தீபாவளி ஸ்பெஷல் - எத்தனை மணிக்கு எண்ணெய்க்குளியல் – வழிகாட்டிய மஹா பெரியவர்
தீபாவளிக் குளியல் நேரம் குறித்து மறைந்து காஞ்சி மகாப்பெரியவர் கூறியுள்ள அறிவுரை நம்மிடம் பொதுவாக உள்ள சந்தேகத்திற்குத் தீர்வாக உள்ளது. அவர் கூறியுள்ளதாவது, "இந்து தர்ம சாஸ்திரப்படி சூர்யோதயத்துக்கு முன் அப்யங்கனம் (எண்ணெய்க் குளியல்) செய்யக்கூடாது என்பது விதி. விதியை அப்படியே பின்பற்றுவது சாதரண மானிடர் இயல்பு. ஆனால் பூதேவி அப்படிப்பட்டவளா? வித்தியாசமான ஒரு விதியை பகவானிடமிருந்து வரமாக வாங்கி தன் பிள்ளைக்கு சிறப்பை தேடிக் கொடுத்து விட்டாள். தீபாவளி நாளில் மட்டும் சூரியோதயத்துக்கு முந்தி வரும் அருணோதய காலத்தில் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்காக பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள்.
அருணோதயம் என்றால் அருணன் உதயமாகும் நேரம். அருணன் என்பவன் சூரியனுடைய தேரோட்டி. நல்ல சிவப்பு நிறத்திற்கு சொந்தகாரன்.சூரியன் அடிவானத்தில் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த காலத்துக்கு முன்பே,வானில் சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத் தான் அருணோதயம் என்கிறாம். ஒரு முகூர்த்தம் என்பது நாற்பத்தெட்டு நிமிட கணக்கு.
அதனால் தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். விடிவதற்கு முன்னால் எண்ணெய்க் குளியல் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வதும் தவறு.எதையும் நல்ல நேரத்தில் செய்யும் போது அதன் பலன் இரட்டிப்பாகும் என்று கூறியுள்ளார். தனது அடியவர்களுக்கு எப்போதும் நன்மையானதையே கூறி வழிகாட்டும் காஞ்சி மகானின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர