறி இருக்கிறார்.

மூன்று முடிச்சு
சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் ஓர் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் என்ற பந்தத்தில்தான் தொடங்குகிறது.
இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமையவேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன் – மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்கவேண்டும்.
சிறப்பு மிக்க கணவன் – மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

பெண் பார்க்கும் படலம்:
திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பிள்ளையின் மனம் முதலில் பெண்ணிடம் லயிக்கவேண்டும். விருப்பம் ஏற்படவேண்டும்.
இதுதான் முதல் படி. இந்த நிலையில் பிள்ளைக்கு பெண்ணையோ, பெண்ணுக்கு பிள்ளையையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது.
பிள்ளை வீட்டார்தான் முதலில் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து பெண் கேட்கவேண்டும். அனைத்து பொருத்தங்களும் முடிந்த பிறகு முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்படும்.

நிச்சயதார்த்தம்:
இல்லற வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு முன்னுரை போல் அமைந்திருப்பது நிச்சயதார்த்தம் என்னும் சடங்கு.
நிச்சயதார்த்தத்தின்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்கள் அவர்களுடைய மணவாழ்க்கையை வளம் பெறச் செய்ய தேவர்களை அழைக்கும் மந்திரங்கள் ஆகும்.
‘வருண பகவானே! எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என் உடன் பிறந்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதவளாக இருக்கட்டும்’
அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, ‘இந்திர தேவனே! எனக்கு மனைவியாக வர இருப்பவள் தன்னுடைய பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பவளாக இருக்கட்டும்’
தொடர்ந்து சூரியபகவானைப் பார்த்து, ”இவள் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றவளாகத் திகழட்டும்’
பிறகு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, ”பெண்ணே! நீ அழகிய கனிவு நிரம்பிய கண்களை உடையவளாகவும், கணவனாகிய எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை அளிப்பவளாகவும், நல்ல மனம் உள்ளவளாகவும், தேஜஸ் நிரம்பப் பெற்றவளாகவும் திகழ்வாயாக.
தீர்க்காயுள் உள்ள பிள்ளைகளைப் பெறுபவளாகவும், தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவளாகவும், அனைவருக்கும் நன்மையை செய்பவளாகவும் இருப்பாயாக” என்ற பொருளுடைய மந்திரத்தைச் சொல்கிறான்.
இந்த மந்திரங்களைப் போலவே மற்ற அனைத்து திருமண மந்திரங்களும் அர்த்தம் உள்ளதாகத் திகழ்கின்றன.


காசி யாத்திரை:
வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும்போது, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான தூண்டுகோலாக அமைந்திருப்பதுதான் காசி யாத்திரை விஷயம்.
எதற்கெடுத்தாலும் நான் சந்நியாசியாகப் போய்விடுவேன் என்று சொல்லும் சஞ்சல மனம் ஆண்களுக்கே இயல்பானது.
அப்படி மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதற்காகத்தான், ”வேண்டாம் இந்த துறவற மனோபாவம். இல்லறமே நல்லறம். அந்த நல்லறத்தில் நீ ஈடுபடுவதற்காக, நான் இதுவரை செல்லமாக வளர்த்த என் பெண்ணையே உனக்குத் தருகிறேன்” என்று சொல்லும் நிகழ்ச்சிதான் காசி யாத்திரை.
பிற்காலத்தில் கணவனுக்கு எப்போதேனும் மனச் சஞ்சலம் ஏற்படும்போது, இந்த காசி யாத்திரை வைபவத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறவேண்டும் என்பதற்காகவே காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கூறைப் புடவை:
காசி யாத்திரை நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணுக்கு மணமகன் வீட்டு சார்பில் கூறைப் புடைவை கொடுக்கப்படும். கொடுக்கும்போது ஒரு மந்திரத்தை மணமகன் சொல்லவேண்டும்.
அந்த மந்திரத்தின் பொருள், ”என்னுடைய வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளே! இந்தப் புடைவை உன் மேனியைச் சுற்றி உன்னைப் பாதுகாப்பாகவும், உன் அழகைப் பராமரிக்கவும் பயன்படுவதைப் போலவே, தர்ம தேவதைகள் உன்னைச் சூழ்ந்திருந்து, உன் பண்பு, அழகு ஆகியவற்றையும் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்பதாகும்.

பெண்ணின் இடுப்பில் தர்ப்பையால் கட்டுதல்:
கூறைப்புடவை அணிந்து வந்த பெண்ணின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றைக் கட்டுவார்கள். ‘நல்ல மனம், குழந்தைகள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழும் தன்மை, ஆரோக்கியமான நல்ல உடல், இவற்றை வேண்டிப் பெற்றுக்கொண்டவளாகவும், கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவள் தூய்மையை உணர்த்தும் நெருப்பின் முன் நிற்கிறாள்.
இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்’ என்பதே இதன் பொருள்.
தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் இதை அடுத்துச் சொல்லப்படுகிறது. மணப்பெண்ணை, சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதன் பின்னரே அவள் மணமகனுக்கு உரியவளாகிறாள்.
இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளை எப்படி மனைவியாக ஏற்கலாம்?’ என்று கேட்கத் தோன்றும்.
ஆனால், உண்மை அதுவல்ல… ஒரு பெண்ணை சிறுவயதில் எத்தனையோ பேர் ஆசையாகத் தூக்கியிருப்பார்கள்… இதனாலெல்லாம் அந்தப் பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகிறதா என்ன?
ஒரு பெண்ணின் சரீரத்தில் ரோமம் உண்டாகும்போது சோமன் என்ற தேவன் அவளைப் பாதுகாக்கிறான்.
‘ரஜஸ்’ ஏற்படும்போது (ருதுவாகுதல்) கந்தர்வன் அவளைப் பாதுகாக்கிறான். சோமதேவன் கன்னிப்பெண்ணுக்கு உடல் பலம் அளிப்பவன்.
கந்தர்வன் அவளுக்கு அங்க அழகுகளை கொடுப்பவன்; அக்னி அவளுக்கு யௌவனத்தின் பிரகாசத்தைக் கொடுப்பவன்.
இவற்றைப் பெற்று, இந்த இயற்கை சக்திகளின் ஆசி உடலில் மேன்மையை அளித்த பிறகுதான், அவள் கணவனை அடைய முழுத்தகுதி பெறுகிறாள்.
அவ்வாறு அந்தப் பெண்ணைக் காத்து அருள்பாலித்த தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.

கன்னிகாதானம்:
தானங்களிலேயே மிகவும் உத்தமமான தானமாகப் போற்றப்படுவது கன்னிகாதானம். தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம்.
கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் தந்தை ஒரு மந்திரம் சொல்வார்.
அந்த மந்திரத்தின் பொருள்: “பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான திருநிறைச்செல்வா! உனக்குத் தானமாக அளிக்கிறேன்.
ஏற்றுக்கொள்.. என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் செய்திருக்கிறேன்.
இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள்.
எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக!
உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக.
உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!”

மாங்கல்யதாரணம்:
அடுத்து மாங்கல்யதாரணம் நிகழ்கிறது. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் காட்டும் அடையாளம் அது!
‘மாங்கல்யம் தந்துநாநே’ – என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான்.
அந்த மந்திரத்தின் பொருள்: ”இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!’
அப்போது போடப்படும் ‘மூன்று முடிச்சு’கள் அர்த்தபுஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் தங்கை மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள்.
ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம்.
அதுமட்டுமின்றி, உலகியல்படி, தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும் – திரிசுரணசுத்தியாக மனம் – வாக்கு – உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் – முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் – இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன.
சப்தபதி:
இதைத் தொடர்ந்து சப்தபதி என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சட்டங்கள் கூட இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த ‘சப்தபதி’ முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது.
மணமகளின் கால்கட்டை விரலைப் பற்றி, மணமகன் தன் வலது கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான்.
இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:
“ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன்.
நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் – பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம்.
நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம்.
நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்.
நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய்.
இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் – பிறசெல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!” என்று இந்த நிகழ்ச்சியில் மணமகன் மணமகளை அழைக்கிறான்.
இந்த மந்திரத்திற்கு ‘ஸகா’ என்று பெயர். மனோதத்துவ அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்தும் இணைந்தும் வாழத் தயார் செய்து கொள்கிறார்கள் இந்த அர்த்தமுள்ள சடங்கில்!

அம்மி மிதிப்பது:
அடுத்த சடங்கு அம்மி மிதிப்பது. மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான்.
“இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.
இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்” என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான்.
எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.

பொரியிடுதல்:
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் (லாஜ ஹோமம்). மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுத்து அக்னியில் இடச் செய்கிறாள். கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், புத்திசாலிகளான – ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவும், ஒளிமயமான சூரியதேவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதில் பிள்ளை வீட்டாரின் சகோதரர்களையும் ஈடுபடுத்துவது, இரு குடும்பங்களும் இணைவதை உணர்த்துகிறது.

தாலி, சடங்குஅருந்ததி தரிசனம்:
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர்.
இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி.
வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் – சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் – இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அனந்தனும் ஸ்ரீராமனும்

அனந்தனும் ஸ்ரீராமனும் 

கவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.
ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்...

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.


குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். 'சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், 'ராமா... ராமா...’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே... பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. 'ராமா... ராமா...’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது 'ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் 'ராமா... ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் 'ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். 'ராமா... ராமா... எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.
இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ''அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?'' என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன். ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், 'அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். 'எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ''என்னை மன்னித்துவிடு அனந்தா!'' என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

''உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு'' என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.
அப்போது வசிஷ்டர், ''ராமா... இவர் யார்?'' என்று கேட்க, ''தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் 'பிரபு’ என்றும் 'மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை 'அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!'' என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!
''இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, 'உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?'' என்று கேட்டான்.
''பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!'' என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.
இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை!


மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை!

முன்பு ஒரு காலத்தில் மிருகண்டர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியான மருதவதியும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே சிவபெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடியும், அவரைப் பற்றிய கதைகளைப் பரப்பியும் வாழ்ந்து வந்தார்கள்.
 கடைசியாக அவர்களின் செயலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு காட்சி அளித்து, குழந்தை வரத்தை அளித்தார். அந்த குழந்தை தான் மார்கண்டேயன்.

சிவபெருமான் கொடுத்த வரம் 

மிருகண்டர் என்பவர் மகரிஷி ஆவார். அவருடைய மனைவி மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார் மகரிஷி. அவர் முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆளப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என கேட்டார்.

 சிவனிடம் மகரிஷி கேட்டது



அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறினார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான். வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.



தந்தையின் சோகத்தை கேட்ட மார்கண்டேயன்

அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான். அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார். நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய். இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி கூறினார்.


தவம் மேற்கொண்ட மார்கண்டேயன்

"தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது அன்பு உண்டு.  அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள். அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என மார்கண்டேயன் கூறினான்.

இரவு பகல் பாராமல் வணங்கிய மார்கண்டேயன்

தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான்.

மார்கண்டேயனை அழைக்க வந்த எமன்


கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான எமன் அவனிடம் வந்தார். ஒரு எருமையின் மீது ஏறி எமன் வந்தார். தன் கையில் பாசக்கயிற்றை வைத்திருந்தார். மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான். 

மார்கண்டேயனை காப்பாற்றிய சிவன் 

சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், "எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.

மரணத்தை வென்ற மார்கண்டேயன்

மரணத்தை வென்ற மார்கண்டேயன்


  எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். இந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடிந்தது. இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தான்.