மதுரையை காக்க சிவனே நேரில் வந்த சம்பவம்
ஆதிவாசியாக இருந்த மனிதன் நாகரீகமான மனிதனாக மாறத்தொடங்கிய காலத்தில் அவன் வாழ்ந்த நகரம் சார்ந்த வாழ்க்கை முறை நாகரீகங்களாக அறியப்படுகின்றன. அந்த வகையில் உலகின் மிகப்பழமையான நாகரீகங்கள் இருந்தாலும், அத்தகைய காலத்திலேயே தாங்கள் பேசிய மொழிக்கு சங்கம் வைத்து அதை வளர்த்த பெருமை தமிழர்களையே சாரும். அந்த பெருமைக்குரிய சங்கம் இருந்த இடம் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான “ஆன்மீக நகரமான” “மதுரை” மாநகரைப் பற்றிய ஒரு கதையை இங்கு தெரிந்து கொள்வோம்.
உலகின் மிகப் பழமையான, இன்றும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நகரங்களில் நம் தமிழ் நாட்டின் “மதுரை” மாநகரும் ஒன்று. நம் பாரத நாட்டின் மிக பழமையான ஆன்மீக நகரங்கள் பெரும்பாலும் வட பாரதத்தில் இருக்கின்றன. ஆனால் தென்பாரதத்தில் இருக்கும் மிகப்பழமையான ஆன்மீக நகரங்கள் இரண்டு தான். ஒன்று “காஞ்சி மாநகரம்” மற்றொன்று “மதுரை மாநகரம்” அதிலும் இந்த மதுரை மாநகரம், காஞ்சி நகரத்தை விடவும் பழமையானது. அதே நேரத்தில் பல ஆன்மீக அதிசயங்கள் நிறைந்த ஒரு நகரமாகும்.
புராண காலத்திலேயே மதுரை மாநகரம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது. அக்காலத்திலேயே உலகின் பிற பழமையான நாகரீகங்களுடன் தொடர்பு கொண்டு செல்வத்திலும், இன்ன பிற துறைகளிலும் மதுரை மாநகரம் மிகப்பெரும் வளர்ச்சியையடைந்தது.
,எட்டுத்திக்கும் புகழ் பரவிக்கிடந்த மதுரை நகரின் வளர்ச்சியைக் கண்டு பயமும், பொறாமையும் கொண்டனர் அந்த பாண்டிய நாட்டின் அண்டை நாதனை ஆண்ட மன்னர்கள். எனவே தங்கள் ராஜ்ஜியத்தில் வசித்து வந்த, மாந்திரீகத்தில் அனுபவம் வாய்ந்த “ஜைன” மத துறவிகளை வைத்து ஒரு தீய யாகத்தை வளர்த்தனர். அப்போது அந்த யாகத்தில் தீய மாந்திரீக கலையின் மூலம் ஒரு ராட்சத யானை, ஒரு ராட்சத பசு, ஒரு ராட்சத நாகம் ஆகிய விலங்குகளை தோன்றச் செய்து அம்மூன்று விலங்குகளையும் மதுரை மாநகரை அழிப்பதற்கு ஏவி விட்டனர்.
இதை எப்படியோ அறிந்து கொண்ட அப்போது ஆட்சியிலிருந்த பாண்டிய மன்னன், தன் மதுரை மாநகரையும் அதன் மக்களையும் அந்த ராட்சத விலங்குகளிடமிருந்து காக்குமாறு “மதுரையின் நாயகனாகிய” சிவபெருமானிடம் வேண்டினான். அப்பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கிணங்க மதுரை நகருக்கும், அதை ஆட்சி புரியும் “மீனாட்சியின்” நாயகனான சிவ பெருமான், தன்னுடைய திரிசூலத்தை எடுத்து அந்த ராட்சத விலங்குகள் மீது வீச, அந்த மூன்று விலங்குகளும் மதுரை நகரத்திற்கு மூன்று திசைகளில் மலைகளாக மாறியதாக சிவ புராண கதை கூறுகிறது. இன்றும் மதுரை மாநகருக்கு மூன்று திசைகளில் அந்த ராட்சத விலங்குகள் பெயரிலேயே யானை மலை, பசு மலை, நாக மலை என்று அந்த மூன்று மலைகளும் அழைக்கப்படுகின்றன.மலைகளின் அருகாமையிலும் பல வழிபாட்டு தலங்களும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக