செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சிவபெருமான் உடலில் தோன்றிய கொப்புளங்கள்!

தொடர்புடைய படம்காவிரியாற்றங்கரையில் உள்ள திருச்சாத்தமங்கை என்னும் ஊர் சிவனருள் பெற்ற புண்ணியபூமி. படைப்புத் தொழில் செய்யும் நான்முகன், சிவபெருமானைப் தொழுது அருள்பெற்ற தலம். இங்குள்ள கோயிலில் மலர்க்கண்ணியம்மை உடனாய அவயந்திநாதர் என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார்.

இங்கு சிவத்தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்தார் திருநீலநக்கர். எப்போதும் சிவனையே சிந்திப்பவராய் வாழ்ந்து வந்த இவர் ஒரு மார்கழித் திருவாதிரை நாளில் சிவதரிசனத்திற்காக தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நீல நக்கருக்கு உதவியாக அவருடைய மனைவி தொழுகைக்கான பூக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அயவந்திநாதர் சிலையில் விடம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட அம்மையாரின் மனம் துடித்தது. செய்வதறியாமல் தன் வாயினால் ஊதி லிங்கத்தின் மீது சென்ற பூச்சியை கீழே விழச் செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது எச்சில் துளிகள் ஈசனின் சிலையில் பட்டுவிட்டது.

இதைப் பார்த்த திருநீலநக்கருக்கு கோபம் அதிகமாகி விட்டது. சிவஅபசாரம் செய்த தன் மனைவியை நோக்கி வெகுண்டு எழுந்தார். "அறிவில்லாதவளே! அபசாரம் செய்துவிட்டாய். எம்பெருமானின் மேனியை எச்சில்படுத்திவிட்டாயே!'' என்று அடிக்க கையை ஓங்கினார்.

ஆத்திரம் கொண்ட கணவர் முன்னால் ஒடுங்கி நின்ற அந்தப் பெண்மணி மெல்லிய குரலில், "பொன்னார் மேனியனின் திருமேனி புண்ணாகாமல் இருக்க சிலந்தியை ஊதி விரட்டியது பாவமா?'' என்று சொல்லி அழுதாள்.

அவரோ சமாதானம் ஆகவில்லை. "ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நீ செய்த பழிச்செயலை ஒருபோதும் என்மனம் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சிவ அபச்சாரம் செய்த நீ இன்றுமுதல் என்மனைவி அல்ல. நான் உன் கணவனும் அல்ல,'' என்று சொல்லி தொழுகையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இல்லம் நோக்கி கிளம்பினார்.

நீலநக்கரின் மனைவி வேறு வழியின்றி கோயிலேயே தங்கிவிட்டார். ஈசன் முன்னால் அமர்ந்து, "உனக்கு பூச்சேவை செய்தேன். ஆனால், நான் சூடும் பூவுக்கு காரணமானவரிடம் இருந்து பிரித்து விட்டாயே,'' என்று கதறினார்.

அன்றிரவில், நீலநக்கர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இறைவன் கனவில் தோன்றி, "நீலநக்கரே! என் உடம்பைப் பாரும். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. என்மேல் கொண்ட அன்பினால் செய்த செயலுக்கு அவள் மேல் நீர் ஆத்திரம் கொண்டது முறையா?'' என்றார்.

கண்விழித்த நாயனார் பதறியடித்து மனைவியைத் தேடி கோயிலுக்கு ஓடிவந்தார். ஈசனே கனவில் தோன்றி தன்னிடம் குறைபட்டுக் கொண்டதை அவரிடம் தெரிவித்ததோடு, உண்மையான அன்புடன் தவறே செய்தாலும் கூட இறைவன் மன்னிப்பான் என்ற உண்மையை உணர்வதாகவும், மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காகவும் வருத்தப்படுவதாகச் சொன்னார்.

இருவரும் அவயந்திநாதரைப் பணிந்து வணங்கினர். அன்று முதல் தம்பதியர் இருவரும் காதலால் ஒன்றிணைந்து சிவ வழிபாட்டை தொடர்ந்து வந்தனர்.

சிவயாத்திரையாக பல தலங்களுக்கும் சென்று வந்த திருஞானசம்பந்தர் ஒருசமயத்தில் திருச்சாத்த மங்கைக்கு வருவதாக அறிந்தார் நீலநக்கர். அவயந்தி நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்கசூளாமணி அம்மையார் ஆகியோரை மேளதாளத்துடன் வரவேற்றார். அவர்களோடு அவயந்திநாதரை வழிபாடு செய்து மகிழ்ந்தார். திருஞானசம்பந்தரையும் மற்ற  அடியவர்களையும் பிரிவதற்கு நீலநக்கரால் முடியவில்லை. அவர்களோடு நீலநக்கரும், அவரது மனைவியும் உடன் புறப்பட்டனர்.

திருஞானசம்பந்தருக்கு ஆச்சாள்புரத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்கும் பாக்கியத்தைப் பெற்ற நீலநக்கர். அங்கு தோன்றிய சிவபரஞ்சுடரொளியில் கலந்து சிவப்பேறு பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக