வெள்ளி, 25 நவம்பர், 2016

விரதங்களும் அவற்றின் பலனும்


விரதங்களும் அவற்றின் பலனும்


நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.


சோமவார விரதம்


நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்


நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்


நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

தெய்வம் : சித்திரகுப்தர்

விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்


நாள் : தை அமாவாசை

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்


நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

பலன் :  குழந்தைப்பேறு

மங்களவார விரதம்


நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்


நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் : பார்வதி, பரமசிவன்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்


நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்


நாள் : பங்குனி உத்திரம்

தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்


நாள் : தை அமாவாசை

தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்


நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்


நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

தெய்வம் : பார்வதி தேவி

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்


நாள் : தை மாத பூச நட்சத்திரம்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்


நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

தெய்வம் : சிவன்

விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்


நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

தெய்வம் : நடராஜர்

விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்


நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

தெய்வம் : கேதாரநாதர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்


நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் 

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்


நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்ரமணியர்

விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்


நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்


நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

தெய்வம் : பார்வதிதேவி

விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.

பலன் : கல்வி, செல்வம், ஆற்றல் 







செவ்வாய், 22 நவம்பர், 2016

நல்லதையே தேடுவோம் - ஆன்மிக கதை


அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு வணக்கம்.


நாம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் காரியங்களில் நல்லவற்றையே எடுத்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பதிவில் சொல்ல இருக்கும் கதை அமைகிறது.

ஆம் தோழிகளே!நடப்பவை எல்லாம் நல்லதாக இருக்கணும்.நல்ல நேர்மறை எண்ணத்துடன் நாம் இருக்க  வேண்டும்.நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்  உங்கள் இஷ்ட தெய்வங்களிடம் எல்லாவற்றையும் விட்டு  விடுங்கள்.அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

இதோ நல்ல விஷயங்களை நினைக்கும் கதை. வாங்க பாப்போம். 

நல்லதையே தேடுவோம் - ஆன்மிக கதை


தேவலோகத்தில் இந்திரன் தலைமையில் தேவர்களின் சபை கூடியிருந்தது. அதில் தேவர்களின் நலன் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பேச்சு பூலோகத்தில் வாழும் மனிதர்களைப் பற்றி திரும்பியது. உடனே இந்திரன், ‘பூலோகத்தில் கிருஷ்ணதேவன் என்னும் அரசன் இருக்கிறான். அவன் மிகவும் நல்லவனாகவும், குணம் படைத்தவனாகவும் உள்ளான். அவனைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவன் யாரும் இருக்க முடியாது. எல்லோரையும் விட அவனேச் சிறந்தவன்’ என்றான்.


தேவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட தேவன் ஒருவன், சாதாரண மனிதன் ஒருவனைப் பற்றி புகழ்ந்து பேசியது, அங்கிருந்த தேவர் களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. அவன், ‘கேவலம் ஒரு சாதாரண மனிதனைப் பற்றி, உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, அதுவும் தேவர்களின் தலைவன் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு அந்த மானிடனிடம் இருக்கிறது? உங்கள் அனைவருக்கும் அவனிடம் உள்ள குறையை எடுத்துக்காட்டுகிறேன். அதற்காக இப்போதே நான் பூலோகம் செல்கிறேன்’ என்று கூறியவன் பூலோகம் புறப்பட்டுச் சென்றான்.

அரசனான கிருஷ்ணதேவன் வரும் வழியில், பூலோகம் வந்த தேவன், ஓர் இறந்த நாயின் வடிவத்தில் விழுந்து கிடந்தான். அந்த நாயின் உடலில் இருந்து சகிக்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. நாயின் வாய்ப்பகுதியும் கிழிந்து அவலட்சணமாக காணப்பட்டது. கிருஷ்ணதேவன், நாயின் இறந்து கிடந்த பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது வழியில் கிடந்த அந்த நாயைக் கண்டான்.

அவனது பார்வையும், கண்ணோட்டமும் வேறு விதமாக இருந்தது. அவன் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ, அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றியோ சிந்திக்கவே இல்லை. ஆனால் அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

ஆம், அவன் அந்த நாயைப் பார்த்த நொடியில், ‘ஆகா! இந்த நாயின் பல் வரிசை எவ்வளவு அழகாக இருக்கிறது! முத்துக்களைப் போல் அல்லவா அவை பிரகாசிக்கின்றன!’ என்று வாய்விட்டு கூறினான்.

கெட்ட விஷயங்களில் மனதை செலுத்தாமல், அதில் ஏதாவது நல்லது இருக்கிறதா? என்ற அவனது தனிப்பட்ட பார்வைதான், மன்னனின் தனிச் சிறப்பு என்பதை, நாய் உருவில் விழுந்து கிடந்த தேவன் உணர்ந்து கொண்டான்.

உடனடியாக சுய உரு பெற்று, அரசனின் முன்பாக நின்றான். ‘மன்னா! உண்மையிலேயே உங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும், நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் இருக்கிறது. இந்த உலகத்தில் தங்களைப் போன்ற குணவான்களே சுகமாக வாழ்வார்கள்’ என்று கூறி அவரை ஆசீர்வதித்து விட்டுச் சென்றான். 

என் பதிவைப் பார்த்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி .

ஞாயிறு, 20 நவம்பர், 2016

சாஸ்திரம் கூறும் தீபாவளி பண்டிகை

சாஸ்திரம் கூறும் தீபாவளி பண்டிகை 

என் இணையத்தள ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கங்கள் பல.


“தீபாவளி அன்று என்ன சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில்  குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டு , அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தால்  தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அதுதான் தீபாவளி என்று எண்ணுதல் தவறு.   நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு எது தேவை என்பதை அறிந்து தீபாவளியை கொண்டாடினால் அது பயன்னுள்ளதாகவும், நம் குடும்பத்திலுள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்குமாறு   தீபாவளி அமையும்.

 பண்டிகை என்றால் என்ன?

 நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் நல்ல நிலையில் இருந்ததால் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் கடைபிடிக்க சொல்லிய  ஒரு விதியாக, எழுதாத சட்டமாக சொல்லி வைத்து சென்றார்கள்.
ஒரு சமயம், சிவாலயத்தில் எரிந்துக்கொண்டு இருந்த தீபத்தின் எண்ணையை குடிக்க சென்றது ஒரு எலி. அப்போது தன்னை அறியாமல் அந்த தீபத்தின் திரியை தூண்டியதால், அந்த தீபம் பிரகாசமாக எரிந்தது. இதனால் அந்த எலியின் வாழ்க்கை மறுபிறவில் மகாபலிசக்கரவர்த்தியாக பிரகாசமான வாழ்க்கை அமைந்தது.
 தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம். 

தரித்திரத்தை நீக்கும் குளியல் 

 தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம். இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். 


துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு 

பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஓடி விடும். 


தோஷத்தை நீக்கும் மஞ்சள் 

புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். 


வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி

தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும். ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்க்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள். ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னமாக  தீப ஒளி திகழ்ந்தது.அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்.. 

அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது. 

அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலஷ்மியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் – அருளும் கிடைக்கும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம் 

கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோம்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோம்பின் பயனால்தான் கௌரிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள். தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கையே ஜொலிக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. எப்போதும் வெற்றி கிடைக்கும்.

என்னுடைய பதிவுகளை படித்து பலன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை  தெரிவித்தால், அது எனக்கு மேலும் மேலும் எழுத, தூண்டுகோலாக அமையும்.






திங்கள், 14 நவம்பர், 2016

காரிய சித்தி மாலை

காரிய சித்தி மாலை

அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என் காலை வணக்கங்கள்.தீபாவளி பண்டிகையை  சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியில் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 விநாயகர் பெருமானை தலைவர்களுக்கு எல்லாம் முதன்மையானவர்.முதன்மையான கடவுள்.இவரை பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.நிதமும் காலையில் விநாயகரை  வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம்.
விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.
எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரை வணங்கி ஆரம்பிப்பது நம் மக்களின் வழக்கம். எழுதுவதற்கு முன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும், முறையாகத் திட்டமிடவும், அனைவரிடமும் அன்பு செலுத்தவும் , அனைவரது அன்பும் நம் மீது பரவவும், சுமூகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர்.

இந்த பாடல் முற்றிலும் தமிழிலேயே அமைந்துள்ளது. எளிமையானது. நேரடியானது. நாமே எளிதில் பொருள் புரிந்து கொள்ளலாம்.

காரிய சித்தி மாலை

பாடல் 1 :
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பாடல் விளக்கம் :
எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபதுநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.
பாடல் 2 :
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 

பாடல் விளக்கம் :
எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.
பாடல் 3 :
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 

பாடல் விளக்கம் :
நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.
பாடல் 4 :
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம் :
எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.
பாடல் 5 :
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்:
செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.
பாடல் 6 :
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம் :
வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.
குறிப்பு : இதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு குணங்கள் வடமொழியில் சுதந்திரத்துவம், விசுத்த தேகம், நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி என்று கூறப்படுகின்றன. 

பாடல் 7 :
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 

பாடல் விளக்கம் :
மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.
பாடல் 8 :
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம் :
எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே!. அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். 
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.

பாடல் விளக்கம் :
இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
 தொடர்ந்து எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
 சதுர்த்தியன்று நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா சித்திகளையும் பெறுவார்கள்.

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

எனக்கு தெரிந்த,நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்ட  திருப்தியில் இந்த பதிவை முடிக்கிறேன்.

ஈஸ்வரிசரவணன் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.


ஞாயிறு, 13 நவம்பர், 2016

ரதஸப்தமி

ரதஸப்தமி







ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்


ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரதஸப்தமி நாள் முதல் வடக்கு திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது,  தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகும் நாள்.

ரதஸப்தமி நாளன்று என்ன செய்ய வேண்டும்?


 ரதஸப்தமி அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள், கோமயம் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழ வேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்ட பின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.கீழ்க்காணும் துதியை ரதஸப்தமி தினத்தன்று பாராயணம் செய்யலாம்.

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதேஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்யத் யத் ஜன்மக்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸுதன்மே ரோகம் ச ஸோகம் ச  மாகரீ ஹந்து ஸப்தமீநௌமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தார்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்தலோக ப்ரகாஸக!
திவாகர! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோ
திஷாம் பதே! திவாகராய நம: 


இதனால் நோய்கள் நீங்கும். எருக்கம் இலை வாதத்தைக் கண்டிக்கும். எனவேதான் நம் முன்னோர்கள் எருக்க இலையை அன்று தலையில் வைத்து நீராட வழி வகுத்துள்ளனர். பித்ரு தேவதைகளை திருப்திப்படுத்த எள்ளையும், மங்களங்கள் பெருக அக்ஷதையும் வைத்து நீராட வேண்டும். 

இதனால் நவகிரக தோஷமும் விலகும் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. 

காலவமுனிவர் என்பவர் தனக்கு தொழு நோய் வரப் போவதை ஞான திருஷ்டி மூலம் அறிந்தார். உடனே அவர் நவகிரகங்களை வழிபட்டு தொழுநோய் பிடிக்காமல் இருக்கும் வரத்தை பெற்றார். இதை அறிந்த பிரம்மா, வரம் கொடுக்கும் அதிகாரம் நவகிரகங்களுக்கு இல்லை என்று கோபம் கொண்டார். பிறகு அவர் நவகிரகங்களுக்கு தொழு நோய் பீடிக்க சாபமிட்டார். இதனால் நவகிரகங்களை தொழுநோய் பிடித்தது.
நவகிரகங்கள் சாப விமோசனம் பெறும் வழியை அகத்தியர் கூறினார். அதன்படி எருக்கம் இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டு தொழு நோயை நவகிரகங்கள் போக்கின. ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம். நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும். 


இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்!இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது - அர்க்கியம் விடுவது - ஒரு சம்பிரதாயம். எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் கொண்டது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரைப் பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத ஸப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். 

இந்நாளில் காலை 5 மணிக்கு எழுந்து கங்கை, யமுனை, காவிரியை நினைத்து நீர் தெளித்துக் கொண்டு, தண்ணீரில் சிறிது மஞ்சள் பொடி இட்டு எருக்க இலை முழுக்கைச் செய்த பிறகு, சூரியனது கோலத்தை வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் போட வேண்டும். அதன் நடுவில் தீபம் ஒன்றை வைத்து, வீட்டு விளக்கையும் ஏற்றுதல் வேண்டும். 

சூரியனுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கலைத் தயார் செய்து வைத்து, தேங்காய், பழம் தாம்பூலத்துடன் எளிய துதிகளால் வெள்ளை மலர் இட்டு அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டுதல் வேண்டும்.  இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதஸப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள்.

ரதஸப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய ஆயுர், ஆரோக்கிய, புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று சொல்லி வணங்கலாம்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாள் முதல் உத்தராயண காலம் ஆரம்பிக்கும். 

பொதுவாக அமாவாசை, பௌர்ணமி இரண்டும் உத்திராயண, தட்சிணாயண காலங்கள் ஆரம்பிக்கும் நாட்க, கிரஹண புண்யகாலங்களில் புனித நீர்நிலைகள், திருக்குளங்களில் கடல் நீராடுதல் மிகுந்த நற்பலன் களை அளிக்கும். அது போன்று ரதஸப்தமி அன்றும் புண்ணிய நதிகள், கடலில் நீராடுவது சிறப்பான பலன்களை அளிக்க வல்லது. மேலும் அன்று சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்று முதல்தான் சூரியனின் ஒளி ஏற்றம் பெறுகிறது. 

அன்று சில திருமால் திருத்தலங்களில் ஏக தின பிரம்மோத்ஸம் நடைபெறுவது வழக்கம். ஒரே நாளில் 7 வாகனங்களில் பெருமாள் வீதிவலம் வருவார். காலை 6 மணிக்கு சூரியப்பிரபை முதல் வாகனசேவையாகவும் அடுத்தடுத்து கருடன், ஹம்ஸம், யாளி, குதிரை, சிம்மம் சந்திரபிரபை என்று வீதிவலத்தில் வெவ்வேறு வாகன சேவையும் சாதித்து கோயிலுக்குத் திரும்புவார். திருமலையிலும் ஏகதின பிரம்மோத்ஸவ வைபவம் நடக்கும். 

வெள்ளி, 11 நவம்பர், 2016

பிருந்தாவன துவாதசி பூஜை


பிருந்தாவன துவாதசி பூஜை 

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.









மகிமை வாய்ந்த துளசி தோன்றிய புராணக்கதை.


இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.


தர்மத்துவஜன் என்னும் அரசன், மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, கார்த்திகை மாதம், பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு 'துளசி' என்று பெயரிட்டனர்.


துளசி, பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.
பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.


ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். ஆகவே, ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.


பிரம்மன், 'துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, சுதர்மன் என்ற கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், 'சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.
துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், பதினாறு அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.


துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை புஷ்கர க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.



துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்தைக்  கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, காந்தர்வ முறையில் அவளை மணந்து கொண்டான்.


துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் மந்திரக் கவசம் மின்னியது.


மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், சங்கரர் ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.
தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.
சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.
சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.
தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.
சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.
சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.
சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.
விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.
சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.
சிவனார், அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.
பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.
அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.
கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 
துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.
துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.
தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.
விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.
விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.
துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.

என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.
இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின.
சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.


இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.

துளசி பூஜை செய்யும் முறை:

துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.


துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்க.

அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.


கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.


பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.



மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.
துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,
வெற்றி பெறுவோம்!!!!!
 








கார்த்திகை விளக்கு

கார்த்திகை விளக்கு 

மங்களகரமான மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தில் பவுர்ணமி நிலவில் மகா தீபத்திருநாள், ‘பெரிய கார்த்திகை’ என்று கொண்டாடப்படுகிறது.விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. தீப ஜோதியை வணங்கி வழிபடுவது இந்துக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் வழிமுறையாகும். அறிவு என்ற ஞானம் (ஒளி) வரும்போது அறியாமை என்ற இருள் அகல்கிறது என்பதே இதன் ஐதீகம். அகல், எண்ணெய், திரி, சுடர் என்ற நான்கும் ஒன்று சேரும்போது விளக்கு ஆகின்றது. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படுவதாகும் இந்த மகா ஒளியையே தீப சக்தியாக வணங்குகிறோம்.


சிவன் கோயிலில் கருவறையை சுற்றி வலம் வரும்போது சிவன் சன்னதிக்கு நேர் பின்புறம்

லிங்கோத்பவர் (அண்ணாமலையார்) காட்சியளிப்பார். இதில் சிவபெருமானின் உச்சி, பாதத்தை காணமுடியாது. அடி-முடி காணமுடியாத பெருமானே சிவன் என்பதன் தாத்பர்யமே இது.சிவன், விஷ்ணு, பிரம்மா இடையே யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தபோது, சிவபெருமான் கிடுகிடுவென வளர்ந்து வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுக்கிறார். அவரது தலையையும் பாதத்தையும் காண முடிகிறதா என்று விஷ்ணு, பிரம்மாவிடம் கேட்கிறார். பாதத்தை பார்க்க பன்றி வடிவம் எடுத்து பாதாளம் நோக்கி செல்கிறார் விஷ்ணு. அன்ன வடிவம் எடுத்து பறக்கும் பிரம்மா, தலையை பார்க்க மேல்நோக்கி செல்கிறார். பல யுகங்கள் பயணம் செய்தும் இருவராலும் சிவபெருமானின் அடி, முடியை காண முடியவில்லை. அடி, முடி இல்லாத ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் என்பது புராணம்.சிவபெருமான் ஜோதி வடிவமாக நின்ற திருத்தலம் என்பதால் திருவண்ணாமலையில் மகா கார்த்திகை தீப திருநாளன்று அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்படும். இதையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்படும். 


கம்புகளையும், பனை ஓலைகளையும் கொண்டு கோபுரம் போல் அமைத்து அதில் பட்டாசு, வெடிகள் கட்டி கொளுத்தி விடுவார்கள். பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரியும். ஜோதி வடிவில் சிவபெருமானை தரிசிப்பதே இதன் தாத்பர்யம்.


கார்த்திகை தீப திருநாளில் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டின் வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக வைக்க வேண்டும். இந்நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக நடுவாசல், கூடம், வராண்டா, கைப் பிடிச்சுவர்கள், மாடிப்படிகள், துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும், வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும்.சந்திர தரிசனத்துக்கு பிறகு கோயில்களில் தீபம் ஏற்றப்படும். எனவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்றலாம். பூஜையின்போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.


குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள். வீடுகளில் விளக்கேற்றி, கோயிலுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை. தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம். -