புதன், 5 ஜூலை, 2017

தை அமாவாசை ஏன் சிறந்தது?

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, தை அமாவாசை ஏன் சிறந்தது?






தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார்.





இந்த முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  

தை அமாவாசையின் முக்கியத்துவம்...


ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பிறகு தை மாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.




பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வகையில் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் வகையில் கொடுக்கப்படவேண்டிய தை அமாவாசை தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

எப்படி செய்ய வேண்டும்? 


மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த  நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி

மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இதற்கு உகந்த நேரம்  மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.


மேலும் தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழுமனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்  என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.


தை அமாவாசையன்று, முன்னோர்களின் பெயரால் பிறருக்கும் உதவிடுவோம்,  முன்னோர்களின் ஆசிகளுடன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக