வெள்ளி, 11 நவம்பர், 2016

கார்த்திகை விளக்கு

கார்த்திகை விளக்கு 

மங்களகரமான மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தில் பவுர்ணமி நிலவில் மகா தீபத்திருநாள், ‘பெரிய கார்த்திகை’ என்று கொண்டாடப்படுகிறது.விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. தீப ஜோதியை வணங்கி வழிபடுவது இந்துக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் வழிமுறையாகும். அறிவு என்ற ஞானம் (ஒளி) வரும்போது அறியாமை என்ற இருள் அகல்கிறது என்பதே இதன் ஐதீகம். அகல், எண்ணெய், திரி, சுடர் என்ற நான்கும் ஒன்று சேரும்போது விளக்கு ஆகின்றது. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படுவதாகும் இந்த மகா ஒளியையே தீப சக்தியாக வணங்குகிறோம்.


சிவன் கோயிலில் கருவறையை சுற்றி வலம் வரும்போது சிவன் சன்னதிக்கு நேர் பின்புறம்

லிங்கோத்பவர் (அண்ணாமலையார்) காட்சியளிப்பார். இதில் சிவபெருமானின் உச்சி, பாதத்தை காணமுடியாது. அடி-முடி காணமுடியாத பெருமானே சிவன் என்பதன் தாத்பர்யமே இது.சிவன், விஷ்ணு, பிரம்மா இடையே யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தபோது, சிவபெருமான் கிடுகிடுவென வளர்ந்து வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுக்கிறார். அவரது தலையையும் பாதத்தையும் காண முடிகிறதா என்று விஷ்ணு, பிரம்மாவிடம் கேட்கிறார். பாதத்தை பார்க்க பன்றி வடிவம் எடுத்து பாதாளம் நோக்கி செல்கிறார் விஷ்ணு. அன்ன வடிவம் எடுத்து பறக்கும் பிரம்மா, தலையை பார்க்க மேல்நோக்கி செல்கிறார். பல யுகங்கள் பயணம் செய்தும் இருவராலும் சிவபெருமானின் அடி, முடியை காண முடியவில்லை. அடி, முடி இல்லாத ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் என்பது புராணம்.சிவபெருமான் ஜோதி வடிவமாக நின்ற திருத்தலம் என்பதால் திருவண்ணாமலையில் மகா கார்த்திகை தீப திருநாளன்று அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்படும். இதையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்படும். 


கம்புகளையும், பனை ஓலைகளையும் கொண்டு கோபுரம் போல் அமைத்து அதில் பட்டாசு, வெடிகள் கட்டி கொளுத்தி விடுவார்கள். பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரியும். ஜோதி வடிவில் சிவபெருமானை தரிசிப்பதே இதன் தாத்பர்யம்.


கார்த்திகை தீப திருநாளில் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டின் வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக வைக்க வேண்டும். இந்நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக நடுவாசல், கூடம், வராண்டா, கைப் பிடிச்சுவர்கள், மாடிப்படிகள், துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும், வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும்.சந்திர தரிசனத்துக்கு பிறகு கோயில்களில் தீபம் ஏற்றப்படும். எனவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்றலாம். பூஜையின்போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.


குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள். வீடுகளில் விளக்கேற்றி, கோயிலுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை. தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம். - 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக