வியாழன், 24 ஆகஸ்ட், 2017

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்

என் இணையத்தளத்தை காண வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும்  என் அன்பு வணக்கங்கள்.வரலக்ஷ்மி விரதத்தை சிறப்பாக கொண்டாடிய சந்தோஷத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்.


இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு எந்த பூவினால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு தந்துள்ளேன்.படித்து பயன் பெற முழுமுதல் கடவுளை வேண்டுகிறேன்.

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் 
1. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற 

2. 
வில்வம் - இன்பம் அடைய 

3. 
அரசு - உயர் பதவி கௌரவம் அடைய 

4. 
மாவிலை - அறம், நீதி காக்க 

5. 
துளசி - கூர்மையான அறிவினை பெற 

6. 
மாதுளை - பெரும் புகழ் அடைய 

7. 
அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

8. 
நாயுருவி - வசீகரம் உண்டாக 

9. 
கண்டங்கத்திரி - வீரம் உண்டாக 

10. 
தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட 

11. 
மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற 
 

12. 
ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற 

13. 
நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக 

14. 
இலந்தை - கல்வி ஞானம் பெற 

15. 
ஊமத்தை - பெருந்தன்மை உயர 

16. 
தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க 

18. 
எருக்கு - வம்ச விருத்தி அடைய 

19. 
மருதம் - குழந்தை பேறு அடைய 

20. 
அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட 

21. 
வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய 
 

விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம்வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.


விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்றநாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.

இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.சந்தோஷமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.

நீங்களும் சந்தோஷமாக இருங்கள்.உங்களை குடும்பத்தினரையும் சந்தோஷபடுத்துங்கள். 







புதன், 23 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி பூஜை

பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா?
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம். அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.


எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.
மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.
இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியபின், நம்  வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும். அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும். பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பை யில் காசு வைக்கவேண்டும்.
பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும். பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும். பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.
இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும். நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார்முன் வைக்கவேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும். பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம். வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர், கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம். சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.
எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.
முதலில்,
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்
யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.
அதன்பின்,
“ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத
சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா’
என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம். குழந்தைகளையும் சொல்லச்செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும். அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவுசெய்யவேண்டும்.
பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்கவேண்டும். அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.
பிள்ளையாரை நீரில் விடும் நாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாக இருக்கக்கூடாது. இவ்வாண்டு வியாழனன்று பிள்ளையார் சதுர்த்தி வருவதால், 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள் செய்யலாம். அப்படி செய்ய எடுத்துச் செல்லும்போது தொப்பையிலுள்ள காசை எடுத்து பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.
“மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்யவேண்டும். எத்தனை நாள் பிள்ளையார் நம் வீட்டில் உள்ளாரோ, அத்தனை நாளும் விளக்கேற்றி மூன்று வேளையும் நிவேதனம் செய்யவேண்டும்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா?

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா?

★ கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுவது எலுமிச்சம்பழம். மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
★ இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).
★ இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீதுர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி, அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது. அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
★ அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

✤ எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், அந்த பழத்தில் தீபம் ஏற்றலாம். (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதி அளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில், அந்த பழத்தை ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து, அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து, இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்க வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

✤ பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீதுர்க்கையின் பாதங்களில் சார்த்தி, பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.

✤ இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள். எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது, எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வது எப்படி?

அன்புள்ள ஆன்மீக தோழிகளுக்கு என்னுடைய இனிய வணக்கங்கள்.எல்லோரும் எல்லா வளமும் பெற்று இருக்க நான் முதலில் பிராத்திக்கிறேன்.
என் இணைய பதிவை பார்க்க வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல. 

கிருஷ்ணஜெயந்தின்னு சொன்னதுமே எல்லோருடைய மனசுக்குள்ளேயும் குட்டிகிருஷ்ணனோட உருவம் எட்டிபார்க்கும்.குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.உங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தால் 
அந்த குழந்தையை கிருஷ்ணராக உருவகப்படுத்தி அவர்களுக்கு கிருஷ்ணர் போல் ஆடை,அணிகலன்கள் போட்டு அழகுப்பாருங்கள்.மனது சந்தோஷத்தில் அலைபாய்வதை நம்மால் உணரமுடியும்.கிருஷ்ணர் பொம்மை அல்லது படத்தை வைச்சு வணங்கறதும் சீடை, முறுக்கு மாதிரியான நிவேதனங்களை செய்யறதும் பொதுவா எல்லாருக்குமே தெரிஞ்சது தான். ஆனா, மற்ற விரதங்கள், நோன்புகளை மாதிரியே கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கும் விரதம் இருக்கலாம் என்கிறதும் அது விசேஷ பலன்களை தரும் என்பதும்   உங்களுக்கு தெரியுமா?


கிருஷ்ணஜெயந்தி தினத்தில்  முகுந்தனை நினைச்சு மூணேமுக்கால் நாழிகையாவது விரதம் இருந்தால் , மூன்று பிறவிகளில்  செய்த பாவம் அடியோட விலகும் என்கிறது  பாகவத புராணம். அதுமட்டுமல்லாமல் , கிருஷ்ணர் அவதரிச்சதும்தான். இனி அதர்மம் அழியும் தர்மம் ஜெயிக்கும் என்கிற  நம்பிக்கையில்  பதினாறு வகையான செல்வங்களும் வெளிவந்ததாம். அதனால இந்த விரதம் இருந்தால்  மழலை செல்வம் உள்ளிட்ட எல்லாமும் குறைவில்லாமல்  கிடைக்கும் என்பது ஐதீகம்.

எல்லா பாக்கியங்களையும் தரக்கூடிய கிருஷ்ணஜெயந்தி விரதம் இருக்கிறது  எப்படி?

ஆவணி மாதத்தில்  பௌர்ணமியை அடுத்து வரக்கூடிய அஷ்டமி தினம் தான் கிருஷ்ணரோட பிறந்தநாள் அதாவது கிருஷ்ண ஜெயந்தி, அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிட்டு, மாயக்கண்ணனை மனதார நினைச்சுட்டு நெற்றிக்கு இட்டுக்குங்க. அவரவர் வழக்கப்படி அல்லது விருப்பப்படியான கிருஷ்ணனர் பொம்மை, கிருஷ்ணர் படம் இப்படி எதை வைத்து பூஜிக்க போகிறீர்களோ அதை எடுத்து தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமம் பொட்டு வைச்சு, சிறிது பூச்சூட்டி பூஜையறையில ஒரு மனைபோட்டு அதுல இருத்தி வையுங்க.

கண்ணன் பிறந்தபோது கண் விழித்து இருந்தவங்க மூணே மூணுபேர் தான் விஷ்ணுபுராணம் சொல்லுது. பெற்றோரான வசுதேவர், தேவகி, இவர்களை தவிர விழிச்சிருந்த ஒரே ஒருத்தர், சந்திரன் மட்டுமே. அதனால கிருஷ்ண ஜெயந்தி பூஜையை மாலை நேரம் முடிஞ்சு இரவு தொடங்கி, நிலவு ஒளிரக்கூடிய நேரத்தில்தான்  செய்யணுகிறது  பூஜை விதி. மாலை ஆறுமணிக்கு மேல் உங்களுக்கு சௌகரியமான நேரத்துல பூஜையை செய்யலாம். பூஜையை நிறைவு செய்யறவரைக்கும் பால், மோர், பழரசம், பழங்கள் இந்த மாதிரியான ஆகாரத்தை கொஞ்சமாக  எடுத்துக்கறது நல்லது. இப்படி உபவாசமிருக்க முடியாதவங்க அரிசி சேர்க்காத ஆகாரம் கொஞ்சமா எடுத்துக்கலாம்.

மாலை நேரம் ஆரம்பம் ஆகுற சமயத்துலயே பால கிருஷ்ணரோட பாதச்சுவடுகளை, வாசலில் இருந்து பூஜை அறை வரை உள்நோக்கி வர்றமாதிரி அரிசி மாவால போட்டு வைச்சிடுங்க. இது உங்க வீட்டுக்கு கிருஷ்ணரை வரவேற்கற மாதிரியானது. பூஜை செய்யத் தயாரானதும் கண்ணனை இருந்தியிருக்கிற மணைக்கு முன்னால், வாழை இலை ஒண்ணைப் போட்டு அதுக்கு நடுவுல கொஞ்சம் அரிசியைப்  பரப்புங்க. ஒரு செம்பில் நீர் நிறைச்சு, அதுமேல மாவிலை செருகி, தேங்காய் வைச்சு கலசம் போல் அலங்கரியுங்க.
வாழை இலையோட வலதுபுறத்தில்  விளக்கு ஒன்றை ஏற்றிவையுங்க. கொஞ்சம் மஞ்சள் பொடியை எடுத்து  தண்ணீரில் குழைச்சு , விநாயகராப் பிடிச்சு வலது ஓரத்துல  வையுங்க. பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைச்சு, கொஞ்சம் பூப்போடுங்க. அதுக்கப்புறம், கலசத்துக்கும் கிருஷ்ணருக்கும் மாலை அல்லது பூச்சரம் சாத்துங்க.


தடை ஏதும் இல்லாமல்  பூஜை நிறைவேறவும், பலன் முழுமையாக கிடைக்கவும் பிள்ளையாரை வேண்டிக்கிட்டு பிடிச்சு வைச்ச பிள்ளையாருக்கு தூப, தீப, நைவேத்யம் (வெறும் பழம் மட்டுமாவது இருந்தாலும் போதும்) காட்டுங்க. பிறகு கொஞ்சம்  பூவும், துளசியும் எடுத்து, மாதவனே! எம்மனைக்கு மகிழ்வோடு எழுந்தருள்க! என்று வேண்டிக்கிட்டு, கலசம், கிருஷ்ணர் மேல கொஞ்சம்  கொஞ்சமாக  போடுங்க. இந்தமாதிரி செய்யறதுக்கு சமஸ்கிருதத்துல "ஆவாஹனம்'னு பேர். இதுக்கு, எழுந்தருள வேண்டுதல்னு அர்த்தம். அடுத்தது, அங்கபூஜை. அதாவது திருவடி முதல் திருமுடிவரை பூஜிக்கறது.

கிருஷ்ணரை மனசுல நினைச்சுகிட்டு, "பாலகிருஷ்ணா போற்றி, உன் பாதங்களைப் பணிகிறேன். தாமோதரா போற்றி, நின்தாளினை வணங்குகிறேன்; இதயக் கமலவாசா போற்றி, உந்தன் இடுப்பினை பூஜிக்கிறேன்; நெடுமாலே போற்றி, உமது நெற்றியை வணங்குகிறேன்; நீலவண்ணா போற்றி, நிந்தன் நீள் கழுத்தினை வணங்குகிறேன்; முகுந்தனே போற்றி, உம் திருமுகத்தினை வணங்குகிறேன்; அச்சுதா போற்றி, எந்தன் அகம் ஒன்றிப் பணிகின்றேன்' அப்படின்னு சொல்லிகிட்டே அர்ச்சனை மாதிரி கொஞ்சம் பூபோடுங்க.

அடுத்து, உங்களுக்கு தெரிஞ்ச கிருஷ்ணர் துதிகளைப் பாடுங்க. போற்றி துதிகள் தெரிஞ்ச  சொல்லுங்க. இந்த சமயத்தில்  , குழந்தை பாக்யத்துக்காக காத்திருக்கறவங்க, பூஜை செய்யற கிருஷ்ணர் படம் அல்லது பொம்மையை மடிமீது இருத்திக்கறது உண்டு. இப்படிச் செய்யறதால மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். கிருஷ்ணரை மடியில இருத்திக்கறவங்க, பூஜை முடிஞ்சதும் கொஞ்சம் பால் அல்லது பால்பாயசத்தை கிருஷ்ணருக்கு ஊட்டிவிடற மாதிரி பாவனை செய்துவிட்டு அந்தப் பிரசாதத்தை தம்பதியர் அருந்தணும்னு சொல்வாங்க.

துதிகளைச் சொல்லி முடிச்ச பிறகு தூப, தீப, நைவேத்யம் காட்டுங்க. (நிவேதனமா குழந்தைகளுக்கு பிடிச்ச சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், அதிரசம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். பழங்களில்  நாவல் பழம், விளாம்பழம் இதெல்லாம் இருக்கலாம். இவை எல்லாம் இல்லை என்றாலும்  ஒருதுளி வெண்ணெயும், ஒரு கைப்பிடி அவலும் இருந்தாலே போதும், கிருஷ்ணருக்கு ரொம்பவே பிடிக்கும் பின்னர் வெளியில வந்து நிலாவைப் பாருங்க. (நினைவுல வைச்சுக்குங்க. கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த சமயத்துல விழித்திருந்து தரிசனம் செஞ்ச மூணு பேர்ல சந்திரனும் ஒருவர். அப்படின்னா அவர் எவ்வளவு பெரிய பாக்கியம்  செய்திருக்கணும். அவரை நாம பார்க்கறது எத்தனை புண்ணியம்)

உள்ளே வநது கிருஷ்ணர் முன்னால நின்னு உங்களை நீஙகளே (தன்னைத்தானே) மூணு தடவை சுத்திக்கிட்டு, "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்'னு சொல்லிவிட்டு, கொஞ்சம் நீரை கிருஷ்ணருக்கு முன்னால விட்டுட்டு, நமஸ்காரம் பண்ணுங்க. பிறகு பூஜித்த கலசத்தை வடக்குப் பக்கமா கொஞ்சம் நகர்த்தி வையுங்க. இது பூஜையை நிறைவு செய்து கிருஷ்ணரை அவரோட இருப்பிடத்துக்கு வழி அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
நிவேதனம் செய்த பலகாரங்களை உங்க வீட்டுக் குட்டிக் கிருஷ்ணருக்கு  குடுங்க. அக்கம்பக்கத்து வீட்டுக் குட்டீஸ்களுடனும் பகிர்ந்து"குங்க. பிறகு, விரதம் இருந்தவங்க சிறிது பிரசாதங்களையும் எளிய உணவையும் உட்கொள்ளுங்க.

கிருஷ்ண ஜெயந்தி தின விரதம் அவ்வளவு தான். ஆனா, அதோட நிறைவா, மறுநாள் ஏழை சிறுவர், சிறுமியரோட கல்வி, உணவு, உடை இப்படி உங்களால்  இயன்ற உதவியைச் செய்யுங்க. அந்த மாயக் கிருஷ்ணன் நிச்சயம் உங்கள்  மனக்குறைகள் எல்லாவற்றையும் தீர்த்து வைச்சு, மகிழ்ச்சி நிறையச் செய்வான்.

வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தியை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி ,கிருஷ்ணனின் அருளை என்னென்றும் பெறுவோம்.
 உங்களுடன் எனக்கு தெரிந்த,அறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.
உங்களுக்கு தெரிந்தவற்றை பகிரவும்.
நன்றி வணக்கம்.
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ஆவணி அற்புதங்கள்


ஆவணி அற்புதங்கள்


ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன.
தமிழ் வ‌ருடத்தில் ஐந்தாவதாக வரும் மாதமானது தமிழ் சந்திர மாதத்தில் ஆவணி என்று அழைக்கப்படுகிறது.
ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது.
ஆவணியில் விநாயக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இளையான்குடி மாறநாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் ஆகியோர்களின் குருபூஜை விழாக்கள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி


விநாயகர்


முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்கள், வீடுகளில் உள்ள விநாயகருக்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை படைக்கப்படுகின்றன.
அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி உள்ளிட்டவை விநாயகருக்கு அணிவிக்கப்படுகின்றன.
விநாயகர் பொம்மைகள் செய்து விநாயக சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பொது இடத்தில் வைத்திருந்து வழிபாடு மேற்கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால் இவ்விழாவினை சமுதாயத் திருவிழா என்றே கூறலாம்.
 விநாயக சதுர்த்தி அன்று விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயக சதுர்த்தியில் இருந்து விரதத்தைத் தொடங்கி பின் வரும் மாதங்களிலும் சதுர்த்தி அன்று விரதத்தைத் தொடர்கின்றனர்.
இவ்விரதத்தை மேற்கொள்வதால் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

மகாசங்கடஹர சதுர்த்தி


பிள்ளையார்
பிள்ளையார்


ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹரசதுர்த்தி, மகாசங்கடகஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாட்டினை மேற்கொள்வோர் முதலில் மகாசங்கடஹர சதுர்த்தி நாளிலிருந்து ஆரம்பிக்கின்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின்போது பகல் முழுவதும் உண்ணாமல் மாலை வேளையில் விநாயகரை வழிபாடு செய்து சந்திர தரிசனம் செய்து உணவருந்தி விரத முறையானது பூர்த்தி செய்யப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின்போது விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சங்கடநாசன கணபதி என்ற வடிவம் வணங்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். சௌபாக்கிய வாழ்வு கிட்டும். வளர்பிறை சதுர்த்தி (நான்காம் பிறை) சந்திரனைப் பார்ப்பதால் ஏற்படும் தொல்லையானது தேய்பிறை சங்கடஹரசதுர்த்தி வழிபாட்டினை மேற்கொண்டால் சரியாகும்.

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி


குழந்தைப் பருவ இறைவனாக வழிபடப்படுவதில் முதலிடம் கிருஷ்ணனனுக்குத்தான். இந்த கிருஷ்ணனின் அவதார தினம் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் நிகழ்ந்தது.
இதனால் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியின்போது கிருஷ்ணனின் பால்ய பருவ குறும்புதனமான விளையாட்டுகள் மற்றும் சாகசங்கள் நினைவு கூறப்படுகின்றன.
கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய் இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், சீடை, தட்டை, தேன்குழல், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவை வழிபாட்டின்போது படைக்கப்படுகின்றன.
சிறு குழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் விரதமுறை பின்பற்றப்படுகிறது. இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகளின் அறிவுத்திறமை மேம்படும். நற்சிந்தனைகள் வளரும்.

ஓணம்


ஓணம்
ஓணம்


ஓணம் பண்டிகையானது கேரளா, தென்தமிழகம் மற்றும் மலையாள மக்கள் உள்ள இடங்களில் ஆவணி பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
அத்தப்பூ கோலமும், ஓணவிருந்தும் இப்பண்டிகைக்கான முக்கிய அடையாளங்கள் ஆகும். ஆவணி மாத அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இது கேரளத்து அறுவடைத்திருநாள், கேரளத்து தீபாவளி, கேரளத்து புத்தாண்டு கொண்டாட்டம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
இத்திருவிழா பற்றி மதுரைக்காஞ்சியிலும், தேவாரத்திலும் கூறப்பட்டுள்ளது. இப்பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது மகாபலிச்சக்கரவர்த்தியை வரவேற்க மக்கள் பலவண்ண பூக்களால் அத்தப்பூ கோலம் போடுகின்றனர்.
இப்பண்டிகையின்போது கசப்பு சுவையினைத் தவிர ஏனைய சுவைகளில் 64 வகையான உணவுப் பொருட்கள் தயார் செய்து ஓண விருந்தினை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மக்கள் உண்டு மகிழ்கின்றனர்.
கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகுப்போட்டிகள், மாறுவேடப்போட்டிகள், யானை அணிவகுப்புகள் ஆகியவை இவ்விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்படுகின்றன.

ஆவணி மூலம்


மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்


ஆவணி மூலத்திருவிழாவானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
சொக்கர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களின் நினைவாக 10 திருவிளையாடல்கள் இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது.
ஆவணி மூலத்திருவிழாவின்போது சுந்தரேசருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்கள் சுந்தரேஸ்வரர் மதுரையை ஆட்சி செய்வார்.
வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மாணிக்கவாசகரின் பக்தியை உலகு உணரும் பொருட்டு நரியை பரியாக்கி மன்னனிடம் அளித்தும் ஆவணி மூலத்தன்றுதான் என்று கருதப்படுகிறது.
ஆவணி மூலத்தன்று காலையில் சூரியன் உதயமாகும்போதே வெப்பம் அதிகமாக இருந்தால் அவ்வருடம் முழுவதும் வெயில் வாட்டும் என்றும், மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோசணம் அமையும் என்று கருதப்படுகிறது. எனவே நல்ல சீதோணம் அமைய வழிபாடுகள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் ஆவணி அல்லது ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய தினத்தில் உபநயனம் பெற்றவர்கள் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள். வேதங்களையும் படிக்கத் தொடங்குகின்றனர். வேதங்கள் படிக்க ஆவணி அவிட்டம் நல்லநாளாகக் கருதப்படுகிறது.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி மாதத்திலோ ஆவணி மாதத்திலோ கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையானது பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.



இவ்விரத வழிபாட்டின் முடிவில் பெண்கள் தங்கள் கைகளில் வழிபாட்டில் இடம்பெற்ற மஞ்சள் கயிற்றினை கட்டிக்கொள்கின்றனர். இவ்விரத வழிபாட்டின்போது இனிப்புக்கள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயாசம், உளுந்தவடை, பலவித பூக்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.
திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப நன்மை, குழந்தைகளின் நலம், ஆரோக்கியம், கல்வி, கணவரின் ஆயுள், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் மற்றும் வளமான குடும்ப வாழ்வு வேண்டியும் இவ்விரதத்தினை கடைப்பிடிக்கின்றனர்.

ஆவணி ஞாயிற்றுகிழமை வழிபாடு


ஆவணி மாதத்திற்கு அதிபதியாக சூரியன் கருதப்படுகிறார். இதனால் ஆவணி மாத ஞாயிற்று வழிபாடு ஆன்ம பலத்தை அதிகரிக்கும். அக்காலத்தில் ஆடியில் விதைத்த பயிர்கள் ஆவணியில் வளரத் துவங்கும்.
அந்நேரத்தில் விவசாய வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க ஆவணி ஞாயிற்று கிழமை அன்று பெண்கள் விரதம் இருக்கும்முறை உருவானதாகக் கருதப்படுகிறது.
திருமணமான பெண்கள் நல்ல கணவன் வேண்டியும், ஆண்கள் வேலை மற்றும் வாழ்வின் தடைகளை தகர்தெறிய வேண்டியும் ஆவணி ஞாயிற்று கிழமை விரத வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
கண் நோய் உள்ளவர்கள் ஆவணி ஞாயிற்று கிழமை வழிபாட்டினை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம். பாம்புகளை மூலவர்களாகக் கொண்ட வழிபாட்டிடங்களில் சிறப்பு வழிபாடு ஆவணி ஞாயிற்று கிழமைகளில் மேற்கொள்ளப்படுகிறது.


புத்ரதா ஏகாதசி


ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இது நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும்இ நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இன்றைய தினம் விரதம் சிறந்த பலனைக் கொடுக்கும்.

காமிகா ஏகாதசி

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீக்கும்.
ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.
ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத விரதங்களை மேற்கொண்டு விழாக்களைக் கொண்டாடி வாழ்வின் மேன்மையை அடைவோம்.

மாமியார் - மருமகள் உறவை மேம்படுத்தும் வரலட்சுமி விரதம்

மாமியார் - மருமகள் உறவை மேம்படுத்தும் வரலட்சுமி விரதம் 

காயத்ரிக்கு இப்போதுதான் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் காலையில் மாமியார் அகிலா காயத்ரியிடம், ''வர்ற வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வர்றது நோக்குத் தெரியுமோ?'' என்று கேட்டார்.
வரலட்சுமி
தனது பிறந்த வீட்டில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாததால், ''தெரியாது அத்தே'' என்றாள் காயத்ரி.
உடனே அகிலா, ''நம்மாத்துல நோன்பு இருக்கும்மா. நீ புதுசா கல்யாணம் ஆனவங்கிறதால, இந்த வருஷம் விரதத்த நீ அனுஷ்டிச்சா நல்லது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளிருந்து அகிலாவின் கணவர் ஶ்ரீதரின் அழைப்பு கேட்டது. அகிலா, ''உன் மாமா கூப்பிடறார் நான் போய் என்னன்னு கேட்டுண்டு வர்றேன்'' என்று கூறி உள்ளே சென்றார்.
காயத்ரிக்கு வரலட்சுமி நோன்பு என்பது புதிதாக இருந்தது. அவள் வீட்டில் வரலட்சுமி நோன்பு இல்லாததாலும், வெளியூரில் வேலை பார்த்து வந்ததாலும் அவள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. மனதில் பல சந்தேகங்களுடன் 'யாரிடம் இதைப் பற்றி கேட்கலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளது கணவனின் பாட்டியான ஜானகி அங்கே வந்தார்.  காயத்ரி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ''ஏண்டிம்மா! எதையோ ஆழமா யோசிச்சிண்டிருக்காப்ல இருக்கு? நான் வர்றதைக் கூட கவனிக்காம'' என்றார்.
இதைக் கேட்ட காயத்ரி, ''வாங்கோ பாட்டி, மன்னிச்சிடுங்கோ. நான் யோசிச்சிண்டிருந்ததால நீங்க வந்தத கவனிக்கல. உட்காருங்கோ பாட்டி'' என்று சொன்னாள். என்னடி யோசிச்சிண்டிருந்த என்ற கேள்விக்கு, மாமியார் குறிப்பிட்ட வரலட்சுமி நோன்பு பற்றிக் கூறினாள். 
அதற்குப் பாட்டி, ''இதுல யோசிக்க என்னடி இருக்கு?'' என்று கேட்டார். 
"பாட்டி! நேக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாது. நீங்க சொல்றேளா?" என்று கேட்டாள். 
உடனே ஜானகி மகிழ்ச்சியுடன், ''ஓ!  நீ எங்காத்து பொண்ணு. நோக்கு சொல்றது என்னோட கடமைடி'' என்றார்.
காயத்ரி தன்னுடைய முதல் கேள்வியை பாட்டியின் முன்வைத்தாள். "பாட்டி நான் அஷ்டலட்சுமிகள் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.
ஆதிலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, மஹாலட்சுமி. இதுல வரலட்சுமியே இல்லையே? அப்போ வரலட்சுமின்னா யாரு?" என்று கேட்டாள்.
லட்சுமி
பாட்டி சிரித்துக்கொண்டே, ''முதல்ல வரலட்சுமின்னா யாருன்னு சொல்றேன். கேட்ட வரத்தை அளிக்கும் லட்சுமியையே வரலட்சுமி என்கிறோம். அதாவது இந்த வரலட்சுமி விரதத்தை நாம் மேற்கொண்டால், அஷ்டலட்சுமிகளும் மகிழ்ந்து நம்ம ஆத்துக்கு வருவார்கள்'' என்று கூறினார். மேலும் இந்த விரதத்தை மாமியார் எடுத்துக் கொடுக்க மருமகள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி நிறுத்தினார்.
இதைக் கேட்ட காயத்ரி வரலட்சுமி விரதம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள விரும்பினாள். 
''பாட்டி இந்த விரதத்த பத்தி நேக்கு சித்த விவரமா சொல்றேளா?'' என்று கேட்டாள்.
''முதல்ல நோக்கு ஒரு கதை சொல்றேன்'' என்று வரலட்சுமி விரத மகிமை பற்றி ஒரு கதையைக் கூறினார்.
''மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி அழகும், அறிவும் கொண்டவளாகத் திகழ்ந்தாள். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்தாள். கணவர்,
மாமியார், மாமனார் ஆகியோரை தெய்வமாவே பாவிச்சு சேவை செஞ்சு வந்தாள். கணவரிடமும், மாமியார், மாமனாரிடமும் கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் கண்ட வரலட்சுமி ஒருநாள் இரவு சாருமதியின் கனவில் தோன்றினாள். 'நான் உன்னுடைய அன்பு, அடக்கம், பெரியவர்களிடம் உனக்கு இருக்கும் மரியாதை போன்றவற்றால் உன்னிடம் வசப்பட்டுவிட்டேன். உன் வீட்டில் நான் வசிக்க விரும்புகிறேன். எனவே நீ வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பாய்' என்று கூறி, வரலட்சுமி விரதத்தை எப்படி மேற்கொள்வது என்றும் விளக்கமாகக் கூறி மறைந்தாள். சாருமதி தான் கண்ட கனவை கணவரிடமும், மாமனார் மாமியாரிடமும் கூறினாள். அவர்களும் அப்படியே வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று சொல்லவே, சாருமதியும் விரதத்தைக் கடைப்பிடித்தாள். கனவில் வரலட்சுமி சொன்னபடியே அஷ்டலட்சுமிகளும் அவர்கள் வீட்டில் குடிகொண்டனர். அதனால் அந்த நாடே செல்வச் செழிப்புடன் இருந்தது'' என்று பாட்டி கதையைச் சொல்லி முடிக்கவும்,
''ஓ! இவ்ளோ சிறப்பா இந்த நோன்புக்கு'' என்று காயத்ரி ஆச்சரியப்பட்டாள். அந்த விரத முறையை தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அவளுக்கு அதிகரித்தது. அவளுடைய ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட ஜானகி தொடர்ந்தார். 
''இந்த வரலட்சுமி நோன்பை எப்படி அனுஷ்டிக்கணும்னு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ சிராவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாசத்திலே பௌர்ணமிக்கு முதல் நாள் வரும் வெள்ளிக்கிழமையில்தான் வரலட்சுமி நோன்பு அனுஷ்டிக்கப்படுது. வியாழக்கிழமை அன்றே வீட்டைச் சுத்தம் செஞ்சு  வச்சிக்கணும். அடுத்த நாள் வெள்ளிக்கிழம காலையிலயே எழுந்து, வாசல் தெளிச்சு அரிசி மாவால கோலம் போடனும், அப்புறம் ஆத்துல கிழக்கு பக்கமா ஒரு பலகைய வச்சு அதுல கலசச் சொம்ப வைக்கோணும். அதுக்குள்ள அரிசியை நிரப்பி, அதுமேல ஒரு மட்ட தேங்காய வச்சு, அதுல மாவிலையை சுத்திக் கட்டனும். அப்புறம் அம்பாளோட முகத்த அதுல வெச்சு, அழகா அம்பாளுக்கு நகை, பூ வெச்சு அலங்காரம் செய்யனும். 
வரலட்சுமி
அப்புறம் நம்மாள முடிஞ்ச நைவேத்தியம் ஏதாவது செஞ்சி வச்சிக்கணும். நமக்குத் தெரிஞ்ச சுமங்கலிப் பொண்கள ஆத்துக்கு கூப்பிட்டு அவாளையும் நம்முடன் பூஜையில் ஈடுபடுத்திக்கனும். அப்புறம் லட்சுமி துதி, மஹாலட்சுமி அஷ்டோத்திரம்லாம் பாராயணம் செஞ்சு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யணும்.  பிறகு அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்யணும். அதன் பின் லட்சுமி தேவியிடம், 'இன்று என் வீட்டில் எழுந்தருளியிருக்கும் நீ, எப்போதும் என்  இல்லத்தில் வாசம் செய்ய வேண்டும்' என்று பிரார்த்தனை செய்யணும்.
பிறகு பூஜைக்கு வந்திருக்கும் பெண்களுக்கு உணவளித்து தாம்பூலம் கொடுத்து அவாளை வழியனுப்ப வேண்டும். அடுத்த நாள் காலை அம்பாளுக்கு எளிமையா ஒரு பூஜை செய்து அந்த அலங்காரத்தைக் கலைக்க வேண்டும். கலசத்தில் வைத்த தேங்காயையும் அரிசியையும் கொண்டு பிரசாதம் செஞ்சு நைவேத்தியம் செய்யணும்.இந்த விரதம் அனுஷ்டிக்கிறவா வீட்டுல எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷம் இருந்துண்டே இருக்கும். அதுமட்டுமில்லே மாமியாரும் மருமகளும் ஒத்துமையா தாயா குழந்தையா இருப்பாங்க'' என்று முடித்தார்.  
பாட்டி சொன்னதைக் கேட்டதுமே காயத்ரிக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை புரிந்துவிட்டது. அவளும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கத் தயாராகி விட்டாள்.