ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

துன்பத்தை வரமாகக் கேட்ட குந்திதேவி

துன்பத்தை வரமாகக் கேட்ட குந்திதேவி


குருஷேத்திரப் போர் முடிந்து விட்டது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான யுத்தத்தில் தர்மம் வென்றது. பாண்டவர்கள், கவுரவர்கள் என இருதரப்பிலும் எண்ணற்ற உயிர் இழப்புகள் இருந்தாலும், தர்மம் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.  தர்மத்தின் வெற்றிக்கும் காரணமான கண்ணன், பாரத யுத்தம் முடிந்து விட்டதை தொடர்ந்து தன்  நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமானார்.அதற்கு முன்பாக தனது அத்தையான குந்திதேவியிடம் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும் என்பதற்காக, குந்திதேவியைக் காண வந்தார்.


அப்போது குந்திதேவி, ‘கண்ணா! எங்களை விட்டுச் செல்கிறாயா?. உன்னைத் தினமும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இனி கிடைக்காதே’ என்று வருந்தினாள்.‘இந்த மண்ணுலகில் எதுவுமே நிலையானது இல்லை. இணைந்திருப்பவர்கள் பிரிவதும், பிரிந்தவர்கள் இணைவதும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். உன் வருத்தம் போக்கும் வகையில் உனக்கு ஒரு வரம் தர, நான் சித்தமாக உள்ளேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்’ என்றார் கண்ணன்.


குந்திதேவியுடன் கண்ணபிரான் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, பாண்டவர்களும், திரவுபதியும் கூட அங்கு இருந்தார்கள். அவர்கள் குந்திதேவி, கண்ணனிடம் என்ன வரம்  கேட்கப்போகிறாள் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். எப்படியும் தன் வாழ்க்கை வளமாக இருக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், இறைவனின் திருவடியை அடையவேண்டும் என்பது போன்ற வரத்தையே கேட்பாள் என்பது அங்கிருந்தவர்களின் கணிப்பாக இருந்தது.ஆனால் குந்திதேவி கேட்ட வரம், அனைவரது கணிப்பையும் தவிடுபொடியாக்கியது. மேலும் அவர்கள் இவருக்கு ஏதும் புத்தி சுவாதீனம் கெட்டுப் போய்விட்டதா? என்று கூட நினைத்திருக்கக் கூடும்.ஆம்! குந்திதேவி கேட்ட வரம் அப்படி நினைக்கச் செய்யும்படிதான் இருந்தது.‘எனக்கு தினமும் ஒரு துன்பத்தை தர வேண்டும்’ என்று யாராவது இறைவனிடம் வேண்டினால், அவரைப் பற்றி வேறு எவ்வாறு தான் நினைப்பது.கண்ணனைப் பார்த்து குந்திதேவி அந்த வரத்தைத் தான் கேட்டாள். ‘கண்ணா! தினமும் எனக்கு ஒரு சிறு துன்பமாவது நேரும்படி வரம் தந்தருள வேண்டும்’ என்றாள்.


அனைத்தும் அறிந்தவன் என்றாலும், அங்கிருந்தவர்களுக்கு குந்திதேவி எதற்காக அந்த வரத்தைக் கேட்டாள் என்பது  புரிய வேண்டும் என்பதற்காக, கண்ணனும் புரியாதவன் போல், குந்தியைப் பார்த்துக் கேட்டான்.


‘அத்தை! எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். சவுபாக்கியம் வேண்டும். என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்பார்கள். ஆனால் நீயோ தினந்தோறும் ஒரு சிறு துன்பமாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்று வரம் கேட்கிறாயே’ என்றான்.


‘இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன். யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகிவிட்டன. இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய். ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற அச்சம் என்னை அச்சுறுத்துகிறது. தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்வேன். உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா? அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக தர கேட்கிறேன்’ என்றாள் குந்திதேவி.


உண்மைதான் இன்பத்தில் இருக்கும் எவரும், அந்த மகிழ்ச்சியில் இறைவனை மறந்து விடுவது இயற்கைதான். 
துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். ஆண்டவனை நினைப்பதற்காக மட்டுமே மனிதர்களுக்கு துன்பம் வருகிறது என்று நினைக்கக்கூடாது. அது ஆன்மாவின் முதிர்ச்சிக்கான பாடசாலை. ஒவ்வொரு துன்பத்தின் போதும், ஒரு அனுபவத்தையும், சோதனைகளை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தையும் மனிதன் அறிந்து கொள்கிறான். அதோடு இறை வழிபாடும் இணையும்போது அந்த துன்பம், இன்பத்தை அளிக்கும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்

லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்





வெள்ளிக்கிழமை... ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக் கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக.. வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக் கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.



ஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி! மனிதர்கள் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?’ என்று கேட்டாள்.

லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு. ‘தேவி! ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் ஒருவருடைய வாழ்வில் ஏற்றத் தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப்படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும்? என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’ என்று கூறினார்.

இதையடுத்து லட்சுமி தேவி பூலோகம் புறப்பட்டுச் சென்றாள். முதலில் ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். அந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


இந்த விரத நாளில் லட்சுமி, மகாவிஷ்ணு, முருகன் ஆகியோரை வழிபடுவதோடு, ஆலயங்களில் இருக்கும் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரனையும் வழிபடுவது நன்மை அளிக்கும். ஒருவருடைய இல்லறம் நல்லறமாக அமைவது, அவரது ஜாதகத்தில் சுக்ரன் எங்கு அமைந்திருந்திருக்கிறார் என்பதைப் பொறுத்து தான் என்பார்கள். எனவே இந்த விரத நாளில் சுக்ரனையும் வழிபடலாம்.

விரதம் இருப்பது எப்படி?


வெள்ளிக்கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் . வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் 

வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்கள்  நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும்.


ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான். எனவே இந்த விரதத்தை அனுஷ்டித்து சிறப்பாக வாழுங்கள்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

செல்வம் எனும் லட்சுமி கடாட்சம்

செல்வம் எனும் லட்சுமி கடாட்சம்




அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு 

இவ்வுலகமில்லை என்பது வள்ளுவன் வாக்கு. இலக்ஷ்மி கடாட்சமே

அனைத்திற்கும் மூலம். எவ்வளவு நல்லவனாக இருந்தும் அறிஞனாக, 

நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும் சாஸ்திரங்களில் தேர்ச்சி 



பெற்றவனாக இருந்தும் செல்வம் எனும் லட்சுமி கடாட்சம் 

இல்லையென்றால் உலகம் அவனை மதிப்பதில்லை. இக்கருத்தை 

ஔவையார் கூட ‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் 

எல்லோரும் சென்றால் எதிர்கொள்வர் இல்லானை இல்லாளும் வேண்டாள் 

மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லா(து) அவன் வாயிற் சொல்’ எனும் 

பாடலின் மூலம் குறிப்பிட்டுள்ளாள்.  லட்சுமி என்ற சொல் லக்ஷ் என்ற 

வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 


இந்தச் சொல்லுக்கு நோக்கம், அடைதல், வழி எனப் பல பொருளுண்டு. அதே 

போல மகாலட்சுமியை வழிபடுவோரும் நல்ல நோக்கம், நன்னடத்தை, 

சோம்பலின்மை ஆகியவை உடையவர்களாக இருக்க வேண்டும். 

தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 



அத்தகையவர்களுக்கே இவளின் அருள் கிட்டும்.மகாலட்சுமி பொதுவாக 

அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள்.நிம்மதியான சந்தோஷமான 

வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட 

சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள்.
அஷ்ட லட்சுமிகள் 1. 

ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான 

லட்சுமி, 6. விஜயலட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி. ஒவ்வொரு 

யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். 

எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் 

புராணங்கள் கூறுகின்றன.



வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் 

சொர்க்கலட்சுமியாகவும் ,அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், 

குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் ,அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய 

லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் 

க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் 

வர்த்தகலட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் 

பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள்.



1. லட்சுமிக்கு பல பெயர்கள்நிலவுகின்றன. தாமரையாள், அலைமகள், 

திருமகள், செந்திரு எனத் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்றால் 

வடமொழியில் ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, 

விஜயலக்ஷ்மி,சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி 

லக்ஷ்மி, புஷ்டிலக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, 

ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக 

லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி,மோட்ச லக்ஷ்மி என இவளுக்கு பெயர்கள் அநேகம்.

ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), 

சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட 

லக்ஷ்மிகள் என்று அழைக் கப்படுகிறார்கள்.



செல்வத்தின் தெய்வம். ஸ்ரீவிஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லக்ஷ்மி 

திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். 

பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். 

இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து 

வறுமையை அகற்றி அருள் புரிபவள். 



பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் 

எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு 

மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லக்ஷ்மிகளும் 

திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவர் லட்சுமிபதி என 

கொண்டாடப்படுக்கிறார்.. எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் 

அவள். லக்ஷ்மிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் 

நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 

பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள 

முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். 

கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான 

கருணைஉள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் 

அவளே.யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என 

வேதமந்திரமான 

ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

2

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும்

போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி

முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு 

நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள்.



விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் 

என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் 

தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் 

அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலக்ஷ்மி ஆகும்.



லக்ஷ்மி என்றால் அழகு என்று பொருள். லக்ஷ்மி என்றால் அன்பு என்று 

பொருள். லக்ஷ்மி என்றால் கருணை என்று பொருள். லக்ஷ்மி என்றால் 

இரக்கம் என்று பொருள். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று பொருள். வெறும் 

அச்சடித்த காகிதங்களையும், சில்லறை நாணயங்களையும் தருபவள் 

இல்லை மகாலக்ஷ்மி. அன்பை தருபவள், அழகை தருபவள், கருணையை 

தருபவள், இரக்க குணத்தை தருபவள். ஒரு வீட்டில் மகாலக்ஷ்மி குடி 

இருக்கிறாள் என்றால், அந்த வீட்டில் நிம்மதி இருக்கிறது என்று பொருள். 

அந்த வீட்டில் சந்தோசம் இருக்கிறது என்று பொருள். நோய்நோடிகளோ, 

பெரிய அளவில் வைத்திய செலவுகளோ இல்லை என்று பொருள். உறவில் 

பிரிவுகளோ, அதில் முறிவுகளோ இல்லை என்று பொருள். பிள்ளை 

செல்வங்களால் எந்த தொல்லையும் இல்லை என்று பொருள். கற்ற 

கல்விக்கோர் வேலை, பெற்ற ஞானத்திற்கு ஏற்ற மதிப்பு இருக்கிறது என்று 

பொருள்.அந்த வீட்டில் விபத்துகளும், துர் மரணம் எதுவும் நடக்கவில்லை 

என்று பொருள்.

ஆதி காலம் தொட்டே மகாலட்சுமி இருந்திருக்கிறாள். பின்னர் 

எப்படி பாற்கடலில் இருந்து வெளி வந்தாள்? என்றால் அது ஒரு கதை. லட்சுமி 

பிருகு முனிவரின் மகளாக பார்கவி என்ற பெயரில் சொர்க்கத்தில் இருந்தாள். 

ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலால் மகிமை பெற்ற பாரிஜாத 

மலரோடு தேவேந்திரனைக் காண வந்தார். அந்த மலரை அவனுக்கு 

அளிக்கவும் செய்தார். அதன் பெருமை உணராத இந்திரன், அம்மலரை தன் 

யானையிடம் கொடுக்க, அது காலால் நசுக்கி அழித்துவிட்டது. இதனால் 

கோபம் கொண்ட துர்வாசர், “இந்திரனிடமிருந்து லட்சுமி கடாட்சம் 

விலகட்டும்’என்று சபித்துவிட்டார்.


 லட்சுமியின் அருட்பார்வை நீங்கியதால் இந்திரன் எல்லாவற்றையும் இழந்து 

விட்டான். அந்நேரம் மகாலட்சுமி சொர்க்கத்தில் இருக்கப் பிடிக்காமல் 

பாற்கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள். பின்னர் பாற்கடலைக் 

கடையும்போது சந்தினர், ஐராவதம், உச்சைஸ்வரவஸ் என்ற குதிரை, 

காமதேனு இவைகளுடன் பாற்கடலிலிருந்து தோன்றினாள். கையில் 

மாலையுடன் அவதரித்த லட்சுமி, எல்லாவற்றிலும் நிகரில்லாதவராக 

விளங்கிய மகாவிஷ்ணுவைத் தன் பதியாக வரித்தாள். அப்போது அவளுடன் 

அலட்சுமி எனப்படும் மூத்த தேவியும் தோன்றினாள். மூத்த தேவி எல்லா 

வகையிலும் லட்சுமிக்கு நேர்மாறான குணம் கொண்டவள்.மகாவிஷ்ணு 

மகாலட்சுமி திருமணம் ஏற்பாடானது.



ஆனால், அக்கா இருக்க தங்கையான எனக்குத் திருமணமா? என்று லட்சுமி 

கேட்டாள். அலட்சுமியை ஏற்க யாருமே முன்வரவில்லை. அந்த நேரத்தில் 

உலக நன்மையை உத்தேசித்து உத்தாலக முனிவர் மூத்த தேவியைத் 

திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். அவ்வாறே திருமணமும் நடந்தது. 

அதன் பின்னர் மகாவிஷ்ணு, மகாலட்சுமி தெய்வீகத் தம்பதிகளின் திருமணம் 

நடந்தது. அன்று முதல் மகாவிஷ்ணுவின் வல மார்பை தன் இருப்பிடமாகக் 

கொண்டாள் லட்சுமிதேவி.



பூஜைகளின்போது நிவேதிக்கப்படும். தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் 

செய்வதாக ஐதீகம். மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், 

பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை 

போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால்இவை அஷ்டமங்கலப் 

பொருட்கள் என போற்றப்படுகின்றன. பால், தேன், தாமரை,தானியக் கதிர்கள், 

நாணயங்கள்ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை 

பஞ்சலட்சுமிகள் என்பர்.



வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை 

திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. 

பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே 

கருதப்படுகிறது.

மகா லக்ஷ்மியை பற்றி  தெரிந்து கொண்டாகி விட்டது.இனி அவள் பாதம் பணிந்து நமக்கு வேண்டியவற்றை அருளுமாறு  

வேண்டவேண்டியது தான் பாக்கி.நாமும் அன்னையின் அருளை பெற வேண்டுவோம்.

கோ பூஜை

கோ பூஜை 


கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று  அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.
இந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.

 கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த `கோமாதா பூஜை' செய்யும் முறையைப் பார்க்கலாம். வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை.

பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம். `பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது. முதலில் பசுவுக்குரிய அருகம்புல், அரிசி, வெல்லக் கலவை, வாழைப்பழம், தேங்காய், தாம்பூலம், பால் சாதம், பூமாலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பசுவை கன்றுடன் அழைத்து வந்து, குளிக்க வைத்து, கொம்புகளில் மஞ்சள் பூசி மாலை அணிவிக்கவும். அருகம்புல்லை கொடுத்து வீட்டுக்கு அழைப்பது போல ஸ்வாகதம்,
ஸ்வாகதம், கோமாதா ஸ்வாகதம்,
ஸ்வாகதம், மகாலஷ்சுமி ஸ்வாகதம்,
ஸ்வாகதம், அஷ்டலஷ்சுமி
-என்று 3 முறை கூற வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, சுமுகஸ் சைக தந்தஸ்ச ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ -என்று சொல்லி அதற்கு 16 மலர்கள் வைக்கவும். அல்லது `பாலும் தெளிதேனும்'-என்று தொடங்கும் பாடலைப் பாடி, மலர் போட்டு, பழம், கல்கண்டு படைத்தும் ஆரத்தி காட்டலாம்.
பசுவின் முன் ஒரு பலகை வைத்து, அதன் மேல் காமாட்சி தீபம் (அ) கமல தீபம் என்கிற ஐஸ்வர்ய தீபத்தை (பொதுவாக இந்த தீபத்தை கேரளா, ஆந்திரா மற்றும் வடநாடுகளில் ஏற்றுவார்கள். நடுவில் குழாய் வடிவில் இருக்கும்) ஏற்றி வைக்கவும். எட்டு விதமான வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, முதலில்-`காமதேநேர: ஸமுத் பூதே ஸர்வதாம பலப்ரதே த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்னி நமோஸ்துதே என்று 3 முறை சொல்லவும்.

அடுத்தது, இந்த பூஜையின் முக்கிய அம்சமான அங்க பூஜை. கீழே தந்துள்ள மந்திரங்களை உச்சரித்தபடியே பசுவின் உடற்பாகங்களில் குங்குமத்தை இட்டு பூஜிக்க வேண்டும்.

இரண்டு கொம்புகளின் நடுவே ஓம் சிவரூபாய நம: 
வலக்கொம்பில்-பிரம்மனே நம:
இடப்புறக் கொம்பில்-விஷ்ணுவே நம:
வலக்காது நுனியில்-தீர்த்தேப்யோ நம:
இடக்காது நுனியில் - ஸ்தாவர ஐங்கமேப்யோ நம:
மூக்கு நுனியில் - ஜ்யேஷ்டாய நம:
வலது கண்ணில் - சூர்யாய நம:
இடக் கண்ணில் - சந்த்ராய நம:
பற்களில் - மாருதாய நம:
தாடையில் - வருணாய நம:
மேலுதடு - யட்சேப்யோ நம:
கீழுதடு- யமயே நம:
கழுத்தில் - இந்த்ராய நம:
குளம்பு நுனி - நாகேப்யோ நம:
குளம்பு நடுவே-கந்தவர்வேப்யோ நம:
குளம்பு மேற்பாகம்-அப்சரேப்யோ நம:
கால்களில் - கணேப்யோ நம:
நாடிகளில் - நேத்ரேப்யோ நம:
மடியில் - ப்ருகுப்யோ நம:
மடி நுனியில் - சாத்தேப்யோ நம:
இதயத்தில் -உமாதேவ்யாய நம:
வயிற்றில் - பூமிதேவ்யாய நம:
யோனியில் - மகாலஷ்மியே நம:
தோள்களில் - தேவேப்யோ நம:
பிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம:
கோ ஜலத்தில் - விஷ்ணுவே நம:
நெய்யில்- ருத்ராய நம:
தயிரில் -ஈஸ்வராய நம:
பாலில் - சதாசிவாய நம:
- என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.
பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,
ஓம் சுரப்யை ச வித்மஹே 
காமதாத்ரேய தீமஹி
 தன்னோ தேனு:
ப்ரசோதயாத்: என்று சொல்லவும்.

அடுத்து குங்குமம், மலர்களால்..

ஓம் காமதேனவே நம:
ஓம் பயஸ்வின்யை நம:
ஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம:
ஓம் வ்ருஷபத்ன்யை நம:
ஓம் சௌரபேயை நம:
ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் ரோகிண்யை நம:
ஓம் ஸ்ருங்கிண்யை நம:
ஓம் க்ஷíரதாரிண்யை நம:
ஓம் காம்போஜ ஜனகாயை நம:
ஓம் பப்ல ஜனகாயை நம:
ஓம் யவன ஜனகாயை நம:
ஓம் மாஹேயை நம:
ஓம் நைசிக்யை நம:
ஓம் சபலாயை நம:
ஓம் ஸ்ரீம் காமதேனவே நம:
- என்று சொல்லி அர்ச்சிக்கவும்.
பிறகு தூப, தீபம் காட்டி, பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு,

கோமாதாவே... எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீயே எட்டாத செல்வமும் எட்ட வைப்பாய் பசியும் பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா! என்று கூறி கோமாதாவைச்  சுற்றி வந்து விழுந்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபடவும். 

கோமாதாவின் அருளால்  உங்களுக்கும் வளங்கள் பெருக நான்  கோமாதாவை வேண்டுகிறேன்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தாம்பூலம்

தாம்பூலம் 

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.என் பதிவில் நவராத்திரி வேளையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.இருந்தாலும் சாதாரண நாட்களில் கூட நம் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வைத்து கொடுத்தால் மிகவும் நல்லது என்பதால் நான் தாம்பூலத்தைப் பற்றி இன்னும் அதிகமாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

நல்ல விஷயங்களை சொல்லுவதில் தப்பு ஒன்றும் இல்லை என நினைக்கிறேன்.உங்களால் என்ன பொருள் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க முடியுமோ கொடுங்கள்.நம் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்ணை அம்பாளாக நினைத்து கொடுங்கள்.அம்பாளே திருப்தி அடைந்து நமக்கு வேண்டியவற்றை தந்து அருள்வாள்.

கொடுக்க ஒன்னும் இல்லை என்றாலும் பரவாயில்லை.உங்கள்  பூஜை அறையில் மஞ்சள் குங்குமம் இருக்கும் .தண்ணீர் கொடுத்து உபசரியுங்கள்.எல்லா வளங்களையும் அம்பாள் நமக்கு கொடுப்பாள்.

இனி தாம்பூலத்தைப் பற்றி பாப்போம்.



தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால்
வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும். 
வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
   

தாம்பூலத்தில் வைக்க வேண்டிய பொருட்கள் 

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.
மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
வளையல், மன அமைதி பெற‌
தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)
பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,
பூ, மகிழ்ச்சி பெருக,
மருதாணி, நோய் வராதிருக்க,
கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க
தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ 
வழங்குகிறோம்

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.  வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள். 

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா "என்கிறார் அபிராமி பட்டர்.


எனக்குத் தெரிந்த ஒரு மூதாட்டி, வெற்றிலை, பாக்கு, ஒரு சிறு வெல்லத்துண்டு, பூ முதலியவையே வைத்து, வெள்ளி தோறும் வெற்றிலை பாக்குத் தருவார். இன்று அவர் பேரன், பேத்திகள் மிக நல்ல நிலையில் இருக்கின்றனர். வீட்டுக்கு வருபவருக்கு ஏதேனும் உண்ணத் தர வேண்டும் என்பதால் வெற்றிலை,பாக்குடன் பழம் தருகிறோம். மற்றப் பொருட்கள் தர வசதிப்படாவிட்டாலும், அதற்குரிய பலன்கள் குறைந்து விடாது.

குறிப்பாக, இங்கே நான் ரவிக்கைத்துணி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
அந்நாளில், சுமங்கலிப் பெண்களே ரவிக்கை அணிவது வழக்கம். இப்போது போல, அதிக அளவு உடைகள் வாங்குவதும் வழக்கத்தில் இல்லாத காலம். ஆகவே, ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது,நிறைய பேருக்கு, உபயோகமாக இருந்தது.
இப்போது எல்லாப் புடவைகளுடனும், அதற்குரிய 'ப்ளவுஸ்' வந்து விடுகிறது. நாம் கொடுக்கும் ரவிக்கைத்துணி, பல சமயம் நமக்கே 'ரொட்டேஷனில்' வந்து விடுகிறது. சில கடைகளில் வைத்துக் கொடுப்பதற்கென்றே, மலிவு விலையில் ரவிக்கைத்துணி விற்கிறார்கள். அவற்றைத் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கலாமே என்று தைத்தால், தைக்கும் போதே கிழிகிறது. அவற்றை வைத்துக் கொடுப்பதால் என்ன லாபம்?
வஸ்திர தானம் என்பது எளியோருக்கு வழங்கினால் தான் பூரண பலன். ஆகவே அம்மாதிரி உள்ளோருக்கு, புடவை, வேஷ்டி வழங்குதல் சிறப்பு.ஆகவே, உபயோகிப்பவர்களுக்கு ரவிக்கைத்துணி கொடுங்கள். மற்றவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் உகந்தது.
                            
தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான்  தாம்பூலம் தர வேண்டும். அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.

மஞ்சள்,குங்குமப் பாக்கெட்டுகளும் தரமானதாக இருக்கட்டும். இயலாவிட்டால், தாம்பூலம் வாங்க வருபவரிடம் மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, மற்றப் பொருட்களைத் தரலாம்.


நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, 'சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும்பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர் சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.

தாம்பூலம் தரும் முறைகள்:

1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.
2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும். 
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும்.
3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

நீங்களும் தாம்பூலம் கொடுத்து  அம்பாளின் அருளை பெறுங்கள்.இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.படித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க அம்பாளை வேண்டுகிறேன்.

நீங்களும் சந்தோஷமாக இருங்கள் .உங்களைச்  சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்

உங்கள் அன்புத் தோழி ஈஸ்வரி 



திங்கள், 6 பிப்ரவரி, 2017

மயில் வாகனம் மலையாக மாறிய திருக்கதை

மயில் வாகனம் மலையாக மாறிய திருக்கதை தெரியுமா?


முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது நமக்குத் தெரியும். சூரசம்ஹாரத்தின் போது மரமாக நின்ற சூரனை சக்தி வேல் கொண்டு முருகப் பெருமான் பிளந்தபோது வெளிப்பட்ட மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் மாறிய புராணமும் நமக்குத் தெரியும்.

அப்படியென்றால், அதற்கு முன்பு முருகனுக்கு வாகனம் இல்லையா? முருகன் ஞானப்பழம் பெறுவதற்காக மயில் மீது ஏறி உலகத்தை வலம் வந்ததாகப் புராணங்கள் சொல்கின்றனவே. எனில், அந்த மயில் என்ன ஆயிற்று?

அழகே வடிவானவன் என்பதனால்தான் முருகன் அழகிய மயிலைத் தன் வாகனமாகக் கொண்டான். அந்த அழகு மயிலுக்கு முருகன் ஒரு சாபமும் கொடுத்தார். அந்தச் சாபம், மயிலை மலையாக மாற்றியது! 

அப்படி மலையாக மாறிய மயில், முருகனின் திருவருளை வேண்டி தவம் செய்தது.  மயில் போன்ற வடிவில் அமைந்திருக்கும் அந்த மலை அமைந்த தலம் குன்றக்குடி!

மயில் மலையான திருக்கதை

யிலையம்பதியில் சதாசர்வகாலமும் மோனத் தில் மூழ்கித் திளைக்கும் ஞானமூர்த்தியாம் ஈசன் தமது சக்தியை இரு பகுதிகளாக்கி, ஒரு பாகத்தை போக சக்தியாகவும், மற்றொரு பாகத்தை முருகக் கடவுளாகவும் மாற்றினார்.

ஞான சக்தியை முருகனின் இதயத்தில் பதித்து, இச்சா சக்தியையும், கிரியா சக்தியையும் தந்தார். அழகன் முருகனுக்கு ஞானசக்திதரன், குகன், விசாகன் என்றெல்லாம் திருப்பெயர்கள் சூட்டி, அவனுக்கு கயிலையின் இடப்பாகத்தில் ஆலயம் அமைத்துத் தந்து, அங்கிருந்தபடி ஐந்தொழில் களையும் செய்துவரும்படி பணித்தார். மேலும், முருகனுக்கு வாகனமாக அழகிய மயிலை அளித்த ஈசன், அவனுக்குத் துணையாக அஷ்ட வித்தியேஸ் வரர்களையும் அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில், ஆலம் உண்ட அண்ணலைத் தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலைக் கண்டவர்கள், அதன்மீது அனுதாபம் கொண்டார்கள். காரணம்..?

சூரன் தன் தம்பியருடன் காஞ்சிபுரத்தில் தவ நிலை மேற்கொண்டிருந்தான். முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினை அடைய வேண்டும் என்பதே அவர்களது தவத் தின் நோக்கம். அவர்களது தவம் நிறைவடைந்து, தவப் பயனும் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே முருக வாகனமாகத் திகழும் மயிலின் நிலை என்னாவது? இதை எண்ணியே பிரம்மாதி தேவர்கள் மயிலின் மீது அனுதாபம் கொண்டார் கள். அத்துடன், “உன் இறைவனின் வாகனமாக மாறவேண்டி சூரன் தனது தம்பியருடன் காஞ்சி புரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்” என்ற விஷயத்தையும் மயிலிடம் கூறிச் சென்று விட்டார்கள்.

தேவர்கள் கூறியது கேட்டு மிகவும் வருந்திய மயில், தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும் விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.

சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்து விட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். அவர்களைப் பழிதீர்க்கும் நாளை எதிர்நோக்கி நின்றனர். அந்த நாளும் வந்தது.

முருகப்பெருமானைத் தரிசிக்க வந்த திருமாலும், பிரம்மாவும் தங்கள் வாகனங்களான கருடனையும், அன்னத்தையும் வெளியில் விட்டுச் சென்றனர். அவ்வேளையில் சூர சகோதரர்கள் மயிலிடம் சென்று, “மயிலே! உன்னால் தங்களை விட விரைவாகச் செல்லமுடியாது என்று கருடனும், அன்னமும் இழிவாகப் பேசிக் கொண்டன” என்று பழிச்சொல் கூறினர்.

அதைக் கேட்ட மயில் சிறிதும் ஆலோசிக்காமல் கோபம்கொண்டு கருடனையும், அன்னத்தையும் விழுங்கி விட்டது. முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்பிய திருமாலும், நான்முகனும் தங்கள் வாகனங்களைக் காணாது முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை உணர்ந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும், அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும், அன்னத்தையும் விடுவித்தது மயில். திருமாலும், நான்முகனும் திரும்பிச் சென்றனர்.

அவர்களுக்கு இன்னல் விளைவித்ததன் காரணமாக மயிலின் மீது சினம் கொண்ட முருகப் பெருமான் மயிலை மலையாகும்படி சபித்தார். `ஆலோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமே' என்று வருந்திய மயில், பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. தவறை உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், “நீ பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனத்துக்கு (குன்றக்குடி) போய் மலையாக இரு. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தருகிறேன்” என்று அருளினார். 
அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில், முருகப்பெருமானை நோக்கும் விதத்தில் வடக்கே முகமும், தெற்கே தோகையுமாகவுள்ள மலையின் வடிவம் கொண்டு, தவத்தினைத் தொடங்கித் தொடர்ந்தது.

மயிலுக்கு இந்நிலை உருவாகக் காரணம் சூரன் சகோதரர்களே என்பதால், அவர்களை  அசுரர்கள் ஆகும்படிச் சபித்தார் முருகன். அசுரர்களான அவர்கள் தேவர்க்கும், முனிவர்க்கும் இன்னல் விளைவித்து, இறுமாப்புடன் திரிந்தனர். ஈசனின் திருவுளப்படி முருகப்பெருமான், ஆறு திருமுகங் களோடு எழுந்தருளி அசுரர்களை அழித்தார். சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார்.


அதே நேரத்தில் - ஈசனால் தமக்கு அளிக்கப் பட்டு, தற்போது தமது சாபத்தால் மலைவடிவம் கொண்டு தவநிலையில் இருக்கும் மயிலுக்கும் அருள்புரியச் சித்தம் கொண்டார் முருகன். எனவே, குன்றக்குடிக்கு எழுந்தருளி, மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அந்த மலையின் மீது எழுந்தருளி, அண்டி வந்து வணங்குபவர்க்கு வேண்டிய வரம் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராக குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார்.


காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியில் இருந்து மேற்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், தெற்கு நோக்கி அமைந்திருக்கும் ராஜகோபுரம் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.  இந்தத் திருக்கோயில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கீழ்க்கோயில். இங்கு தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி அருள் புரிகின்றனர். மலைக்கோயிலில் முருகன் அருள்கிறான்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

கோபூஜை [பசு பூஜை ) சிறப்பு



கோ பூஜை   (பசு பூஜை  ) சிறப்பு


பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும். பால், தயிர், நெய், போன்றவற்றை ஆண்டு முழுவதும் தருகின்ற பசுவிற்கு மரியாதை செய்து பூஜித்து பொங்கல் வைத்து அன்னமிட வேண்டும்.

பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும். பசுமாடு என்றால், பால் கொடுக்கும் ஒரு விலங்கு என்று நினைக்கிறோம்; ஆனால், அது ஒரு தெய்வீக விலங்கு. மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த பசுக்கள் எப்படி தோன்றியது என்பதும் புராணத்தில் உள்ளது.
ஆதிகாலத்தில், கடும் தவம் செய்து சுரபி என்னும் கோவையும், அதோடு கூட ஒரு ஆச்சரியமான புருஷனையும் உண்டு பண்ணினார் பிரம்ம தேவர். இவர்களின் வழி வந்தவை தான் பசுக்கள். இவர்களால் பசுக் கூட்டம் உண்டாயிற்று.

பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம். பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.

பசுவின் தலை – சிவபெருமான்நெற்றி – சிவசக்திவலது கொம்பு – கங்கைஇடது கொம்பு – யமுனைகொம்பின் நுனி – காவிரி, கோதாவரிமுதலிய புண்ணிய நதிகளும்,கொம்பின் அடியில் – பிரம்மாமூக்கின் நுனி – முருகன்மூக்கின் உள்ளே – வித்யாதர்கள்இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்இரு கண்கள் – சூரியன், சந்திரன்வாய் – சர்பசுரர்கள் (சந்திர பகவான் என்றும் கூறுவார்கள்)பற்கள் – வாயுதேவன்நாக்கு – வருணதேவன்நெஞ்சு மத்திய பாகம் – கலை மகள்கழுத்து – இந்திரன்மனித்தலம் – இயமனும், இயக்கங்களும்உதடு – உதயாத்தமன சந்தி தேவதைகள்முரிப்பு (கொண்டை) – பன்னிரு ஆதித்தியர்கள் (சூரியர்கள்) மற்றும் ருத்ரன்மார்பு – சாத்திய தேவர்கள்வயிறு – பூமி தேவிகால்கள் – அனிலன் என்னும் வாயு தேவன்முழந்தாள் – மருத்து தேவர்குளம்பு – தேவர்கள்குளம்பின் நுனி – நாகர்கள்குளம்பின் நடுவில் – கந்தவர்கள்குளம்பின் மேல்பகுதி – அரம்பையர்முதுகு – உருத்திரர்யோனி – சந்தமாதர்(ஏழு மாதர்)குதம் – இலட்சுமிமுன் கால் – பிரம்மாபின் கால் – உருத்திரன், தன் பரிவாரங்களுடன்பால் மடி (முலை) – ஏழு சமுத்திரங்கள் (சரஸ்வதி என்றும் கூறுவர்)சந்திகள் தோறும் – அஷ்டவசுக்கள்அரைப் பரப்பில் – பிதிர் தேவதைவால் முடி – ஆத்திகன்உரோமம் – மகா முனிவர்கள்எல்லா அங்கங்கள் – கற்புடைய மங்கையர்மூத்திரம் – ஆகாய கங்கை (லட்சுமி என்றும் கூறுவார்கள்)சாணம் – யமுனைசடதாக்கினி – காருக பத்தியம்இதயம் – ஆகவணியம் (எமன் என்றும் கூறுவார்கள்)முகம் – தட்சரைக்கினியம்எலும்பு, சுக்கிலம் – யாகத்தொழில் முழுவதும்எல்லா துவாரங்கள் – வாயுகால்கள் – சப்த மருத்துக்கன்வயிறு -அக்னிமலத்தில்-கீர்த்தியும், கங்கையும்மல ஜலம் கழிக்கும் இடம் – லட்சுமிவால் – தர்ம தேவதைபூட்டுக்கள் – சித்தர்கள்பசுவின் அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும்இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். உலகிற்கு சிறந்த புண்ணியமும், ஹோமத் திரவியமும் கொடுக்கிறது.


ஒரு காரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பசு எதிரே வந்தால் சுபசகுனமாகும். பசுக்களை கூட்டமாகப் பார்த்தால் இன்னும் சிறப்பு. தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும். தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.


இவ்வாறு செய்ய இயலாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் திருநாளிலாவது பசுவை வணங்குதல் நன்று. பசுவை மட்டுமின்றி காளையையும் வழிபடவேண்டும்


சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, துக்கப்பட்ட பிறகு, வம்சத்து ரிஷி ஒருவர், பசும்பாலின் நுரையை உட்கொண்டு கோலோகத்தை அடைந்தாராம். பசுவை வளர்த்துப் பாதுகாப்பதிலேயே, கண்ணும், கருத்துமாக இருந்தார் அந்த ரிஷி. பசுவின் பாலை கறக்காமல், கன்றுக் குட்டி குடிக்கட்டும் என்று விட்டுவிடுவார்.


தாய்ப் பசுவிடம், கன்றுக் குட்டிகள் பால் குடித்த பிறகு, பசுவின் மடியில் இருக்கும் பாலின் நுரையை மட்டும் இவர் சாப்பிட்டு ஜீவித்து வந்தார். தபஸ்வியான இவர் இப்படி செய்து, பிறகு சொர்க்கம் சென்றார் என்பது கதை.


பசு மாடு என்றால், அதன் பாலை ஒட்டக் கறந்து விடக்கூடாது என்பது தர்மம்; கன்றுக் குட்டிக்கும் பால் விட வேண்டும். நம் குழந்தை மாதிரி, பசுவுக்கு அதன் கன்றும் குழந்தை தானே! பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளில், ஒரு காம்பு தேவதைகளுக்கும், ஒன்று, பூஜைக்கும், ஒன்று, கன்றுக் குட்டிக்கும் என்பது சாஸ்திரம்.கன்றுக்குட்டி இல்லாத பசுவின் பால், பூஜைக்கு உதவாது என்று சாஸ்திரம் உள்ளது. வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டியைக் காட்டி கறக்கப்படும் பசும் பால் கூட பூஜைக்கு உதவாதாம்.புண்ணியமான ஜீவன் பசு. அதை ரட்சிக்க வேண்டும்; பூஜிக்க வேண்டும். பசுமாடு வந்து விட்டால், தடி எடுத்து அடித்து விரட்டாமலிருந்தாலே போதும், அதுவே புண்ணியம் தான்.

பசுவின் உடலில் எல்லா தேவர்களும் வந்து தங்கிவிட்டனர். லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து இடம் கேட்க நீ சஞ்சல குணம் உள்ளவள். மேலும் இங்கு எல்லா இடமும் முடிந்து விட்டது. மல ஜலம் கழிக்கும் இடம் மட்டுமே உள்ளது என கோதேவி கூற, லட்சுமியும் அந்த இடத்தையாவது தனக்கு அருளும்படி வேண்டிப் பெற்று தங்கினார்.எனவே தான் காலையில் எழுந்ததும் பசுவின் பின் பக்கத்தைத் தரிசிக்க வேண்டும். அதனால் லட்சுமியைத் தரிசித்த புண்ணியம் ஏற்ப்படும். மேலும் அந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால் கங்கையில் நீராடிய புண்ணியமும் ஏற்படும் .


பசுவின் பாதத்துளி மேலே பட்டால் வாயவ்ய ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். தேவர்கள் முனிவர்கள் புண்ணிய நதிகள் சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வளம் வந்து வணங்கிய பலன் ஏற்படும்.


பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதியை நோக்கி பசுவின் பிருஷ்டபாகம் இருக்கும் படி செய்து பகவானும் மகாலக்ஷ்மியை பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.


“கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்லோகா சமஸ்தா சுக்னோ பவந்து”

என்ற ஸ்லோகத்தின் படி பசுவை அதி காலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும்.