வெள்ளி, 21 ஜூலை, 2017
ராகு கால நேரத்தில் துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?
ராகு, கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?
பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.
இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.
வியாழன், 20 ஜூலை, 2017
நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் !!!
நல்வினைக்கான நன்மைகள்--கருடபுராணம்
1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பர்.2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்3 பசு கன்றுடன் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பர்.5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய் , தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பர்.6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வர்.7 இரத்தம், கண் , உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பர்.8 ஆலயத்திற்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பர்.9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வர்.10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வர்.11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.16 பொன், வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வர்.17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்28 சுதர்சன ஹோமமும்,தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.30 இதைப் படிப்பவரும் , கேட்பவரும், புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.
அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்
அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்
காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி
கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
பெருமாளின் நாமங்கள்
காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரி ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.
உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.
இந்துக்கள் செய்யக்கூடாதவை
இந்துக்கள் செய்யக்கூடாதவை
வீட்டில் செய்து வரும் நித்திய பூஜையை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.கோபத்துடன் பூஜை செய்வதோ, ஆலயத்தினுள் செல்வதோ கூடாது.
கருப்பு ஆடை அணிந்து பூஜை செய்வது, கோவிலுக்குச் செல்லக்கூடாது.
குளிக்காமல், முறைப்படி உடை அணியாமல் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் ஆலயம் செல்வது கூடாது.
மரண வீட்டிற்கு சென்றவர்களோ அல்லது அங்கு சென்றவர்களை தீண்டியவரோ முழுகாமல் சுவாமியை வழிபடக்கூடாது.
மரண வீட்டுக்கு சென்று வந்த தினத்தில் ஆலயம் செல்லலாகாது.
சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்லலாகாது. மாமிசம் உண்பவர் அன்று கோவிலுக்குச் செல்லலாகாது.
கால்களை கழுவாமல் ஆலயத் திற்குள் அடியெடுத்து வைக்கக் கூடாது.
கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
வெற்றிலை பாக்கு மென்று கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது.
மூர்த்திகளைத் தொடுதலோ அல்லது மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதலோ கூடாது.
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
விபூதி, சந்தனம் அபிஷேகம் தவிர சுவாமிகளுக்கு திருமஞ்சனம் ஆகும் போது பார்க்கக் கூடாது.
கோவிலுக்குள்ளேயோ, மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல் மலஜலம் கழித்தல் கூடாது.
சண்டையிடுதல், தலைமுடியை கோதி முடித்தல், சிரித்தல் கூடாது.
சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் நடுவே செல்லுதல், சுவாமிக்கும் நந்திக்கும் நடுவே செல்லுதல் கூடாது.
இருட்டில் இறைவனை வணங்குதல் கூடாது. இருட்டில் பூஜை செய்யவும் கூடாது.
மது அருந்தி விட்டுச் செல்லக்கூடாது.
கடவுளுக்கு எதிராக காலை நீட்டிக் கொண்டு இருத்தல் கூடாது.
கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்
கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்
மனித உறுப்பு தானங்களில் சிறந்தது கண்தானம். அதை முதலில் செய்த பெருமை வேடர் குலத்தைச் சேர்ந்த திண்ணன் என்பவரையே சேரும். திண்ணன் தனது கண்களில் ஒன்றை தானமாக கொடுத்தது மனிதருக்கல்ல... மகேஸ்வரனுக்கு! இதன் மூலம் அவரது இயற்பெயர் மறைந்து இறைவனாலேயே கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டார். அவரது அருட் கருணையினாலேயே நாயன்மார்களுள் ஒருவருமானார்.
திண்ணன் கண்தானம் செய்த நிகழ்வு மகாசிவராத்திரியன்று நடந்தது. திண்ணனின் ஆழ்ந்த பக்தியை வெளி உலகிற்கு உணர்த்த சிவபெருமான் நடத்திக் காட்டிய திருவிளையாடல் அது.
வேடர் குலத்தைச் சேர்ந்த நாகனார் என்பவரின் மகன் திண்ணன். தமது குல வழக்கப்படி காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்குச் சென்ற திண்ணன் அங்கு சிவலிங்கத்தை கண்டார். அதைப் பார்த்த மாத்திரத்தில் அன்பின் மிகுதியால் லிங்கத்தை ஆரத்தழுவினார். பின்னர் இறைவன் பசியோடு இருப்பாரே! அவருக்கு உணவு படைக்க வேண்டும் என்று விரும்பி பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதை கையில் எடுத்துக் கொண்டார். வாயில் பொன்முகலி ஆற்று நீரையும், தலையில் பூங்கொத்துகளையும் சுமந்து சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தார்.
சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயில் உள்ள நீரினால் அபிஷேகம் செய்தார். தலையில் இருந்த பூங்கொத்துகளை லிங்கத்தின் தலையில் சூடினார். கையில் இருந்த பன்றி இறைச்சியை நைவேத்தியம் செய்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும் கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.
காலையில் இறைவனுக்கு சுவையான அமுது படைக்க வேண்டும் என நினைத்து காட்டுக்குள் சென்றார்.
அன்று பகலில் காளத்தி நாதருக்கு பூஜை செய்ய வந்த அர்ச்சகர் அங்கு சிவலிங்கம் முன்பு கிடக்கும் இறைச்சி, எலும்பு போன்றவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆற்றில் நீராடி பிராயசித்தம் செய்தார். காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து அதை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் சிவபூஜை செய்தார். மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர் இதைக் கண்ணுற்று இந்த தீயச் செயலை செய்தவர் யாராக இருப்பினும் அவனை கழுவேற்றி விட வேண்டும் என்று ஈசனிடம் முறையிட்டார்.
சிவபெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி, அவர் செயல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தது. நாளை இரவு ஒரு மரத்தின் மறைவில் இருந்து நடப்பதை கவனித்துக் கொண்டு இரு என்று கூறினார். அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து கொண்டு இருந்தார். சிவலிங்கத்தை அடைந்ததும், பெருமானின் கண்ணில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரத்தத்தை துடைத்தார். அது நிற்காமல் பெருகிக் கொண்டே இருந்தது.
பின்னர் பெருமானை கட்டிப்பிடித்து கதறி அழுதார். காட்டுக்குள் சென்று பச்சிலையை பறித்து வந்து அதை பெருமானின் கண்ணில் பிழிந்து பார்த்தார். மருந்து பயன் தரவில்லை. உடனே ‘ஊனுக்கு ஊன்’ என்ற மருந்து நினைவுக்கு வர தமது ஒரு கண்ணை தோண்டி ரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் வைத்தார். இறைவனின் திருவருட் கருணையால் ரத்தம் வடிவது நின்றது. சோதனையாக இறைவனின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருகியதைக் கண்டார். ஒரு கணம் கவலையடைந்த அவர் மறு கணமே மருந்து கண்டேன் என்று கூறி, தம் மற்றொரு கண்ணை தோண்ட முயன்றார். கண் அடையாளம் தெரிவதற்காக தன் இடது காலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். பின்னர் கண்ணை பெயர்த்தெடுக்க அம்பினை ஊன்றினார். அப்போது இறைவன் தோன்றி கண்ணப்பா நிற்க என்று கூறி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார். இந்த அதிசய நிகழ்வை கண்ணுற்ற அர்ச்சகர் சிவபரம்பொருளின் கருணையை எண்ணி வியந்து போற்றினார். தேவர்கள் வானத்தில் இருந்து பூக்களை தூவி வாழ்த்தினர்.
மகாசிவராத்திரியன்று இந்த அற்புதம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 18 ஜூலை, 2017
கோரிக்கை நிறைவேற 9 வாரம் சொல்ல வேண்டிய துதி
கோரிக்கை நிறைவேற 9 வாரம் சொல்ல வேண்டிய துதி
லோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா ஸர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா ஸர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் – இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
உமையவள் திருவருள் சேரும். (ரக்ஷ)
படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி
அபயம் என்றவளைச் சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
அபயமளித்தருள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாய் தேவி
திருவருள் தருவாய் தேவி (ரக்ஷ)
கருணையின் கங்கை கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகிற யோகம் வளர்பிறையாகும்
அருள் மழை பொழிவாள் நாளும்
நீல நிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளியெனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக் கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்ஷ)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






