சனி, 29 ஜூலை, 2017

பிரதோஷத்தின் வகைகளும் பயன்களும்


சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவவழிபாடு செய்தல் மிக விஷேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி (சந்திரன்) நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் (புத்தியும் நன்றாகும்) மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

பொதுவாக வளர் பிறையிலோ, தேய் பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது பிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது மஹா பிரதோஷமாகும். பிரதோஷம் அன்று மாலை வேலையில் (4.00 மணி முதல் 6.30 மணி வரை) அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று எல்லாம் வல்ல பெருமானை வழிபடுங்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் கிட்டும். 




01. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

02. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு (பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடுதுறை போல்) செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

03. மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தம பலனைத் தரும்.

04. நட்சத்திர பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய "திரயோதசி" திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

05. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை" தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

06. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று "மரகத லிங்கேஸ்வரருக்கு" அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

07. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

08. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

09. மகா பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட "சுயம்பு லிங்க தரிசனம்" செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீ வாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்பகோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா_பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை "ஏகாட்சர பிரதோஷம்" என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின் விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்ம பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். "நான்" என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது "சட்ஜ பிரபா பிரதோஷம்". தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்டதிக் பிரதோஷம்: ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகா பிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.*
   

01 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம்  நல்ல மங்களங்களைத் தரும்.

02 திங்கட்கிழமை பிரதோஷ தரிசனம்  நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.

03 செவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம்  பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.

04 புதன்கிழமை பிரதோஷ தரிசனம்  புத்திரப்பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.

05 வியாழக்கிழமை பிரதோஷ தரிசனம்  குருவருளோடு திருவருளும் கைகூடும். 

06 வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்


07 சனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்ட லட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹா பிரதோஷம் என்கிறார்கள்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும். இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் : மிகவும் சிறப்பு வாய்ந்தது.

திங்கள், 24 ஜூலை, 2017

அம்மனுக்கு வளையல் அடுக்கும் ஆடிப்பூரம்

என் இணையத்தளத்தை காண  வந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய காலை வணக்கம்.அம்மனைப் பற்றி சொல்வது  நான் செய்த புண்ணியம் எனலாம்.எத்தனையோ பேர் இணையத்தில் எழுதினாலும் என் மூலமாக பல நல்ல விஷயங்கள் பிறருக்கு போய் சேருவது   மிகவும் சந்தோஷத்தை  அளிக்கிறது. 

அம்மனுக்கு வளையல் அடுக்கும் ஆடிப்பூரம் 


ஆடிப் பூரம் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள்.  தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.
ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. 
வளையல் அணியவே புற்றில் இருந்த வெளியே வந்த அம்மன் பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. 
சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? 

ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. 

கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியா பாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். 


இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.
இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

நாமும் ஆடிப்பூரம் அன்று அம்மன் கோவிலுக்கு  சென்று அம்மனின் வளையல் அடுக்கு அலங்காரத்தை கண்டு களித்து  இன்புற்று வாழ்வோமாக 
என்றென்றும் என்பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.உங்கள் கருத்துக்களை சொன்னால் மேலும் நான் பல தலைப்புகள் எழுத மிகவும் உறுதுணையாக இருக்கும் .

நன்றிகள் பல 

வாழ்க வளமுடன் 
உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி சரவணன் 



சத்ய நாராயண பூஜையின் மகிமையை விளக்கும் கதை


சத்ய நாராயண பூஜையின்  மகிமையை  விளக்கும் கதை 

சிறப்பான விரதங்களில் சத்ய நாராயண விரதமும் ஒன்று. பகவான் மகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது இது.

இன, மத, மொழி பேதம் இல்லாமல் எவரும் இந்த விரதம் இருக்கலாம். மாதந்தோறும் பௌர் ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமா வாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபா வளி ஆகிய நாட்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், விரத பூஜைகளைச் செய்வதுடன் அதன் பெருமைகளை விளக்கும் கதைகளையும் கேட்டால் நல்ல பலன் கிடைக் கும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடி யார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் (புரா ணங்களையெல்லாம் சொல்பவர்) என்பவர் இந்தக் கதைகளைக் கூறி யதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

நமக்குத் தெரிந்ததைவிடத் தெரியாதவையே அதிகம். அதற்காக, தெரியாததை நம்ப மாட்டேன் என்றோ நம்பக் கூடாது என்றோ சொல்வது நியாயமாகுமா? மனித வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம். இதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்லக் காரணம், பின்வரும் கதைகளைப் படிக்கும்போது சில இடங்களில் நமக்கு நம்பிக்கை ஏற்படாது. உண் மையான தெய்வ அனுபவம், தெய்வ அருள் ஆகியவற்றைப் பெற வேண்டுமென்றால், நமக்குத் தேவை _ முழுமை யான நம்பிக்கை!
ஆகையால், சத்யநாராயண விரத பூஜை முடிந்ததும் புனிதக் கதைகளை பக்தியுடன் படித்து பகவான் அருளைப் பெறுவோம், வாருங்கள்!

அசுரர்கள், தேவர்கள்- யாவராலும் போற்றப்படக் கூடியவர் நாரதர். இரு சாராரும் தங்களது பிரச்னைகளை அவரிடம் சொல்லி, அவை தீர வழியும் கேட்பார்கள். இப்படி அனைவருக்கும் நல்வழி காட்டும் நாரதருக்கே ஒரு பிரச்னை. அவர் முகம் வாடியது.
ஸ்ரீநாராயணர் முன்னால் சென்று நின்றார் நாரதர். அன்பர் மனம் வாடுவதைச் சற்றும் பொறுக்காத பகவான், ‘‘எப்போதும் நாம சங்கீர்த்தனமும் மகிழ்ச்சியுமாக இருக்கும் உன் முகம், இன்று ஏன் இப்படி வாட்டத்துடன் இருக்கிறது?’’ என்று கேட் டார்.

மன பாரத்தை இறக்கி வைக்கும்படி மாதவனே உத்தரவிட்டதால் நாரதர் வாய் திறந்தார்.
‘‘ஸ்வாமி! பரந்தாமா! சதா சுற்றி அலையும் நான் பூலோ கத்துக்கும் சென்றிருந்தேன். அங்கே நான் பார்த்ததை நினைத்தால்... அப்பப்பா! மானிடர்கள் எல்லாம் அவரவர் செயல்களால், மறுபடியும் பிறக்கிறார்கள். அளவில்லாத துயரங்களை அனுபவிக்கிறார்கள். அதைப் பார்த்துதான் என் மனம் வாட்டம் அடைந்தது. துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை மீட்டு, மகிழ்ச்சியோடு வாழ வைக்க நினைக்கிறேன். வழி தெரியவில்லை. அதற்காகத் தங்களிடம் வந்திருக்கிறேன். லட்சுமி நாயகா! பக்தர்களைக் காப்பவரே! மக்கள் கடைத்தேற, அதிக கஷ்டம் இல்லாமல் அவர்கள் கடைப் பிடிக்கத் தகுந்த வழி ஒன்றைத் தாங் கள் காட்டியருள வேண்டும்!’’ என் றார்.
உத்தம பக்தரான நாரதர் போன்ற மகான்களும் பெரியவர்களும் மக்களின் துயரங்களைப் போக்க இறைவனிடம் மன்றாடி இருக்கிறார்கள் என்பதை அறியும் போது, அவர்களின் பரந்த உள்ளம் விளங்குகிறது.

நாராயணர் புன்முறுவல் பூத் தார். ‘‘நாரதா, உன் எண்ணம் புரி கிறது. உயர்ந்த சிந்தனையுடன் எம்மை நாடி வந்திருக்கிறாய். ‘நாராயண... நாராயண...’ என்று எமது திருநாமத்தைச் சொல்லி, உல கெங்கும் பிரசித்தி பெற்ற c, துயரக் கடலில் மூழ்கும் மக்களுக்காக எம்மிடம் வந்திருக்கிறாய். இரக்கம் நிறைந்தவனே, நீ கேட்டதைப் போல, மக்கள் சந்தோஷமாக வாழ வழி இருக்கிறது. சத்யநாராயண விரதத்தைத் தூய பக்தியோடும் ஊக்கத்தோடும் செய்தால் போதும். அவர்கள் எனது பரிபூரணமான அருள் பெறுவார்கள். சகல செல்வங்களையும் அடைவார்கள். பேரன்-பேத்தி, உறவினர்கள் உட்பட குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ்வார்கள். முடிவில் முக்தி அடைவார்கள். உன் விருப்பம் நிறைவேறும். எனது ஆசியும் அருளும் உனக்கு என்றும் உண்டு!’’ என்று வழிகாட்டினார்.
வாட்டம் நீக்க வழி தெரிந்த நாரதர் மகிழ்ந் தார்.
‘‘நீலமேக வண்ணா! தாங்கள் கூறிய சத்யநாராயண விரதத்தை, யாரெல்லாம் செய்திருக்கிறார்கள்? அதனால் உண்டாகும் நன்மைகள் என் னென்ன? இவற்றை தயவு செய்து தாங்கள் சொல்லி அருள வேண்டும்!’’ என வேண் டினார்.
மகாவிஷ்ணு தொடர்ந்தார். ‘‘சத்யநாராயண விரதம் அனுஷ்டிப்பதனால் துன் பங்கள் நீங்கும். இன் பமும் மகிழ்ச்சியும் வளரும். குழந்தை இல்லாதவர்க ளுக்குக் குழந்தை பிறக்கும். பெண்கள், சுமங்கலிகளாக இருப்பார்கள். வியா பாரம் மேன்மேலும் பெருகும். கல்வி யில் மேன்மை அடையலாம். விரதம் இருந்து பூஜை செய்த வர்கள், அதில் கலந்து கொண்டவர் களுக்கு பிர சாதம் தர வேண்டும். இது முக்கியம்!’’ என்ற பகவான், விரத முறை களை விளக்கினார்.

செல்வம் அளித்த சீரிய விரதம்!


புண்ணியத் தலங்களில் உயர்ந்தது காசி.
தாரக மந்திரமான ராம நாமத்தை, சிவபெருமான் சொல்லும் திருத்தலம். அருள் வளத்துடன் பொருள் வளமும் நிறைந்த புண்ணிய பூமி இது.
காசி நகரில் ஒரு பிராமணன் இருந்தான். ஏழ்மையில் உழன்ற அவன், தினந்தோறும் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

பல நாட்களில் போதுமான உணவு கிடைக்காது. அழுக்கேறிய உடை அணிந்திருக்கும் அவனிடம் பொருள் இல்லையே தவிர, பக்தி நிறைய இருந்தது.
அவனது பக்தி, அவன் முன்னால் ஆண்டவனைக் கொண்டு வந்து நிறுத்தியது. உலகத்தைக் காத்து ரட்சிக்கும் பகவான், அந்தணன் முன்னால் மானிட வடிவில் தரிசனம் தந்தார்.
அவன் தனது வழக்கப்படி பகவானை தியானம் செய்து விட்டு, யாசகம் முடிந்து ஒரு மரத்தின் நிழலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தான். வறுமையின் ரேகைகள் உடலெங்கும் தோன்ற உட்கார்ந்திருந்த அந்தணனை அன்போடு பார்த்தார் பகவான்.

‘‘ஐயா! உங்களைப் பார்த்தால் வறுமை தெரிகிறது. இந்த நிலையிலும் நீங்கள் அலைந்து திரிந்து பொருள் தேடுவதைப் பார்த்தால், எனக்கு வேதனையாக இருக்கிறது’’ என்றார் பகவான்.

அந்தணன், ‘‘ஐயா! என்னைப் பார்த்து நீங்கள் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். ஆனால், அந்த பகவானுக்கு என் கஷ்டம் தெரியவில்லை. பசியும் வறுமையும் போட்டி போட்டுத் தாக்கும் என்னைப் பார்த்து, இன்னும் அந்த ஸ்வாமி மனம் இரங்கவில்லை. எனது பாவம் போலிருக்கிறது. நான் கொஞ்ச தூரம் நடந்தாலும் அதிகக்களைப்பு ஏற்படுகிறது. காலை எடுத்து வைக்க முடியவில்லை. பச்... என்ன செய்வது? ஐயா! உங்களைப் பார்த்தவுடன், என் மனம் நிம்மதி அடைகிறது. பகவான் நாராயணனே உங்கள் வடிவில் வந்திருப்பதாக நினைக்கிறேன். எனது பாவங்கள் நீங்கி, நல்லபடியாக வாழ வழி இருந்தால், தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்!’’ என்று கூறினான்.

திக்கலும் திணறலுமாக இருந்தது அவன் பேச்சு. வறுமை அந்த அளவுக்கு அவனை பாதித்திருந்தது.

எந்த பகவான் பெயரைச் சொல்லி வருத்தப்பட்டானோ, அவர் தனக்கு முன்னால் நிற்பதை அறியாத அந்த அந்தணன் கைகூப்பி அவரை வணங்கினான்.

தன் கரங்களால் அவனை வருடிக் கொடுத்த ஸ்வாமி,
‘‘கவலைப்படாதே! நீ வேண்டியபடி துயரங்களைப் போக்கி, எல்லாவிதச் செல்வங்களையும் பெற ஒரு வழி இருக்கிறது. ‘சத்யநாராயண விரதம்’ என்று ஒன்று உண்டு. முறையாக அதை நீ கடைப்பிடித்தால் உனது துயர்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். நீ தேடி அலையும் செல்வம், தேடாமலேயே உன்னிடம் வந்து சேரும். நல் வாழ்வை அடைவாய்!’’ என்றார்.

அந்தணன் முகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
‘‘ஸ்வாமி! எனது தரித்திரம் தீர தெய்வமே வந்து வழி காட்டியதாக நினைக்கிறேன். தாங்கள் சொன்ன அந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறேன். அதற்குரிய வழி வகைகளை தயவுசெய்து சொல்லுங்கள்!’’ என்று வேண்டினான்.
அவனிடம் சத்யநாராயண விரத முறைகளைத் தெளிவாக விவரித்த ஸ்வாமி, அங்கிருந்து மறைந்தார்.
அந்தணன் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.
அவன் சிந்தனை சத்யநாராயண விரதத்திலும், அதற்கு வழிகாட்டிய பெரியவரி டமும் லயித்திருந்தது. விரதத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கவும் பூஜையை நல்ல விதமாகச் செய்து முடிக்கவும் உரிய வழிகளைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்.
மறு நாள்... ‘அந்தணா! கவலைப்படாதே! உனது தரித்திரம் விலகப் போகிறது!’ என்று அறிவிப்பது போல் சூரியன் உதித்தான்.
காலையில் எழுந்த அந்தணன், கர்ம அனுஷ்டானங்களை முடித்து, வழக்கப்படி யாசகம் செய்யக் கிளம்பினான்.

அவன் உள்ளம் அன்று இனம் புரியாத ஆனந்தத்தில் மூழ்கியது. அன்று அவனுக்கு ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அவனைப் பார்த்ததும் ‘‘போ! போ!’’ என்று விரட்டுபவர்கள்கூட அன்று அவனுக்குப் பிச்சை கொடுத்தார்கள். இப்படி விரத பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும் வீடு திரும்பினான் அந்தணன்.
பின்பு தன் உறவினர்களை வரவழைத்தான். குளித்த பின் பக்தியுடனும் ஊக்கத்துடனும் முறைப்படி சத்யநாராயண விரத பூஜையைச் செய்து முடித்தான்.

அன்று முதல் மாதந்தோறும் பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சத்யநாராயண பூஜையையும் விரதத்தையும் தொடர்ந்து செய்தான். சத்யமே வடிவான பகவான் சொன்ன சத்யநாராயண விரதம் பலன் தராமல் போகுமா?
அதன் பலனாக அந்தணனுக்கு உயர்ந்த பதவி கிடைத்தது. ஏழையாக இருந்தபோது அவன் தேடி அலைந்த செல்வம் அவனது வீட்டில் தாண்டவம் ஆடியது. அவன் குடும்பமும் உற்றார் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அந்தணன் அனுசரித்த சத்யநாராயண விரதம், முடிவில் அவனுக்கு முக்தியையும் அளித்தது.
இந்த அந்தணனிடம் இருந்து சத்யநாராயண விரத பூஜையின் மகிமையை விறகு வெட்டி ஒருவன் முதலில் அறிந்து கொண்டதாக சூதபௌராணிகர் கூறினார். 

அறிந்ததைச் செய்ததால் கிடைத்த ஐஸ்வரியம்!



தெய்வம் சொன்ன சத்யநாராயண விரதத்தைத் தவறாமல் செய்து வந்தான் அந்தணன். ஒவ்வொரு பௌர் ணமி அன்றும் மாலை நேரம், தவறாமல் சத்யநாராயண விரத பூஜை நடைபெற்றது.

ஒரு நாள்... ஊர் சுற்றி விறகு விற்கும் ஒருவன், களைப்பு மிகுதியால் தாகம் தணிக்கும் பொருட்டு அந்தணன் வீட்டுக்கு வந்தான்.
அப்போது அங்கு சத்ய நாராயண விரத பூஜை நடந்து கொண்டிருந்தது. ஆர்வத் துடன் அதைக் கவனித்தான் விறகு வெட்டி. பூஜை முடிந் ததும் அந்தணன், அங்கிருந்த அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தான். அதை வாங்கி அங்கேயே சாப்பிட்டான் விறகு வெட்டி.
பிறகு, தனிமையில் இருந்த அந்தணனை நெருங்கினான். ‘‘ஐயா! இப்போது நீங்கள் செய்தது என்ன பூஜை? அதை எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னால், நானும் அதைச் செய்து துயரங்களைப் போக்கிக் கொள்வேனே!’’ என வேண்டினான்.

அந்தணன் அவனிடம் சத்ய நாராயண விரதத் தைப் பற்றியும் அதனால், தான் அடைந்த நன்மைகளையும் விவரித்தான். அந்தணனுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த விறகு வெட்டி,
‘‘உங்களிடம் இருந்து நல்லதைத் தெரிந்து கொண்டேன். இந்த சத்யநாராயண விரதத்தை நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வருகிறேன் ஐயா!’’ என்று சொல்லிவிட்டுத் தனது இருப்பிடம் அடைந் தான்.
மறு நாள் பொழுது விடிந்ததும் அவன் வழக்கம் போல் விறகு விற்கப் புறப்பட்டான். அன்று அவன் கொண்டு வந்த விறகு முழுவதும் விரைவிலேயே விற்றுத் தீர்ந்தது. சத்யநாராயண பூஜையைப் பார்த்து, அந்தப் பிரசாதத்தை உண்டதன் விளைவே இது.
‘நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே, தெய்வத்தின் அருள் நமக்குக் கை கொடுக்கிறதே... அப்படியானால் முழு மூச்சுடன் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்! நம் பிறவி, பலன் உள்ளதாக ஆகிவிடாதா?’ என்று பூரித்துப் போனான் விறகு வெட்டி. இதை அடுத்து, சத்யநாராயண பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் வீடு திரும்பினான்.

அந்தணன் சொன்னபடி முறையாக, மாதம் தவறாமல் சத்யநாராயண பூஜை செய்தான் விறகுவெட்டி. அதன் பலன்...? அவனது வீட்டில் தாண்டவமாடிய தரித்திரம் விலகிப் போயிற்று. அங்கு அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்யத் தொடங்கினர். குடும்பத்தாருடன் அமைதியான வாழ்க்கை நடத்திய விறகு வெட்டி, முடிவில் மோட்சத்தை அடைந்தான்.

நாமும் நம்மால் இயன்ற பூஜைகளை செய்து பலன் பெறுவோமாக 

வெள்ளி, 21 ஜூலை, 2017

ராகு கால நேரத்தில் துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?



ராகு கால நேரத்தில் துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்? 

ராகு, கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.


திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து
வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.


செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி,
தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நிவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.


வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நிவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.


வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நிவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.


சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி,
காய்கறி கலந்த அன்னத்தை நிவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.  

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?



பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.

பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.  


வியாழன், 20 ஜூலை, 2017

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் !!!


நல்வினைக்கான நன்மைகள்--கருடபுராணம்  




1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பர்.2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்3 பசு கன்றுடன் தானம்  கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பர்.5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய் , தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பர்.6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வர்.7 இரத்தம், கண் , உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பர்.8 ஆலயத்திற்கு  யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பர்.9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வர்.10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வர்.11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.16 பொன், வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வர்.17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம்  வாழ்வார்கள்19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்28 சுதர்சன ஹோமமும்,தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.30 இதைப் படிப்பவரும் , கேட்பவரும்,  புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.


எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள் 


காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி


பெருமாளின் நாமங்கள் 



காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரி ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.