வெள்ளி, 11 மார்ச், 2016

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு


என் அன்பு நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள் .காரடையான் நோன்பு திங்கள் கிழமை வரயிருப்பதால் அதைப் பற்றி எழுதினால்,பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


மாசி மாதமும் ,பங்குனியும் சந்திக்கும் வேளை அதாவது மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகை காரடையான் நோம்பு!


என்றென்றும் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்று பெண்கள்  காமாட்சி அம்மனிடம் பிராத்தனை செய்து, விரதம் இருக்கும் விழாதான் காரடையான் நோம்பு ஆகும்.இந்த விரதத்தை சத்தியவானின் மனைவி சாவித்திரி  நெல்லைக்  குத்தி அடை  செய்து அன்னைக்கு படைத்து வழிபட்டு விரதம் இருந்தாள் .

சாவித்திரி கதை

 அஸ்வபதி என்னும் அரசனின் மகள் சாவித்திரி.அழகிலும் ,பண்பிலும்  சிறந்து விளங்கிய அவளுக்கு சாவித்திரி என பெயர் வைத்தனர் .அவள் வளர்ந்து ,பருவம் எய்தினாள் .நாடு இழந்து தவிக்கும் தும்சசேனனின் மகனான சத்தியவானைத்தான் மணம் முடிப்பேன் என்று கூறினாள் சாவித்திரி .நாரதர், அவனின் ஆயுள் ஒரு வருடம்தான் என்று கூறியும்,சாவித்திரி ஒரு நாள் வாழ்ந்தால்கூட அவனோடு தான் தன்  வாழ்க்கை என்றுரைத்து, சத்தியவானையே 1 திருமணம் செய்து கொண்டாள் .தன் கணவனிடம் ,கண் தெரியாத மாமனார் ,மாமியாரிடம் அன்புடனும் ,பரிவுடனும் நடந்து கொண்டாள் .

  தன்  கணவனின் உயிரை காக்க வேண்டி, கடும் விரதம்  மேற்கொண்டு ,அன்னை காமாட்சியை  பூஜித்து வந்தாள் .அவள் இருந்த விரதம் தான் காரடையான் விரதம் ஆகும்.காமாட்சியும் அருள் புரிந்தாள் .


சத்தியவான் ஒரு நாள் காட்டில் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும் போது மயக்கமுற்று ,சாவித்திரி மடியில் படுக்க ,எமன் உயிர் பறிக்கும் பாசக் கயிற்றுடன் வருவதையறிந்து மருண்டாள் .எமன் தன்  வேலையான  சத்தியவானின் உயிரை பாசக் கயிறு கொண்டு  பறித்தார்.சாவித்திரி எமனை விடுவதாக இல்லை .அவளும் எமனை பின் தொடர்ந்தாள்.

அவள்  "தன்  கணவருடன்  வாழ விரும்புவதாகவும் , என்  கணவரை திருப்பி கொடுங்கள்" என்று எமனிடம் கேட்டாள் ."பெண்ணே !இறந்தவர்கள்  ஒரு நாளும் உயிர் வாழ முடியாது" என்று கூறி ,உனக்கு வேண்டிய வரத்தை கேள் !தருகிறேன் என்றார் எமன்.


சாவித்திரி தன்  மாமனார் ,மாமியாருக்கு கண் பார்வை அடைய வேண்டும் ,இழந்த நாட்டினை மீண்டும் பெற வேண்டும் அத்துடன், எனக்கு என்  கணவர் மூலமாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டாள் சாவித்திரி.அவளை திருப்பி அனுப்பி  விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததால் அனைத்தும் தருவதாக எமனும் வாக்கு கொடுத்தார் .

சாவித்திரி பதிபக்தி  மிக்கவளாகவும்,அவளுடைய சாதுரீய பேச்சு திறத்தை எண்ணியும்  ,எமன் அவள் கணவனுக்கு உயிரை கொடுத்து நீண்ட நாள் வாழ வாழ்த்தி விட்டு சென்றான் .
 

காமாட்சி அம்மன்,நதிகரையில் ஆற்று  மணலில் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது .மணலில் கட்டிய லிங்கம் கரையாமல் ,லிங்கத்திற்கு ஆபத்து ஏதும் வராமல் காக்கும் பொருட்டு  தேவி காரடையான் நோன்பு இருந்தாள் .சிவபெருமான் பிரத்யட்சமாகி ,காமாட்ஷியை மணந்து கொண்டதாக கதை சொல்லப்படுகிறது.



காமாட்ஷி இந்த விரத்தை இருந்ததால் இந்நாள் அன்று காமாட்சியை பூஜித்து வழிபட வேண்டும்.வெல்ல அடையும் ,வெண்ணையும் நெய்வேதியமாக வைத்து ,காமாட்ஷி சுலோகம் ,மீனாக்ஷி மந்திரம் சொல்ல வேண்டும்.மஞ்சள் சரடை பூஜையில் வைத்து எடுத்து ,"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என்  கணவர் என்னைவிட்டு பிரியாமல் இருக்க அருள வேண்டும்" என்று சொல்லி கையில் கட்டி கொள்ள  வேண்டும் .



நன்றி .வணக்கம்

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக