செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

மாமியார் - மருமகள் உறவை மேம்படுத்தும் வரலட்சுமி விரதம்

மாமியார் - மருமகள் உறவை மேம்படுத்தும் வரலட்சுமி விரதம் 

காயத்ரிக்கு இப்போதுதான் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் காலையில் மாமியார் அகிலா காயத்ரியிடம், ''வர்ற வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வர்றது நோக்குத் தெரியுமோ?'' என்று கேட்டார்.
வரலட்சுமி
தனது பிறந்த வீட்டில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாததால், ''தெரியாது அத்தே'' என்றாள் காயத்ரி.
உடனே அகிலா, ''நம்மாத்துல நோன்பு இருக்கும்மா. நீ புதுசா கல்யாணம் ஆனவங்கிறதால, இந்த வருஷம் விரதத்த நீ அனுஷ்டிச்சா நல்லது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளிருந்து அகிலாவின் கணவர் ஶ்ரீதரின் அழைப்பு கேட்டது. அகிலா, ''உன் மாமா கூப்பிடறார் நான் போய் என்னன்னு கேட்டுண்டு வர்றேன்'' என்று கூறி உள்ளே சென்றார்.
காயத்ரிக்கு வரலட்சுமி நோன்பு என்பது புதிதாக இருந்தது. அவள் வீட்டில் வரலட்சுமி நோன்பு இல்லாததாலும், வெளியூரில் வேலை பார்த்து வந்ததாலும் அவள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. மனதில் பல சந்தேகங்களுடன் 'யாரிடம் இதைப் பற்றி கேட்கலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளது கணவனின் பாட்டியான ஜானகி அங்கே வந்தார்.  காயத்ரி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ''ஏண்டிம்மா! எதையோ ஆழமா யோசிச்சிண்டிருக்காப்ல இருக்கு? நான் வர்றதைக் கூட கவனிக்காம'' என்றார்.
இதைக் கேட்ட காயத்ரி, ''வாங்கோ பாட்டி, மன்னிச்சிடுங்கோ. நான் யோசிச்சிண்டிருந்ததால நீங்க வந்தத கவனிக்கல. உட்காருங்கோ பாட்டி'' என்று சொன்னாள். என்னடி யோசிச்சிண்டிருந்த என்ற கேள்விக்கு, மாமியார் குறிப்பிட்ட வரலட்சுமி நோன்பு பற்றிக் கூறினாள். 
அதற்குப் பாட்டி, ''இதுல யோசிக்க என்னடி இருக்கு?'' என்று கேட்டார். 
"பாட்டி! நேக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாது. நீங்க சொல்றேளா?" என்று கேட்டாள். 
உடனே ஜானகி மகிழ்ச்சியுடன், ''ஓ!  நீ எங்காத்து பொண்ணு. நோக்கு சொல்றது என்னோட கடமைடி'' என்றார்.
காயத்ரி தன்னுடைய முதல் கேள்வியை பாட்டியின் முன்வைத்தாள். "பாட்டி நான் அஷ்டலட்சுமிகள் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.
ஆதிலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, மஹாலட்சுமி. இதுல வரலட்சுமியே இல்லையே? அப்போ வரலட்சுமின்னா யாரு?" என்று கேட்டாள்.
லட்சுமி
பாட்டி சிரித்துக்கொண்டே, ''முதல்ல வரலட்சுமின்னா யாருன்னு சொல்றேன். கேட்ட வரத்தை அளிக்கும் லட்சுமியையே வரலட்சுமி என்கிறோம். அதாவது இந்த வரலட்சுமி விரதத்தை நாம் மேற்கொண்டால், அஷ்டலட்சுமிகளும் மகிழ்ந்து நம்ம ஆத்துக்கு வருவார்கள்'' என்று கூறினார். மேலும் இந்த விரதத்தை மாமியார் எடுத்துக் கொடுக்க மருமகள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி நிறுத்தினார்.
இதைக் கேட்ட காயத்ரி வரலட்சுமி விரதம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள விரும்பினாள். 
''பாட்டி இந்த விரதத்த பத்தி நேக்கு சித்த விவரமா சொல்றேளா?'' என்று கேட்டாள்.
''முதல்ல நோக்கு ஒரு கதை சொல்றேன்'' என்று வரலட்சுமி விரத மகிமை பற்றி ஒரு கதையைக் கூறினார்.
''மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி அழகும், அறிவும் கொண்டவளாகத் திகழ்ந்தாள். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்தாள். கணவர்,
மாமியார், மாமனார் ஆகியோரை தெய்வமாவே பாவிச்சு சேவை செஞ்சு வந்தாள். கணவரிடமும், மாமியார், மாமனாரிடமும் கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் கண்ட வரலட்சுமி ஒருநாள் இரவு சாருமதியின் கனவில் தோன்றினாள். 'நான் உன்னுடைய அன்பு, அடக்கம், பெரியவர்களிடம் உனக்கு இருக்கும் மரியாதை போன்றவற்றால் உன்னிடம் வசப்பட்டுவிட்டேன். உன் வீட்டில் நான் வசிக்க விரும்புகிறேன். எனவே நீ வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பாய்' என்று கூறி, வரலட்சுமி விரதத்தை எப்படி மேற்கொள்வது என்றும் விளக்கமாகக் கூறி மறைந்தாள். சாருமதி தான் கண்ட கனவை கணவரிடமும், மாமனார் மாமியாரிடமும் கூறினாள். அவர்களும் அப்படியே வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று சொல்லவே, சாருமதியும் விரதத்தைக் கடைப்பிடித்தாள். கனவில் வரலட்சுமி சொன்னபடியே அஷ்டலட்சுமிகளும் அவர்கள் வீட்டில் குடிகொண்டனர். அதனால் அந்த நாடே செல்வச் செழிப்புடன் இருந்தது'' என்று பாட்டி கதையைச் சொல்லி முடிக்கவும்,
''ஓ! இவ்ளோ சிறப்பா இந்த நோன்புக்கு'' என்று காயத்ரி ஆச்சரியப்பட்டாள். அந்த விரத முறையை தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அவளுக்கு அதிகரித்தது. அவளுடைய ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட ஜானகி தொடர்ந்தார். 
''இந்த வரலட்சுமி நோன்பை எப்படி அனுஷ்டிக்கணும்னு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ சிராவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாசத்திலே பௌர்ணமிக்கு முதல் நாள் வரும் வெள்ளிக்கிழமையில்தான் வரலட்சுமி நோன்பு அனுஷ்டிக்கப்படுது. வியாழக்கிழமை அன்றே வீட்டைச் சுத்தம் செஞ்சு  வச்சிக்கணும். அடுத்த நாள் வெள்ளிக்கிழம காலையிலயே எழுந்து, வாசல் தெளிச்சு அரிசி மாவால கோலம் போடனும், அப்புறம் ஆத்துல கிழக்கு பக்கமா ஒரு பலகைய வச்சு அதுல கலசச் சொம்ப வைக்கோணும். அதுக்குள்ள அரிசியை நிரப்பி, அதுமேல ஒரு மட்ட தேங்காய வச்சு, அதுல மாவிலையை சுத்திக் கட்டனும். அப்புறம் அம்பாளோட முகத்த அதுல வெச்சு, அழகா அம்பாளுக்கு நகை, பூ வெச்சு அலங்காரம் செய்யனும். 
வரலட்சுமி
அப்புறம் நம்மாள முடிஞ்ச நைவேத்தியம் ஏதாவது செஞ்சி வச்சிக்கணும். நமக்குத் தெரிஞ்ச சுமங்கலிப் பொண்கள ஆத்துக்கு கூப்பிட்டு அவாளையும் நம்முடன் பூஜையில் ஈடுபடுத்திக்கனும். அப்புறம் லட்சுமி துதி, மஹாலட்சுமி அஷ்டோத்திரம்லாம் பாராயணம் செஞ்சு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யணும்.  பிறகு அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்யணும். அதன் பின் லட்சுமி தேவியிடம், 'இன்று என் வீட்டில் எழுந்தருளியிருக்கும் நீ, எப்போதும் என்  இல்லத்தில் வாசம் செய்ய வேண்டும்' என்று பிரார்த்தனை செய்யணும்.
பிறகு பூஜைக்கு வந்திருக்கும் பெண்களுக்கு உணவளித்து தாம்பூலம் கொடுத்து அவாளை வழியனுப்ப வேண்டும். அடுத்த நாள் காலை அம்பாளுக்கு எளிமையா ஒரு பூஜை செய்து அந்த அலங்காரத்தைக் கலைக்க வேண்டும். கலசத்தில் வைத்த தேங்காயையும் அரிசியையும் கொண்டு பிரசாதம் செஞ்சு நைவேத்தியம் செய்யணும்.இந்த விரதம் அனுஷ்டிக்கிறவா வீட்டுல எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷம் இருந்துண்டே இருக்கும். அதுமட்டுமில்லே மாமியாரும் மருமகளும் ஒத்துமையா தாயா குழந்தையா இருப்பாங்க'' என்று முடித்தார்.  
பாட்டி சொன்னதைக் கேட்டதுமே காயத்ரிக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை புரிந்துவிட்டது. அவளும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கத் தயாராகி விட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக