திங்கள், 26 டிசம்பர், 2016

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம்


ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசம் 




ஸ்ரீ ராம ஜெயம்

  பயன்

அஞ்சனை மைந்தன்
அனுமனை போற்ற.நெஞ்சினில் வரும் பலம் 
வஞ்சனை தீர்க்கும்
வாயுவின் மகனால் 
வல்வினை தீரும் நிஜம்
  
கவசம் 

 சிரஞ்சீவி அனுமன் என்  சிரசினை காக்க
ஸ்ரீராம பக்தன் என் சீர் சடை  காக்க
 நெறி மேவி நின்றவன்-என் நெற்றியை காக்க
புவியினில் நீண்டவன்-என் புருவங்கள் காக்க 
 இமயத்தில் நிற்பவன்-என் இமைகளைக் காக்க
சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க 
வீரத்தின் வீரன்;-என் விழிகளை காக்க
வீசிடும் காற்றோன்-என் விழி மூடி காக்க  
நாரணப் பிரியன்-என் நாசியை காக்க
காரணப் பொருளே- என் காலமே காக்க 
முழுஞானம் கொண்டவன்-என் மூக்கினை காக்க
முன்நின்ற வானரன்-என் வாயினை காக்க 
 வெற்றிலை பிரியன்-என் வெற்றியை காக்க
பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க 
பல் நலம் கொண்டவன்-என் பற்களைக் காக்க
நல் மனம்; கொண்டவன்-என் நாவினைக் காக்க
  நாடியே வந்தவன்-என் நாடியை காக்க
தேடியே வந்தென்னை தேவனே காக்க
 கரிமலை கடந்தவன்-என் கன்னங்கள் காக்க
கடுகதியில் வந்தென் கழுத்தினை காக்க
 கையிலையின் வாசன்-என் கைகால்கள் காக்க
கதிரொளியாய் வந்து கருணையாய்க் காக்க 
நல்லன செய்பவன்-என் நகங்களைக் காக்க
அல்லனதீர்ப்பவன்-என் அகம் தனை காக்க  
நெடு மேனியானவன்-என் நெஞ்சினைக் காக்க
சுடுமேனி யாய் வந்த சூட்சுமம் காக்க 
இடுக்கண் கழைபன்-என் இடுப்பினை காக்க
இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க
 தோழமை கொண்டவன்-என் தோழ்களை காக்க
தோன்றிய புகழவன்-என் தோலினைக் காக்க 
குரங்கினத் தவைவன்-என் குறியினைக் காக்க
குருவாகி வந்து-என் குருதியை காக்க
 திசையெலாம் திரிந்தவன்-என் தசையினை காக்க
விசையெனப் பாய்ந்து-என் செவிகளை காக்க
 நடுவாகி நின்று என் முதுகினை காக்க
நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க 
ஒன்பது வாசலை ஓப்பிலா காக்க
புண்படா வண்ணமே புவனமே காக்க 
இளமையும் முதுமையும் இனியவா காக்க
இரவிலும் பகலிலும் என்றும் நீ காக்க 
உலகத்தின் நாயகன்-என் உயிரினைக் காக்க
கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க
 நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க
 சிலையற் இருந்தென்னை சீலனார் காக்க 
இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க
சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க
 உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க
கடல்தாண்டி வந்தவன்-என் குடல்களைக் காக்க
 வளமிக்க வாழ்வினை வளத்துடன் காக்க 
வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க
 எம்மை எந்நாளும்- உன் நிழலினில் காக்க
இம்மையிலும் மறுமையிலும் ஈடிலா காக்க
 நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க
 தாய் மடியில் தவழ்ந்தயென் மேனியை காக்க
 நவகோளின் தோசங்கள் நீக்கி நீ காக்க
தவக்கோலம் கொண்டவன் தரணியை காக்க
 தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க
வாராத செல்வங்கள் வந்திடக் காக்க
 ஈரேழு புவனத்து உறவுகள் காக்க
பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க
 பஞ்ச பூதங்கள் எனை பகைக்காது காக்க
வஞ்சங்கள் இல்லாது மனம் தனை காக்க 
பில்லி பேய் சூன்யங்கள் அணுகாது காக்க
பிள்ளை என்றன்பாய் பிரியமாய் காக்க
 அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க
இரக்கமறு மாந்தர்கள் பகைஇன்றி காக்க 
சிறை சென்று வாடாமல் சீருடன் காக்க
மறையெலாம் போற்றும்-உன் பொன்னடிகள் காக்க
 இல்லாமை நீக்கி எனை இறiவா நீ காக்க
நில்லாத பசி எனை அண்டாது காக்க 
கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க
கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க
 செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க
மெய் வருந்தாமல்-எனை மேன்மையாய்க் காக்க
 புலத்திலும் நிலத்திலும் புகழனார் காக்க
தலத்திலே வந்து உன் தனையனை காக்க  
கொடுவிச யந்துக்கள் கொட்டாது காக்க
கொடுமைகொள் நுண்ணுயிர் வாட்டாது காக்க
 வானமும் வையமும் வளம் பெறக் காக்க
தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க 
நல்லோர்கள் உறவுகள் நலிவின்றி காக்க
வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க 

கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க
-உன் நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க
 மானத்தில் பங்கங்கள் நேராது காக்க
ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க
 நீள்ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க
வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க
 மரணத்தின் வாசலில் மாருதி காக்க
சரணத்தை தந்தெனை மரணத்தில் காக்க
 பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க
பிறவாமை தந்தெனை பிரியாமல் காக்க 
முனிவரும் தேவரும் எனக் அருள் செய்யபனிதரும் திங்களின் ழுலனே காக்க
 இனிவருங் காலங்கள் இனித்திட காக்க
பிணிவருந்தாமல் என் துணிவினை காக்க 

பார்க்க நீ பார்க்கபாவங்கள் போக்க
தீர்க்க நீ தீர்க்க தீ வினைகள் தீர்க்க 
வார்க்க நீ வார்க்க-உன் அருளினை வார்க்க
காக்க நீ காக்க உன்கதி தந்து காக்க 
ஆஞ்சநேயனே காக்க வாயுதேவனே காக்க
வீர அனுமனே காக்கராம பக்தனே காக்க-
ஸ்ரீராம பக்தனே காக்க

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனின் எளிய கவசத்தை படித்து பயன் பெறுங்கள்.நான் அறிந்த தகவல்கள் பல பேருக்கும் கிடைக்க அருளிய  இறைவனுக்கு என் நன்றிகள் பல. 

உங்கள் தோழி ஈஸ்வரி 







அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி 

என் ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.கடவுள்  மீது  நான் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் ,இந்து சமயத்தில் பிறந்து நம் கடவுள்களின் சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்தான் என்னை இணையத்தளத்தில் எழுத தூண்டியது.'அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பது உண்மை.நான் அறிந்த,தெரிந்த விஷயங்களை என்னைப் போன்ற சக நண்பர்களும் படித்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

என் பதிவைப்  படித்து உங்கள் கருத்தை தெரிவித்தால்,மேலும் மேலும் நான் தொடர்ந்து எழுத தூண்டுகோலாக அமையும்.

அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளை வாசிக்கலாம்.


 மாலையில் 1008 முறைக்கு குறையாமல் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹேராமதூதாய தீமஹி தன்னோ அனுமன் பிரசோதயாத்

ன்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.

அனுமனை வணங்குவதன் பலன்: 

அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

என்ன மாலை அணிவிக்க வேண்டும்?

 ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.
அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த 
வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். 


எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். 

வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.


வெண்ணெய் சாத்துவது ஏன்?

ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

கெட்டுப்போகாத வெண்ணெய்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறமுள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.


ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். 

ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்  பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். 

எந்தக்கிழமையில் என்ன செய்வது?

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

அனுமன் பாட்டு: அனுமன் ஜெயந்தியன்று வாயுபுத்திரர் அனுமனை நினைத்து, இந்தப் பாடலைப் பாடினால் கல்விவிருத்தி, அறிவுவிருத்தி, மனநிம்மதி, செல்வவளம் பெறலாம்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்எம்மை அளித்துக் காப்பான்.

பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது?

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவ முகத்துக்கு படையல் அவசியமில்லை.

பக்திக்கு தேவை மனம்

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். மாணவர்களே! அனுமன் இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட வேண்டியிருந்தது. இவரால் இது முடியுமா என மற்ற குரங்குகள் சந்தேகப்பட்டன. அவர் என்ன செய்தார் தெரியுமா? ஆழ்ந்து கண்களை மூடி ஸ்ரீ ராமனைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்றார். ராமநாம மகிமையால், பெரிய உருவமெடுத்து இலங்கை போய் சேர்ந்தார், என்றார். இதைக் கேட்ட ஒரு சிறுவன் மாலையில் வீடு திரும்பும் போது வழியில் குறுக்கிட்ட கால்வாயைத் தாண்ட நினைத்தான். ஆசிரியர் சொன்னபடியே, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியபடியே கால்வாயைத் தாண்டினான். கண்விழித்து பார்த்தால், தண்ணீருக்குள் கிடந்தான். மறுநாள் ஆசிரியரிடம் நடந்தைச் சொன்னான். மாணவனே! பயந்தபடியே கால்வாயைத் தாண்டியிருப்பாய். ராமனின் நாமத்தை மனதார பயபக்தியுடன் சொல்லியிருக்க வேண்டும். அனுமன் அந்த மந்திரத்தைச் சொல்லும் போது அவருடைய ராம பக்தியை மதிப்பிட அளவுகோலே இல்லாமல் இருந்தது, என்றார். பக்திக்கு தேவை ஈடுபாடுள்ள மனம். அதை அனுமனிடம் கேட்டுப் பெறுவோம்.



இலக்கண பட்டதாரி: சிறந்த கல்விமானான அனுமனை, நவ வ்யாகரண வேத்தா என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.

ராமநாம மகிமை: ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், 

கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.

வால் இல்லை: ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு பாலம் கட்டியபோது, அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி திருப்பணி செய்தவர் நளபிரம்மா என்பவர் ஆவார். இவர் ஆஞ்சநேயரைப் போலவே தோன்றினாலும் இவருக்கு வால் கிடையாது.

எதுவும் கேட்காத இதய தெய்வம்: அனுமன் ஜெயந்தியன்று, அவரைத் தரிசிக்க வெண்ணெய் வாங்க முடியவில்லை, வெற்றிலை வாங்க முடியவில்லை, வடைமாலை அணிவிக்க முடியவில்லை என்ற வருத்தமெல்லாம் வேண்டாம். பணமிருந்தால் இதை செய்யலாம். முடியாத பட்சத்தில், அவருக்குப் பிடித்தமான ஸ்ரீராம ஜெயம் சொல்லி வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர்பாராத இதயதெய்வம் அவர்.

என்றும் சிரஞ்சீவி அனுமன் 

 ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்  போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன், என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார். தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.


நான் நன்றி சொல்வேன் என் சீடனுக்கு: அனுமனின் தலைவனான ராமனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நன்றி மறவாமை. எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், கஷ்டப்பட்ட காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது. பகவான் மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது, சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மகாவிஷ்ணு, அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக, இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும். உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத்தான் இருப்பேன்,என்றார்.அனுமனை வணங்கினால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அனுமன் இன்றி ஸ்ரீ ராமன் இல்லை, ஸ்ரீ ராமன் இன்றி அனுமன் இல்லை.

வாழ்க ஸ்ரீ ராம நாமம். வளர்க ஸ்ரீ ராம பக்தி.

நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.
நன்றி வணக்கம்.

புதன், 21 டிசம்பர், 2016

சபரிமலை ஐயப்பன் வரலாறு


சபரிமலை ஐயப்பன் வரலாறு 



திருப்பாற்கடலை கடைந்த போது  அசுரர்களை மயக்குவதற்காக திருமால் மோகினி வடிவம் எடுத்தார். அந்த வடிவைக்கண்டு பரவசம் அடைந்த சிவபெருமான் அவளை தழுவி நின்றார். அவ்வேளையில் சிவவிஷ்ணுவின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றிய தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது பிறப்பிற்கு காரணம் இருந்தது. 

கரம்பன் என்ற அசுரனின் மகளான மகிஷி எருமைத்தலையுடன் பிறந்தாள். இவளது சகோதரன் மகிஷாசுரனை சண்டிகாதேவி கொன்றாள் என்பதற்காக அச்செயலுக்கு பரிகாரம் காண்பதற்கு விந்தியமலைக்கு சென்று தவமிருந்தாள். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை கேட்டாள். பிரம்மா மறுக்கவே, ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். அந்த மகிஷியை அழிக்கவே, தர்மசாஸ்தாவின் அவதாரம் அமைந்தது.
பின்பு பூவுலகிற்கு மகிஷி வந்தாள். அவளை அழிக்கும் எண்ணம் கொண்ட சிவன் சுந்தரன் என்ற ஆண் மகிஷத்தை உருவாக்கினார். மகிஷி அவன்மீது காதல் கொண்டாள். அவர்கள் இணைந்து வாழ்ந்துவந்தனர். தர்மசாஸ்தா ஆரம்பத்தில் சிவனுடன் கயிலாயத்திலேயே வாழ்ந்தார். பின்னர் மகிஷியை அழிப்பதற்காக 12 ஆண்டுகள் மானிடனாக வாழ்வதற்கு பூவுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வாறு பூவுலகில் அவர் பிறந்தநாளே மார்கழி மாதம், சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.
  

காட்டில் விழுந்துகிடந்த அந்த குழந்தையை பந்தள மன்னர் ராஜசேகரன் கண்டார். குழந்தை இல்லாத அவர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தையின் கழுத்தில் கனகமணி மாலை ஒன்றை சூட்டி, மணிகண்டன் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்.


 குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றதும், மகாராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். மணிகண்டன் சென்ற நல்வேளையில் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கென்று குழந்தை பிறந்தாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை வஞ்சனை நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி, ராஜராஜனுக்கு முடிசூட்டும்படி கூறினார்.

மகாராணியும் ஐயப்பனை கொல்வதற்காக தலைவலி வந்ததுபோல நடித்தார். மருத்துவர்கள் மூலமாக புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி சரியாகும் என கூறச்செய்தாள். மணிகண்டனும் காட்டிற்கு சென்றான். காட்டிலிருந்த பூதகணங்கள் அவரை வரவேற்றன. முனிவர்கள் அவரை பொன்னம்பலத்திற்கு அழைத்துச்சென்று, ரத்தின சிம்மாசனம் அமைத்து, பூஜித்து வழிபட்டனர். இந்த இடமே தற்போது மணிகண்டன் ஜோதியாக காட்சிதரும் பொன்னம்பலமேடு ஆகும்.


 அங்கிருந்தபடியே அவர் மகிஷியுடன் போரிட்டார். அவள் அழுதை நதிக்கரையோரம் விழுந்தாள்.
தன்னை மிதித்துத்தள்ளியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவனே என்பதை உணர்ந்த மகிஷி உயிர்பிரியும் நேரத்தில் அவரை வணங்கி நின்றாள். ஐயப்பன் அவளது உடலை தன் கரத்தால் தடவவும், அவள் அழகிய உரு பெற்றாள்.


 தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வேண்டினாள். இப்பிறப்பில் பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்திருப்பதைக்கூறிய ஐயப்பன் தனது இடப்பாகத்தில் சிறிது தூரத்தில் நிலைகொள்ளும்படி அருள்புரிந்தார். அவளே மஞ்சமாதா என அழைக்கப்படுகிறாள்.

 பின்பு புலிகளுடன் ஐயப்பன் நாடு வந்தார். அவரது திறமையை அறிந்த மக்களும் மன்னரும் தலை தாழ்த்தி வணங்கினர். எதிரிகளும் மன்னிப்பு கேட்டனர்.


 






பின்பு தனது 12 வயது முடிந்துவிட்டதை மன்னரிடம் உணர்த்திய மணிகண்டன், தான் ஒரு தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொண்டார்.
அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார். அதன்படியே பந்தளராஜா கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.
பரசுராமரின் உதவியுடன் மகர சங்கரம நாளில் சனிக்கிழமையன்று கோயில் உருவாக்கப்பட்டது. மாளிகைப்புறத்தம்மை, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இதனால்தான் சனிக்கிழமைகளில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவருவது இரட்டிப்பு பலன் தரம்.

ஐயப்பா சுவாமி சரண கோஷங்கள்



ஐயப்பா சுவாமி சரண கோஷங்கள்


1) ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா.
2) ஒம் கன்னிமுல கணபதி பகவானே சரணம் ஐயப்பா.
3) ஒம் சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா.
4) ஒம்ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா.
5) ஒம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா.
6) ஒம் அச்சங் கோவில் அரசே சரணம் ஐயப்பா.
7) ஒம் ஆரியங் காவல் அய்யாவே சரணம் ஐயப்பா.
8) ஒம் குளத்து பிழை பாலகரே சரணம் ஐயப்பா.
9) ஒம் முத்தையனுர் ஐயனே சரணம் ஐயப்பா.
10) ஒம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா.
11) ஒம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா.
12) ஒம் வள்ளி மனாளன் தம்பியே சரணம் ஐயப்பா.
13) ஒம் சிவசக்தி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா.
14) ஒம் கந்தன் தம்பியே சரணம் ஐயப்பா.
15) ஒம் அம்பிகையின் பாலனே சரணம் ஐயப்பா.
16) ஒம் அரனார் மைந்தனே சரணம் ஐயப்பா.
17) ஒம் என் குரு சுவாமியே சரணம் ஐயப்பா.
18) ஒம் ஏழுமலையான் சுதனே சரணம் ஐயப்பா.
19) ஒம் ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா.
20) ஒம் பம்பையின் பாலனே சரணம் ஐயப்பா.
21) ஒம் பந்தள ராஜ குமாரனே சரணம் ஐயப்பா.
22) ஒம் பாண்டிய குல தீபமே சரணம் ஐயப்பா.
23) ஒம் புலிப்பால் கொண்டு வந்தவரே சரணம் ஐயப்பா.
24) ஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா.
25) ஒம் ஆபத் பாந்தவரே சரணம் ஐயப்பா.
26) ஒம் இருமுடிப் பிரியரே சரணம் ஐயப்பா.
27) ஒம் எசன் மகனே சரணம் ஐயப்பா.
28) ஒம் உமையாள் சுதனே சரணம் ஐயப்பா.
29) ஒம் ஊக்கம் தருபவரே சரணம் ஐயப்பா.
30) ஒம் எங்கள் நாயகனே சரணம் ஐயப்பா.
31) ஒம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா.
32) ஒம் ஐயம் தீர்ப்பவரே சரணம் ஐயப்பா.
33) ஒம் ஒப்பற்ற தேவனே சரணம் ஐயப்பா.
34) ஒம் ஓங்கு புகழ் சுவாமியே சரணம் ஐயப்பா.
35) ஒம் ஒய்தார்ய சீலனே சரணம் ஐயப்பா.
36) ஒம் அகிலாண்ட கோடி நாயகனே சரணம் ஐயப்பா.
37) ஒம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா.
38) ஒம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா.
39) ஒம் நெய் அபிஷேகப் பிரியரே சரணம் ஐயப்பா.
40) ஒம் கணபதி குன்றமே சரணம் ஐயப்பா.
41) ஒம் காளகட்டி ஆஸ்ரமே சரணம் ஐயப்பா.
42) ஒம் அமுதா நதியே சரணம் ஐயப்பா.
43) ஒம் அமுதையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா.
44) ஒம் அமுதா மேடே சரணம் ஐயப்பா.
45) ஒம் கல்லிடாங் குன்றே சரணம் ஐயப்பா.
46) ஒம் முக்குழித்தாவரிமே சரணம் ஐயப்பா.
47) ஒம் இலவன் தாவளமே சரணம் ஐயப்பா.
48) ஒம் கரி விலந்தோடே சரணம் ஐயப்பா.
49) ஒம் கரி மலை ஏற்றமே சரணம் ஐயப்பா.
50) ஒம் கரி மலை உச்சியே சரணம் ஐயப்பா.
51) ஒம் சின்னயானே தாவளமே சரணம் ஐயப்பா.
52) ஒம் பெரிய யானே தாவளமே சரணம் ஐயப்பா.
53) ஒம் பம்பா தீரமே சரணம் ஐயப்பா.
54) ஒம் பம்பா ஜோதியே சரணம் ஐயப்பா.
55) ஒம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா.
56) ஒம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா.
57) ஒம் சபரி பிடமே சரணம் ஐயப்பா.
58) ஒம் சரங்குத்தியாவே சரணம் ஐயப்பா.
59) ஒம் பொன்னம்பல மேடே சரணம் ஐயப்பா.
60) ஒம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா.
61) ஒம் யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா.
62) ஒம் வாவரு சுவாமியே சரணம் ஐயப்பா.
63) ஒம் கருப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.

64) ஒம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா.
65) ஒம் நாகராஜாக்களே சரணம் ஐயப்பா.
66) ஒம் மாளிகா புரத்து லோக மஞ்ச மாதவே சரணம் ஐயப்பா.
67) ஒம் கருணே தெய்வமே சரணம் ஐயப்பா.
68) ஒம் ஏத்தமானூர் அப்பன் மகனே சரணம் ஐயப்பா.
69) ஒம் கண்ணன் மகனே சரணம் ஐயப்பா.
70) ஒம் குருவாயுரப்பன் மகனே சரணம் ஐயப்பா.
71) ஒம் மாதா பிதா குரு தெய்வமே சரணம் ஐயப்பா.
72) ஒம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா.
73) ஒம் ராஜா ராஜேஸ்வரி மகனே சரணம் ஐயப்பா.
74) ஒம் மீனாக்ஷி மகனே சரணம் ஐயப்பா.
75) ஒம் காமாட்ஷி குமாரனே சரணம் ஐயப்பா.
76) ஒம் மதகஜ வாஹனனே சரணம் ஐயப்பா.
77) ஒம் கரும்புலி வாஹனனே சரணம் ஐயப்பா.
78) ஒம் புத நாத சுவாமியே சரணம் ஐயப்பா.
79) ஒம் பிரம்மச்சாரியப்பிரியரே சரணம் ஐயப்பா.
80) ஒம் அமரர் துயர் திர்த்தவரே சரணம் ஐயப்பா.
81) ஒம் ஏகாந்த வாசனே சரணம் ஐயப்பா.
82) ஒம் சத்ய சொருபனே சரணம் ஐயப்பா.
83) ஒம் பூரண புஸ்பகலா நாதரே சரணம் ஐயப்பா.
84) ஒம் ஐயப்ப தெய்வமே சரணம் ஐயப்பா.
85) ஒம் சிங்க வாஹனே சரணம் ஐயப்பா.
86) ஒம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா.
87) ஒம் பகவதி பாலனே சரணம் ஐயப்பா.
88) ஒம் கருமாரியம்மன் சுதனே சரணம் ஐயப்பா.
89) ஒம் ஈடுபாடு தெய்வங்களே சரணம் ஐயப்பா.
90) ஒம் சங்கீதப் பிரியரே சரணம் ஐயப்பா.
91) ஒம் மோஹன ரூபனே சரணம் ஐயப்பா.
92) ஒம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா.
93) ஒம் நாரனார் மகனே சரணம் ஐயப்பா.
94) ஒம் பரமசிவன் பாலனே சரணம் ஐயப்பா.
95) ஒம் மாமலை வாசனே சரணம் ஐயப்பா.
96) ஒம் மணிகண்ட பிரபுவே சரணம் ஐயப்பா.
97) ஒம் பஞ்சலோக மூர்த்தயே சரணம் ஐயப்பா.
98) ஒம் சிங்கார வேலன் சோதரனே சரணம் ஐயப்பா.
99) ஒம் சேவிப்போர் கானந்த முர்த்தியே சரணம் ஐயப்பா.
100) ஒம் கன்னிகாரரை காக்கணும் சுவாமியே சரணம் ஐயப்பா.
101) ஒம் சரண கோஷப் பிரியரே சரணம் ஐயப்பா.
102) ஒம் குற்றங்களே பொறுக்கணும் சுவாமியே சரணம் ஐயப்பா.
103) ஒம் காத்து ரக்ஷிக்கணும் சுவாமியே சரணம் ஐயப்பா.
104) ஒம் வழி நடத்தனும் சுவாமியே சரணம் ஐயப்பா.
105) ஒம் மலை ஏற்றணும் சுவாமியே சரணம் ஐயப்பா.
106) ஒம் மீண்டும் மீண்டும் தரிசனும் தரனும் சுவாமியே சரணம் ஐயப்பா.
107) ஒம் ஜோதி தரிசனும் தரனும் சுவாமியே சரணம் ஐயப்பா.
108) ஒம் சித்தி விநாயக சிவசக்தி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா.



ஒம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், செய்த குற்றங்களை பொறுத்து, காத்து, ரட்சிக்க வேணுமாய், காசி, ராமேஸ்வரம் பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் , ஒம் ரீம் ஹரி ஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா !........



















செவ்வாய், 29 நவம்பர், 2016

தசாவதார விளக்கம்

தசாவதார விளக்கம்


‘உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார்.


வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.


பெருமாள் எடுத்த பத்து அவதாரங்கள்:


1.மச்சாவதாரம்:

திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.


2.கூர்மாவதாரம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.


3.வராக அவதாரம்: 

பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


4.நரசிம்ம அவதாரம்: 

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

5.வாமன அவதாரம்: 

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


6.பரசுராம அவதாரம்: 

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


7.ராமாவதாரம்: 

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

8.பலராம அவதாரம்

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

9.கிருஷ்ணாவதாரம்: 

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

10.கல்கி அவதாரம்: 

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என கூறப்படுகின்றது.





ஞாயிறு, 27 நவம்பர், 2016

27வகையான உபவாச விரதங்கள்

27வகையான உபவாச விரதங்கள் 

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.


2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.


6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.


21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.


23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.


25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.


26. மாமிச உணவுகள் மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


27. வாழைக்காய் பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.


– இந்த உபவாச விரதங்களில் உங்கள் உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.