ஞாயிறு, 27 டிசம்பர், 2020

 

ஆனை முகனின் அழகிய நாமங்கள்


‘‘விநாயகன்’’ என்பதன் பொருள் தனக்குமேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும். ‘‘வி’’ என்றால் சிறப்பு என்ற பொருளைச் சுட்டுகின்றது. ‘‘நாயகன்’’ என்பதன் பொருள் தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவன் என்பதாகும். விநாயகப் பெருமான், மூலாதாரத்திற்குரியவர். முழுமுதலாக விளங்குபவர்.

 ‘‘கணபதி’’ என்பதில், ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும் ‘‘ண’’ என்பது மோட்சம் பெறுதலையும் ‘‘பதி’’ என்பது ஞான நெறியில் திகழ்ந்து பரம்பொருளை அடைதலையும் குறிப்பதாகும். கணங்களின் தலைவன் என்பதால் கணபதி.

 ‘‘கஜானன்’’ கஜா என்றால் யானை என்று பொருள். யானை முகம் கொண்டவன் என்பதால் கஜானன். அடியார்களின் துன்பங்களை நீக்கிக் கருணை புரிபவர்; ஞானத்தை வழங்குபவர்.

 ‘‘ஏகதந்தர்’’ என்றால் ஒற்றைக்கொம்பர் என்பதாகும். விநாயகர் தம்முடைய ஒரு கொம்பை  தந்தத்தை ஒடித்து, அதனைக் கொண்டு கயமுகாசுரனைக் கொன்றார். ஒரு தந்தத்தோடு இருப்பதால் ஏகதந்தர். மேலும் பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். 






இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.

 ‘‘விகடர்’’ வேடிக்கைகள் செய்வதில் வல்லவர். அதனால் உண்டான பெயர். ‘‘விக்கினேஸ்வரன்’’ விக்கினராஜன், விக்கினங்கள் நீக்குபவர். அதேவேளை, தம்மை வந்து அணுகாதவர்களுக்கு விக்கினங்களை, இடையூறுகளை வருவிப்பவர். விக்கினங்களை உண்டாக்கவும், போக்கவும் வல்லவர். 
அதனால், விக்கினேஸ்வரன் என்ற திருப்பெயர், விநாயகருக்கு வழங்கப்பட்டது.

 ‘‘சிந்தாமணிவிநாயகர்’’ கபிலமுனிவருக்குச் சொந்தமான சிந்தாமணியை கணராஜன் என்பவன் கவர்ந்து சென்றான். விநாயகர் அவனை வென்று சிந்தாமணியை மீட்டு அருளியமையினால் இப்பெயர் வழங்கப்பட்டது.

 ‘‘வக்கிரதுண்டர்’’ பிரளயகால இறுதியில் தோன்றி பிரம்மா, மகாவிஷ்ணு, சிவபெருமான் முதலான மூவர்க்கும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை ஆற்றும்படி அருளுபவர்.

 ‘‘பாலச்சந்திரவிநாயகர்’’ அக்கினியைக் கிளப்பி, அச்சுறுத்திய அனலாசுரனை விநாயகர் குழந்தை வடிவில் சென்று விழுங்கியருளியமையினால் பாலச்சந்திரவிநாயகர் பெயர் அவருக்கு வந்தது.

 ‘‘மகோற்கடவிநாயகர்’’ காசி ராஜனைக் காப்பாற்றுவதற்காக நராந்தகன், தேவாந்தவன் ஆகிய அசுரர்களை, அழித்தொழித்தமையால் இப்பெயர் வரக்காரணமாயிற்று.

 ‘‘வல்லபை விநாயகர்’’ விநாயகரிடத்தில் வரம்பெற்ற பெலி என்னும் அசுரன் திரிலோகங்
களிலும் சஞ்சரிக்கின்ற தேவர்களுக்கு துன்பம் செய்து, அல்லற்படுத்தியபோது தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க பஞ்சமுக விநாயகராக அவதரித்து அவ்வசுரனைச் சம்காரம் செய்த திருவடிவம் வல்லபை விநாயகர்.

 ‘‘துண்டி விநாயகர்’’ துராசதன் என்னும் கொடியவனை வதம் செய்து, திவோதாசன் என்பவனுக்கு அருள்புரிந்த வடிவம் துண்டி விநாயகர்.

 ‘‘தூமகேதுவிநாயகர்’’ மாதவராசன், அவனின் மனைவி சுமுதை ஆகியோருக்கு கொடுமை இழைத்து வந்த தூமராசன் என்பவனை அழித்து, அருள்புரிந்த வடிவம் தூமகேதுவிநாயகர்.

 ‘‘கயமுகாசுர சம்காரமூர்த்தி’’  தேவர்களை துன்புறுத்திய கயமுகாசுரனை விநாயகப் பெருமான், தம்முடைய திருக்கோட்டிலொன்றைத் திருக்கரத்தால் முரித்துக் கயமுகாசுரன்மீது விட்டார். அது அவனுடைய மார்பைப் பிளந்து விரைந்து சென்று, சுத்தோதக சமுத்திரத்தில் மூழ்கி, அவருடைய திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது. கயமுகன் ஆரவாரித்துத் தேர்மேல் வீழ்ந்து மயங்கினான், அவனுடைய மார்பினின்றும் நதி போலப் பெருகிய ரத்தவெள்ளம் பக்கத்திலுள்ள ஒரு காட்டிற் புகுந்தமையால் அவ்விடம் திருச்செங்காடு என்னும் பெயர்பெற்றது.

மார்பு பிளந்த நிலையிலும் கயமுகாசுரன், பழைய உருவத்தை விட்டு ஒரு பெருச்சாளி வடிவங்கொண்டு, விநாயகக் கடவுளைத் தாக்கும்படி வந்தான். வந்தவன் மனம் மாறி, விநாயகரிடம் தங்களை சுமக்கும் பாக்கியம் எமக்கு தந்தருள வேண்டும் என்று பணிந்தான். விநாயகர் ஏற்றுக்கொண்டார். கயமுகாசுரனை சம்காரம் செய்தமையால் கயமுகாசுர சம்காரமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

 ‘‘அநந்தசாப நிவாரண மூர்த்தி’’ ஆதிபராசக்தி, சிவபெருமானுடன் பகடை ஆடுகிறாள். அப்போது மகா விஷ்ணு நடுவராக இருக்கிறார். இதில் சிவபெருமான் வெற்றி பெற்றுவிடுகிறார். சூது செய்து தன்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சிவபெருமானிடம் சினம் கொள்கிறாள் சிவசக்தி. அதோடு நின்று விடாமல் சிவபெருமானின் இந்த வெற்றிக்கு துணை போனதால் அண்ணன் என்றும் பாராமல் மகாவிஷ்ணுவை பாம்பாக போவக்கடவாய் என்று பார்வதி தேவி சபித்தாள். 

இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்படி என்று சிவனிடம் கேட்டார் விஷ்ணு. அதற்கு சிவபெருமான், தென்திசையில் ஆலவனமென்று ஒரு இடமிருக்கின்றது. அதில் மிகப்பெரிய ஒரு ஆலமரமுள்ளது. நீ அங்கே போய் அம்மரத்தடியிலுள்ள பொந்தொன்றில் இச்சாபம் நீங்கும்படி பெரும்தவம் செய்துகொண்டிரு. அங்கே நம்முடைய குமாரனாகிய விநாயகன் அங்கே வருவான். நீ அவனை எதிர்கொண்டு தரிசிக்கும்பொழுது, உன்னுடைய இப்பாம்பு வடிவம் நீங்கும் என்று சொல்லி அருளினார்.

அதன்படி மகாவிஷ்ணு பாம்பு உருவத்துடன் ஆலவனத்திற்குப்போய் அங்குள்ள அரசமரத்தடி பொந்தில் தவம் செய்தார்.
விநாயகப்பெருமான் அவ்விடம் வருவதை அறிந்து மகாவிஷ்ணு எதிர்ச்சென்று அவரை பூஜித்து வணங்கினார். பாம்பு உருங்கொண்டிருந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார். அநந்த என்றால் பாம்பு என்று பொருள். மகாவிஷ்ணுவின் பாம்பு(அநந்த)சாபத்திலிருந்து விமோசனம் அளித்ததால் விநாயகருக்கு அநந்த சாப நிவாரணமூர்த்தி என்ற பெயரும் வந்தது.

 ‘‘வரம் பெறு மூர்த்தி’’ காஞ்சிபுரத்திலுள்ள அநேகதங்காவதம் என்னும் தலத்திலே விநாயகமூர்த்தி அநேகபேச்சுரர் என்னும் திருநாமத்தோடு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவபெருமான் உமாதேவி சமேதராய் தோன்றினார். விநாயகக்கடவுள் அவர்களை வணங்கி நின்றார். உடனே சிவபெருமான், விநாயகரை தமது வலது தொடையின்மேலிருத்தி அவரை நோக்கி, எவராயினும், எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பு அந்தச் செயல் எந்த இடையூறுமின்றி முடிவுற வேண்டுமென்று உன்னை வழிபடுவாராயின் அச்செயல் உனது அருளால் வெற்றியாய் முடியும்.

தேவர்களுக்கும், நம்முடைய பூதாகணங்களுக்கும் அவர்கள் வரம் பெற துணை நிற்கும் நாயகனாக இருப்பாய் என்று அருளினார் சிவ
பெருமான். அதன் பொருட்டே யாவரும் பல்வேறு வரம் வேண்டி தவம் செய்வாராயின் அவர்கள் முதலில் தங்களது தவம் வலிமை பெறவும், அத்தவம் எந்த இடையூறுமின்றி முழுமைபெறவும் விநாயகப்பெருமானின் அருள் வேண்டி முதலில் பூஜிக்கின்றனர். இதன் காரணமாகவே விநாயகப் பெருமானுக்கு வரம்பெறு மூர்த்தி என்ற நாமம் உருவாகிற்று.

 ‘‘அச்சறுத்தருண் மூர்த்தி’’ திரிபுர சங்காரத்தின் பொருட்டுத் தேவர்களால் அமைக்கப்பட்ட பூமியாகிய தேரின்மீது சிவபெருமான் அமர்ந்து, பிரம்மாவிடம் தேரை ஓட்டுங்கள் என்றார். பிரம்மா நான் மறைப் புரவியைச் செலுத்தினார். ரதம் நகரவே இல்லை. பிரம்மா சாட்டையினால் குதிரைகளை அடித்தார். குதிரைகள் தங்களால் ஆன மட்டும் பாய்ந்து செல்ல முயன்றும் தேரானது நின்ற நிலையினின்றும் கொஞ்சம் கூட அசையவில்லை. தேவர்கள் யாவரும் அதனைக்கண்டு ஆதிசிவனின் ரதமே அசையாது நிற்கும்படி தடை ஏது வந்தது.

எதனால் இது நிகழ்ந்தது என யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் தெரிந்தது. யானை முகத்தான் கணேசப் பெருமானின் செயல் என்று. உடனே தேவர்கள், பிரம்மாவோடு சேர்ந்து விநாயகப் பெருமானைப் பூஜித்தார்கள். மறுகனமே மூஷிக வாகனத்தில் கணநாதன் எழுந்தருளினார்.
தேரானது நிலை பிரியாது நின்ற இடம் திருஅச்சிறுப்பாக்கம் என்று சொல்லப்படும். இறுதல் - முறிதல், பாக்கம் - ஊர்.

ரதத்தின் அச்சு செயல்படாமல் தடுத்து மீண்டும் அதை செயல்பட வைத்ததாலே கணநாதனுக்கு அச்சறுத்தருண் மூர்த்தி என்ற நாமமும் உண்டு.
 ‘‘விக்கினேசுவரமூர்த்தி’’ தேவர்கள் தேவாமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது விநாயகரை வணங்கவில்லை. இதனால் மத்துவாக இருந்த மந்தரமாகிய மலை பாதாள உலகத்துக்கு போய்விட்டது.

பின்னர் திருமாலின் உதவியுடன் மந்தரமலையை பெற்ற தேவர்கள்,  விநாயகரை வணங்கிவிட்டு திருப்பாற்கடலை கடையும் பணியை மேற்கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் வெற்றிபெற்றனர்.தம்மை நினைக்காதவர்களுக்கு விக்கினங்களை உண்டு பண்ணுதலானும், தம்மை நினைத்தவர்களுக்கு விக்கினங்களைப் போக்குவதாலும் விநாயகப் பெருமானுக்கு விக்கினேசுவர மூர்த்தி என்ற 
நாமமும் உருவானது



 ‘‘பிரணவமூர்த்தி’’ வேதமானது சிவபெருமானை முதல் இடை கடைகளிற் பிரகாசப்படுத்துகின்றது. முதலில் ஓம் என்று தொடங்குகின்றது. அது பிரணவம் என்று சொல்லப்படும். இதன் வடிவமே விநாயகர். வேதத்தின் முதலெழுத்து விநாயகருடைய சொரூப மாதலை அவரது திருமுக முணர்த்தும். அதனையே “கைவேழமுக”மென்று கூறுவர். 

அது “முந்தைவேத முதலெழுத்தாகிய எந்தை” எனவும்,பிரணவமூர்த்தி “மூலமொழிப்பொருளாமெந்தை” எனவும், “தாரகப் பிரமமான மாக்கயமுகத்து வள்ளல்” எனவுங் கந்த புராணங் கூறுமாற்றானும் உணர்க. பிரவணத்தின் வரிவடிவை முதற்கண் அறிவது மரபாம். முதலாம் இரண்டாம் உறுப்புகள் நட்சத்திரவடிவு தண்டவடிவுகளாக அமையப் பெற்றது. பிரணவம் என்று காமிகாகமம் கூறுகின்றது. 

ஆகையால் அவ்விரண்டு உறுப்புங் கலந்த பிள்ளையார்சுழி என்றும், மௌனாக்கரம் என்றும், மௌனக்குறி என்றுஞ் சொல்லப்படும். ‘உ’ என்று எழுத்து நாதவிந்துகளின் வரிவடிவாம். இது ஓங்காரவாச்சியராகிய விநாயகரது துதிக்கை போலாம். இதுபற்றியே கணபதியினை முதலில் வழிபடும் மரபை உலகங் கைக்கொண்டு அனுஷ்டித்து வருகின்றது.

 ‘‘புராண பரிபாலனமூர்த்தி’’ வாதராயணர் என்னும் பெயர்பெற்ற வியாச முனிவர் சிவபெருமானுடைய அனுமதிப்படி சனற்குமார முனிவரிடத்தில் மாணக்கராக இருந்து பதினெண்புராணங்களையும் கூறினார். பின்பு, யாவருந்தம்மை நினைத்துத் தொடங்கிச் செய்கின்ற கருமங்களை விக்கினமின்றி நிறைவேற்றுந் தெய்வமாகிய விநாயகமூர்த்தியை வழிபடாது அப்புராண சரித்திரங்களைச் சுலோக ரூபமாகச் சொல்லத் தொடங்கினார். அவர் விக்கினேசுவரருடைய அருளைப் பெற்றுத் தொடங்காமையால் உண்மை ஞானத்தைப் பெறாமல் ஊமரைப்போல வருந்தி மயங்கிப் பிரம்மதேவரிடம் போய்த் தமது குறையை விண்ணப்பித்தார். 

பிரம்மா வியாசரை நோக்கி, “முனிவனே! நீ வேதத்தை நான்காகப் பகுத்தபோது முதலில் பிரணவத்தை உச்சரியாதபடி வேதம் ஓதுதல் முறையல்ல என்பதை உணர்ந்து முதலிற் பிரணவத்தைச் சொன்னாய்; பிரணவப் பொருளாயிருக்கும் விநாயகர் தம்மைப் பிரணவத்தினாற் தோத்திரஞ் செய்யத் திருவுள்ளம் உவந்து இடையூறு சேராவண்ணங் காத்தருளினார். இப்பொழுது வித்தியா கருவத்தினால் விக்கினங்களை நீக்குங் கடவுளை மனம் வாக்குக் காயங்களினால் வழிபாடு செய்யாமல் புராணஞ் சொல்லத் தொடங்கினமையால் இத்துன்பம் வந்து சேர்ந்தது, விநாயகக் கடவுளைப் பூசைசெய்யின் அவர் உண்மை ஞானத்தைத் தந்து, எடுத்த கருமத்தை நிறைவேற்றுவார்” என்று உபதேசித்தார்.

வியாச முனிவர் பிரம்மாவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஒரு வனத்திற்சென்று கணபதியைத் தியானித்துப் பன்னிரண்டு வருடம் தவம் செய்தார். விநாயகர் அருள்கூர்ந்து காட்சி கொடுத்தருளினார். முனிவர் அன்புடன் நமஸ்காரஞ் செய்து, கண்களினின்றும் ஆனந்த அருவி சொரிய, சரீரம் பளகங்கொள்ள, அகமுருகிச் “சச்சிதானந்த சொரூபரே! அடியேனது மலபாசத்தை நீக்கி, நீங்காத மெய்யன்பை தருதல் வேண்டும். பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றவும் அருள் செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். 

விநாயகர், “அவ்விதமே ஆகுக” என்று அருட்செய்து, மறைந்தருளினார். வியாசமுனிவர் தமக்குக் கணேசப்பெருமான் காட்சி கொடுத்தருளிய இடத்தில் ஒரு ஆலயமும் உண்டாக்கி, விநாயகரைப் பிரதிஷ்டைசெய்து, பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றினார்.

 ‘‘பிரம்மசாரியமூர்த்தி’’ மென்கண்டதேவர் திருவெண்ணெய்நல்லூர் சிவாலயத்தில் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பொல்லாப்பிள்ளையாருடைய திருச்சந்நதியிலே வேத சிவாகமப் பொருளை உணர்ந்தும், சிவஞானபோதத்தைத் தெளிந்து நீட்டை கூடியும் வருங்காலத்து, அப்பொல்லாப்பிள்ளையார் மெய்கண்ட தேவருக்குச் சூர்ணிகையைச் செவியறிவுறுத்தினர்.

சூர்ணிகையும் மெய்கண்டதேவர் சிவஞானபோதத்திற்கு அருளிய வார்த்திகமும் பொருளால் ஒற்றுமையுடையனவாம். சூர்ணிகை என்பது சூத்திர முதலியவற்றின் பொருளை இலகுவாகச் சுருங்கிய வசனரூபமாயுரைப்பது எனப் பொருள்படும். வார்த்திகம் என்பது மொழிப்புரை எனப்பொருள்படும்.பொள்ளார் பொல்லார் என மருவிற்று. உளி முதலியவற்றால் போழ்ந்து செய்யப்படாதவர் என்பது கருத்து, எனவே, சுயம்பு மூர்த்தி என்றதாம். என நிரம்பவழகிய தேசிகராற் கூறப்பட்டவாற்றானு முணர்க.

 ‘‘திருமுறை கண்டமூர்த்தி’’ திருவாரூரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்து வந்த குலசேகர ராஜராஜ மன்னர், தமது சபையில் வரும் அன்பர்கள் மூலம் தேவாரத்துள் ஓரோர் பதிகங்களை ஓதக் கேட்டு, கையிரண்டும் உச்சிமேலேற, கண்ணீர் கரைந்தோட, சிவபெருமானை துதித்து வந்தார்.

அங்ஙனம் இருக்கையில் ஒரு நாள் காலை, திருநாரையூரிலே ஓர் ஆதிசைவப் பிராமணருக்கு ஒரு ஆண் மகன் தோன்றினான். அவன் தான் நம்பியாண்டார் நம்பி. உபநயனஞ் செய்யப்பெற்று, வேதம் முதலிய கலைகளைப் பயின்றுவரும் நாளில், பிதாவாயினார் ஓரூர்க்குச் செல்ல, அவர் கட்டளைப்படி (சுயம்புமூர்த்தி) பொல்லாப்பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் முதலியன எல்லாம்செய்து, நிவேதனத்தை அவர் திருமுன்னிலையில் வைத்து, “எம்பெருமானே! அதனைத் திருவமுது செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். பிள்ளையார் திருஅமுது செய்யாதிருப்பது கண்டு, அப்புத்திரர் வெம்பி, அடியேன் ஏதேனுந் தவறு செய்ததுண்டோ? அடியேன் நிவேதித்ததை உண்ணாதது என்ன?” என்று தமது தலையினை கல்லில் மோதலானார். அப்பொழுது பிள்ளையார் “நம்பீ! பொறு” என்று தடுத்து அவ்வமுது முழுவதையும் உவந்து திருவமுது செய்தருளினார்.

நம்பியாண்டார் நம்பி “எந்தையே! அடியேன் இனிப் பாடசாலைக்குச் சென்றால் உபாத்தியாயர் அடிப்பார். ஆதலாலே வேதமுதலிய கலைகளைத் நீரே ஓதித் தரவேண்டும்” என்று கூறினார். பரமாச்சாரியராகிய விநாயகரும் ஓதுவிக்க, நம்பியாண்டார் நம்பி ஓதி மகிழ்ந்தார், அதுபோல மற்றை நாளும் நிகழ, நம்பியாண்டார் நம்பி வீற்றிருந்திடுஞ் செய்தியை வேந்தர் கேட்டு, திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாருக்கு 
நம்பியாண்டார் நம்பி நிவேதிக்கும்படி வாழைப்பழம், தேன், அவல், எள்ளுருண்டை முதலியவற்றோடு அந்நகரில் வந்து சேர்ந்தார்.

அங்ஙனம் வந்தவர் நம்பியினுடைய பாதங்களை வணங்கி, “இவற்றைப் பொல்லாப்பிள்ளையாருக்கு இப்பொழுதே நிவேதிக்க” என்று சொன்னார், நம்பி, அரசர் கூறியவற்றைக் கேட்டு யானைமுகக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி, “அரசன் தொகுத்த இப்பொருள்களை நிவேதித்தருளுக” என்று படைத்தனர். விநாயகர் துதிக்கையினால் ஏற்றுத் திருவமுது செய்தருளினார். நம்பியாண்டார்நம்பிக்கு அருள்புரிந்து தில்லைச் சிதம்பரத்திலிருந்த தேவாரத் திருமுறைகளை உலகத்தவர் உய்யும் வண்ணம், வெளியுலகிற்குக் கொண்டுவர அருள்பாலித்தவர் விநாயகப் பெருமான். அதனால் திருமுறைகண்டமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

 ‘‘சூர்ப்பகர்ணர்’’ விநாயகரிடம் ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர்கொண்டார்.

 ஐங்கரன்: மகாகணபதி, சித்தகணபதி, சக்திகணபதி, மோட்சகணபதி, வித்தியாகணபதி என இவ்வைந்து முகங்களோடு கூடி கணபதிப் பெருமானைப், ‘‘பஞ்சமுக விநாயகர்’’ என்று அழைக்கின்றனர். விநாயகப்பெருமான் ஐந்துமுகங்களோடும், ஐந்துகரகங்களோடும் காணப்
படுவதால் சக்தி தெய்வமாகவே விளங்குகிறார்.

ஐந்து என்ற எண்ணில், சில சிறப்புக்கள் உண்டு. பஞ்சாட்சரம், பஞ்சமூர்த்திகள், பஞ்சபூதங்கள், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பஞ்சப்புலன்கள், பஞ்சகோசம், பஞ்செழுத்து மந்திரம், பஞ்சகிருத்தியங்கள், பஞ்சதளம், பஞ்சப்பிரமாணங்கள், இப்படியாக ஐந்தின் மகிமையோடு விளங்குபவர், பஞ்சமுக விநாயகர். ‘‘வித்யா கணபதி’’ வடிவம்; ஐந்தின் மகிமையோடு விளங்குகின்றது. சக்தியின் வாகனமான சிங்கத்தின் மீது, ஐந்து முகங்களோடு காட்சி தருபவர் அருள்புரிபவர், சக்தி விநாயகர். விநாயகப்பெருமான் ஐந்து கரங்களுடன் ஐங்கரன் ஆக விளங்குகிறார்.

எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப்பெருமானை வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பவற்றைப் பற்றிய அருட்தகவல் கீழே தரப்பட்டுள்ளன :

வன்னிமரப்பிள்ளையார் : அவிட்ட நட்சத்திரத் தினத்தில், வன்னி விநாயகரை நெற்பொரியினால், அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

புன்னைமரப்பிள்ளையார் : ஆயில்ய நட்சத்திரத் தினத்தில், விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் அணிவித்துப் பின் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு, உடைகள் தானம் செய்து, விநாயகரை வழிபட்டால் கணவன், மனைவி தம்பதிகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழமரத்தடிப் பிள்ளையார் : அனுஷ நட்சத்திரத்தன்று இந்தப் பிள்ளையாருக்கு, மாதுளம்பழ முத்துக்களால், அபிஷேகம் செய்தால் பணிக்காகக் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரத்தடிப் பிள்ளையார் : கேட்டை நட்சத்திரத்தில், இந்தப் பிள்ளையாருக்கு விபூதிக் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை நீங்கிப், பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

வேப்பமரத்தடி விநாயகர் : உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு மனம்போல மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.

ஆலமரத்தடிப் பிள்ளையார் : ஆலமரத்தின் கீழ் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத் தினத்தன்று, சித்திரான்னங்களை நிவேதனம் செய்து தானம் அளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வமரத்தடிப் பிள்ளையார் : சித்திரை நட்சத்திரத்தினத்தன்று, இவ்விநாயகருக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் அளித்து வில்வ மரத்தைச் சுற்றிவந்தால் பிரிந்த தம்பதியர், மீளவும் ஒன்று சேர்வர்.

அரசமரத்தடிப்பிள்ளையார் : பூச நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து, வழிபட்டால், விளைபொருள்கள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.

வியாழன், 5 நவம்பர், 2020

 துளசியை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்


வியாழன், 1 அக்டோபர், 2020

திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்..

  

திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்..


அருணகிரிநாத சுவாமிகள் எழுதிய திருப்புகழ் பாடல்கள் மந்திர மயமானவை என்று காஞ்சி மகா சுவாமிகள் கூறி இருக்கிறார்.  

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்:
 "திருமணம் ஆகாதவர்கள் இப்பாடலை நாற்பத்து எட்டு நாட்கள் தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ ஆறுமுறை பாராயணம் செய்தால், எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சரி, தடைகளாக இருந்தாலும் சரி அவைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பது உறுதி. திருமணம் ஆனவர்கள் இப்பாடலை பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்பது உறுதி." 

திருப்புகழ்:
  
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
  மிகவானி லிந்து     வெயில்காய
 மிதவாடை வந்து தழல்போல வொன்ற
  வினைமாதர் தந்தம்     வசைகூற

 குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
  கொடிதான துன்ப     மயில்தீர 
 குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து  
  குறைதீர வந்து     குறுகாயோ

 மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
  வழிபாடு தந்த     மதியாளா
 மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
  வடிவே லெறிந்த     அதிதீரா

 அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
  மடியா ரிடைஞ்சல்     களைவோனே
 அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
  அலைவா யுகந்த     பெருமாளே.

திங்கள், 27 ஜூலை, 2020

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு
வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிட்டும் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும். 
வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்கும்.
வழிபாட்டு முறைகள் தெரியாதவர்கள் எப்படி வலம்புரி சங்கினை வைத்து பூஜித்து மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறுவது என பார்ப்போம். முதலில் 7 அங்குல நீளத்திற்கு குறையாத மாசு மருவற்ற ஒரு வலம்புரிச் சங்கினை வாங்கிக் கொள்ளுங்கள். நன்னீரினாலும், பின்னர் மஞ்சள் கலந்த நீரினாலும் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
வலம்புரிச் சங்கிற்கு அளவான ஒரு வெள்ளி தடடில் பச்சரிசி பரப்பிக் கொள்ளுங்கள். ( வெள்ளித் தட்டில் வைக்க வசதியில்லாதவர்கள் பித்தளை தடடினை உபயோகிக்கலாம். ) அதன் மேல் வெண் பட்டு விரித்துக் கொள்ளுங்கள். இந்த தட்டினை மகாலட்சுமி தேவியின் படத்தின் முன்னால் வைக்கவும். அதன் மேல் வலம்புரிச் சங்கினை பிளந்த பக்கம் மேற்புறமாக இருக்குமாறு வையுங்கள். இதற்கு முதல் சங்கிற்கு வட்டமான முன் பகுதியில் நடுவில் ஒன்றும் சுற்றி ஆறுமாக ஏழு பொட்டுக்கள் அதாவது முதலில் சந்தனம் அதன் மேல் குங்குமம் வைக்கவும். பின் பிளந்த பக்கத்தின் ஓரமாக இதே போல் ஏழு பொட்டுக்கள் வைக்கவும். சங்கினுள் சிறிது மஞ்சள் கலந்த நீர் விட்டு நிரப்பவும். இதனுள் இரண்டு கிராம்பு சேர்க்கவும். வசதியுள்ளவர்கள் இரண்டு குங்குமப் பூவும் சேர்க்கலாம். இப்படி தயார் செய்யப் பட்ட சங்கினை தட்டில் வைக்கவும். சங்கு கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். வால் பகுதி மேற்கு நோக்கியிருக்க வேண்டும். 
நெய் தீபம் ஏற்றவும். சங்கு உள்ள தட்டினைச் சுற்றி மல்லிகை, சிகப்பு ரோசா, சிகப்பு அரலி பூக்களை தூவி பூக்களின் மேல் தூய பன்னீர் தெளிக்கவும். பின்னர் 
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே  பாவ மானாய தீமஹி 
தந்நோ சங்க ப்ரசோதயாத்   
என்று சங்கு காயத்திரி மந்திரத்தை 18 தடவை சொல்லி தூப, தீபம்ஆராதனை செய்து சங்கினை வழிபடவேண்டும்.
பின்னர் மகாலட்சுமி தேவியை நினைத்து 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனதாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை சர்வ தாரித்ரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம்  ஸ்வாஹா.
மந்திரத்தினை 108 தடவைக்கு குறையாமல் சொல்லி தூப, தீப,நைவேத்திய ஆராதனை செய்து பூசையை நிறைவு செய்ய வேண்டு;ம். அந்த பூசையினை அதிகாலை வேளையில் செய்வதே சிறப்பாகும். தொட்ர்ந்து 48 நாட்கள் செய்ய எப்படிப்பட்ட தரித்திரத்திலிருந்தாலும் சகலமும் நீங்கி செல்வந்தனாகலாம். சங்கிலிருக்கும் தீர்த்தத்தினை மறுநாள் காலையில் தானும் அருந்தி வீட்டில் உள்ள மற்றவரிற்கும் அருந்தக் கொடுக்க வேண்டும். சிறிதளவு தீர்த்தத்தினை கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் தெளித்து  விடுங்கள். தினமும் புதிதாக தீர்த்தம் தயார் செய்ய வேண்டும். 
தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை செய்யலாம். வெள்ளிக்கிழமை பூசை செய்து சனிக்கிழமை அன்று தீர்த்தத்தினை  தானும் அருந்தி வீட்டில் உள்ள மற்றவரிற்கும் அருந்தக் கொடுக்க வேண்டும். சிறிதளவு தீர்த்தத்தினை கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் தெளித்து  விடுங்கள். சங்கினை தட்டினில் வைத்து தூய நீர் நிரப்பி மறு வெள்ளி வரை தூப தீபம் காட்டி வழிபட்டு வரவும்..
சகல செல்வமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வோமாக

ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்தால் தீரும் பிரச்சனைகள்

ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்தால் தீரும் பிரச்சனைகள்

கருடன்

அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழக்கிழமை பஞ்சமி திதியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனைத் தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-

ஞாயிறு : பிணி விலகும்.

திங்கள் : குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் : துணிவு பிறக்கும்.

புதன் : பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன் : நீண்ட ஆயுள் கிடைக்கும்.

வெள்ளி : திருமகள் திருவருள் கிட்டும்.

சனி : முக்தி அடையலாம்.

கவலை, பயத்தை போக்கும் சாய்பாபா மந்திரம்

மனதிலிருக்கும் கவலை, பயத்தை போக்கும் சாய்பாபா மந்திரம்


சனி, 6 ஜூன், 2020

நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

 நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? 


இது ஒரு சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில், நல்ல பலனை பெற முடியும். எந்த ஒரு பரிகாரமும், செய்தவுடன் பலனை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், உங்களுக்கு தகுந்த பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்தை தொடங்க வேண்டும். சரி. பணவரவு அதிகரிக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்வோமா? 







ஒரு செப்புப் பாத்திரம் கட்டாயம் இதற்கு தேவை. வேறு எந்த ஒரு உலோகப் பொருட்களையும் பயன்படுத்தினால், விரைவாக பலனை எதிர்பார்க்க முடியாது. செம்பினால் ஆன சொம்போ, டம்லரோ இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதில் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இவைகளை நிரப்பி வைக்கப் போகின்றோம். இன்று நம்முடைய வீடுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சர்க்கரை தான். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, வெல்லம் இவைகளை பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். 


 இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும். எந்த கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம். பணவரவு அதிகரிக்கவும், கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வாருங்கள், இப்படி செய்து வரும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடையுங்கள்  

திங்கள், 25 மே, 2020

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..! Pradosham Mantras in Tamil..!


தோஷம் என்பது குற்றம் என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள்.
இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள். இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது.

இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 1
ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 2
ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 3
ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்: 4
ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி.

பிரதோஷ கால மந்திரம் / பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (Pradosham Mantras in Tamil): 5
ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 6ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 7ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம் (Pradosham Mantras in Tamil): 8
ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ வழிபாடு மந்திரம்: 9
ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி.
பிரதோஷ வழிபாடு மந்திரம்: 10
ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 11
ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி 
அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரம்: 12
ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 13
ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம்: 14
ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரம் (Pradosham Mantras in Tamil): 15
ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி.
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் / பிரதோஷ மந்திரங்கள்: 16
ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி.
பிரதோஷ மந்திரங்கள் (Pradosham Mantras in Tamil): 17
ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ.
பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த பிரதோஷ கால மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

சனி, 9 மே, 2020

அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!



அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற,  தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு, அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.



வழிபாட்டு முறை:


லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை.  பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலையை (3 இலை), கரைத்து வைத்த சந்தனத்தில் தோய்த்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.

அபிஷேகம் செய்ய விரும்பினால், பால், தேன், பன்னீர் பிறகு இவை எடுத்து வைத்துவிட்டு, பின் சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மல்லிகை, தவனம், மரு, தாமரை இப்படி வாசனை பூக்களால்  அர்ச்சிக்கலாம்.

பூஜை முடிந்ததும்   தாம்பூலம் கொடுத்து,. பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும். எதுவுமில்லை எனில், துளசி தீர்த்தமாவது நைவேத்தியம் செய்து கொடுக்கலாம். மிகச்சிறந்த பலன் உண்டு.


அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்!


மஹாலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தனலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.



தான்யலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.



வித்யா லக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் உள்ள வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


வீரலக்ஷ்மி:
யாதேவி ஸர்வபூதேஷு த்ருதி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன்.


சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி ஸர்வ பூதேஷு துஷ்டிரூபேண
ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸந்தான லக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன்.


காருண்யலக்ஷ்மி:
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!


எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன்.

புதன், 22 ஏப்ரல், 2020

அட்சய திருதியை நாளில்என்ன வாங்க வேண்டும்?

வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும். 

இந்த சார்வரி வருடத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி சித்திரை மாதத்தின் இறுதியில் ஞாயிற்று கிழமையில் அட்சய திருதியை நாள் வருகின்றது. அட்சய திருதியை என்றாலே கேட்டது அனைத்தும் கிடைக்கும், வாங்கிய அனைத்தும் பெருகும், எல்லா காரியங்களும் சுபமாக அமையும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 


விநாயகரிடம் வேதவியாசர் மகாபாரதத்தை எழுதுமாறு சொன்னது அட்சய திருதியை அன்று தான். மகாவிஷ்ணு பரசுராம அவதாரம் எடுத்ததும் அக்ஷய திருதியை நன்னாளில் தான்.. 

அட்சய திருதியை நாளில் மகா விஷ்ணுவிற்கு விரதமிருந்து நெல்லுடன் கூடிய அரிசியை நிவேதனம் வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். இதே நாளில் தான் அன்னபூரணி தாயாரிடம், சிவபெருமான் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை கேட்டதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ‘அட்சய’ என்பதற்கு ”எப்போதும் குறையாது” என்பது தான் அர்த்தமாகும். 


இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும், எதை வேண்டுதலாக முன்வைத்தாலும், பெருகிக் கொண்டே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரிக்கும் பொழுது கிருஷ்ண பகவான் துகிலை வளர செய்ததும் அட்சய திருதியை நன்னாளில் தான். இப்போது புரிகிறதா பாஞ்சாலி ஆடை ஏன் உருவ உருவ வளர்ந்துகொண்டே இருந்தது என்று? செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் அக்ஷய திரிதியை நன்னாளில் தவறாமல் லக்ஷ்மி தேவியை வழிபாடு செய்கின்றார் என்று லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிட்டு கூறியுள்ளது. 

இந்நாளை தானம் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் தானம் அளிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம். இந்நாளில் மக்கள் இயலாதவர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, உப்பு, சர்க்கரை, நெய், காய்கறிகள், பழங்கள், விசிறி இவற்றை தானம் அளிப்பதன் மூலம் மோட்சம் கிட்டும். 

தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உடலை குளிர்விக்கும் அன்னத்தை தானம் அளித்தால் உங்கள் அடுத்த அடுத்த சந்ததியினருக்கு அன்னத்தால் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் பசிக்கும் வயிற்றுக்கு அன்னம் இட்டால் இப்பிறவியில் நீங்கள் செய்த புண்ணியம் இரண்டாக பெருகி அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

ஸ்படிகம் ருத்ராட்சம் முதலியவற்றை அணிவதற்கு இந்நாள் உகந்த நாளாக இருக்கும். முறையான வழிபாடுகள் செய்து இவற்றை இந்நாளில் அணிவதால் சகல உஷ்ண ரோகங்களும் நீங்கி, ஆரோக்கியம் விருத்தியாகும். 

அட்சய திரிதியை என்றாலே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்கும் நிலையில் நாம் இல்லை. தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்த சக்தியை பெற்று பெற்றிருப்பது மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு. மிகவும் சாதாரண ஒரு பொருள் தான் என்றாலும், இதற்குரிய மதிப்பு பலருக்கு புரிவதில்லை. அக்ஷய திருதியை நாளில் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை மளிகைக் கடைக்கு சென்று கல் உப்பை, காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் அந்த உப்பை வைத்து சமையல் செய்தாலே போதுமானது. இந்நாளில் காசு கொடுத்து வாங்கப்படும் கல்லுபிற்கு மிகுந்த சக்தி உள்ளது. உங்கள் செல்வ வளம் மென்மேலும் பெருகி கொள்ள இந்த பரிகாரம் துணை புரியும்.


.


கல் உப்பை வாங்கி வந்ததும் அதை எவர் சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாக்களிலோ போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கல் உப்புற்கு மகாலட்சுமிக்கு இணையான மரியாதை செலுத்த வேண்டும். பீங்கான் ஜாடியில் அல்லது மட்பாண்டத்தில் போட்டு வைக்கலாம். நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்.


நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்.

திங்கள், 6 ஏப்ரல், 2020



லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்