செவ்வாய், 31 ஜனவரி, 2017

ரத சப்தமி விரதம்!

ரத சப்தமி விரதம்!


தை மாதம் சுக்லபட்ச சப்தமியன்று சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கும் காலமான உத்தராயண காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் வளர்பிறை 7-ம் நாள் சப்தமி திதியன்றுதான் இது தொடங்குகிறது.  அன்றைய நாளுக்கு ரதசப்தமி என்று பெயர். அன்று சூரியனுடைய பல நாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டுவதுடன் வாழ்வின் இறுதியில் சூரிய லோகத்தையும் அடையலாம். நாம் ஆண்டுதோறும் பற்பல விரதங்களைக் கடைப்பிடிக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் ரதசப்தமி விரதம்.இந்த நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நடைபெறும். இது சூரியஜெயந்தி விழாவாகவும் அழைக்கப்படுகிறது.


ஒரு சக்கரம், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். இதன் சாரதி அருணன். இவன் காசிப முனிவரின் மனைவி விரதையின் மகன். சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்றும்; இவற்றையே தினமணி, கத்யை, லோக பந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினி, ஹரி என்ற பெயர்களாலும் அழைப்பர்.


ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும்.


ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.
அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.
யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

பிரம்மதேவர், இந்திரன் முதலானோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.
சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’.

அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.
உண்மையிலேயே சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குவது இந்த நாளில் தான். இருள் கூட்டி மழை பெய்த மாரிக்காலம் முடிந்து, சூரியன் இப்படி ‘பளிச்’சென்று வெளிப்படுவதையே முன்னோர்கள் நமக்குக் கதையாகத் தந்தார்கள்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜை யையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை:


ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.ரத சப்தமி ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சமமானதுரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். 



பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். 
இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.  அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, 

“ஓம் நமோ ஆதித்யாய…ஆயுள், ஆரோக்கியம்,  புத்திர் பலம் தேஹிமே சதா”     –  என்று சொல்லி வணங்கலாம்.   நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட ரத சப்தமி தினத்தன்று சூரிய பகவானை வழிபடுவோம்.


திங்கள், 30 ஜனவரி, 2017

பைரவருக்கு ஒவ்வொரு கிழமைகளிலும் செய்யப்படும் விரத வழிபாடுகள்

பைரவருக்கு ஒவ்வொரு கிழமைகளிலும் செய்யப்படும் விரத வழிபாடுகள்


பைரவருக்கு வாரம் வரும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு நாளும் பைவரருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில்  பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். கடன் வாங்கி வட்டி கட்டி கஷ்டப்படுபவர்கள் ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம்பெறலாம்.சிம்மராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பானது.


திங்கட்கிழமை சிவனுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக்காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டைமலர் சாற்றி வழிபட கண்நோய்கள் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.


எதிர்பாராதவிதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற பைரவர் வழிபாடு பலன் தரும். செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட சிறந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டால் நற்பலன்கள் வந்து சேரும்.


புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.


வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு விலகி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக்கிழமை சிறந்தது.


வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட ஏற்றநாளாகும்.


சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள். 




திங்கள், 23 ஜனவரி, 2017

பொங்கல் பண்டிகையின் சிறப்பு

பொங்கல் பண்டிகையின் சிறப்பு  

  
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம். அதுபோல சிவன், விஷ்ணு, சக்திதேவி, இவர்களுக்கு வலது கண்ணாக சூரியபகவான் இருக்கிறார் என்கிறது புராணம். “ஒம்” என்ற சக்தி வாய்ந்த பிரணவ மந்திரத்திலிருந்து உருவானவர் சூரியபகவான் என்கிறது மார்க்கண்டேய புராணம். சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும். 


சூரிய பகவான் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். நம்மை காக்கவே சூரியபகவான் எந்நேரமும் காத்திருக்கிறார். அதனால்தான் தினமும் நாள் தவறாமல் சரியான நேரத்தில் வானத்தில் ஆஜராகி விடுகிறார். 

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. இறைவனை வணங்கியும் நோய் நீங்கவில்லை. “செய்த பாவம் அனுபவிக்க வேண்டும், அது உன் விதி. என்று கூறிவிட்டார் பிரம்மதேவன். தன் நோய் குணமடைய வரம் வேண்டி, நவகிரகங்களை நினைத்து வழிபட்டார் காலவ முனிவர். நவகிரகங்கள் காலவ முனிவருக்கு உதவ முன் வந்தனர். இதில் முனிவரின் பக்தியை பாராட்டி, முனிவரின் முன்ஜென்ம விதியின்படி அனுபவிக்க வேண்டிய பாவங்களை போக்கி, முனிவரை பரிபூரணமாக குணப்படுத்தினார் நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான். அதனால் பிரம்மதேவனின் சாபத்திற்கு ஆளானார் சூரியபகவான். தான் கஷ்டபட்டாலும், தன்னை வணங்கும் பக்தர்கள் கஷ்டப்படக்கூடது என்ற உயர்ந்த எண்ணத்தில் தோஷங்களையும் கர்மாக்களை நீக்கி, நல்வாழ்வு தர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்த குணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பானையிலோ அல்லது குக்கரிலோ பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு. இப்படி முறையாக மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி, சூரிய பகவானின் கருணை பார்வையை பெற்று பல்லாண்டு பல்லாண்டு தலைமறை தலைமறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 


மாட்டு பொங்கல் 


வருடம் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டதை தின்று விட்டு உழைக்கும் அப்பாவி குணம் படைத்த ஜீவராசிதான் மாடு. அதனால்தான் “பாழாய் போனது பசு வாயில்” என்பார்கள். மாட்டுபொங்கல் அன்று, மாட்டை நன்றாக குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அதன் காலில் சலங்கை மாட்டி அழகுபடுத்துவார்கள். அத்துடன் மாடுகளுக்கு பூஜை செய்து, அதன் கழுத்தில் மாலைபோட்டு, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து பிறகு, பசுமாடு அணிந்திருந்த மலர் மாலையை வீட்டின் தலைவாசலில் கட்டினால், அந்த வீட்டில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும். 

 கனு பூஜை செய்யும் முறை 

மாட்டு பொங்கல் அன்று, தோட்டத்திலோ அல்லது மாடியிலோ ஒரு இடத்தை சுத்தமாக பெருக்கி கோலம் போட்டு, அந்த இடத்தில் வாழை இலை போட்டு, அந்த வாழையிலையில் பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த சர்க்கரை பொங்கலை உருண்டையாக செய்து கொண்டு, தனியாக வைத்திருக்க வேண்டும். பிறகு பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த வெள்ளை சாதத்தை மூன்று பங்காக பிரித்து, முதல் பங்கில் தயிர் சாதமும், இரண்டாவது பங்கில் மஞ்சள்பொடி தூவிய மஞ்சள் சாதமும், மூன்றாவது பங்கில் குங்குமம் கலந்த சிவப்பு சாதமும் செய்ய வேண்டும். அந்த சாதங்களை தனி தனியாக 5 அல்லது, 7 அல்லது, 9 அல்லது, 11 எண்ணிக்கை கொண்ட நெல்லிகனி அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை வாழையிலையில் வைக்கும் போது, “காக்காய் பிடி வைத்தேன், கனுப்பிடி வைத்தேன். காக்கை கூட்டம் போல எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்று கூறிகொண்டே வைத்து, அத்துடன் கரும்புதுண்டு, மஞ்சள்கொத்து, வெற்றிலை பாக்கு, பூ வைத்து சூரியபகவானை மனதால் நினைத்தும், குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி பூஜை செய்ய வேண்டும். சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு இந்த பூஜையின் சிறப்பு என்னவென்றால், பெண்கள் தங்களின் “சகோதரர்கள் தங்களுடன் ஒற்றுமையாகவும், தன் மேல் பாசமாகவும் இருக்க வேண்டும், அத்துடன் அவர்களும் சுபிக்ஷமாக குடும்பத்தோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் மாட்டு பொங்கல் தினத்தில் இப்படி கனுபிடி வைத்து கனு பூஜை செய்வார்கள். இந்த கனு  பொங்கல் பூஜை செய்யும் வழக்கம் இருப்பவர்கள் மட்டும் செய்தால் போதும். அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம், கனு பூஜை செய்யலாமா? என்ற கேட்டு செய்யலாம். குடும்ப வழக்கம் இல்லாத பூஜைமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொங்கல் அன்று சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு பரிசுகளை தருவார்கள். சகோதரர் தரும் பரிசுக்கு கிராமபுறங்களில் இன்றும் மதிப்பு இருக்கிறது. பிறந்த வீட்டில் சகோதரன் தருகிற பரிசில்தான் புகுந்த வீட்டில் அந்த பெண்ணுக்கு கௌரவம் தருகிறது. அதனால்தான் எந்த நாட்களிலும் உதவி செய்யாத சகோதரனும், பொங்கல் திருநாளில் தன் சகோதரிக்கு பொங்கல் பரிசு தருவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். “குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பார்கள். எந்த விஷயத்தையும் பெரிதுப்படுத்தாமல் அமைதியாக இருந்து மறப்போம் – மன்னிப்போம் என்ற கொள்கையை கடைபிடித்து, உறவினர்களிடத்தில் கசப்பான அனுபவங்கள் இருந்தால், தித்திப்பான சர்க்கரை பொங்கலை பரிமாறி கொண்டு நல்லுறவை கட்டிகாக்கவேண்டும்.

மாட்டுபொங்கல் அன்று கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சளை  வாங்கி, அந்த மஞ்சளை அரைத்து தினமும் பூசி வந்தால், அந்த மஞ்சள் கரைவதற்குள் அந்த கன்னி பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அத்துடன், அந்த காலத்தில் பெரியவர்களின் அறிவுரைபடி பெண்கள் கீழ்கண்ட பாடலை பாடியபடி மஞ்சள்  அரைத்து பூசுவார்களாம். 


அந்த பாடல்…. “மக்களைப் பெற்று, மனையைக் கட்டி மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து, பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து, கொட்டில் நிறையப் பசுமாடும், பெட்டி நிறைப் பூஷணமுமாக, தழையத்தழைய தாலிகட்டி புருஷனோடு பூவும், பொட்டுமாக நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்” என்ற இந்த பாடலை பெண்கள் பாடியபடி மஞ்சள்  பூசிக்கொண்டால், இந்த பாடலில் இருக்கும் நல்ல சொல்லுக்கு ஏற்ற வாழ்க்கை நல்லபடியாக அமையும். 


உழவர் திருநாள் 

உழவர் திருநாள் அன்று நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, அவர்களுடன் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கான இடங்களுக்கு சென்று, தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இதற்கு காரணம், பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழாகிவிடும் என்பது போல், வருடம் முழுவதும் உறவினர்களையும் – நண்பர்களையும் சந்திக்காமல் இருந்தால், அவர்களின் நினைவுகள் காலத்தால் மறக்கப்படும். அப்படி அவர்களை மறக்காமல் இருக்கவே இதுபோல பண்டிகை நாட்கள் வருகிறது. இப்படிபட்ட பண்டிகை திருநாட்களில் அவர்களுடன் கொண்டாடி, நம்முடைய மகிழ்ச்சிகளையும் பேசி மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சியான நாள் வருடம் முழுவதும் பசுமையாக நிலைத்திருக்கும்.  பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்ப, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி, பூஜை செய்து எல்லா யோகங்களையும் பெற்று, சிறப்பு பெறுவோம்.

வியாழன், 19 ஜனவரி, 2017

சப்த கன்னியர்

சப்த கன்னியர்

  ஸ்ரீ வராஹி மாலை என்று - தமிழில் 32 பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் , நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம் சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

1.ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.


தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:காயத்ரி மந்திரம்ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹேதேவர்ணாயை தீமஹிதன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

2.மகேஸ்வரி   

அம்பிகையின்தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


தியான சுலோகம்சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.


மந்திரம்ஓம் மாம் மாஹேச்வர்யை நம:ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹேசூல ஹஸ்தாயை தீமஹி  

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

3.கெளமாரி  

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரைபந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினிபந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயாமயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெளகட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!


மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:காயத்ரி மந்திரம்ஓம் சிகி வாஹனாயை வித்மஹேசக்தி ஹஸ்தாயை தீமஹிதன்னோ: கெளமாரி ப்ரசோதயாத் 

 வைஷ்ணவி 

 அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


தியான சுலோகம்சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.


மந்திரம்ஓம் வை வைஷ்ணவ்யை நம:ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்ஓம் ச்யாம வர்ணாய வித்மஹேசக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

5.வாராஹி 
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களில்  காணப்படும்.

தியான சுலோகம்முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


மந்திரம்ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:


காயத்ரி மந்திரம்ஓம் ச்யாமளாயை வித்மஹேஹல ஹஸ்தாயை தீமஹிதன்னோ வாராஹி ப்ரசோதயாத்  

6.இந்திராணி 


 இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.

தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரைஇந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்
7.சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரைமுண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹாசூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதேநிஷண்ணசுவா!ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவாசாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:காயத்ரி மந்திரம்ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹேசூல ஹஸ்தாயை தீமஹிதன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

புதன், 18 ஜனவரி, 2017

பூஜை செய்யும் போதுமணி அடிப்பது ஏன் ?


 பூஜை செய்யும் போதுமணி அடிப்பது ஏன் ?

மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று ..அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன !  

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடிவிடும். துர்தேவதை, போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.   

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்ஒருவேளை வந்து விடலாம். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்!   தினமும் மணி அடிப்பதால் அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். 

மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர்.

இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர்.அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

 பூஜையின்போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.   இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன !   

இந்த பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர் ! மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி !   அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன் ! நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் ! 
எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம் 

காண்டா மணி பூஜைக்கான மந்திரம்: ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் காண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ் வானலாஞ்ச நம: 

உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்... 

செவ்வாய், 17 ஜனவரி, 2017

மந்திர ஜெபம் செய்யும்போது பார்க்க வேண்டியவை

மந்திர ஜெபம் செய்யும்போது பார்க்க வேண்டியவை 

 உருத்திராட்சம்

உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்திஇருமுகம் - லட்சுமி கடாட்சம்மும்முகம் -சகல சித்திநான்கு முகம்- அறம், வீடு நல்கும்ஐந்து - பாவத்தை போக்கும்


உருத்திராட்சத்தின் அளவு


இலந்தையளவு - சுக சௌபக்கியம்நெல்லியளவு - துக்க நிவாரணம்கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாதுதானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்


உருத்திராடசத்துடன்


பொன்மணி சேர்த்தால் செல்வம்முத்து சேர்த்தால்  புகழ்ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்திபவளம்  - வசியகாமிவெள்ளி - வாகனகாமி


மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்

சிவன் - உருத்திராட்சம்

விஷ்ணு- முத்து

ஸ்படிகம் - சூரியன்

பவளம் - சண்டிகை

தாமிரமணி- ஐய்யப்பன்


மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,

  • விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
  • பவளம் - ஆயிரம் மடங்கு
  • ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
  • முத்துமணி -இலட்சம் மடங்கு
  • தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
  • பொன்மணி - கோடி மடங்கு
  • உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.


ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை

30 மணி - ஐஸ்வர்யம்27 மணி- சக்தி25 மணி - முக்தி15 மணி - மந்திர சித்தி


கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்டபெருவிரல் - முக்திசுட்டு விரல் - சத்துரு நாசம்மத்திம விரல் - பொருள்மோதிர விரல் - சாந்திகனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.


நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான பலன் மற்றவர்களுக்காக பிராத்திக்க  வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

நவகிரகங்கள்

நவகிரகங்கள்





நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது. கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்? அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது. இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது. நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.


நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்



நாள்: ஞாயிறு கிரகம்: சூரியன்

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.

நாள்: திங்கள் கிரகம்: சந்திரன்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: செவ்வாய் நாள்: செவ்வாய் 

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
ராசிகற்கள்:பவழம்

பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்


கிரகம்: ராகு --- செவ்வாய் கிழமை
 

ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல் 
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்




கிரகம்: புதன் நாள்: புதன்

ஸ்தலம் : திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்:பித்தளை
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்


கிரகம்: குரு நாள்: வியாழன்

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

கிரகம்: சுக்கிரன் நாள்: வெள்ளிh

ஸ்தலம்: ://image.wikifoundry.com/image/1/PL8xMSeKIn17T73t5wVYig27272 
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி 
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

கிரகம்: சனி நாள்: சனி

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு

ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்


கிரகம்: கேது -சனிக்கிழமை 

ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்

ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.