செவ்வாய், 29 நவம்பர், 2016

தசாவதார விளக்கம்

தசாவதார விளக்கம்


‘உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார்.


வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.


பெருமாள் எடுத்த பத்து அவதாரங்கள்:


1.மச்சாவதாரம்:

திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.


2.கூர்மாவதாரம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.


3.வராக அவதாரம்: 

பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


4.நரசிம்ம அவதாரம்: 

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

5.வாமன அவதாரம்: 

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


6.பரசுராம அவதாரம்: 

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


7.ராமாவதாரம்: 

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

8.பலராம அவதாரம்

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

9.கிருஷ்ணாவதாரம்: 

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

10.கல்கி அவதாரம்: 

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என கூறப்படுகின்றது.





ஞாயிறு, 27 நவம்பர், 2016

27வகையான உபவாச விரதங்கள்

27வகையான உபவாச விரதங்கள் 

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.


2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.


6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.


21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.


23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.


25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.


26. மாமிச உணவுகள் மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


27. வாழைக்காய் பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.


– இந்த உபவாச விரதங்களில் உங்கள் உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.





















    வெள்ளி, 25 நவம்பர், 2016

    விரதங்களும் அவற்றின் பலனும்


    விரதங்களும் அவற்றின் பலனும்


    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.


    சோமவார விரதம்


    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

    சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

    பிரதோஷம்


    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

    சித்ரா பவுர்ணமி விரதம்


    நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

    தெய்வம் : சித்திரகுப்தர்

    விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

    தை அமாவாசை விரதம்


    நாள் : தை அமாவாசை

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

    பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

    சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    கந்தசஷ்டி விரதம்


    நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

    தெய்வம் : சுப்பிரமணியர்

    விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

    பலன் :  குழந்தைப்பேறு

    மங்களவார விரதம்


    நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

    தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

    விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

    பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

    உமா மகேஸ்வர விரதம்


    நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

    தெய்வம் : பார்வதி, பரமசிவன்

    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    விநாயக சுக்ரவார விரதம்


    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

    தெய்வம் : விநாயகர்

    விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

    பலன் : கல்வி அபிவிருத்தி

    கல்யாணசுந்தர விரதம்


    நாள் : பங்குனி உத்திரம்

    தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

    விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

    பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

    சூல விரதம்


    நாள் : தை அமாவாசை

    தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

    விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

    பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

    இடப விரதம்


    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

    தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

    விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

    பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

    சுக்ரவார விரதம்


    நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

    தெய்வம் : பார்வதி தேவி

    விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

    பலன் : மாங்கல்ய பாக்கியம்

    தைப்பூச விரதம்


    நாள் : தை மாத பூச நட்சத்திரம்

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    பலன் : திருமண யோகம்

    சிவராத்திரி விரதம்


    நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

    தெய்வம் : சிவன்

    விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

    பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

    திருவாதிரை விரதம்


    நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

    தெய்வம் : நடராஜர்

    விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

    பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

    சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    கேதார விரதம்


    நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

    தெய்வம் : கேதாரநாதர்

    விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

    பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

    விநாயகர் சஷ்டி விரதம்


    நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் 

    தெய்வம் : விநாயகர்

    விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

    பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

    முருகன் சுக்ரவார விரதம்


    நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

    தெய்வம் : சுப்ரமணியர்

    விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

    பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

    கிருத்திகை விரதம்


    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

    தெய்வம் : சுப்பிரமணியர்

    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

    நவராத்திரி விரதம்


    நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

    தெய்வம் : பார்வதிதேவி

    விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.

    பலன் : கல்வி, செல்வம், ஆற்றல் 







    செவ்வாய், 22 நவம்பர், 2016

    நல்லதையே தேடுவோம் - ஆன்மிக கதை


    அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு வணக்கம்.


    நாம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் காரியங்களில் நல்லவற்றையே எடுத்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பதிவில் சொல்ல இருக்கும் கதை அமைகிறது.

    ஆம் தோழிகளே!நடப்பவை எல்லாம் நல்லதாக இருக்கணும்.நல்ல நேர்மறை எண்ணத்துடன் நாம் இருக்க  வேண்டும்.நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்  உங்கள் இஷ்ட தெய்வங்களிடம் எல்லாவற்றையும் விட்டு  விடுங்கள்.அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

    இதோ நல்ல விஷயங்களை நினைக்கும் கதை. வாங்க பாப்போம். 

    நல்லதையே தேடுவோம் - ஆன்மிக கதை


    தேவலோகத்தில் இந்திரன் தலைமையில் தேவர்களின் சபை கூடியிருந்தது. அதில் தேவர்களின் நலன் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பேச்சு பூலோகத்தில் வாழும் மனிதர்களைப் பற்றி திரும்பியது. உடனே இந்திரன், ‘பூலோகத்தில் கிருஷ்ணதேவன் என்னும் அரசன் இருக்கிறான். அவன் மிகவும் நல்லவனாகவும், குணம் படைத்தவனாகவும் உள்ளான். அவனைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவன் யாரும் இருக்க முடியாது. எல்லோரையும் விட அவனேச் சிறந்தவன்’ என்றான்.


    தேவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட தேவன் ஒருவன், சாதாரண மனிதன் ஒருவனைப் பற்றி புகழ்ந்து பேசியது, அங்கிருந்த தேவர் களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. அவன், ‘கேவலம் ஒரு சாதாரண மனிதனைப் பற்றி, உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, அதுவும் தேவர்களின் தலைவன் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு அந்த மானிடனிடம் இருக்கிறது? உங்கள் அனைவருக்கும் அவனிடம் உள்ள குறையை எடுத்துக்காட்டுகிறேன். அதற்காக இப்போதே நான் பூலோகம் செல்கிறேன்’ என்று கூறியவன் பூலோகம் புறப்பட்டுச் சென்றான்.

    அரசனான கிருஷ்ணதேவன் வரும் வழியில், பூலோகம் வந்த தேவன், ஓர் இறந்த நாயின் வடிவத்தில் விழுந்து கிடந்தான். அந்த நாயின் உடலில் இருந்து சகிக்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. நாயின் வாய்ப்பகுதியும் கிழிந்து அவலட்சணமாக காணப்பட்டது. கிருஷ்ணதேவன், நாயின் இறந்து கிடந்த பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது வழியில் கிடந்த அந்த நாயைக் கண்டான்.

    அவனது பார்வையும், கண்ணோட்டமும் வேறு விதமாக இருந்தது. அவன் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ, அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றியோ சிந்திக்கவே இல்லை. ஆனால் அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

    ஆம், அவன் அந்த நாயைப் பார்த்த நொடியில், ‘ஆகா! இந்த நாயின் பல் வரிசை எவ்வளவு அழகாக இருக்கிறது! முத்துக்களைப் போல் அல்லவா அவை பிரகாசிக்கின்றன!’ என்று வாய்விட்டு கூறினான்.

    கெட்ட விஷயங்களில் மனதை செலுத்தாமல், அதில் ஏதாவது நல்லது இருக்கிறதா? என்ற அவனது தனிப்பட்ட பார்வைதான், மன்னனின் தனிச் சிறப்பு என்பதை, நாய் உருவில் விழுந்து கிடந்த தேவன் உணர்ந்து கொண்டான்.

    உடனடியாக சுய உரு பெற்று, அரசனின் முன்பாக நின்றான். ‘மன்னா! உண்மையிலேயே உங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும், நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் இருக்கிறது. இந்த உலகத்தில் தங்களைப் போன்ற குணவான்களே சுகமாக வாழ்வார்கள்’ என்று கூறி அவரை ஆசீர்வதித்து விட்டுச் சென்றான். 

    என் பதிவைப் பார்த்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி .

    ஞாயிறு, 20 நவம்பர், 2016

    சாஸ்திரம் கூறும் தீபாவளி பண்டிகை

    சாஸ்திரம் கூறும் தீபாவளி பண்டிகை 

    என் இணையத்தள ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கங்கள் பல.


    “தீபாவளி அன்று என்ன சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில்  குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டு , அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தால்  தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அதுதான் தீபாவளி என்று எண்ணுதல் தவறு.   நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு எது தேவை என்பதை அறிந்து தீபாவளியை கொண்டாடினால் அது பயன்னுள்ளதாகவும், நம் குடும்பத்திலுள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்குமாறு   தீபாவளி அமையும்.

     பண்டிகை என்றால் என்ன?

     நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் நல்ல நிலையில் இருந்ததால் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் கடைபிடிக்க சொல்லிய  ஒரு விதியாக, எழுதாத சட்டமாக சொல்லி வைத்து சென்றார்கள்.
    ஒரு சமயம், சிவாலயத்தில் எரிந்துக்கொண்டு இருந்த தீபத்தின் எண்ணையை குடிக்க சென்றது ஒரு எலி. அப்போது தன்னை அறியாமல் அந்த தீபத்தின் திரியை தூண்டியதால், அந்த தீபம் பிரகாசமாக எரிந்தது. இதனால் அந்த எலியின் வாழ்க்கை மறுபிறவில் மகாபலிசக்கரவர்த்தியாக பிரகாசமான வாழ்க்கை அமைந்தது.
     தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம். 

    தரித்திரத்தை நீக்கும் குளியல் 

     தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம். இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். 


    துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு 

    பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஓடி விடும். 


    தோஷத்தை நீக்கும் மஞ்சள் 

    புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். 


    வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி

    தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும். ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்க்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள். ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னமாக  தீப ஒளி திகழ்ந்தது.அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்.. 

    அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது. 

    அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலஷ்மியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் – அருளும் கிடைக்கும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம் 

    கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோம்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோம்பின் பயனால்தான் கௌரிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள். தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கையே ஜொலிக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. எப்போதும் வெற்றி கிடைக்கும்.

    என்னுடைய பதிவுகளை படித்து பலன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை  தெரிவித்தால், அது எனக்கு மேலும் மேலும் எழுத, தூண்டுகோலாக அமையும்.






    திங்கள், 14 நவம்பர், 2016

    காரிய சித்தி மாலை

    காரிய சித்தி மாலை

    அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என் காலை வணக்கங்கள்.தீபாவளி பண்டிகையை  சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியில் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

     விநாயகர் பெருமானை தலைவர்களுக்கு எல்லாம் முதன்மையானவர்.முதன்மையான கடவுள்.இவரை பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.நிதமும் காலையில் விநாயகரை  வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம்.
    விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.
    எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரை வணங்கி ஆரம்பிப்பது நம் மக்களின் வழக்கம். எழுதுவதற்கு முன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும், முறையாகத் திட்டமிடவும், அனைவரிடமும் அன்பு செலுத்தவும் , அனைவரது அன்பும் நம் மீது பரவவும், சுமூகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர்.

    இந்த பாடல் முற்றிலும் தமிழிலேயே அமைந்துள்ளது. எளிமையானது. நேரடியானது. நாமே எளிதில் பொருள் புரிந்து கொள்ளலாம்.

    காரிய சித்தி மாலை

    பாடல் 1 :
    பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
    எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
    சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
    அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

    பாடல் விளக்கம் :
    எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபதுநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.
    பாடல் 2 :
    உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ்
    உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
    உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
    உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 

    பாடல் விளக்கம் :
    எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.
    பாடல் 3 :
    இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
    தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
    கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
    தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 

    பாடல் விளக்கம் :
    நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.
    பாடல் 4 :
    மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
    தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
    ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
    போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

    பாடல் விளக்கம் :
    எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.
    பாடல் 5 :
    செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
    ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
    உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
    பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

    பாடல் விளக்கம்:
    செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.
    பாடல் 6 :
    வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
    வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
    நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
    போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

    பாடல் விளக்கம் :
    வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.
    குறிப்பு : இதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு குணங்கள் வடமொழியில் சுதந்திரத்துவம், விசுத்த தேகம், நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி என்று கூறப்படுகின்றன. 

    பாடல் 7 :
    மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
    நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
    எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
    அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 

    பாடல் விளக்கம் :
    மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.
    பாடல் 8 :
    பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
    பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
    பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
    தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

    பாடல் விளக்கம் :
    எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே!. அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
    நூற்பயன்

    இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
    சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
    சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
    பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். 
    திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
    தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
    பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
    துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.

    பாடல் விளக்கம் :
    இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
     தொடர்ந்து எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
     சதுர்த்தியன்று நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா சித்திகளையும் பெறுவார்கள்.

    மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

    தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

    சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

    எனக்கு தெரிந்த,நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்ட  திருப்தியில் இந்த பதிவை முடிக்கிறேன்.

    ஈஸ்வரிசரவணன் 

    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.