வியாழன், 20 ஜூலை, 2017

இந்துக்கள் செய்யக்கூடாதவை

இந்துக்கள் செய்யக்கூடாதவை



வீட்டில் செய்து வரும் நித்திய பூஜையை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.கோபத்துடன் பூஜை செய்வதோ, ஆலயத்தினுள் செல்வதோ கூடாது.

கருப்பு ஆடை அணிந்து பூஜை செய்வது, கோவிலுக்குச் செல்லக்கூடாது.

குளிக்காமல், முறைப்படி உடை அணியாமல் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் ஆலயம் செல்வது கூடாது.

மரண வீட்டிற்கு சென்றவர்களோ அல்லது அங்கு சென்றவர்களை தீண்டியவரோ முழுகாமல் சுவாமியை வழிபடக்கூடாது.

மரண வீட்டுக்கு சென்று வந்த தினத்தில் ஆலயம் செல்லலாகாது.

சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்லலாகாது. மாமிசம் உண்பவர் அன்று கோவிலுக்குச் செல்லலாகாது.

கால்களை கழுவாமல் ஆலயத் திற்குள் அடியெடுத்து வைக்கக் கூடாது.

கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

வெற்றிலை பாக்கு மென்று கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது.

மூர்த்திகளைத் தொடுதலோ அல்லது மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதலோ கூடாது.
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

விபூதி, சந்தனம் அபிஷேகம் தவிர சுவாமிகளுக்கு திருமஞ்சனம் ஆகும் போது பார்க்கக் கூடாது.

கோவிலுக்குள்ளேயோ, மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல் மலஜலம் கழித்தல் கூடாது.


சண்டையிடுதல், தலைமுடியை கோதி முடித்தல், சிரித்தல் கூடாது.

சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் நடுவே செல்லுதல், சுவாமிக்கும் நந்திக்கும் நடுவே செல்லுதல் கூடாது.


இருட்டில் இறைவனை வணங்குதல் கூடாது. இருட்டில் பூஜை செய்யவும் கூடாது.
மது அருந்தி விட்டுச் செல்லக்கூடாது.

கடவுளுக்கு எதிராக காலை நீட்டிக் கொண்டு இருத்தல் கூடாது.


கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்

 கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்



னித உறுப்பு தானங்களில் சிறந்தது கண்தானம். அதை முதலில் செய்த பெருமை வேடர் குலத்தைச் சேர்ந்த திண்ணன் என்பவரையே சேரும். திண்ணன் தனது கண்களில் ஒன்றை தானமாக கொடுத்தது மனிதருக்கல்ல... மகேஸ்வரனுக்கு! இதன் மூலம் அவரது இயற்பெயர் மறைந்து இறைவனாலேயே கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டார். அவரது அருட் கருணையினாலேயே நாயன்மார்களுள் ஒருவருமானார். 

திண்ணன் கண்தானம் செய்த நிகழ்வு  மகாசிவராத்திரியன்று நடந்தது. திண்ணனின் ஆழ்ந்த பக்தியை வெளி உலகிற்கு உணர்த்த சிவபெருமான் நடத்திக் காட்டிய திருவிளையாடல் அது.

வேடர் குலத்தைச் சேர்ந்த நாகனார் என்பவரின் மகன் திண்ணன். தமது குல வழக்கப்படி காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்குச் சென்ற திண்ணன் அங்கு சிவலிங்கத்தை கண்டார். அதைப் பார்த்த மாத்திரத்தில் அன்பின் மிகுதியால் லிங்கத்தை ஆரத்தழுவினார். பின்னர் இறைவன் பசியோடு இருப்பாரே! அவருக்கு உணவு படைக்க வேண்டும் என்று விரும்பி  பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதை கையில் எடுத்துக் கொண்டார். வாயில் பொன்முகலி ஆற்று நீரையும், தலையில் பூங்கொத்துகளையும் சுமந்து சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தார். 

சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயில் உள்ள நீரினால் அபிஷேகம் செய்தார். தலையில் இருந்த பூங்கொத்துகளை லிங்கத்தின் தலையில் சூடினார். கையில் இருந்த பன்றி இறைச்சியை நைவேத்தியம் செய்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும் கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார். 

காலையில் இறைவனுக்கு சுவையான அமுது படைக்க வேண்டும் என நினைத்து காட்டுக்குள் சென்றார். 

அன்று பகலில் காளத்தி நாதருக்கு பூஜை செய்ய வந்த அர்ச்சகர் அங்கு சிவலிங்கம் முன்பு கிடக்கும் இறைச்சி, எலும்பு போன்றவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆற்றில் நீராடி பிராயசித்தம் செய்தார். காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து அதை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் சிவபூஜை செய்தார். மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர் இதைக் கண்ணுற்று இந்த தீயச் செயலை செய்தவர் யாராக இருப்பினும் அவனை கழுவேற்றி விட வேண்டும் என்று ஈசனிடம் முறையிட்டார். 

சிவபெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி, அவர் செயல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தது. நாளை இரவு ஒரு மரத்தின் மறைவில் இருந்து நடப்பதை கவனித்துக் கொண்டு இரு என்று கூறினார். அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து கொண்டு இருந்தார். சிவலிங்கத்தை அடைந்ததும், பெருமானின் கண்ணில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரத்தத்தை துடைத்தார். அது நிற்காமல் பெருகிக் கொண்டே இருந்தது. 

பின்னர் பெருமானை கட்டிப்பிடித்து கதறி அழுதார். காட்டுக்குள் சென்று பச்சிலையை பறித்து வந்து அதை பெருமானின் கண்ணில் பிழிந்து பார்த்தார். மருந்து பயன் தரவில்லை. உடனே ‘ஊனுக்கு ஊன்’ என்ற மருந்து நினைவுக்கு வர தமது ஒரு கண்ணை தோண்டி ரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் வைத்தார். இறைவனின் திருவருட் கருணையால் ரத்தம் வடிவது நின்றது. சோதனையாக இறைவனின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருகியதைக் கண்டார். ஒரு கணம் கவலையடைந்த அவர் மறு கணமே மருந்து கண்டேன் என்று கூறி, தம் மற்றொரு கண்ணை தோண்ட முயன்றார். கண் அடையாளம் தெரிவதற்காக தன் இடது காலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். பின்னர் கண்ணை பெயர்த்தெடுக்க அம்பினை ஊன்றினார். அப்போது இறைவன் தோன்றி கண்ணப்பா  நிற்க என்று கூறி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார். இந்த அதிசய நிகழ்வை கண்ணுற்ற  அர்ச்சகர் சிவபரம்பொருளின் கருணையை எண்ணி வியந்து போற்றினார். தேவர்கள் வானத்தில் இருந்து பூக்களை தூவி வாழ்த்தினர். 


மகாசிவராத்திரியன்று இந்த அற்புதம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 ஜூலை, 2017

கோரிக்கை நிறைவேற 9 வாரம் சொல்ல வேண்டிய துதி

கோரிக்கை நிறைவேற 9 வாரம் சொல்ல வேண்டிய துதி 


லோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா ஸர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா ஸர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் – இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
உமையவள் திருவருள் சேரும்.                         (ரக்ஷ)

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி
அபயம் என்றவளைச் சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
அபயமளித்தருள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாய் தேவி
திருவருள் தருவாய் தேவி                             (ரக்ஷ)

கருணையின் கங்கை கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகிற யோகம் வளர்பிறையாகும்
அருள் மழை பொழிவாள் நாளும்
நீல நிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளியெனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக் கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்                   (ரக்ஷ)


புதன், 12 ஜூலை, 2017

பெரிய பாளையத்தம்மன்

 பெரியப்பாளையம் ஸ்ரீ பவானி அம்மன்

அன்பார்ந்த ஆன்மீக அன்பர்களுக்கு என் வணக்கங்கள்.எனக்கு  தெரிந்த ஆன்மீக தகவல்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இதே மகிழ்ச்சியுடன் இந்த பதிவை போடுகிறேன்.அம்மனின் பெருமையை எழுதிக் கொண்டே இருக்கலாம்.தாயே சரணம் 

நம்பினோர் கைவிடப்படார்,,,
அன்னையுமாகி அருள்வடிவாகி 
என்னோடிருப்பவளே என்னை ஈன்றவளே என்தாயே பவானி அம்மா,,,
உன்னைவிட்டால் வேறு துணையாரம்மா,,,
ஆடி பிறந்து விட்டாலே வரிசையாக பண்டிகைகள் ஆரம்பித்துவிடும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்ததாகும். ஆடிப் பதினெட்டு காவேரி அம்மனுக்கு விசேஷமான  நாள். ஆடிப் பூரம் ஆண்டாளுக்கு உரியது. ஆடியின் அத்தனை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும் அம்மனுக்கு விசேஷமான நாட்கள். அதற்கு ஏற்றாற் போல் ஒரு வெள்ளிக் கிழமை வரலட்சுமி நோன்பாகிவிடும்.

வீடுகளில் மட்டுமின்றி, ஆலயங்களிலும் ஆடி மாதத்தில் சிறப்பான உற்சவங்களும், திருவிழாக்களும், சிறப்பான அலங்காரங்களும் நடைபெறும். ஆடிப் பூரத்தன்று பெண்கள் அம்மனுக்கு வளையல் சாற்றுவதால் அன்பான கணவன், அழகான குழந்தை, தீர்க்க சௌமாங்கல்யம் பெறலாம்.

ஆடிப் பெருவிழாவை மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் தெய்வமே பெரிய பாளையத்தம்மன் எனும் ஸ்ரீபவானி அம்மன். சென்னையில் திருவள்ளூருக்கு அருகே வடக்கில் பெரிய பாளையத்தில் அகம் மகிழ்ந்து உறைகிறாள் அன்னை பவானி. எப்பொழுது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியாத இவ்வாலயம், சதாசிவ முனிவர், பகீரதனைப் போல் தவம் செய்து பூமிக்கு வரவழைத்த ஆரணி ஆற்றுக் கரையின் மேற்கே உள்ளது.

பெரிய பாளையத்தம்மன் என்ற பெயரில் இங்கு அம்மன் குடி கொண்ட வரலாற்றைப் பார்ப்போம். கிருஷ்ணாவதாரத்தின்போது சிறையில் தேவகிக்குப் பிறந்த கண்ணன், தன்னை கோகுலத்தில் உள்ள யசோதையின் வீட்டில் விட்டு, அங்குள்ள மாயை எனும் பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் கொடுக்கச் சொன்னார். வசுதேவரும் அவ்விதமே செய்ய, குழந்தை பிறந்த செய்தியை அறிந்த கம்சன், “இந்தப் பெண்ணா என்னைக் கொல்லப் போவது? இதோ இப்பொழுதே இவளைக் கொல்வேன்” என்றபடி அச்சிசுவை வானில் எறிந்து பாறையில் மோத முற்பட, சக்தியின் தமோ குணம் பெற்றவளும், தவம், மோகம், அவித்தை, அனித்தம் ஆகியவற்றால் உண்டாகும் ஆற்றலும், உயிரினங்களின் துன்பம் போக்கும் ஆற்றலும் கொண்ட அந்த மாயை கம்சனை நோக்கி, “கம்சனே! உன்னைக் கொல்ல உதித்தவன் பேராற்றல் மிக்கவன். நந்தகோபன் மனையில் வளரும் அந்த மாமாயன் உன்னை அழிப்பான்” என்று கூறி, அங்கிருந்து அகன்று பெரியபாளையம் வந்து பவானி அன்னையாக அமர்ந்தாள் என்பதே தல புராணம்.

சிறிய கோயிலாக இருந்து அன்னையின் அருளால், பல பக்தர்களின் வரவால், இன்று பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது. இங்கு காட்சி தரும் அன்னையின் உருவம் வித்தியாசமானது. அன்னை பவானி அரை உருவுடன், வலது மேற்கையில் சக்கரமும், இடப்புறம் சங்கும் ஏந்தி, வலப்புற கீழ்கையில் வாளும், இடக்கையில் அமிர்த கலசமும் கொண்டு, ஐந்து தலை நாகம் சிரசை அலங்கரிக்க, கர்ப்பக்கிரஹத்தில் உயர்ந்து காட்சியளிக்கும் கோலம் கண்களை நிறைக்கிறது. சுயம்புவான அன்னையின் தோற்றம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அன்னையின் சன்னிதியில் நிண்று கண்களை மூடினால் நம் கவலைகள், துன்பங்கள் அனைத்தும் தூசாகிப் போய் மனம் நிச்சலனமடைவதை நன்கு உணர முடிகிறது. அன்னையின் கண்களில் காணும் கருணை இம்மாய உலகையே மறக்கச் செய்கிறது, உலக மாயையிலிருந்து நம்மை விடுபடச் செய்யவே மாயையாகிய அன்னை இவ்விடம் கோயில் கொண்டுள்ளாள் போலும். அன்னையின் உருவத்தின் முன் சிறிது பள்ளமான இடத்தில் குழவி வடிவில் காட்சி தரும் சுயம்புவிற்கே அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது. சுயம்புவான அம்மனுக்கு சிரசில் நாகம் தாங்கிய வெள்ளி முகக் கவசம் சாற்றி அலங்காரம் செய்தபின் காணும் அன்னையின் தரிசனம், மெய் சிலிர்க்க வைக்கிறது.

அன்னையின் தரிசனம் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும். பிள்ளைச் செல்வம் தரும். அண்டியவர் துன்பங்களைப் போக்கி நல்வாழ்வு தரும் பவானி அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணிந்து ஆலய ப்ரதட்சணம் செய்வதே சிறந்த வேண்டுதல். வேண்டியது நிறைவேறியபின், வேப்பிலை ஆடையுடன் ஆலயம் வலம் வரும் பக்தர்களை அதிகம் காண முடிகிறது. அன்னை மேல் சாற்றிய மஞ்சளும், அபிஷேக நீரும், தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையது.

ஆண்டு தோறும் இவ்வாலயத்தில் நடைபெறும் ஆடிப் பெருவிழா மிகப் பிரசித்தமானது. ஆடி முதல் ஞாயிறு தொடங்கி 14 ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து நடைபெறும். இவ்விழாவில் பத்தாவது ஞாயிறு மிக விசேஷமானதாகும். அன்று சூரிய பகவான் அம்மனை சிரத்திலிருந்து பாதம் வரை தொழுவதைக் காண கண் கோடி வேண்டும். இதனைத் தரிசித்து தம் தீவினையைப் போக்கிக் கொள்ளவே பெரும்பாலான பக்தர்கள் அன்று வருவார்களாம். சென்னையில் வாழும் மீனவப் பெண்கள் தம் கணவர் கடல் மீது சென்று நலமுடன் திரும்பி வர வேண்டி, ஆடிப் பெருவிழா சமயம் அன்னைக்கு தன் தாலியை காணிக்கையாக்கி, புதுத்தாலி தம் கணவர் கையால் அணிந்து கொள்வதை பெரும் பேறாகக் கருதுகின்றனர்.

அன்னை பவானி பக்தர்க்கு அருள் புரிந்த திருவிளையாடல்கள் பலப்பலவாம். இவ்வாலய பரம்பரை அறங்காவலர் திரு பி.எஸ். சேதுரத்தினம் உடல் நிலை சரியில்லாதபோது பவானி அன்னை கனவில் வந்து தன்னை தரிசிக்கும்படி கூற, அவரும் மாதம் ஒரு முறை பெரியபாளையம் சென்று தரிசித்து நோய் நீங்கியதுடன், அன்னை அருளால் அவள் மேல் பல துதிப்பாடல்களையும் எழுதி புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். மக்கட் செல்வம் வேண்டி வழிபடுவோரை மகாசக்தி கைவிடுவதில்லை. வேப்பிலை ஆடையுடன் அன்னையின் ஆலயத்தை வலம் வந்தால் வேண்டியதை உடன் நிறைவேற்றுவாள் பவானித் தாய். பலருக்கு குல தெய்வமாய் விளங்கும் பெரிய பாளையத்தம்மன் பெயரைச் சொன்னால் சீறி வரும் நாக தேவன் மறைந்து விடும் அதிசயம் இன்றும் நடக்கின்றதாம்.

ஆலய வெளிப் பிரகாரத்தில் ‘சக்தி மண்டபம்’ என்ற பெயரில் உள்ள சந்நிதியின் முன் அமர்ந்து நமக்கு வேண்டியவற்றை எண்ணி சில நிமிடங்கள் தியானம் செய்தாலே நினைப்பது நிறைவேறும். அங்குதான் ஆதிபவானி தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்ரபதி சிவாஜி அவ்வழியே சென்ற சமயம் தன் இஷ்ட தெய்வமான பவானி சிலையுடன் சென்றதாகவும், அவ்விடத்தில் அம்மனை வைத்துவிட்டு களைப்பாறிய பின் திரும்ப அன்னையை எடுக்க முயற்சித்தபோது, அன்னை அசரீரியாக, தான் அவ்விடத்திலேயே கோயில் கொண்டு பக்தர்களின் குறை தீர்க்கப் போகின்றேன் என்று சொன்னதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ள ஒரு புற்றுக் கோயிலும் பவானி ரூபமாகவே கருதப்படுகிறது. புற்று தினமும் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். சுமார் ஏழடி உயரப் புற்று – காணும் போதே நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், தைப் பூசம், ஆடிப் பெருவிழா போன்ற நாட்களில் பக்தர்களின் பரவசக் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பெரிய இடர்களை சிறிதாக்கி, அதனையும் இல்லாதாக்கும் பெரிய பாளையம் பவானியம்மனை தரிசிக்க சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன. சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை, திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் பெரிய பாளையம் வழியாகச் செல்லும்.


சென்னை அடையாற்றிலும், மேற்கு மாம்பலம் துரைசாமி சப்வே அருகிலும் பெரிய பாளையத்தமனுக்கு ஆலயங்கள் உள்ளன.

என் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மேலும் என்னை எழுத, ஊக்குவிக்கும்விதமாக உங்கள் கருத்துகளை பகிரவும்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன்
  

செவ்வாய், 11 ஜூலை, 2017

விநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது ஏன்?

விநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது ஏன்?


விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது பற்றி தத்துவ ரீதியான விளக்கம் சொல்லப்பட்டாலும், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைப்பதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அந்தச் சம்பவம் கதையாகவும் இருக்கலாம். ஆனால், அது நமக்கு உணர்த்தும் தத்துவம்தான் முக்கியமானது. `கதைக்கு காலில்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு கதைக்குக் காரணம் இருக்கிறதா என்றெல்லாம் ஆராயக் கூடாது. அந்தக் கதையில் ஆழமாகப் பொதிந்திருக்கும் அர்த்தம்தான் முக்கியமானது. ஆன்மிகக் கதைகளில் நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் பல நீதிக் கருத்துகள் இருக்கவே செய்கின்றன. எனவே, கதைகளுக்குக் கால்கள் உண்டு என்றே சொல்லலாம். கால்கள் என்பது நல்ல அறிவுரைகளைத்தான். அப்படிப் பார்த்தால் கதைக்குக் காலும் உண்டு; கொழுக்கட்டைக்குத் தலையும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தக் கதையில் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது, படைக்கப்படும் கொழுக்கட்டை யாருடைய பசியைத் தீர்க்கிறது என்பது பற்றிப் பார்ப்போம்.

ஞானபாலி என்பவன் சத்தியமே வடிவான உத்தம அரசன். முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தன். விநாயகரின் பக்தனாக நாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்து வந்தபோதும், ஒருமுறை பெரும் பஞ்சம் வந்துவிட்டது. மக்கள் கஷ்டப்பட்டுவிடக் கூடாதே என்று பலவகைத் திட்டங்களைத் தீட்டி, அவர்களைக் காப்பாற்றி வந்தான். எனினும் பஞ்சம் தொடர்ந்து நீடித்ததால், ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான். யாகத்தின் நடுவே அரசனின் விதி தனது வேலையைத் தொடங்கியது. ஆம், அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து மேனகையின் பின்னே சென்றான். பின்னே வந்த அரசனை எச்சரித்துவிட்டு மேனகை மறைந்தாள். ஏமாந்து போன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில் நின்றதால் பெரும் ஆபத்து நேரும் என்று ராஜ குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார். அதைக் கண்டுகொள்ளாமல் நின்று போன யாகத்தைத் தொடங்கிய ஞானபாலியை அஷ்ட திக் பாலர்கள் தோன்றி சபித்தனர். இதனால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி.

கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் பிடித்து உண்டான் ஞானபாலி. கொடிய அரக்கனாக மாறி சகல உயிரினங்களையும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான். எனினும், முந்தைய பழக்கத்தின் காரணமாக விநாயகப் பெருமானின் வழிபாட்டை மட்டும் தொடர்ந்தான். பூமிக்கே பெரும் அச்சுறுத்தலான ஞானபாலியை எந்த தேவர்களாலும் அழிக்க முடியவில்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி இருந்ததே காரணம் என்று பூமாதேவி அறிந்துகொண்டாள். தன் மக்களைக் காக்க கணபதியை வேண்டினாள். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும் ,பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார்.  

வேடனாக உருமாறி, ஞானபாலியை எதிர்க்க வந்தார் கணபதி. காண்பவர் யாவரையும் அழித்துவிடும் பூத ஞானபாலியால், அந்த வேடனை  ஒன்றும் செய்ய முடியவில்லை. போர் நீண்டது, இறுதியாக வந்து இருப்பவர் கணபதி என்று கண்டுகொண்டான் ஞானபாலி. கண்ணீரோடு விழுந்து வணங்கி, தன்னை ரட்சித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். தனது பெரும்பசியை போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுதான், கண்ணீரால் தொழுதான். பரம பக்தனான ஞானபாலியைக் கொல்லவோ, பூமியில் அப்படியே விட்டுச் செல்லவோ அந்த மூல முழுமுதற் கடவுளுக்கு மனம் வரவில்லை. கொடுமையான செயல்கள் பல புரிந்ததால், சொர்க்கமும் ஞானபாலிக்குச் சாத்தியமில்லை என்று உணர்ந்தார். எனவே, அவன் வேண்டியபடியே தன்னுடனேயே அவனை வைத்துக்கொள்ள எண்ணினார். அதே சமயம் அவனது பெரும்பசிக்கும் வழி செய்ய திருவுள்ளம் கொண்ட கணபதி கடவுள், விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்கட்டை வடிவமாக்கி விழுங்கிவிட்டார். இப்படியாக கணபதிக் கடவுளின் பக்தனான ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்துகொண்டான்.

பெறுதற்கரிய இந்தப் பேற்றை பெற்று ஆனந்தம் கொண்டான். தேவர்களும் மக்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். கணநாதரின் ஆணைப்படியே, ஞானபாலியின் பசியைப் போக்க, அவருக்குக் கொழுக்கட்டை படைக்கவும் ஒப்புக்கொண்டார்கள். அன்றிலிருந்து அவருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டையாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலியின் நினைவாக கொழுக்கட்டையைச் செய்து படைத்து வருகிறோம்.  


`ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம்’ என்பதே கொழுக்கட்டையின் தத்துவம். வாழும் காலம் வரை, தன்னை அப்படியே ஒப்படைக்க முடியாது என்பதால், கொழுக்கட்டையின் வாயிலாகச் செய்கிறோம். ஞானபாலியை வைத்து விநாயகப் பெருமான் நம் ஒவ்வொருவரையும் சரணாகதி அடையச் செய்துவிட்டான் என்பதே இந்தக் கதையின் அடிப்படை. 

முழுமுதற் கடவுளான பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள், மனதுக்குப் பிடித்தவாறே வாழ்க்கை அமைந்துவிடும்.

செல்வவளம் தரும் சத்யநாராயண விரதம்


செல்வவளம் தரும் சத்யநாராயண விரதம் 

இன்றைய விலைவாசி உயர்வால் சாதாரண, நடுத்தர மக்கள் செலவைச் சமாளிக்க சிரமப்படுகின்றனர். சிலருக்கு பணமிருக்கும். ஆனால், தடங்கல் வரும். இப்படிப்பட்டவர்கள் செல்வ விருத்திக்காக தமிழ் மாதத்தின் துவக்கநாள் அல்லது ஏகாதசி திதியன்று மாலை நேரத்தில் அனுஷ்டிக்க வேண்டியது சத்தியநாராயண விரதம்.


இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு உறவினர்கள், அண்டை வீட்டாரை விரதத்தில் பங்கேற்க அழைக்க வேண்டும். விரதத்தன்று நீராடியிருந்தாலும்,  மாலையில் ஒரு முறை குளித்துவிட்டு, பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். வீட்டுக்கு வருவோருக்கு பூஜை முடிந்ததும் அன்னதானம்  செய்யும் வகையில் சமைக்க வேண்டும்.  பிரதோஷ வேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) பூஜை துவங்கி முடித்து விட வேண்டும்.  தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, அதில் நூல் சுற்றிய கும்பம் வைக்க வேண்டும். அதற்கு வஸ்திரம் (சிறிய துண்டு) கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். சத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். மனதில் விநாயகர், துர்க்கை, வருண பகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்க வேண்டும்.

சத்தியநாராயணருக்கும், கும்பத்திற்கும் சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது 108 போற்றி , நாராயணனைக் குறித்த பாடல்கள் தெரிந்தால் பாடலாம். பூஜை முடிந்ததும், அன்னதானம் செய்ய வேண்டும்.

காசிநகரில் வசித்த அந்தணர் ஒருவர் ஏழ்மையால் சிரமப்பட்டார்.  பெருமாள், கிழ வேடம் பூண்டு அவரிடம், ""ஏன் கவலைப்படுகிறீர்! சத்திய நாராயணர் என்ற பெயர் உள்ளவர் ஸ்ரீமன் நாராயணன். சத்தியநாராயண விரதம் இருந்தால் நீர் செல்வந்தர் ஆவீர்,'' என்று சொல்லிவிட்டு போனார்.  அந்தணரிடம், விரதப்பொருட்கள் வாங்க பணம் ஏது! அவர் அந்த விரதத்தைப் பற்றி சிந்தித்தபடியே "நாராயணா' என புலம்பிக் கொண்டிருந்தார். மறுநாள் யாரோ ஒருவர் அவருக்கு தானமாக சில பொருட்களைக் கொடுத்தார். அதில் விரதத்துக்கு தேவையான பொருட்களும் இருந்தன. மகிழ்ந்த அவர் விரதமிருந்தார். அன்றுமுதல் அவரது குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமளவு அவரைத் தேடி பணிகள் வந்தன. மாதம்தோறும் தொடர்ந்து விரதமிருந்த அவர், ஒரு கட்டத்தில் பெரிய பணக்காரராகி விட்டார். வணிகர் ஒருவருக்கு இந்த விரதத்தின் பலனாக ஒரு மகள் பிறந்தாள். கலாவதி என பெயரிட்டார். அவளை காஞ்சிபுரத்திலுள்ள ஒருவனுக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு விரதம் இருப்பதையே வணிகர் குடும்பம் மறந்து விட்டது. 

ஒரு சமயம் அவரும் அவரது மருமகனும் ஒரு ஊரில்  வியாபாரத்திற்காக சென்றனர். அப்போது, அரண்மனையிலுள்ள  பொருட்களைத் திருடிக்கொண்டு திருடர்கள் ஓடினர்.அவர்களை காவலர்கள்  விரட்டிக் கொண்டு ஓடி வந்தனர்.அவர்கள் பயத்தில், திருடிய பொருட்களை இவர்கள் முன்னால் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். காவலர்கள் இவர்கள் இருவரையும்  திருடர்கள் என நினைத்து சிறையிலிட்டனர்.


வணிகர் மனைவியும், கலாவதியும் வறுமையில் வாடினர். அப்போது தான் சத்தியநாராயண விரதத்தை நிறுத்திவிட்டது வணிகரின் மனைவிக்கு நினைவு வந்தது. மீண்டும் அவள் விரதமிருந்தாள். பகவானே மன்னர் கனவில் தோன்றி வணிகரையும், அவரது மருமகனையும் விடுதலை செய்யச் சொன்னார். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த விரதம் இது. 

நீங்களும் இதை அனுஷ்டியுங்கள். பகவானின் பேரருளால் செல்வவளம் பெருகட்டும். 

பண்டரிபுரம் திருத்தலம் உருவான கதை

பண்டரிபுரம் திருத்தலம் உருவான  கதை 

பெற்றோரிடம் சிறிதளவும் பக்தியோ மரியாதையோ செலுத்தாமல் வாழ்ந்தவன் புண்டலீகன் என்பவன். ஆனாலும் தனது மனைவியுடன் காசி யாத்திரை சென்றான். பயணம் பலநாள் நீடித்ததால் ஒருநாள் இரவு ஒரு குடிசையின் திண்ணையிலே இருவரும் பொழுதைக் கழித்தனர்.


அதிகாலை வேளையில் தற்செயலாகக் கண்விழித்த  புண்டலீகன், மூன்று அழகிய பெண்கள் அவன் தங்கயிருந்த வீட்டின் வெளிப்புறத்தைப் பெருக்கி கோலமிட்டு அலங்கரிப்பதைப் பார்த்தான் . இந்தக் குடிசையோ மிக…வும் சிறியது. இதன் சொந்தக்காரர் ஏழையாகத்தான் இருப்பார். ஆனால் இப்பெண்களோ அரச குமாரிகளைப் போலல்லவா இருக்கிறார்கள் என்று எண்ணி அப்பெண்களிடம் போய் “நீங்கள் யார்? இக்குடிசையில் இருப்பவர் யார்?” என்று வினவினான். 


அதற்கு அப்பெண்களும் “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் நதி தேவதைகள். எம்மில் நீராடும் மக்களின் பாவங்கள் எம்மை வந்தடைகின்றன. அந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக  இந்த வீட்டிலுள்ள பெரியவருக்கு பணிவிடை செய்கிறோம்” என்று கூறிச் சென்றுவிட்டனர்.


இந்த குடிசையிலிருக்கும் பெரியவரிடம் அப்படி என்ன விசேஷம்? என்று சிந்தித்த புண்டலீகன் பொழுது விடிந்ததும் அவரிடம் சென்றான். அவரிடம் எப்படிக் கதை தொடங்குவது என்று சிந்தித்து “பெரியவரே! காசி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டான். பெரியவரும் “அப்பா, நான் காசிக்குச் சென்றதில்லை. எனது வயதான பெற்றொர்களைக் கவனித்து வாழ்ந்ததால் அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. அதனால் எவ்வளவு தூத்தில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது” என்றார். பெற்றோரை மதித்திராத புண்டலீகன், அந்தப் பெரியவருக்கு நதி தேவதைகள் உபகாரம் பண்ணுவதின் தாத்பரியத்தை அப்போதான் புரிந்துகொண்டான். ‘தான் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொண்டோம் ’ என்பதையும் எண்ணிப்பாரத்தான்.


காசிக்குப் பயணம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டுத் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் எண்ணத்துடன் ஊருக்குத் திரும்பினான் புண்டலீகன். அல்லும் பகலும் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையே வாழ்க்கையின் தலையாய கடமையாக நினைத்துச் செய்துவந்தான். ஒருநாள் தனது தந்தையாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது பகவான் அவனுக்குத் தரிசனம் கொடுத்து “இவ்வாறு பெற்றொருக்கு பக்தி சிரத்தையுடன் சேவை செய்வதை மெச்சினோம். ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.


தனது தந்தையைக் குளிப்பாட்டி சேவை செய்து கொண்டிருந்ததால் இரண்டு செங்கற்களைப் பகவானின் எதிரில் வைத்து “சுவாமி இதன்மீது சிறிதுநேரம் நின்றுகொண்டிருங்கள், இதோ என் தந்தைக்கு பணிவிடை செய்துவிட்டு விரைவில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே தந்தையிடம் சென்றுவிட்டான் புண்டலீகன்.


தன் கடமைகளைச் செய்து முடித்துவிட்டு நெடுநேரம் கழித்து பகவானை நிற்கச் சொன்ன இடத்திற்கு  வந்தான். அவன் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்ற செங்கற்களின் மீதே நின்றுகொண்டு, புண்டலீகனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பகவான். புண்டலீகனும் தாமதத்திற்கு மன்னிப்புக்கோரி “இறைவா! தங்களின் தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தீர்கள். அதுபோலவே எல்லா மக்களும் உங்களுடைய தரிசனத்தைப் பெற்று உய்வு பெறும்வண்ணம் இந்தச் செங்கற்கள்மீது எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு தரிசனம்தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.


கருணைக்கடலான பகவான் அந்த இடத்திலேயே இப்போதும் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அந்த இடமே ‘பண்டரிபுரம்’ என்னும் திருத்தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.


வாழ்க்கைப் பாதையில் நாம் தவறுகின்றபொழுது நம்மைக் கண்டிக்க, திருத்த வாழ்க்கைக்குப் புதிய ஒளியைத்தர கடவுள் அனுப்பிய தேவதைதான் ‘கடமை’. அதிலும் பெற்றொருக்குச் செய்யும் கடமை மிக மிக முக்கியமானது.பெற்றோரைத் தவிக்கவிட்டு வேதனை செய்பவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், அவன் எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவனது பாவங்களை மன்னிக்க மாட்டான்.