செவ்வாய், 11 ஜூலை, 2017
பண்டரிபுரம் திருத்தலம் உருவான கதை
பண்டரிபுரம் திருத்தலம் உருவான கதை
பெற்றோரிடம் சிறிதளவும் பக்தியோ மரியாதையோ செலுத்தாமல் வாழ்ந்தவன் புண்டலீகன் என்பவன். ஆனாலும் தனது மனைவியுடன் காசி யாத்திரை சென்றான். பயணம் பலநாள் நீடித்ததால் ஒருநாள் இரவு ஒரு குடிசையின் திண்ணையிலே இருவரும் பொழுதைக் கழித்தனர்.
அதிகாலை வேளையில் தற்செயலாகக் கண்விழித்த புண்டலீகன், மூன்று அழகிய பெண்கள் அவன் தங்கயிருந்த வீட்டின் வெளிப்புறத்தைப் பெருக்கி கோலமிட்டு அலங்கரிப்பதைப் பார்த்தான் . இந்தக் குடிசையோ மிக…வும் சிறியது. இதன் சொந்தக்காரர் ஏழையாகத்தான் இருப்பார். ஆனால் இப்பெண்களோ அரச குமாரிகளைப் போலல்லவா இருக்கிறார்கள் என்று எண்ணி அப்பெண்களிடம் போய் “நீங்கள் யார்? இக்குடிசையில் இருப்பவர் யார்?” என்று வினவினான்.
அதற்கு அப்பெண்களும் “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் நதி தேவதைகள். எம்மில் நீராடும் மக்களின் பாவங்கள் எம்மை வந்தடைகின்றன. அந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக இந்த வீட்டிலுள்ள பெரியவருக்கு பணிவிடை செய்கிறோம்” என்று கூறிச் சென்றுவிட்டனர்.
இந்த குடிசையிலிருக்கும் பெரியவரிடம் அப்படி என்ன விசேஷம்? என்று சிந்தித்த புண்டலீகன் பொழுது விடிந்ததும் அவரிடம் சென்றான். அவரிடம் எப்படிக் கதை தொடங்குவது என்று சிந்தித்து “பெரியவரே! காசி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டான். பெரியவரும் “அப்பா, நான் காசிக்குச் சென்றதில்லை. எனது வயதான பெற்றொர்களைக் கவனித்து வாழ்ந்ததால் அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. அதனால் எவ்வளவு தூத்தில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது” என்றார். பெற்றோரை மதித்திராத புண்டலீகன், அந்தப் பெரியவருக்கு நதி தேவதைகள் உபகாரம் பண்ணுவதின் தாத்பரியத்தை அப்போதான் புரிந்துகொண்டான். ‘தான் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொண்டோம் ’ என்பதையும் எண்ணிப்பாரத்தான்.
காசிக்குப் பயணம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டுத் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் எண்ணத்துடன் ஊருக்குத் திரும்பினான் புண்டலீகன். அல்லும் பகலும் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையே வாழ்க்கையின் தலையாய கடமையாக நினைத்துச் செய்துவந்தான். ஒருநாள் தனது தந்தையாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது பகவான் அவனுக்குத் தரிசனம் கொடுத்து “இவ்வாறு பெற்றொருக்கு பக்தி சிரத்தையுடன் சேவை செய்வதை மெச்சினோம். ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தனது தந்தையைக் குளிப்பாட்டி சேவை செய்து கொண்டிருந்ததால் இரண்டு செங்கற்களைப் பகவானின் எதிரில் வைத்து “சுவாமி இதன்மீது சிறிதுநேரம் நின்றுகொண்டிருங்கள், இதோ என் தந்தைக்கு பணிவிடை செய்துவிட்டு விரைவில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே தந்தையிடம் சென்றுவிட்டான் புண்டலீகன்.
தன் கடமைகளைச் செய்து முடித்துவிட்டு நெடுநேரம் கழித்து பகவானை நிற்கச் சொன்ன இடத்திற்கு வந்தான். அவன் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்ற செங்கற்களின் மீதே நின்றுகொண்டு, புண்டலீகனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பகவான். புண்டலீகனும் தாமதத்திற்கு மன்னிப்புக்கோரி “இறைவா! தங்களின் தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தீர்கள். அதுபோலவே எல்லா மக்களும் உங்களுடைய தரிசனத்தைப் பெற்று உய்வு பெறும்வண்ணம் இந்தச் செங்கற்கள்மீது எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு தரிசனம்தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
கருணைக்கடலான பகவான் அந்த இடத்திலேயே இப்போதும் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அந்த இடமே ‘பண்டரிபுரம்’ என்னும் திருத்தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
வாழ்க்கைப் பாதையில் நாம் தவறுகின்றபொழுது நம்மைக் கண்டிக்க, திருத்த வாழ்க்கைக்குப் புதிய ஒளியைத்தர கடவுள் அனுப்பிய தேவதைதான் ‘கடமை’. அதிலும் பெற்றொருக்குச் செய்யும் கடமை மிக மிக முக்கியமானது.பெற்றோரைத் தவிக்கவிட்டு வேதனை செய்பவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், அவன் எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவனது பாவங்களை மன்னிக்க மாட்டான்.
சனி, 8 ஜூலை, 2017
தினமும் 5 வீடுகளில் பாபா பெற்ற யாசகம்
தினமும் 5 வீடுகளில் பாபா பெற்ற யாசகம்
குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே. - ஸ்ரீ குரு சரித்திரம்.
பாபாவின் ஒவ்வொரு செயலும், ஒரு தத்துவத்தை விளக்கும் ஆற்றல் கொண்டது. அதை பாபா பக்தர்கள் நுட்பமாக தெரிந்து கொண்டால் பாபாவை நோக்கி மேலும் ஒரு அடி முன்னேற முடியும். சாய்பாபா தினமும் அதிகாலையில் எழுந்து விடுவார். நள்ளிரவையும் கடந்து விழித்திருக்கும் அவர் அதிகாலையில் அனைவரும் எழுவதற்கு முன்பு எழுந்து பணிகளைத் தொடங்கி விடுவார்.
துவாரகமாயில் துனி எனும் அக்னிக்குண்டம் அருகில் அமர்ந்து தியானம் செய்வார். அப்போது அவர் வாய் ஏதேதோ முணுமுணுக்கும். அவர் என்ன உச்சரிக்கிறார் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள இயலாது.
அந்த சமயத்தில் பாபாவிடம் ஆசி பெற பக்தர்கள் குவிந்து விடுவார்கள். ஆனால் பாபா அருகில் பக்தர்கள் யாரையும் விட மாட்டார்கள். 50 அடி தூரத்திலேயே நிறுத்தி விடுவார்கள். தியானம் முடிந்த பிறகு சாய்பாபா பக்தர்களுடன் பேசுவார். சிலரிடம் சாய்பாபா பரிபாஷையில் ஏதாவது சொல்வார். பூடகமாகவும் அவர் பேசுவார். அவர் சொல்வது சில புரியும். பெரும்பாலானவை புரியாது.
அடுத்து வரும் ஓரிரு நாட்களில் அவர் சொன்ன மாதிரியே நடக்கும். அதன் பிறகே அவர் பரிபாஷையில் பேசியது புரிய வரும்.
அவரை காண வரும் பக்தர்கள் நிறைய உணவு வகைகளை கொண்டு வந்து அவர் காலடியில் வைப்பார்கள். ஆனால் எந்த ஒரு உணவையும் சாய்பாபா தொட மாட்டார்.
அவர் சமைத்தும் சாப்பிட மாட்டார். சமையல் செய்வது தொடர்பான எந்த ஒரு பொருளையும் அவர் தம்மோடு மசூதியில் வைத்திருக்கவில்லை. தினமும் அவர் சீரடி மக்களிடம் பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அதில் அவர் உறுதியாக இருந்தார். ஒருநாள் கூட அவர் மற்றவர் கள் சமைத்து எடுத்து வரும் உணவை சாப்பிட்டதில்லை. அந்த உணவுகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்.
அது போல யார் வீட்டில் அமர்ந்தும் சாப்பிட மாட்டார். சீரடி மக்களில் எத்தனையோ பேர் அவருக்கு தினமும் அறுசுவை உணவு கொடுக்க தயாராக இருந்தனர்.ஆனால் சாய்பாபா அவற்றை ஏற்கவில்லை. பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தினமும் அவர் 2 தடவை பிச்சை எடுப்பார். சில நாள் 3 தடவையும் பிச்சை எடுத்தது உண்டு.
காலையில் பக்தர்களை சந்தித்து பேசிய பிறகு 7 மணிக்கு முதல் கட்ட பிச்சையை எடுக்க செல்வார். சாய்பாபா பிச்சை எடுக்கும் விதம் அலாதியானது. அவர் பிச்சை எடுக்க செல்லும் முன்பு ஒரு துணியை எடுத்து இரண்டாக மடித்து இடதுகையில் துணிப்பை போல தொங்கப் போட்டுக் கொள்வார். வலது கையில் ஒரு தகரக் குவளையை ஏந்திக் கொள்வார்.
சீரடியில் எத்தனையோ வீடுகள் இருந்த போதிலும் 5 பேர் வீடுகளுக்கு மட்டுமே அவர் செல்வார். அந்த பாக்கியம் பெற்றவர்கள் யார் - யார் தெரியுமா?
1. தத்யா பட்டீல் வீடு
2. வாமன சுக்காராம் வீடு
3. நந்து சவாய் ரமா வாணி வீடு
4. சாமா என்றழைக்கப்படும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே வீடு
5. அப்பாஜி பட்டீல் வீடு
இவர்கள் வீடு முன்பு வாசலில் நின்று கொண்டு, “தாயே எனக்கு ஒரு ரொட்டி கொடு” என்பார். பாபா வருகைக்காக அந்த 5 வீடுகளின் குடும்பத்தினர் காத்திருப்பார்கள். பாபாவுக்கு கொடுப்பதற்காகவே உணவு வகைகளை எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் சாதம், ரொட்டி போன்றவற்றை தனது துணிப் பையில் வாங்கிக் கொள்வார். குழம்பு, ரசம் ஆகியவற்றை தகரக் குவளையில் பெற்றுக் கொள்வார்.
மசூதிக்கு திரும்பியதும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பானைக்குள் போடுவார். அனைத்தையும் ஒன்றாக்குவார். பக்தர்களுக்கும், விலங்குகளுக்கும் அந்த உணவை பகிர்ந்து கொடுப்பார். பாபா தரும் உணவை பெற்றுக் கொள்ள மசூதி முன்பு ஏராளமான விலங்குகள் காத்திருக்கும். மீதமாகும் உணவில் சிறிதை பாபா உண்பார். காலை உணவு முடிந்ததும் 9 மணியளவில் மசூதி பின்புறம் உள்ள லெண்டிபாக் எனும் தோட்டத்துக்கு பாபா உலாவப் போவார்.
பல வகை செடிகளை வைத்து பாபாவே உருவாக்கிய அந்த தோட்டத்துக்குள் அவர் ஒரு அணையா விளக்கு வைத்திருந்தார். அந்த நந்தா தீப விளக்கை பராமரிக்கும் பொறுப்பை அப்துல் என்பவரிடம் பாபா ஒப்படைத்திருந்தார். எனவே லெண்டிபாக் தோட்டத்துக்குள் அப்துல் தவிர வேறு யாரையும் நுழைய விட பாபா அனுமதித்ததே இல்லை. யார் தொந்தரவும் இல்லாமல் பாபா சுமார் 11.2 மணி நேரம் லெண்டிபாக் தோட்டத்துக்குள் இருப்பார்.
தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு அணையா விளக்கு அருகில் பாபா அமர்வார். அந்த அணையா விளக்கு சுமார் 2 அடி ஆழமுள்ள குழியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அணையா விளக்கு பகுதியை சுற்றிலும் திரைகள் கட்டப்பட்டிருக்கும். அணையா விளக்கு அருகில் உள்ள தூணில் பாபா அமர்ந்து கொண்டு தியானம் செய்வார்.
அப்போது பாபா அருகில் 2 வாளிகளில் தண்ணீர் எடுத்து வந்து அப்துல் வைப்பார். அந்த தண்ணீரை கையில் எடுத்து அணையா விளக்கு அருகில் பாபா தெளிப்பார். பிறகு எழுந்து நாலாபுறமும் நடந்து செல்வார். எல்லா திசைகளிலும் நின்றபடி அணையா விளக்கை உற்றுப் பார்ப்பார். எதற்காக அவர் அப்படி பார்ப்பார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் தினமும் இதை பாபா ஒரு நடைமுறையாக செய்தார். காலை 10 மணி வரை அவர் லெண்டிபாக் தோட்டத்தில்தான் இருப்பார்.
பிறகு பாபா மீண்டும் மசூதிக்கு திரும்பி வருவார். அங்கு பக்தர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடுவார். அப்போது பக்தர்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள்.
பக்தர்களுக்கு ஆசி வழங்கி முடித்ததும் மீண்டும் பிச்சை எடுக்க சீரடி ஊருக்குள் செல்வார். பிச்சை எடுத்து வந்ததும் பானையில் போட்டு ஒன்றாக்குவார். மதியம் 12 மணிக்கு பாபாவுக்கு ஆரத்தி எடுக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள், விலங்குகளுக்கு உணவை பிரித்துக் கொடுப்பார். பிறகு உதியும் கொடுத்து ஆசீர்வதிப்பார்.
அதன்பின் பாபா மதிய உணவுக்கு நண்பர்கள் சிலருடன் அமர்வார். படேபாபா என்பவர்தான் எப்போதும் பாபா அருகில் அமர்ந்து சாப்பிடுவார். பாபாவின் இடது புறம் தத்யாபடீல், ராமச்சந்திர படீல், பையாகி படீல் ஆகியோர் உட்கார்ந்து இருப்பார்கள். பாபா வலது புறம் படேபாபா, மாதவராவ் தேஷ்பாடே, பூட்டி, காக்கா சாகேப் தீட்சிதர் ஆகியார் அமர்வார்கள். இப்படி பலர் புடைசூழ அமர்ந்தே பாபா மதிய உணவை சாப்பிடுவார்.
படே பாபா அருகில் இல்லாமல் பாபா சாப்பிட்டதே இல்லை. எல்லாரும் மதிய உணவு சாப்பிட தனி தனி தட்டுகள் வழங்கப்படும். ஆனால் சாய்பாபாவும் படே பாபாவும் ஒரே தட்டில் உணவு சாப்பிடுவார்கள். பின்னர் திரை போடப்படும். மதிய உணவு முடிந்ததும் மசூதி யில் யாரையும் தங்க அனுமதிக்க மாட்டார்கள். திரை போடப்பட்டு விட்டால் பிறகு யாரும் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இதனால் மதிய உணவுக்குப் பிறகு பாபா சிறிது நேரம் தனியாக இருப்பார். அந்த சமயத்தில் சாய்பாபா தியானம் செய்யக்கூடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தாங்கனு மகாராஜ் என்பவருக்கு பாபா மதிய உணவுக்குப் பிறகு என்ன செய்கிறார் என்பதை காணும் வாய்ப்பு ஒரு தடவை கிடைத்தது. பாபா இருந்த பகுதிக்குள் அவர் திடீரென நுழைந்து விட்டார். அப்போது பாபா 10 செப்புக் காசுகளை எடுத்து தன் விரல் நுனியால் இடைவிடாது தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர், இது காக்கா காசு, இது நானா காசு என்று சொல்லியபடி இருந்தார்.
இதன் மூலம் பாபா மதிய உணவுக்குப் பிறகு தியானம் எதுவும் செய்வதில்லை என்று தெரிய வந்தது. அதற்கு பதில் காசை தன் கையில் தேய்த்து, அந்த காசுக்குரியவர்களின் தோஷங்களை நீக்கியதாக கூறப்படுகிறது.
புதன், 5 ஜூலை, 2017
அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்
அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்
அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிகவும் முக்கியமானவை. எங்கும் எதிலும் நிறைந்தவன் இறைவன் என்ற வகையில் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
தேங்காய் :
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோன்று அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்போது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
நான் என்ற அகம்பாவமும், சுயநலமும் பொறாமையும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையையும் நமக்கு உணர்த்தவே விபூதியை நெற்றியிலும் உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.
வாழைப்பழத்தின் நடுவே கறுப்பு நிறத்தில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் முளைக்காது. எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு ஒரு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்க முடியாது. ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்க முடியும். அதுபோன்று நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது அடுத்தவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதை உணர்ந்துவதே அகல் விளக்கு.
தை அமாவாசை ஏன் சிறந்தது?
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, தை அமாவாசை ஏன் சிறந்தது?
தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார்.
இந்த முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசையின் முக்கியத்துவம்...
ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பிறகு தை மாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வகையில் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் வகையில் கொடுக்கப்படவேண்டிய தை அமாவாசை தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
எப்படி செய்ய வேண்டும்?
மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி
மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.
மேலும் தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழுமனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.
தை அமாவாசையன்று, முன்னோர்களின் பெயரால் பிறருக்கும் உதவிடுவோம், முன்னோர்களின் ஆசிகளுடன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.
வியாழன், 29 ஜூன், 2017
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்
எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில் , ஒரு ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும். .
4. ஏதாவது ஒரு கோயிலில், தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால், குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.
6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல, மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும் , அவருக்கு பாபா மேல் உள்ள நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின் தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம். .
புதன், 28 ஜூன், 2017
சிவனை பூஜை செய்யும் முறை
சிவனை பூஜை செய்யும் முறை
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள்.
சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது. அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.
சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.
இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் 'சலன லிங்கம்' என்பதாகும்.
மூன்றாவது வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் 'அசலசல லிங்கம்' ஆகும்.
நான்காவது வகை 'சலாசல லிங்கம்' எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.
சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே பூஜைகளை செய்யத் துவங்க வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு.
சிவ பூஜை செய்யும்போது பூஜையில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து என ஒற்றைப் படையிலேயே சிவலிங்கங்களை வைத்து அவற்றுக்கு பூஜைகளை செய்ய வேண்டும். இரண்டு, நான்கு போன்ற இரட்டை இலக்கில் லிங்கங்களை வைத்து பூஜித்தால் அது வியாதிகளை தரும், மன வலிமையை தளர்த்தும் என்பார்கள்.
சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட ஏதும் விதி முறைகள் உள்ளனவா என்றால், உண்டு என்பதே சரியான பதில் ஆகும். வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா, முடியாதா என்பது இரண்டாம் பட்ஷம். ஆனால் ஞான மார்கத்தை அடைய நினைப்பவர்கள் உறுதியோடு இருந்தவாறு வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை கடைபிடிப்பார்கள். வாழ்க்கையில் மேன்மை அடைய நினைப்பவர்கள், அவற்றில் கூறப்பட்டு உள்ள சிலவற்றையாவது முடிந்தவரை கடை பிடிக்கலாம்.
ஆலயங்களில் சென்று நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ள பழக்கம் ஆகும். வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்துள்ளது. நமஸ்காரம் செய்வதில் எப்படிச் செய்ய வேண்டும், எவ்வளவு தடவைகள் செய்ய வேண்டும் என்று நியதிகள் உள்ளன. நமஸ்காரத்தை சிவன் ஆலயத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்றும் சிவ விதிகளில் கூறப்பட்டு உள்ளன.
சிவன் ஆலயங்களுக்கு செல்பவர்கள் தூரத்தில் இருந்தே தென்படும் லிங்கம் தூலலிங்கம் எனப்படும். கோபுர உச்சியை கண்டதும் தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து இருகரம் கூப்பி வணங்கிட வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்தாலும் சரி, முடிந்தவரையில் அதை செய்யலாம். வாகனத்தை தாமே ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் சாலையை விட்டு அகன்று ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு அதை செய்ய வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.
அந்த காலங்களில் ஆலயத்துக்கு செல்பவர்கள் நடந்தே சென்று வந்தார்கள் என்பதினால் தூரத்தில் இருந்தே ஆலயத்தைப் பார்த்த உடன் தமது சிரஸ் மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கினார்கள். ஆனால் தற்காலத்தில் வாகனங்களில் செல்பவர்களால் அப்படி செய்ய இயலவில்லை என்பதினால் அதை விட எளிதான வழியாக ஆலயத்தை சென்று அடைந்ததும் ஆலயத்துக்கு உள்ளே நுழையும் முன் ஆலய கோபுரத்தை பார்த்ததும் தலை மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கலாம். தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது 'மூன்றங்க நமஸ்காரம்' எனப்படுகிறது. அதாவது கைகள், தலை மற்றும் மனதை ஒன்றிணைத்து செய்யப்படும் மூன்று அங்க நமஸ்காரம் ஆகும்.
அதன் பிறகு ஆலயத்துக்குள் சென்றதும் பலிபீடத்துக்கு பின்புறத்தில் இருந்து ஆண்டவனை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். ஒரு வேளை சிவன் சன்னதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருந்தால் வடக்கை நோக்கி தலையை வைத்து வணங்கிட வேண்டும்.
அது போல தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதிகளில் கிழக்கு நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும் காமம், இச்சை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் போன்ற எட்டு தீய குணங்களையும் ஆலய சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி தருவது போல அங்கேயே அழித்து விட்டு 'உன்னிடம் வருகிறேன் இறைவா, எனக்கு நீயே அருள் புரிய வேண்டும்' என வேண்டிக் கொள்ளும் இடம் ஆகும்.
சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி பீடத்தின் அருகில் பூமியிலே வீழ்ந்து நமஸ்கரிப்பதின் மூலம் எந்த நலனையும் அடைய முடியாது. அங்கு நமஸ்கரித்து தனது அனைத்து தீய எண்ணங்களையும் அங்கேயே பலி கொடுத்தப் பின் மனதின் ஆணவத்தை பலியிட்டப் பின் மனதில் மிஞ்சி நிற்கும் எண்ணங்கள் மிஞ்சி நிற்கும் அந்த மேன்மையான நேரத்தில்தான் சன்னதிக்குள் சென்று ஆண்டவனை தரிசிக்க வேண்டும்.
கோயில் வளாகத்தில் அனைத்து இடங்களிலும் நமஸ்கரிப்பது சரியல்ல. கோயில் கர்ப்பக்கிரகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால், கொடி மரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கர்ப்பக்கிரகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ பார்த்தபடி இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கொடிமரத்திற்கும் தெய்வ சன்னதிக்கும் இடைபட்ட பகுதியில் நமஸ்கரிக்கக் கூடாது.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது சிறந்தது. தலை, இரண்டு கைகள், முகம் போன்றவை, ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குதல் 'அஷ்டாங்க நமஸ்காரம்' எனப்படும்.
அதைப் போலவே பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' செய்ய வேண்டும். கை இரண்டும், தலையும் மற்றும் முகமும் பூமியில் தொட்டிருக்க முழங்கால் முட்டி இரண்டும் மட்டும் தரையில் படுமாறு இருந்தபடி முழங்கால் போட்டபடி நமஸ்கரிக்க வேண்டும். ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல் உடம்பை குறுக்கிக் கொண்டு நமஸ்கரிப்பதின் மூலம் ஸ்த்ரீகள் வளைந்து கொடுக்கும் குணமுள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அந்த வகையிலான நமஸ்காரம் ஒரு உருவகமாக அமைந்து இருக்கிறது. மேலும் தலை, கைகள் மற்றும் முழங்கால் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு இருந்தவாறு நமஸ்கரிப்பது நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மண வாழ்க்கையையும் தரும் என்பது ஐதீகம்.
அது போலவே வியாதிஸ்தர்களினால் கீழே விழுந்து வணங்க முடியாமல் இருக்கலாம். அப்படி என்றால் அவர்கள் ஆலயத்தில் எப்படி நமஸ்கரிக்க வேண்டும்? கீழே விழுந்து நமஸ்கரிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து கரம் குவித்து வணங்கிட வேண்டும். அதை 'த்ரியங்க நமஸ்காரம்' என்பார்கள். இந்த முறையிலான நமஸ்காரத்தை ஆண்கள், பெண்கள் என இருவருமே செய்யலாம். சிவபெருமானும் அதை மனப்பூர்வமாக ஏற்கிறார். சிவ கடாட்சம் முழுமையாக கிடைக்க இந்த மாதிரியான நமஸ்காரங்களை செய்யலாம் என்பதும் சிவ விதியில் கூறப்பட்டு உள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் அவசர வேலையாக வெளியில் போக வேண்டும் என்றாலும் கூட சிவன் சன்னதியில் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுதும், நெய்வேதியம் படைக்கப்படும் போதும் நமஸ்கரிக்கலாகாது.
சாதாரணமாக சன்னதியை ஒருமுறை மட்டுமே பிரதர்ஷணம் செய்து விட்டு பலர் ஆலயத்தில் இருந்து வெளியேறிச் செல்வார்கள். ஆனால் அது சரியான முறை அல்ல. சன்னதியை மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை பிரதர்ஷணம் செய்ய வேண்டும். பிரதர்ஷணம் செய்ய எண்ணம் இல்லாவிடில் சன்னதியை நோக்கி நின்று வணங்கிய பிறகு அப்படியே திரும்பி வந்து விட வேண்டும்.
பிரதர்ஷணம் செய்து முடித்தப் பின் சண்டிகேஸ்வரர் சன்னதிக்குச் சென்று நம் கைகள் இரண்டையும் காண்பித்து நான் ஆலயத்தில் இருந்து எதுவும் எடுத்து செல்லவில்லை என்பது போல் காண்பிக்க வேண்டும். ஆலயங்களில் பைரவர் எப்படி விழித்திருந்து தாம் உள்ள சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவாரோ, அது போலவேதான் சண்டிகேஸ்வரர் சிவபெருமான் சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவது மட்டும் அல்லாமல் அங்கு வருபவர்களின் வரவை தன்னிடம் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.
சிவபெருமானின் பூஜை மற்றும் விரதங்களில் மேன்மையானது பிரதோஷ பூஜை ஆகும். சிவபெருமானுக்கு எவர் ஒருவர் பூஜை செய்யவில்லையோ, பூஜை செய்ய முடியாத நிலையில் உள்ளாரோ அவர்கள் வேறு எந்த பூஜையயுமே செய்யத் தேவை இல்லை. பிரதோஷ தினத்தன்று சிவன் ஆலயத்துக்குப் போய் சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசனம் செய்து வணங்கினால் போதும். சிவபெருமானுக்கு பூஜை செய்த பலன் அனைத்தும் கிடைத்து விடும். தோஷம் என்றால் குறை உள்ளது என்பதான அர்த்தம். பிரதோஷம் என்றால் குறை அற்றது என்பது பொருள் ஆகும். ஆகவேதான் குறை இல்லாத அந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும். அதுவும் சனிக்கிழமைகளில் வரும் சனி பிரதோஷம் தனிப் பிரதோஷமாக கருதப்படுகிறது. அதன் காரணமும் பிரதோஷ பூஜை துவங்கியதின் காரணமும் இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை தேவலோகத்தில் கைலாயத்தின் சபையில் அனைத்து கடவுட்களும், தேவர்களும் கூடி இருந்த போது அங்கு நடனமாடிய ஒரு தேவ கன்னிகையின் நடனத்தை மெச்சிய விஷ்ணுவானவர், வேண்டும் என்றே தனது மனைவி லஷ்மியைப் பார்த்து அந்த கன்னியின் நடனத்தை பெருமளவு புகழ்ந்து பேசி, அவளுக்கு லஷ்மி போட்டிருந்த மாலையை பரிசாகத் தருமாறு அவளுக்கு சைகை காட்டினார். அதைக் கவனித்து விட்ட பார்வதி தேவி லஷ்மியை முந்திக் கொண்டு உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை கயற்றி அந்த நடனமாடிய மங்கைக்கு பரிசாகத் தந்தாள். அப்படி விஷ்ணு பகவான் செய்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் கன்னிகையும் அதை மெத்த மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் துர்வாச முனிவரை சந்திக்க நேரிட்டது. அவள் கையில் இருந்த அற்புதமான மாலையின் அழகில் மயங்கி அதை தனக்கு பரிசாகத் தருமாறு கேட்டார். அவளும் தயங்காமல் அதை அவருக்கு தந்தப் பின் அந்த மாலை தனக்குக் கிடைத்தக் கதையையையும் மகிமையையும் கூறினாள்.
அப்போது இந்திரனக் காணச் சென்று கொண்டு இருந்த துர்வாச முனிவர் இந்திரனுக்கு என்ன பரிசை கொண்டு செல்லலாம் என எண்ணிக் கொண்டு செல்கையில் அந்த தேவ கன்னிகை மூலம் கிடைத்த மாலையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை கொண்டு போய் தேவேந்திரனிடம் தந்தார். அந்த மாலையின் மகிமையைக் கூறும் முன்னரே இந்திரன் தனது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஐராவதத்தின் தும்பிக்கை மீது அந்த மாலையை வைக்க, அந்த யானையும் அதை கீழே தள்ளி காலால் மிதித்து துவம்சப்படுத்தியது. அதைக் கண்ட துர்வாச முனிவர் பெரும் கோபம் அடைந்தார். தான் தந்த மாலை, அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருந்து கிடைத்த மாலையை இந்திரன் அவமானப்படுத்துவதா என்ற சினம் கொண்டார். இந்திரனுக்கு அவன் சக்திகளும் செல்வங்கள் அனைத்தும் அழியட்டும் என சாபமிட்டார். அதைக் கேட்ட இந்திரனும் தேவர்களும் வெலவெலத்துப் போய் துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கூறுமாறு அவரிடம் வேண்டினார்கள். துர்வாச முனிவரும் சினம் அடங்கியதும், அவர்கள் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து வெளிவரும் அமிர்தத்தைப் பருகினால் மட்டுமே அந்த சாபம் விலகும் என தெளிவுபடுத்தினார்.
பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து உண்ண வேண்டும் என்ற விதிக்கான ஒரு பின்னணிக் காரணம் உண்டு. அது துர்வாச முனிவருக்கும் தெரியாது. ஏன் எனில் அது பரமேஸ்வரரின் திருவிளையாடல் ஆகும். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பல காலத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சம்பவமே அதற்க்குக் காரணம் ஆகும்.
ஒரு கட்டத்தில் அசுரர்கள் பலம் அதிகரித்து தேவர்களின் அழிவு துவங்கும். அந்த வேளையில் தேவலோகத்தின் பெருமையை வெளிப்படுத்தி, மும்மூர்த்திகளின் அவதாரகணங்களான தேவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக பரப்பிரும்மன் பிரபஞ்சத்தை படைத்தபோதே தமது சக்தி கொண்ட சிறிய உருண்டையை பாதாளத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்து அதைப் பாதுகாக்க அதன் மீது கொடிய விஷத்திலான படுக்கையையும் அமைத்து இருந்தார். அதை ஸ்வாசித்தாலே போதும், மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டது அந்த நஞ்சு. பூமியின் அடிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு கீழே பாதாள லோகம் உள்ளது. பல யோசனை தூரம் விரிந்து படந்துள்ள அந்த பாதாள லோகத்தின் அதிபதியே வாசுகி எனும் நாகம் ஆகும். அங்கு லட்ஷக்கணக்கில் நாகங்கள் வசித்து வந்தன. அந்த பாதாளத்தில் யாராலுமே புக முடியாது. அதனால் நாகங்களால் அந்த அமிர்தமும் அவைகளுக்கு தெரியாமலேயே பாதாளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தன. அப்படி ஒளித்து வைக்கப்பட்டு இருந்த அமிர்தத்தை வெளியில் எப்படி எடுப்பது ? அது பிற்காலத்தில் மும்மூர்த்திகள் மூலமே வெளிப்பட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தி இருந்ததினால் அதற்கான வேளை வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் நடைபெறலாயின.
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?
ஆலயங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிவ வழிபாட்டு முறை.
அடுத்து சன்னதியை பிரதர்ஷனம் செய்யும் முறை.
அதற்காக நடந்த அந்த நாடகத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் அமிர்தத்தை எப்படி வெளியில் எடுக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை குறித்துப் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அமிர்தத்தை வெளியில் எடுக்க விஷ்ணு தக்க ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் அது வெளி வருவதற்கு முன்னால் அமிர்தத்தின் மீது ஒரு கேடயம் போல படர்ந்திருந்த விஷத்தை வெளியில் எடுக்க வேண்டும். அதை ஸ்வாசித்தாலே போதும், மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டிருந்த அந்த நஞ்சு உலகெங்கும் பரவினால் அனைவருமே மரணம் அடைந்து விடுவார்களே என்ற அந்தக் கவலையை தன்னிடம் விட்டு விடுமாறு சிவபெருமான் விஷ்ணுவிற்கு தைரியம் அளித்தார். அந்த விஷத்தன்மையை தடுப்பது தன் பொறுப்பு என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்தான் பரமாத்மனின் அவதாரமாயிற்றே !
அத்தனைப் பெரிய பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுப்பது தேவர்களால் மட்டுமே முடியாத காரியம் என்பதினால், அமிர்தத்தின் தன்மையைக் கூறி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்க அசுரர்களில் உதவியையும் பெறுவதற்கு கிருஷ்ணர் உருவில் இருந்த விஷ்ணு யோசனைக் கூறி அசுரர்களிடம் நயவஞ்சகமாகப் பேசி அதையும் நிறைவேற்றித் தந்தார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, மத்து சுழலும் மேடையாக விஷ்ணுவே கூர்மாவதாரம் எடுத்து கடலுக்குள் அமர்ந்து கொள்ள பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்கும் பணி துவங்கியதும் அந்தக் கொடிய விஷம் முதலில் வெளியில் வர அதை சிவபெருமான் தன கையில் ஏந்தி உண்டு தனது தொண்டையில் அடக்கிக் கொள்ள, மீண்டும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மீட்டுக் கொடுத்து அவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்தார்.தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.
சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான் அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள்.விஷத்தை தனது தொண்டையில் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்த சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் அனைவரையும் ரட்சிக்கும் விதமாக தனது வாகனமான நந்தியின் மீது ஏறிக் கொண்டு அதன் இரு கொம்புகளுக்கும் இடையே நின்றபடி அற்புதமான நடனம் ஆடினார். அப்போது அதைக் கண்டு களித்த அனைவருக்கும் பேரானந்த மன அமைதியும், ஆனந்தமும் கிடைத்தது. அது மட்டும் அல்லாமல் சிவபெருமானின் பரிபூரண ஆசியும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் இடையே வருகின்ற திரயோதசித் திதியாகும். அது நடைபெற்ற நேரமோ சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் அதன் பின்னர் வந்த மூன்றே முக்கால் நாழிகையாகும். அதனால்தான் முன்னரே கூறியது போல தோஷமற்ற பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.
எந்த ஸ்வாமி சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன?
ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவபெருமானை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதைதான் கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும்.
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும். அப்போதுதான் அவர் நீங்கள் எத்தனை முறை சிவனை வலம் வந்துள்ளீர்கள் எனும் கணக்கை அவருக்கு தெரிவிப்பாராம். இதுவும் ஐதீகம்தான். இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்கும் இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


