வியாழன், 21 மார்ச், 2019

தோஷங்களை அழிக்கும் பூசணிக்காய்

தோஷங்களை அழிக்கும் பூசணிக்காய்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும்,தேவர்களுக்கும்பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டிருந்த சில அசுரர்கள் தமது பகை உணர்வைக் காட்ட அவ்வப்போது தேவர்களுக்கு தொல்லைத் தந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெற்றிருந்த வரங்களின் காரணமாக அவர்களை தேவர்களால் வெற்றிக் கொள்ள முடியாமல் போனதினால் அந்த வரம் பெற்றிருந்த அசுரர்கள் தங்கி இருந்த சில இடங்களுக்கு , அது தேவ லோகமாகவே இருந்தாலும் தேவர்களினால் செல்ல முடியாமல் போயிற்று.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற பிரிவினை சில இயற்கைக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது இந்த உலகில் தீமை மற்றும் நன்மைகளைக் குறிக்கும் விதத்திலேயே தீய குணங்களை அசுரர்கள் என்றும், நல்ல குணங்களை தேவர்கள் என்றும் கூறப்பட்டு எப்பொழுதுமே நன்மைக்கு எதிராக தீமைகள் உள்ளதாகவும், அந்த தீமையை அழித்து நல்ல பண்புகளைக் கொள்ளும்போது ஒருவன் தேவபுருஷர்கள் ஆகி விடுவார்கள், அதாவது பரிசுத்த மனத்தை அடைந்து விடுகிறார்கள், அப்போது அவர்கள் இறைவீகத்தின் வாயிலில் சென்று விடுவதான நிலை ஏற்படும் 

என்ற அடிப்படை தத்துவத்தை உணர்ச்சிபூர்வமாக பூலோக மனிதர்களுக்கு எடுத்துக் காட்டவே பரமாத்மன் என்பவர் அசுரர்கள் மற்றும் தேவர்கள் என்பவர்களைப் படைத்து அவர்கள் மூலம் சில நாடகங்களை நடத்திக் காட்டுகிறார்.  ஆகவே அசுரர்களும் சரி, தேவர்களும் சரி, அனைவருமே  மேலுலகில் இருந்துதான் வந்துள்ளவர்கள் என்பதும், அனைவரும் அடிப்படையில் தேவ கணங்களே, சில சாபங்களின் காரணமாக அசுரர்களாக பிறந்து இருந்தார்கள் என்பதே உண்மை.தொடர்புடைய படம்

இந்த பின்னணியில் அறிய வரங்களைப் பெற்றிருந்த அசுரர்கள் தமக்கு சொல்லொண்ணாத்  துயரங்களைத் தருவதைக் குறித்து பலமுறை தேவர்கள் சிவன், பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் முறையிட்டும் அவர்கள் ஒன்றும் கூறாமலேயே சென்று விடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அசுரர்கள் தேவர்களுக்கு அநீதி இழைத்து கொடுமை செய்வதை தக்க நேரத்தில் சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அழிக்கத் தயங்கியது இல்லை. ஆனால் அதற்கான காலம் வரும்வரை, அதாவது அசுரர்களுக்கு அழிவு காலம் வரும் வரைப் பொறுத்திருந்து பார்த்தப் பின் அதை செய்தார்கள். ஏன் என்றால் அவர்களாலும் அவர்களே படைத்திருந்த  நியதிகளை மீற முடியவில்லை. வெகு காலத்திற்கு முன் இப்படியாக இருந்த நிலையில் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர் என்பதினால் அடிக்கடி அவர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களையும், வரங்களையும் வைத்திருந்தனர்.


தேவர்களுக்கும், மேலுலகத்தில் வசித்து வந்த அசுரர்களுக்கும் அவர்கள் நினைத்த இடங்களுக்கு, அது தேவலோகமோ இல்லை பூலோகமோ அல்லது பாதாளமோ அங்கெல்லாம் செல்லும் சக்தி இருந்தது. சில கர்மாக்களின் வினையாக சில தெய்வீக கணங்களே அசுரர்களாக பிறவி எடுத்து கர்மாக்களை அழித்துக் கொள்ள வேண்டி இருந்ததினால்தான், அந்த கணங்கள் அசுரர்களாக உருவெடுத்து மேலுலகில் வாழ முடிந்தது. சாபம் பெற்ற வேறு சில கணங்கள் பூவுலகில் அரக்கர்களாக பிறவி எடுத்து அந்த சாபங்களை விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அவை ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்கள் போன்ற பிறவிகளை பூமியில்  எடுக்க வேண்டி இருந்தது.  அடிப்படையில் தேவ கணங்களான அவை ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்திருந்தாலும், அந்த நிலையில் தேவ லோகத்துக்கு செல்ல முடியாமல், ஆனால் பூவுலகில் சில சக்திகளைக் கொண்டு இருந்தன.


தேவலோகத்தில் அசுரர்களாக இருந்தவர்கள் பூவுலகில் பிறவி எடுத்திருந்த ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்களை  சந்தித்து விட்டு செல்லும் பழக்கத்தைக் கொண்டு இருந்தன. அப்படி வந்திருந்தபோது தாம் எந்தெந்த தேவர்களினால் ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்து பூமியில் வந்து அவதிப்பட வேண்டி உள்ளது என்பதை தேவலோக அசுரர்களிடம் கூறியபோது அதைக் கேட்டு  கோபமடைந்த அசுரர்கள் தேவலோகத்தில் இருந்த தேவர்களை துன்புறுத்தத் துவங்கினார்கள். இதனால்தான் தேவர்களுக்கும், தேவலோக அசுரர்களுக்கும் முடிவற்ற வகையில் பகை பெருகிக் கொண்டே இருந்தது.


இந்த பின்னணியில்தான் தேவலோகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து வந்த விஷ்ணு பக்தனான கூஷ்மாண்டன் ( சில கதைகளில் அவனை கூச்மாண்டன் என்கிறார்கள்)  எனும் அசுரன் அங்கிருந்த தேவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்திருந்தான். பல தெய்வங்களிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று இருந்த அசுரன் கூஷ்மாண்டன் வேண்டும் என்றே தேவலோகத்தில் இருந்த தேவர்களிடம் வம்பு செய்து அவர்களை துரத்தி அடிப்பதும், தமது இருப்பிடத்திற்கு இழுத்து வந்து சிறையில் வைத்து கொடுமைகளையும் செய்து வந்தான். இத்தனைக்கும் அவன் அடிப்படையில் ஒரு கூஷ்மாண்டா எனும் ஒரு தேவியின் பக்தனாவான். அந்த தேவியோ விஷ்ணுவினால் படைக்கப்பட்டவள்.  கூஷ்மாண்டாவுக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை ஆகும். அவள் மங்களத்தைத் தருபவள் என்பார்கள். அது போலவே கூஷ்மம் என்றால் முட்டை அல்லது அண்டம் என்றும் பொருள் தரும். முதன் முதலில் இந்த பிரபஞ்சம் தோன்றியபோது அது ஒரு முட்டை உருவில் வெளி வந்தது. அதில் இருந்து வெளிவந்த விஷ்ண்வை சுற்றி பல தேவிகளும் இருந்தார்கள். அதில் ஒருவளே கூஷ்மா என்பவளும் ஆவாள். ஆகவேதான் கூஷ்மாவின் பக்தனான கூஷ்மாண்டனுக்கு விஷ்ணுவின் அரிய வரங்கள் கிடைத்து இருந்தன. கூஷ்மாண்டன் பக்தி மார்கத்தில் அதாவது தனக்கு வரமளித்த தெய்வங்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவர்களை மறவாது அனுதினமும் வணங்கி துதித்தே வந்தவன். அதனால்தான் அவனுக்கு அத்தனை கர்வம் இருந்தது. 


இதனால் கூஷ்மாண்டனின் பலம் ஓங்கி, அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை என்பதினால் அனைவரும் தம்மை கூஷ்மாண்டனின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்ர்.  கூஷ்மாண்டனுக்கு சாப விமோசனம் தரும்  காலம் நெருங்கி விட்டதையும், தன்னுடைய பக்தனான அவனுக்கு அவன் மரணம் அடையும் முன்னால்  ஏதாவது வழியில் பெருமையும் தர எண்ணி இருந்த நாளும் நெருங்கியது என்பதையும் உணர்ந்தார். விஷ்ணு பகவான் கூறியவாறு தேவர்கள் பெரும் படையுடன் கூஷ்மாண்டான்  ஆண்டு வந்த பூமிக்கு சென்று அவனுடன் போரிட்டார்கள். அதில் விஷ்ணுவும் கலந்து கொண்டு அந்தப் படையின் ஒரு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். யுத்தம் நடந்திட விஷ்ணுவிடம் நேரடியாக மோதும் கட்டத்தை கூஷ்மாண்டன் எட்டினான்.


தன்னை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்ற அகம்பாவத்தில் இருந்த கூஷ்மாண்டன் யுத்தத்தில் விஷ்ணுவை தாக்க முயன்றபோது அவரை சுற்றி அரணாக இருந்திருந்த தீக்கணங்கள் பெரும் தீ நாக்குடன் அவனைத் தாக்க அப்படியே சுருண்டு விழுந்தான் கூஷ்மாண்டன். உயிர் பிரிகின்ற நேரம்....தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்தேன் என அனைத்தையும் உணர்ந்தான். மரணத் தருவாயில் கரம் கூப்பி விஷ்ணுவை வணங்கி, அவர் மீது தோத்திரம் பாடி தனக்கு நற்கதி தருமாறும், வேறு நல்ல பிறவி எடுக்க அருள் தருமாறும் கேட்டான். அவன் நிலைக் கண்டு பரிதாபப்பட்ட நாராயணன் கேட்டார்
'' கூஷ்மாண்டா, இந்த பிறவியில் தேவர்களும் கடவுளின் அவதாரங்களே, அவர்களும் தெய்வ கணங்களே என்பதை மறந்து போய் அவர்களை ஹிம்சித்து வந்ததின் மூலம் பெரும் தவறுகளை செய்துள்ளாய் என்றாலும் அந்த நிலையிலும், மரணத் தருவாயிலும் நீ தெய்வ பக்தியோடு இருந்துள்ளாய் என்பதினால் உனக்கு நல்ல கதி கிடைக்க உள்ளது. ஆகவே உன் வாழ்க்கையின் மூலம் பூலோகத்தில் உள்ளவர்கள் பயன் அடையும் வகையில், நீ பூலோகத்தில் ஒரு இந்த அகண்டத்தை பிரதிபலிக்கும்  உருவில் உள்ள பூஷணிக்காயாக அவதரிப்பாய். உன்னைக் கொண்டு எந்த ஒருவரும் தமது தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும் என்ற வரத்தை உனக்கு அருளுகிறேன்.




எப்படி உன்னை இப்போது நான் பூமி மீது மோதி விழ வைத்து மரணத்தைக் கொடுத்தேனோ அது போலவே தோஷங்களை விலக்கிக் கொள்ள உன்னை பூஜிக்கும்போது அங்குள்ள அனைத்து துஷ்ட ஆத்மாக்களையும் நீ உன்னுள் உறிஞ்சிக் கொண்டு அவற்றை உள்ளேயே அழிப்பாய் (பூஷணிக்காயின் உள்ளே). அதன் பின் அவற்றுக்கு உயிர் இருக்காது. அந்த நிலையில் பூஷணிக்காயாக உள்ள உன்னை பூமி மீது மோத விட்டு உடைத்தால் உன்னால் மரணம் சம்பவிக்கப்பட்ட அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும். அந்த நிலையைக் காட்டும் விதத்தில்தான் பூஷணிக்காயை உடைக்கும் முன்பாக அதை சிறிது வெட்டி உள்ளே குங்குமத்தைக் கொட்டி பூஜித்தப் பின் அதை உடைப்பார்கள். அதை நீயும் உனக்கு அவர்கள் செய்யும் பூஜையாக ஏற்பாய். இன்று முதல் உன்னைக் கண்டாலே தீய தோஷ ஆவிகள் பயந்து ஒளியும் என்ற அளவு உனக்கு சக்தி தருகிறேன்.  தீய தோஷங்களை  நீ பூஷணிக்காய்  உருவில் இருந்தபடி அழிப்பாய் 

கூஷ்மாண்டா, உன்னை தானமாக தந்தால் அதைத் தந்தவனின் துயரங்கள் விலகும், அவனது தீய தோஷங்களும் விலகி ஓடும். முக்கியமாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்துள்ள உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூஷணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அ
தைப் பெற்றுக் கொள்வார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வார்கள். '' என்று அருள் புரிந்தார்.


அதனால்தான் பூஷணிக்காயை பூஜை செய்து உடைப்பதின் மூலம் தீய ஆவிகளை கூஷ்மாண்டனிடம் அனுப்பி விடுவதாகவும், அவற்றை அவன் கொன்றுவிட்டதைக் குறிக்கும் வகையில் குங்குமம் அந்தக் காயின் உள்ளே உள்ள தண்ணீருடன் கலந்து விட, அந்தக் காயை உடைத்ததும்- தீய ஆத்மாக்களை கொன்று  விட்ட நிலையைக் குறிக்கும் விதத்தில், அந்தக் காய் சிவப்பு நிறத்தில் உடைந்து விழுகிறது என்றும், அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும்  தீய ஆவிகள் பூஷணிக்காயில் இருந்து வெளிவரும் அந்த சிவப்பு நிறத்தைக் காணும்போது, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி விடுமாம். அதனால்தான் தீய ஆவிகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூஷணிக்காயை வீட்டின் வாயிலில் முதலில்  கட்டி தொங்க வைத்து சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பதும் ஐதீகம் ஆயிற்று.  பூஷணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.


அது போலவே பணம் தராமல் பூஷணிக்காயை தானமாக பெறலாகாது .அப்படி தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, 'இன்று என் செய்கையினால் நான் பெற்ற ஒருநாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன் ' என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டால் அது தானமாக
பெற்றதாகாது. தீய பலன் தானம் பெற்றவரை சேராது என்பது ஐதீகமாகவும் ஆயிற்று. இதனால்தான் இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்ட பூஷணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக