திங்கள், 2 ஏப்ரல், 2018

சூரியன் தோஷம் விலக:

       surya bhagavan temple க்கான பட முடிவு
சூரியதோஷம் விலக 

சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.


சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி? 

  1. சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். 
  2. தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். 
  3. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். 
  4. பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். 
  5. சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். 
  6. முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு 
  7. சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. 

தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

சூரிய துதி

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி

காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

நவகிரகங்களை வழிபடும் முறையும்... அதன் பலன்களும்...!


நவகிரகங்களை வழிபடும் முறையும்... அதன் பலன்களும்...!



கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல  ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா... நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்...
 அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
நவகிரக 

ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை
 அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம்.
 அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் 
சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது. 
குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற 
வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.  
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும்
 இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் 
என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு 
சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 
இது தவறான கருத்து.
எனவே, இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் 
சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.  அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும்  கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.
நவ கிரகங்கள் 

கிரக வழிபாடும் பலன்களும்... 
சூரியனை வழிபட்டால்  வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். 
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.   
செவ்வாயை  (அங்காரன்)  வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். 
புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் 
உண்டாகும்.
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும். 
ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். 
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக 
ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த  கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும். 
பலன் தரும் பாடல்
திருஞானசம்பந்தரின் 'கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே. 
இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, 
மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

நவகிரகங்களுக்கு சாதாரணமாக 9 கிரகங்களுக்கு ஒவ்வொரு முறை. ஆனால் ஒரு முறை சுற்றினாலே போதும். 

"ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி ஒரு முறை வலம் வந்தாலே போதும். 
"ஓம் நவகிரக பரபிரம்மனே நமக" என்று கூட சொல்லலாம். இதையெல்லாம் சொல்லிக்கொண்டு ஒரு முறை வந்தாலே போதும். 9 முறை சுற்றுவதிலும் ஒன்றும் தவறு கிடையாது.

 ஆனால் ஒரு முறையாவது சுற்றிவிடுவது நல்லது.

 அடுத்து எந்தக் கோளுடைய பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அந்தக் 
கோளுக்கான, அந்த கிரகத்திற்கான மந்திரங்கள், அதனிடம் விளக்கேற்றுதல் இதெல்லாம்
 மிகவும் நல்லது. அதையும் செய்யலாம். 
ஏனென்றால் ஒவ்வொரு கிரகத்தினுடைய தாக்கமும் பூமியில் இருந்துகொண்டே இருக்கிறது. பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தின் மேலும், ஒவ்வொரு அணுவையும் அது தாக்குகிறது. 









ஏழுகடல் அழைத்த படலம்

Related imageஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. 
வீடுபேற்றினை அடைய விரும்பிய காஞ்சன மாலைக்காக சுந்தர பாண்டியனார் மதுரையில் ஏழுகடல்களையும் கிணற்றில் எழுந்தருளிய திருவிளையாடலை பற்றி இப்படலம்
விளக்குகிறது.
ஏழுகடல் அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக் காண்டத்தில் ஒன்பதாவது படலமாகும். இனி இப்படலத்தைப் பற்றிப் பார்ப்போம்.

கௌதம முனிவரின் வருகை

சுந்தரபாண்டியனார் மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார்.
பின் அவர் மீனாட்சியின் தாயான காஞ்சன மாலை தங்கி இருந்த அரண்மனைக்கு வருகை தந்தார். காஞ்சன மாலையும் கௌதம முனிவரை வரவேற்று உபசரித்து அவரை தகுந்த ஆசனத்தில் அமர்த்தினாள்.
காஞ்சன மாலை கௌதம முனிவரிடம் “தவத்தில் சிறந்தவரே, என் மகளான தடாதகைக்கு சிறந்த முறையில் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
ஆதலால் பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடையக் கூடிய வழியினை எனக்கு கூறுங்கள்” என்று கேட்டாள்.
அதற்கு கௌதம முனிவரும் “காஞ்சன மாலையே நீ செய்த தவத்தின் காரணமாக உலகத்தின் அம்மையான மீனாட்சியை மகளாகவும், இறைவனான சிவபெருமானை மருமகனாகவும் பெற்று உள்ளாய்.Image result for ஏழுகடல் அழைத்த படலம்
உனக்கு வழிகாட்டும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் வீடுபேற்றினை அடையக் கூடிய வழியை நீ கேட்டதால் உனக்கு நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மானதம், வாசிகம், காயகம் என மூன்று வழிகளில் வீடுபேற்றினை அடையலாம்.  தருமமும், தானமும் செய்தல், பிறஉயிர்களுக்கு இரங்கல், பொறுமை காத்தல், உண்மை கூறல், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல், இறைவனை தியானம் செய்தல் ஆகியவைகளான மானதம் என்னும் முதல்வழி ஆகும்.
நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை கூறுதல், இறைவனின் துதிப்பாடல்களைப் பாடுதல், வேதநூல்களைப் படித்தல், யாகங்கள் செய்தல், திருக்கோவிலை வலம் வருதல் ஆகியவைகளான வாசிகம் என்னும் இரண்டாவதுவழி ஆகும்.
சிவபெருமானின் ஆலயங்களுக்கு சென்று வணங்குதல், ஆலயத்திருப்பணி செய்தல், தலயாத்திரை செல்லல், தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் மூன்றாவது வகையாகும். தீர்த்தங்களில் நீராடுவது என்பதில் கடலில் நீராடுவது மிகவும் நல்லது” என்று கூறிச் சென்றார்.

மீனாட்சியம்மை இறைவனை வேண்டுதல்

கௌதம முனிவரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட காஞ்சன மாலை கடலில் நீராட விருப்பம் கொண்டாள். ஆதலால் தன்னுடைய விருப்பத்தை தன் மகளான மீனாட்சியிடம் கூறினாள்.
மீனாட்சியும் சுந்தரபாண்டியனாரிடம் சென்று “கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சன மாலை கடலில் சென்று நீராட விரும்புகிறாள். ஆனால் மதுரையிலோ கடல் இல்லை. இதற்கு தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தாள்.
இறைவனார் ஏழுகடல்களையும் அழைத்தல்
மீனாட்சியின் கோரிக்கையை கேட்ட சுந்தரபாண்டியனார் “மீனாட்சி நீ கவலை கொள்ள வேண்டாம். உன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன்” என்று கூறி ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார்.
ஏழுகடல்களும் இறைவனின் ஆணைப்படி ஆர்ப்பாரித்து மதுரையின் எழுந்தருளின. ஏழுகடல்களும் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் கடலின் பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர்.
கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல் கேட்ட மதுரை நகர மக்கள் நடுங்கி சுந்தரபாண்டியனாரிடம் சென்று அச்செய்தியைத் தெரிவித்தனர்.
சுந்தர பாண்டியனாரும் ஏழுகடல்களையும் மதுரையில் மீனாட்சி கோவின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார்.
ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளின. பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை. மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சிஅம்மன் கோவில் கிழக்குகோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்தை கடந்தால் வரும்தெருவானது எழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இப்படலத்தின் கருத்து

கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்பதே ஏழுகடல் அழைத்த படலத்தின் கருத்தாகும்.

நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய கடவுள், செய்ய வேண்டிய தானம்‘---அட்சய திருதி

தொடர்புடைய படம்

நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய கடவுள்,
செய்ய வேண்டிய தானம்
கீழ்க்கண்ட நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் மகாலட்சுமியோடு அந்தந்த நட்சத்திரத்துக்குரிய கடவுளையும் வணங்கி பூஜை செய்ய நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நல்ல புகழ், நன் மக்கட்பேறு ஆகிய அனைத்தும் கிடைக்கும். அட்சய திருதியை நாளில் செய்வது கூடுதல் பலன் தரும்.
அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்.
பரணி, பூரம், பூராடம்: ஸ்ரீரங்கநாதர்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: ஆஞ்சனேயர்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்: சிவன்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை.
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி: ராகவேந்திரர்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்.
அட்சய திருதியை நாளில் ஏழை, எளியவர்களுக்கு தன்னால் இயன்ற அளவு உதவுதல் வேண்டும். அதை முறையாக எந்த நட்சத்திரத்துக்கு உரியவர் எந்த வகை அன்னத்தை தானமாக அளிக்க வேண்டும்; யாருக்கு உதவினால் நமது தீவினை அகலும் என்று தெரிந்து செய்தால் பலன் பல மடங்கு கூடும். varalakshmi vratham recipe க்கான பட முடிவு

அஸ்வினி --கதம்ப சாதம் தானம்; ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி --நெய் சாதம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கார்த்திகை & சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி-- பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிடம் --சாம்பார் சாதம் தானம்; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.
திருவாதிரை -- தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்-- தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம் --மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்-- வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.
மகம்-- கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம் --நெய் சாதம் தானம்; மனநல பாதிப்புள்ளவர்களுக்கு உதவலாம்.
உத்திரம் -- சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
ஹஸ்தம் -- பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவலாம்.
சித்திரை -- துவரம்பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி -- உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம் --தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம் --மிளகு கலந்த சாதம் தானம், வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை -- வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயறு கொடுக்கலாம்.
மூலம் --கதம்ப சாதம் தானம் , ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்-- நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்--சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்-- சர்க்கரை கலந்த பால் தானம், வறுமை யிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்-- சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்-- உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி-- தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி --மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி--வெண் பொங்கல் பிரசாதம் தானம்; பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் அட்சய திருதியை வழிபாடு!

akshaya tritiya க்கான பட முடிவுஅள்ள அள்ள குறையாத செல்வம் தரும் அட்சய திருதியை வழிபாடு!
வடமொழியில் ‘அட்சய’ என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாத, வற்றாத என்று பொருள்.அட்சய திருதியை தினத்தன்று யுகங்கள் தோறும் பல சிறப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை செல்வத் திருமகளாம் மகாலட்சுமியின் அருளால் செல்வம், அன்னம், கல்வி முதலியவை குறைவில்லாது வளரும் என்பதை வலியுறுத்துகின்றன. 
முதலில் திருதியை என்றால் என்ன என்று பார்ப்போம். முழு நிலவு அல்லது அமாவாசை முடிந்த மூன்றாம் நாள், ‘திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை மூன்றாம்பிறையாக சிறப்பிக்கப்படுகிறது. சிவன் தன் நெற்றியில் அணிந்திருக்கும் பெருமை பெற்றது இப்பிறை.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் பிறை நாளில் வருவதுதான் அட்சய திருதியை. இந்த நன்னாளில் எக்காரியத்தைத் துவக்கினாலும் அது குறைவின்றி வளரும் என்பது நம்பிக்கை. 
அட்சய பாத்திரம் உருவான விதம்:
பல யுகங்களுக்கு முன்னால் காசியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவும், பருக நீரும் இல்லாமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர். அதைக் கண்டு சகிக்க முடியாத மலைமகள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். தனக்கென்று ஒரு மாளிகையை ஏற்படுத்திக் கொண்டு பரிவார தேவதைகளின் உதவியோடு மக்களின் பசிப்பிணி தீர்த்தாள். யார் எப்போது வந்தாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் உணவு வழங்கிக் கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அன்னையும் அவளது பரிவாரங்களும் களைத்துப்போய் விட்டனர். அவர்களுக்கு உதவவும், அன்னபூரணியின் பெருமையை உலகறியச் செய்யவும் திருவுளம் கொண்டார் எம்பெருமான் ஈசன். பிட்சாடனர் வேடம் பூண்டு மனைவியின் மாளிகைக்குப் போய் தன் பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். அன்னையும் நிறைய அன்னம், காய்கறிகள், பழங்கள் என உணவிட்டுக்கொண்டே இருக்க அவரும் அனைத்தையும் உண்டு கொண்டே இருந்தார்.
மாளிகையில் இருந்த அரிசி, பருப்பு, காய்கறி முதலிய பொருட்கள் அனைத்தும் தீரும் நிலை. 
என்ன செய்வாள் அன்னை? உடனே காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் சேவை சாதிக்கும் தன் அண்ணனாம் திருமாலை நினைத்து வழி கேட்டாள். தங்கையின் துயர் தீர்க்க தயாபரன் தானும் ஒரு பிச்சாண்டி போல உருக்கொண்டு மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்.வந்தவரை வரவேற்று அன்னம் படைத்தாள் அன்னபூரணி. அவற்றை அந்த பாத்திரத்தில் இட்ட மகாவிஷ்ணு, ‘அட்சய’ என்ற வார்த்தையைக் கூறி அப்பாத்திரத்தைத் தொட்டார். அன்று முதல் அதிலிருந்து குறைவின்றி பலவகையான உணவுப் பொருட்கள் தோன்றின. முதல் முதல் அட்சய பாத்திரம் தோன்றிய நாள் அட்சய திருதியை நன்னாள்தான். பிட்சாடனராக வந்த சிவனின் பசியையும் தீர்த்தது அப்பாத்திரம். உடனே தன் சுய உருவத்தில் தோன்றி, அன்னபூரணியின் பணி தடையின்றி நடக்கவும், அவள் புகழ் திக்கெட்டும் பரவவும் வரம் அளித்தார் ஈசன்.
மகாவிஷ்ணுவும் அப்பாத்திரத்தை தங்கையின் கையில் கொடுத்து, ‘‘உமா! இது தான் அட்சய பாத்திரம். இதிலிருந்து வரும் பொருட்கள் என்றுமே குறையாது. இதைக் கொண்டு நீ உன் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவாயாக! இதன் தேவை தீர்ந்த பின் இப்பாத்திரம் தானே வைகுண்டம் வந்து சேர்ந்துவிடும்’’ என்று கூறி மறைந்தார். அதன் பிறகு பஞ்சம் தீரும் வரை அப்பாத்திரத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணி மக்களின் துயர் தீர்த்தாள். பஞ்சம் தீர்ந்து அன்னபூரணி விசாலாட்சியாக மாறியதும் அட்சயப் பாத்திரம் மகாலட்சுமியைச் சென்று சேர்ந்து விட்டது.
அட்சய திருதியை தினத்தின் சிறப்புகள்:
பல சிறப்புகளும் புராண இதிகாச நிகழ்வுகள் நடந்ததும் இந்த அட்சய திருதியை நாளில்தான். பாண்டவர்கள் வனவாசம் செல்லுமுன் சூரியனை நோக்கி தவமியற்றி அட்சய பாத்திரம் பெற்ற நாள் இதுவே.
கௌரவர் சபையில் பாஞ்சாலி மானபங்கப் படுத்தப்பட இருந்தபோது அவள் ‘கோவிந்தம் புண்டரீகாட்சம் ரட்சமாம் சரணாகதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி ‘அபயம் அபயம்’ என்று அழுதாள். அப்போது கண்ணபிரான் எங்கோ துவாரகையில் இருந்தார். ஆனால் திரௌபதியின் அவலக்குரல் அவரை எட்டியது. உடனே அபயக்கரத்தை நீட்டி ‘அட்சய’ என்று மூன்று முறை கூறினார். பாஞ்சாலியின் சேலை குறைவின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. அவள் மானம் காக்கப்பட்டதும் இந்த அட்சய திருதியை நாளில்தான்.
வனவாசத்தின் போது துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகாமல் கிருஷ்ணர் பாண்டவர்களை காத்ததும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான். மேலும் வியாச முனிவர் மகாகாவியமான மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்ல யானை முகத்தோன் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான்.
Related image
தசாவதாரங்களில் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது, திருமாலின் மார்பில் லட்சுமி தேவி நீங்கா இடம் பிடித்தது, குபேரன் மகாலட்சுமியை வணங்கி சங்க நிதி, பதும நிதிகளைப் பெற்றது, குசேலர் அவல் கொடுத்து குறைவற்ற செல்வத்தைக் கண்ணனிடமிருந்து பெற்றது, ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழையைப் பெய்ய வைத்தது என பல முக்கிய நிகழ்ச்சிகள் இந்நாளில் நடந்துள்ளன.
இந்த நன்னாள் தானத் திருநாள் என்றே சிறப்பிக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு பலன் கொடுக்கும். அதோடு அன்று துவங்கும் எந்தக்காரியமும் மிக மிக சிறப்பாக குறைவின்றி வளரும். வியாபாரம் துவங்குபவர்கள், புத்தகம் வெளியிடுபவர்கள் அட்சய திருதியை அன்று துவக்கினால் தொழில் சிறப்பாக வளரும்.
அட்சய திருதியை பூஜை: 
இந்த தினம் மகாலட்சுமிக்கு உரியது. அன்று அன்னை திருமகள் எல்லா மங்கலப் பொருட்களிலும் வாசம் செய்வதாக ஐதிகம். அன்று தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. இயலாதவர்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் இவற்றையும் வாங்கலாம். ‘மகாலட்சுமி தந்திரம்’ என்னும் நூலில் அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. மகாலட்சுமியின் பிறப்பிடம் கடல். உப்பு கடலில்தான் விளைகிறது. செல்வத்தை அருள்பவனாம் சுக்கிரனுக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி. அவருக்கு உரிய நிறம் வெண்மை. அதனால் கடலில் விளைந்த வெண்மை நிறமான உப்பை வாங்குவது மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டிருக்கிறது.Related image
இந்த தினத்தில் மகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் பூஜை செய்தால் நம் இல்லத்தில் செல்வத்துக்கு குறைவு என்பதே வராது. அட்சய திருதியை அன்றுதான் குபேரனும், அவன் மனைவியும் திருமகளைப் பூஜித்து வற்றாத செல்வத்தைப் பெற்றனர். அதனால் இப்பூஜையை தம்பதிகளாகத்தான் செய்ய வேண்டும். இப்பூஜையை வியாபாரத் தலத்திலும் செய்யலாம். 
முன்னாளில் மகோதயம் என்ற ஊரில் ஊணன் என்ற வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் என்ன தான் நேர்மையாக வியாபாரம் செய்தும் அவனால் குடும்பத்துக்குத் தேவையான பொருள் ஈட்ட முடியவில்லை. அதனால் வீட்டில் சதா பிரச்சினை, சண்டை, சச்சரவு, நிம்மதி இல்லாத நிலை. அப்போதுதான் அவன் அட்சய திருதியை நாளின் பெருமையைக் கேள்விப்பட்டு வருடாவருடம் திருமகளையும், குபேரனையும் அந்நாளில் பூஜை செய்ய முடிவு செய்து கொண்டான். அதே போன்று பக்தி சிரத்தையுடன் நெய்விளக்கேற்றி, திருமகளை தியானித்து பூஜை செய்தான்.
முதல் வருடத்திலேயே அவன் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது. ஆனால் விடாமல் ஒவ்வொரு வருடமும் பூஜை செய்யச் செய்ய அவன் நிலை மிக உயர்ந்தது. நகரின் மிகச் சில செல்வந்தர்களுள் ஒருவனாக அவன் ஆனான். அது மட்டுமல்ல, மறு பிறவியில் குசாணம் என்ற நாட்டுக்கு அரசனாகப் பிறந்து செல்வச் செழிப்பில் வாழ்ந்தான் என்று மகாலட்சுமி தந்திரம் என்னும் புராண நூல் குறிப்பிடுகிறது. 
 பூஜையைச் செய்வது எப்படி?
காலையில் எழுந்து நீராடி பூஜையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு பூவும், குங்குமமுமிட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை முதலிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பானது. தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தயார் செய்து கொள்ள வேண்டும். மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலியவைகளைப் படித்து அர்ச்சனை செய்ய வேண்டும். தீப தூபம் காட்டி சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வீட்டாரும், பணியாளர்களும் உண்டு, தயிர் சாதத்தை முதிய யாசகர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிலும் வியாபாரத் தலத்திலும் திருமகள் நித்திய வாசம் செய்வாள். 

 தானத்துக்கும் பூஜைக்கும் உரிய நாளான அட்சய திருதியை நாளன்று நாமும் லட்சுமி குபேர பூஜை செய்து, வீட்டில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுவோம். அதோடு வறியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி, நம் மனதில் என்றும் நீங்காத அருட் செல்வத்தையும் பெறுவோம். அட்சய திருதியை அன்று கீழ்க்காணும் மகாலட்சுமி மந்திரத்தைக் கூறி தியானித்தால் எல்லா வளங்களும் கிட்டும்.

யா தேவி சர்வ பூதேஷு லட்சுமி ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ!.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

நவாவரண பூஜை

நவாவரண பூஜைகஞ்சி காமாட்சி க்கான பட முடிவு


காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.sri chakra images க்கான பட முடிவு

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.தொடர்புடைய படம்
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான்.

அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Related image


குபேர சம்பத்துக்கள் மட்டுமின்றி... தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. பொதுவாக, மகாலட்சுமி என்று சொன்னதுமே  அவள் உலகியல் செல்வங்களை மட்டும் அருளும் தேவி என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். காலம் காலமாக இதை நம்பியே மகாலட்சுமியை வழிபடுகிறோம். வசதி படைத்து வாழ்கின்ற செல்வந்தர்களை லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறோம்.
அதனால்தான் மகாலட்சுமியை பூஜிக்கும்போது காசு, பணம், பொன் மற்றும் வெள்ளியை வைத்து வழிபடுகிறோம். அப்படிச் செய்தால் செல்வம் வளரும் என்றும் ஒரு நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இது சரிதானா? மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா? இதைத் தெரிந்துகொள்ள மகாலட்சுமி அவதாரம் செய்த சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

தேவி பாகவதம் 9-வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இட பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதாதேவி.
ரமா என்றாள் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி மகாலட்சுமி என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள்.

பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமியற்றினார். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத்தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள் என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார். பாற்கடலைக் கடைவது அத்தனை எளிதா? அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள் என்று உறுதி கூறினார்.

பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய வரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, என்னை அடைய வேண்டும்  என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோறற்த்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன் என்று கூறினாள்.
அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை

நிலைத்திருக்கிறதோ, அங்கேல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள் என்பது பிரம்மதேவனின் வாக்கு. மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும். கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள் என்று பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.

மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். 

திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்கு தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கு உலகியல் செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.


அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்துகொள்வோமா?
Image result for ashta lakshmi photos

ஆதி லட்சுமி: இவளுக்கு ரமணா என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள்.

தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது தனம் எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

சந்தான லட்சுமி: நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள்  இவள்.

கஜ லட்சுமி: லட்சுமிக்கு க்ஷீராப்தி தனயை என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மன அமைதியையும் தருபவள் இவள்.

வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம்.

விஜய  லட்சுமி: கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி.

தைரிய லட்சுமி: கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி.

அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்ரஹம் மிகவும் முக்கியமானது என்பதை விளக்க ஒரு கதை உண்டு.
பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துக்கொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்ய தான்ய வட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியயதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்! என்று கதறினான்.
அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் பணக்காரன். தர்மத்தைக் கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிபவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!